சுய மதிப்பு அறிதல்

மாயன் மெய்யறிவன்

3
3180

வாழ்க்கையில் எல்லோருமே அங்கீகாரம் மற்றும் பொருள் தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம். நமக்கான சிறந்த அடையாளத்தை, மற்றவர்கள் போற்றத்தக்க, நினைத்துப் பார்க்கத்தக்க அடையாளத்தை உருவாக்க, முடிந்த அனைத்தையும் செய்கிறோம். மற்றவர்களின் அங்கீகாரம், மற்றவர்களின் பாராட்டுதல்களை நான் எதிர்பார்ப்பதில்லை என வெகு சிலர் கூறினாலும், தங்களை விட உயர்ந்த அறிவும், வாழ்வின் பார்வைத் தெளிவும் கொண்டோர் பாராட்டும் போது, தனது திறனை அங்கீகரிக்கும் போது, மன மகிழ்வையும் திருப்தியையும் உணரவே செய்வார்கள்.

பொருள் தேடல் என்பது வாழ்வின் உந்து சக்தி. பொருளாதார ரீதியில் உயரவேண்டும் என்கிற எண்ணம் எவருக்கும் இயல்பானது. இந்த உலக ஆண்கள் அனைவருமே மண்ணுக்கும் பெண்ணுக்கும் பொன்னுக்கும் தான் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ‘இருப்பதை வைத்து நிம்மதி கொள்வோம், சும்மா இருப்பதே சுகம்’ என்றெல்லாம் தத்துவங்கள் கூறினாலும், பொருளாதார வயப்பட்ட உலக சூழலில், பொருள் சேர்ப்பதும், சுய மதிப்பை உயர்த்துவதும் அனைவரின் நோக்கமாகவே உள்ளது.

வாழ்வில் திருப்தி என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும். சிலர் எளிய வாழ்வில், மாதம் பத்தாயிரம் ரூபாய் வருமானத்துடன் திருப்தி அடையலாம். சிலருக்கு மாதம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்தாலும் திருப்தி இல்லாது போகலாம். இது அவரவர் வாழ்வை அணுகும் முறை சார்ந்து மாறுபடும். போலவே, வாழ்க்கையில் திருப்தியை உணர்வதற்கான காரணிகள் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

உலகளவிலான திறந்த பொருளாதாரமும், நவீன நுகர்வு சாதனங்களும், வசதிகளும், திருப்தி என்கிற நிலையை அதிகமும் மாற்றிப் போட்டுள்ளன. இருபது வருடங்களுக்கு முன்பு, அலைப்பேசி என்பது ஆடம்பர பொருளாக, வசதியானவர்களுக்கானதாக இருந்தது. தற்போது சாமானிய மக்களும் அலைப்பேசி பயன்படுத்தும் நிலைக்கு வாழ்க்கை மாறிவிட்டது. சொல்லப்போனால் அன்றாட வாழ்க்கைக்கான அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது.

கல்விக் கட்டணங்களுக்கு அடுத்தபடியாக, நுகர்வு சாதனப் பொருட்களுக்கே நாம் அதிகமும் செலவு செய்கிறோம். உணவிற்குக் கூட நாம் அதிகமும் செலவு செய்வது இல்லை. நகரங்களில் கிடைக்கும் காய்கறிகள் ஆறேழு வகைகளுக்கு உட்பட்டதாக பெரும்பாலான சூப்பர் மார்க்கெட்டுகளில் சுருங்கிவிட்டது. தக்காளி, வெங்காயம், உருளை, கத்தரிக்காய், கேரட், பீன்ஸ், அவரை என்பவையே எப்போதும் கடைகளில் காணப்படுகின்றன. மற்றவை அரிதாகவே கிடைக்கின்றன. இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், நமது உணவு வகைகள் குறைந்து கொண்டே வருகின்றன. ஆனால், நுகர்வு சாதனங்கள் அதிகரித்தபடியே உள்ளன.

பொருள் தேவை என்பது, அதாவது பணத் தேவை என்பது நாளுக்கு நாள் அதிகரித்தபடியே வருகின்றது. நகரங்களில் தரமான வாழ்வை மேற்கொள்ள அதிகமும் செலவு செய்ய வேண்டி உள்ளது. பொருள் சார்ந்த தரமான வாழ்க்கை என்பதும், இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழ்வதும் வேறு வேறு மன நிலைகள், என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

பொதுத் தளத்தில், நமக்கான மரியாதை, அடையாளம் என்பதை இரு விஷயங்களே பிரதானமாகத் தீர்மானிக்கின்றன. நமது அறிவுத் திறன் மற்றும் பொருள் இருப்பு. செல்வந்தர்களாக இல்லாது போனாலும்; கலைத் திறன், படைப்புத் திறன், அறிவுத் திறன் சார்ந்து எவரையும் நாம் மதிக்கிறோம். அல்லது செல்வந்தர்களை, அரசியல்வாதிகளை (இவர்கள் பலரும் செல்வந்தர்களே) மதிக்கிறோம்.

ஆகவே, எவரேனும் தனது சுய மதிப்பை உணரவேண்டுமானால்; தன்னிடம் எத்தகைய திறன் உள்ளது? அந்த திறன் மற்றவர்களுக்கு உபயோகமாக உள்ளதா? தங்களை விட அறிவார்ந்தவர்கள் தங்களது திறனை அங்கீகரிக்கிறார்களா? எனப் பார்க்கவேண்டும். அல்லது இந்த நவீன வாழ்வின் பல சௌகரியங்களையும் நுகரும் அளவிற்குச் செல்வந்தர்களாக இருக்கிறோமா? எனப் பார்க்கவேண்டும். இந்த சுய பரிசீலனையே உங்களைப் பற்றி நீங்களே புரிந்துகொள்ளவும், உங்களது வாழ்வை எத்திசையில் மேம்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கவும் உதவும். இருப்பதே போதும், இதுவே திருப்தி என எந்த மனச் சங்கடமும் இன்றி இருப்பவர்கள், அப்படியே வாழலாம். ஆனால், அவர்களது குடும்பத்தினரும் குழந்தைகளும் அவர்களைப் போலவே இருப்பதைக் கொண்டு திருப்தி அடைவார்கள் என உறுதிப்படக் கூற இயலாது.

சுய மதிப்பு நிலையை அறியுங்கள், முன்னேறும் வழியைக் காணுங்கள். அறிவுத் திசையா? பொருள் திசையா? என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது.

மாயன் மெய்யறிவன்

3 COMMENTS

  1. நல்ல தலைப்பு மற்றும் நல்ல கருத்து. சுயமதிப்பு அறிதல் பற்றி பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு சொல்லிப் புரிய வைக்க வேண்டும்,. மேலும் மாதம் ஒருமுறை பெற்றோர் மற்றும் ஆசிரியர் சந்திப்பு ஏற்பாடு செய்து சுயமதிப்பு பற்றி பெற்றோர்களுக்கு புரிய வைக்க வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லும் இளைஞன் முழுத் தகுதியுடன் இருப்பான் என்று நான் நம்புகின்றேன். நன்றி!

    • தங்களது மேலான கருத்துக்கு நன்றி. தொடர்ந்து தமிழ்விங்.காம் தளத்தின் ஆக்கங்களைப் படித்து, உங்களது கருத்துக்களைப் பகிருங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்.

  2. கட்டுரை சொல்ல வரும் கருத்து நன்று. எழுத்துப்பிழைகள் ஆங்காங்கே கண்டேன் திருத்தியமைத்தால் இன்னும் எழுத்து மெருகேரும்.

Leave a Reply