விளையாட்டுப்பருவமும் தமிழர் விளையாட்டு மரபும்

இரத்தின புகழேந்தி (கவிஞர், எழுத்தாளர், ஆசிரியர்)

1
885

விளையாட்டுப் பருவத்தில் விளையாட்டுப் பிள்ளைகளாய் வளர்ந்தோம். பள்ளியில் பாடநூல்களில் கற்றதைப்போலவே தெருக்களில் விளையாடியபோது பல வாழ்வியல் பண்புகளைக்கற்றோம். கூட்டாளிகளின் முதுகில் கைகளை வைத்து ஆபியம் தாண்டியபோது மனதுக்கு மகிழ்ச்சி மட்டுமின்றி உடலுக்குப் பயிற்சியும் கிடைத்தது.

காளை காளை வருகுது பார்
கருப்புக் காளை வருகுது பார்
சூரியனுக்கு வேண்டி விட்ட
துள்ளுக்காளை வருகுது பார்

என்று சீறிப் பாய்ந்து சடுகுடு ஆடியபோது, நம் மறப்பண்பினையும் மரபையும் கற்றோம். மழைக் காலத் தெருக்களில் கோடுகள் கிழித்து கல் பாரி விளையாடிய போது, குறுக்கு வழியில் செல்வம் சேர்ப்பது தண்டனைக்கு உரியது என்பதோடு நம் தேவை போக எஞ்சியதைப் பிறருக்குக் கொடுத்து வாழவேண்டும் எனவும் கற்றுக்கொண்டோம்.

வட்டமாக அமர்ந்திருக்கும் எஞ்சோட்டுப் பசங்களைச் சுற்றி சுற்றி ஓடிவந்து
குலை குலையாய் முந்திரிக்காய்
கொள்ளையடிப்பவன் எங்கிருக்கான்
கூட்டத்திலிருக்கான் கண்டுபிடி
என்று விலையாடிய போது
உற்றுநோக்கி அறியக் கற்று தனித்திறனை வளர்த்துக்கொண்ட்டோம்.

எங்கள் கண்களைப் பொத்தி கண்ணாமூச்சி விளையாடிய போது, அக்காள்கள் கேட்கும் கேள்விகளில் தொடரும் உரையாடல்;
உங்க வீட்டுல என்ன சோறு?
நெல்லு சோறு
ஈ உழுந்துதா எறும்பு உழுந்துதா?
எறும்பு உழுந்துது
எடுத்துட்டு சாப்பிட்டியா எடுக்காம சாப்பிட்டியா?

போயி ஒரு சிங்கம் ஒரு புலி எல்லாம் பிடிச்சிக்கிட்டு வா என விரட்ட தெருக்களே கற்பனைக் காடுகளாக நாங்கள் கண்டறியும் ஆற்றலை வளர்த்துக்கொண்டோம்.

கருவை மரக் கட்டையை கொடுவா கத்தியால் சீவி சித்தப்பாக்கள் பம்பரம் செய்து கொடுக்க வல்லா போட்டு சிவப்பு நிறக் கயிற்றைச் சுழற்றி குத்து பம்பரம் விளையாண்ட தருணங்களில் தன்னம்பிக்கையைக் கற்றுக்கொண்டோம்.

பழய மூங்கில் படலில் சிம்பு எடுத்து அதை ஒருவன் இரு கைகளாலும் தூக்கிப் பிடிக்க மற்றொருவன் அதனை கீழே தள்ளிவிட;
எங்க வீட்டு நாய்
தெரு பொறுக்கப் போச்சு
கல்லால அடிச்சேன்
காலொடிஞ்சு போச்சு
என்று பாடிக்கொண்டு அம்பால் விளையாடியபோது விடா முயற்சியைக் கற்றோம்.

தெருவில் தரையைக் கீறி கோட்டிப்புள் அடித்து விளையாடியபோது நம் திறமைக்கேற்ற வாய்ப்புகளை இந்த சமூகம் வழங்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

தெரு மண்ணைக் கூட்டி அதில் புன்னை விதையை ஒளித்து கிச்சு கிச்சு தாம்பாளம் விளையாடியபோது புலன்களையும் சிந்தனையையும் ஒருமுகப்படுத்தக் கற்றோம்.

