பெருந்தொழில்களும் தமிழர்களின் நிலையும்

மாயன் மெய்யறிவன்

2
1919

ஆயில் & கேஸ், அதாவது எண்ணெய் மற்றும் எரிவாயு துறை சார்ந்த தொழில் நிறுவனங்கள் பலவும் வட இந்தியர்களால் நடத்தப்படுகிறது. குறிப்பாகப் பல நிறுவனங்கள் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்களால் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. ஆயில் & கேஸ் துறை என்பது மிகப் பெரிய அளவில் பணம் புழங்கும் துறை. நிறுவனம் சரியாக நடந்தால், லாபம் என்பது கோடிகளில் இருக்கும். தமிழர்கள் இத்தகைய பெரும் தொழில் நிறுவனங்களைத் தொடங்கி நடத்தி, தொழிலதிபர்களாக உயராமல், அத்தகைய நிறுவனங்களின் முன்னேற்றத்திற்கு தங்களது கடும் உழைப்பை மட்டும் தரக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

ஓஎன்ஜிஸி, கெய்ல் ஆகிய இந்திய அரசு சார் நிறுவனங்களின் பெரும்பாலான சப்-காண்ட்ராக்ட் நிறுவனங்கள் யாவும் வட இந்தியர்களுடையது தான். இந்த துறை என்று இல்லாமல், கனிமத் துறை, கழிவு மேனேஜ்மெண்ட் துறை, குடிநீர் சுத்திகரிப்பு துறை எனப் பல பெரும் துறைகளில், நிறுவனங்களை ஆரம்பித்து நடத்துவதும் வட இந்திய மாநிலங்களைச் சார்ந்தவர்களே. அம்பானி, அதானி, நிதின் என்று இந்தப் பட்டியல் வெகு நீளம். இதனால் தான் அத்வானியை ஓரங்கட்டி விட்டு, குஜராத்தைச் சார்ந்த மோடி அவர்களால் பாரத பிரதமராக முடிந்தது என்கிற கோணத்திலும் பார்க்கலாம். பெரும் செல்வம் தரும் தொழில் துறைகளின் செல்வாக்கானது, இந்தியப் பிரதமராக யார் வருவது என முடிவு செய்யக்கூடியதாக இருக்கின்றன என்றும் கருதலாம்.

குறிப்பாகக் குஜராத் மாநிலத்தவர்களிடம்; அரசாங்கம் சார்ந்து, ஆட்சியில் இருப்பவர்கள் சார்ந்து தங்களது தேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வியாபாரத் திறன் உள்ளது என்றே தோன்றுகிறது. இவர்கள் ஆரம்பிக்கும் எந்த தொழிலுக்கும், இவர்கள் பெரிதாகச் சொந்த பணத்தை முதலீடு செய்வதில்லை. பெரும்பகுதி பணமும் வெவ்வேறு வங்கிகளிலிருந்து கடன்களாகப் பெற்றும், பங்குச் சந்தைகளின் மூலமாகப் பெற்றும், பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி விடுகிறார்கள். வியாபார மூளையும், அதிகார மையங்களுடனான தொடர்பும், தொழில் முனைவு ஆர்வமும் மட்டுமே இவர்களது மூலதனம் எனக் கருதுகிறேன்.

உலகில் உள்ள எந்த தொழிற்சாலை உற்பத்திகளும், மிகுந்த அபாயம் தரக்கூடியவையாக இருந்தாலும் கூட, அதன் உற்பத்திப் பொருட்கள் அனைத்தும் உலக மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யவே உற்பத்தி செய்யப்படுகின்றன. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்க்கிறேன் எனக் கூறுவோர் கூட, அத்தகைய கார்ப்பரேட்கள் உற்பத்தி செய்யும் ஏதேனும் ஓர் சாதனத்தைத் தினமும் பயன்படுத்தும் நிலையிலேயே உள்ளனர் என்பதே யதார்த்த சூழல். நாம் தினமும் பயன்படுத்தும் இணையம் தொடங்கி, அனைத்து ஊடகங்களும் கார்ப்பரேட்கள் தான். நாம் பணி புரிய நேரும் அனைத்து பெரிய நிறுவனங்களும் கார்ப்பரேட்டுகள் தான்.

பல நாடுகளும், FTA எனப்படும் Free trade agreement-ல் ஒப்பந்தம் இட்டுள்ளன. இறக்குமதி ஏற்றுமதி செய்யும் போது, இவற்றை எல்லாம் பார்த்துத் தான், எந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யலாம், எந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்யலாம் என ஒவ்வொரு நிறுவனங்களிலும் முடிவு செய்யப்படுகின்றன.

