தமிழ் வளர்த்த விநாயகர்

கே. யுவராஜ்

2
423

இன்றைய நாளில் தமிழகத்திலுள்ள எல்லா சைவ ஆகமக் கோயில்களிலும் தேவாரமும் திருவாசகமும் பஞ்ச புராணப்பாட்டாக அர்ச்சகர்களாலும் ஓதுவார்களாலும் நித்தம் ஒலிக்கின்றது எனில் பத்தாம் நூற்றாண்டில் தமிழ்ச் சமூகமும் சைவமும் செய்த புண்ணியத்தில் ‘நம்பியாண்டார் நம்பிகள்’ எனும் பெயரில் அவதாரம் புரிந்த சைவப் பெரியாரும் அவருக்கு அருள்பாலித்த விநாயகப் பெருமானுமே காரணமாவர்.

கடலூர் மாவட்டத்திலுள்ளது திருநாரையூர் எனும் ஸ்தலம். இங்குள்ள கோயிலில் இறைவன் சௌந்தரேஸ்வரனாகவும் இறைவி திரிபுரசுந்தரியாகவும் அருள்பாலிக்கின்றனர். ஸ்தல விருட்சமாகப் புன்னை மரம் இருக்கின்றது. இக்கோயிலில் பொல்லாப்பிள்ளையாராக அருள்பாலிக்கும் ஸ்ரீ விநாயகக் கடவுளானவர் மேலும் பெருமை சேர்க்கிறார். ஆறுமுகக் கடவுளுக்கு அறுபடை வீடுள்ளதைப் போலவே விநாயகக் கடவுளுக்கும் அறுபடை உண்டு. இதில் முதல் படைவீடாக இருந்து பெருமை சேர்ப்பது இத்திருநாரையூர் ஸ்தலமாகும். திருவண்ணாமலை, திருக்கடவூர், மதுரை, திரு முதுகுன்றம், காசி ஆகியவை ஏனைய வீடுகள் ஆகும்.

இத்தனை பெருமைமிகு பொல்லாப்பிள்ளையாரின் சன்னதியில் பூஜை செய்து வந்தார் ஆதிசைவ மரபில் உதித்த அனந்தநேச சிவாச்சாரியார். இவருக்குக் கல்யாணி அம்மையார் எனும் மனைவியும் நம்பியாண்டார் நம்பிகள் எனும் மகனும் இருந்தனர்.

அனந்தேச சிவாச்சாரியார் தினமும் கோயிலுக்குச் சென்று இறைவனுக்குப் பிரசாதத்தை நைவேத்தியம் வைத்து விட்டு வீடு திரும்பும் வழமை கொண்டிருந்தார். அப்போது, அவரிடம் சிறுவன் நம்பி எங்கே பிரசாதம் என்று கேட்கும் போது, விநாயகர் சாப்பிட்டு விட்டார் என்று அனந்தேசர் கூறுவார். இதைச் சிறுவயதிலேயே நம்பியாண்டார் நம்பி உண்மையாகக் கருதினார்.

ஒரு சமயம் தந்தை வெளியூர் சென்றதால், அவர் வழியைப் பின்பற்றி, சிறுவன் நம்பி கோவிலுக்குச் சென்று பக்தியுடன் பூஜை செய்துவிட்டு, தாயார் கொடுத்த நைவேத்தியத்தைப் பிள்ளையார் முன்பு வைத்து விநாயகப் பெருமானைச் சாப்பிடும் படி வேண்டினார். ஆனால், பிள்ளையார் சாப்பிடவில்லை. இதில் ஏதோ தவறு இருக்கும் என அஞ்சிய நம்பி, வேதனையுடன் அழுது புரண்டு, பிள்ளையாரைச் சாப்பிடச் சொல்லி தன்னுடைய தலையைக் கருங்கல்லில் முட்டி மோதிக் கொண்டார்.

அப்போது, பிள்ளையார் சிறுவன் முன்தோன்றி, கல்லால் தலையில் முட்டிய நம்பியை தம் திருக்கரத்தால் தாங்கி தடுத்தருளினார். பிள்ளையார் துதிக்கையை வலப்புறமாக நீட்டி அந்த நைவேத்தியத்தைச் சாப்பிட்டார். இதில் மகிழ்ந்த நம்பி நடந்த விஷயத்தை தன் தாயிடம் கூறினார். ஆனால், அதை அவர் நம்பவில்லை. மறுநாள் நம்பியின் தந்தை மறைந்திருந்து பார்க்க மீண்டும் அதே அற்புதம் நடைபெற்றது. இதைக் கண்டு மெய்சிலிர்த்த அனந்தேசர், தன்னுடைய மகனைக் கட்டித்தழுவி, இறைவனைக் கும்பிட்டார். பிள்ளையாருக்கும், நம்பிக்கும் இடையே நாளுக்கு, நாள் நெருக்கம் அதிகரித்தது. இதன் விளைவாக நம்பியாண்டார் நம்பிக்கு எல்லா கலைகளும் கிடைக்கப் பெற்றது. தேவாரம், திருவாசகம் போன்ற திருமுறைகளைத் தொகுத்து மிகப் பெரும் பேர் பெறுவாய் என நம்பிக்கு வரத்தை அருளினார் விநாயகக் கடவுள். நம்பியும் பல பாடல்களைப் பாடினார்.