முன்னிறவு நேரங்களில் தெருவில் கோடுகள் கிழித்து உப்பு சரணாவும் கிளி சரணாவும் விளையாண்ட பொழுதுகளில் நம்மால் இயன்றதை நாம் வாழும் சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்ற சேவை மனப்பான்மை வளர்ந்தது.

அம்மாவிடம் நச்சரித்து ஒரு படி நெல்லுக்கு கோலி குண்டுகள் வாங்கி குழி குண்டும் பேந்தா குண்டும் விளையாடித் தோற்றபோதும் செய்த தவறுகளுக்கு தண்டனை உண்டென ஆறுதலடைந்தோம்.

விருத்தாசலத்திலிருந்து வாங்கி வந்த ரப்பர் பந்துகளை வைத்து கல்பந்து, பேய்ப் பந்து விளையாடியபோது கூடி வாழக்கற்றோம்.

அய்யனார் கோயில் திடலில் கூடி
காயே கடுப்பங்காய்
கஞ்சி வார்த்த நெல்லிக்காய்
உப்பே புளியங்காய்
ஊறுகா போட்ட நெல்லிக்காய்
கள்ளன் வறான் கதவ சாத்து
வெள்ளன் வறான் விளக்கேத்து
திடு முடு திடு முடு வாய்தா பணம்
என்று பாடி காயே கடுப்பங்காய் விளையாடியபோது நமக்கு ஏற்படும் இடர்பாடுகளை குழுவாகக் கூடி நின்று தீர்க்கக் கற்றோம்.

வட்டமாக கை கோர்த்து நின்று
சங்கிலி புங்கிலி கதவத் தொற
நான் மாட்டேன் வேங்கைப்புலி
என்று பாடி விளையாடியபோது
வலியோரிடமிருந்து எளியோரைக் காப்பாற்றக் கற்றுக்கொண்டோம்.

பனை ஓலையைக் கிழித்து காற்றாடி செய்து சுற்றியபோதும், பனம் பூவைச் சுட்டு கார்த்திகை சுற்றிய போதும் உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தக்கற்றோம்.

எங்களைப்போலவே எங்கள் சகோதரிகளும் விளையாட்டில் கற்றுக்கொண்டவை ஏறாளம்.
ஏழண்ண
எங்கண்ண
கருத்த சொல்லண்ண என்று பாடி எழாங்காய் விளையாடி விளையாடி ஐம்புலன்களையும் ஒருங்கிணைக்கக் கற்றனர்.

காரா பூந்தியும் காரமில்ல
கட்டுன பயலும் சரி இல்ல
ஒதச்சி உட்டான் சந்துக்குள்ள
ஓடி உழுந்தன் பொந்துக்குள்ள
என்று பாடி திம்பி விளையாடிய சிறுமியர் பெரியவர்களாகக் கற்றனர்.

ஆலா சோல
யாரு பொறந்தா
தம்பி பொறந்தான்
ஏன் பொறந்தான்
கத்திரி கொல்லைய
வெட்ட பொறந்தான்
காவேரி தண்ணிய
நீய பொறந்தான்
என துள்ளிக்குதித்து கும்மியடித்தது மறைமுக உடற் பயிற்சி. கூடவே மன மகிழ்ச்சி.

இப்படி ஒவ்வொரு விளையாட்டும் எங்களுக்கு ஒவ்வொரு பண்பைக் கற்றுத்தர சிறுவர்களான நாங்கள் இந்த சமூகத்துக்குள் வாழ அத்தனைத் தகுதிகளோடும் வளர்ந்து பெரியவரானோம்.

இது வாழையடி வாழையாக தொடர்ந்தால்தான் நம் தமிழ்ச் சமூகம் சம நிலைச் சமூகமாகும். அதற்கான வாய்ப்புகளை நம் வழித்தோன்றல்களுக்கும் வழங்குவோம்.

இரத்தின புகழேந்தி (கவிஞர், எழுத்தாளர், ஆசிரியர்)

1 COMMENT

Leave a Reply