திருநாரையூர் நம்பிகள் பற்றியறிந்த ராஜராஜ சோழன், அவரை சந்தித்து, திருமுறைகளைத் தொகுக்க வேண்டினார். இருவரும் சேர்ந்து பொல்லாப்பிள்ளையாரிடம் சைவ திருமுறைகளின் இருப்பிடம் தேடி அவற்றை தொகுக்கும் மாபெரும் பணியை முடிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். தில்லை கோயிலுக்கு வடமேற்கு மூலையில் உள்ளது என்று பிள்ளையார் அருளினார். இதையடுத்து, அங்குச் சென்ற ராஜராஜசோழன் பூட்டி கிடந்த அறையைத் திறக்க அந்தணர்களை வேண்டினார். உரியோர் வந்தால் திறப்போம் என்று அந்தணர்கள் கூறினர்.

இதையடுத்து, சைவர் மூவர் சிலைகளை வடித்து நன்கு பூஜித்துவிட்டு திருமுறை சுவடிகள் இருந்த அறையைத் திறக்கச் செய்தார் ராஜராஜ சோழன். அப்போது, அந்த அறையில் பனை ஓலைகளில் எழுதப்பட்ட பதிகங்கள் கரையான் புற்றால் மூடப்பட்டிருந்தது. இதில் எண்ணெய்யைக் குடம், குடமாக ஊற்றி கரையானை போக்கி கண்டெடுத்த பதிகங்கள் மொத்தம் 796 ஆகும். இதில் திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகங்கள் 384, திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகங்கள் 312, சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருப்பதிகங்கள் 100. வேதத்தை மூல நூலாகவும் ஆகமத்தைச் சிறப்பு நூலாகவும் கொண்டிருக்கக்கூடிய சைவ சமயத்தில் பன்னிரு தமிழ்த் திருமுறைகளும் முக்கியமானவை ஆகும். இதில் முதல் பதினோர் திருமுறைகளை விநாயகரின் அருளாலும் ஸ்ரீ ராஜ ராஜரின் துணையாலும் தொகுத்தார் நம்பியாண்டார் நம்பிகள்.

முதல் மூன்று திருமுறைகளை ‘தமிழ்விரகன்’ திருஞானசம்பந்தர் பாடல்களாலும் ; அடுத்த மூன்று திருமுறைகளை அப்பர் எனப்படும் திருநாவுக்கரசு நாயனாரின் பாடல்களாலும் ; ஏழாம் திருமுறையை ‘திருநாவலூர் வன்தொண்டர்’ சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளின் பாடல்களாகவும்; எட்டாம் திருமுறையைத் திருக்கோவையார் மற்றும் திருவாசகம் என மாணிக்கவாசகரின் பாடல்களாலும்; ஒன்பதாம் திருமுறையைத் திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த் தேவர், பூந்துருத்தி நம்பிகாட நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருஷோத்தம நம்பி, சேதிராயர் போன்றவர்களின் பாடல்களாலும்; பத்தாம் திருமுறையைத் திருமூலரின் திருமந்திரப் பாடல்களாலும், பதினோராம் திருமுறையை ஆலவாய் உடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர் கோன், சேரமான் பெருமான், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம் பெருமான், அதிராவடிகள், பட்டினத்தடிகள் பாடல்களாலும் தொகுத்தார் நம்பியாண்டார் நம்பிகள்.

சுந்தரமூர்த்தி நாயனார் தன்னுடைய திருத்தொண்டத் தொகையில் அறுபது நாயன்மார்களையே பாடினார். சுந்தர மூர்த்தி நாயனார், அவரின் பெற்றோர்களான சடையனார் மற்றும் இசைஞானியராக சேர்த்து அறுபத்து மூன்று நாயன்மார்களாக ஆக்கிப் பாடினார் நம்பியாண்டார் நம்பிகள். பதினோர் திருமுறைகளைத் தொகுத்தவர்; இதன் மூலம் இன்னொரு திருமறை உருவாவதற்காக வழியை வித்திட்டார்.

இதனையே அடிப்படையாகக் கொண்டு அறுபத்து மூவர்களின் வரலாற்றையும் திருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணமாகப் பாடினார் சேக்கிழார் பெருமான். அப்பெரிய புராணமே பன்னிரண்டாவது திருமறையாகப் போற்றப்படுகிறது.

ஸ்ரீ விநாயகப் பெருமானின் தனிப் பெருங்கருணையிலான விளைந்த பன்னிரு சைவ தமிழ்த் திருமுறைகளையும் போற்றுவோம். ஸ்ரீ விநாயகரை வாழ்த்தி வணங்குவோம்.

கே. யுவராஜ்

2 COMMENTS

  1. அருமையான பகிர்வு விளக்கமாகவும் விரிவாக சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

Leave a Reply