இத்தகைய மாறிவரும் உலகப் பொருளாதார சூழலில், தமிழர்கள் தொழில் துறையில் ஈடுபடும் விதமாக தங்களது மனோபாவத்தை வளர்த்துக்கொள்வதே நல்லது. தமிழ் வளர்ச்சி, தமிழர் வளர்ச்சி போன்றவற்றை முன்னெடுக்கும் எந்த அரசியல் அமைப்புகளும், கட்சிகளும், குறைந்தபட்சமாக தங்களது அமைப்பில் உள்ளவர்களுக்குத் தொழில் முனைவில் ஈடுபட ஊக்கம் தரவேண்டும். அவர்கள் வெற்றிகரமாகத் தொழில் தொடங்கி நடத்த அனைத்துவித உதவிகளையும் செய்யவேண்டும். இப்படியாகப் பல தமிழர்கள் தொழில் துறையில் வளர்ந்தால் தான், தமிழ் வளரும், தமிழர்கள் வளர்வார்கள்.

தனியார்ப் பள்ளி, கல்லூரி, சிறுசிறு தொழில்கள் என நமது தொழில் முனைவர்கள் குறுகிய வட்டத்தில் இருப்பதைப் போலத் தோன்றுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில், எத்தனை புதிய பெரும் தொழில் நிறுவனங்கள் தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என ஆராய்ந்து பார்த்தால், நாம் எந்த அளவிற்கு, வணிக சூழலில் பின் தங்கி உள்ளோம் என்பது புரியும்.

தமிழகத்தில் அடிக்கடி நடக்கும் பல தேவையற்றப் போராட்டங்களும், தமிழக இளைஞர்கள் விழிப்புணர்வு பெற்று, தொழில் துறைகள், பொருளாதார முன்னேற்றத் துறைகள் போன்றவற்றில் ஆர்வம் காட்டிவிடாமல் இருக்க, அவர்களது கவனங்களைத் திசைதிருப்ப, எவர்களாலோ பணம் கொடுத்து நடத்தப்படுவதாக எனக்குச் சந்தேகங்கள் உண்டு. இந்த எனது சந்தேகம் அதீதமானதாகத் தோன்றலாம். ஆனால் யோசித்துப் பாருங்கள், தமிழகத்தில் எதிர்க்கப்படும் பெரும் தொழில்கள் யாவும் வரவே செய்கின்றன, அத்தகைய தொழில்களுக்கான வாய்ப்புகள் வட இந்தியர்களால் நடத்தப்படும் நிறுவனங்களுக்குக் கிடைக்கின்றன. அதில் சிறுசிறு வேலைகள் செய்யும் வாய்ப்பு மட்டுமே தமிழர்களுக்குக் கிடைக்கிறது. நமது சொந்த மண்ணில், நாம் தொழிலதிபர்களாக வளராமல், மற்றவர்கள் நடத்தும் நிறுவனங்களில், நாம் எதிர்த்த அதே தொழிலில் வேலைக்குச் செல்பவர்களாக மாறி வருகிறோம். இந்த நிலை நீடிக்க வேண்டுமா?

கம்யூனிசம் என்பது கூட முதலாளித்துவத்தின் உருவாக்கம் என்றே கருதலாம். கம்யூனிசத்தின் பெயரால், அதாவது ‘மக்கள் புரட்சி’ என்கிற பெயரில் மக்களை அமைப்பாக ஒடுக்க உருவாக்கப்பட்டதே கம்யூனிசமாகவும் இருக்கலாம். இது எனது சந்தேகமே. காரணம், சீனா தனது கம்யூனிச மக்களின் கடுமையான உழைப்பை, அமெரிக்க முதலாளித்துவ நிறுவனப் பொருட்களை அதிகமும் உற்பத்தி செய்யப் பயன்படுத்துகிறது. அமெரிக்கப் பத்திரங்களில் அதிகமும் முதலீடு செய்திருப்பதும் கம்யூனிச நாடான சீனா தான்.

தமிழர்கள் நிறையவே மாற்றிச் சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்று நினைக்கிறேன். நமது வாழ்க்கை நிலை உயர, மேம்பட்ட பொருளாதார நிலையை அடைய, போதிய வசதியான வாழ்க்கை நிலையை அடைய, புதிய பல தொழில் துறைகளில் தமிழர்கள் கவனம் செலுத்தவேண்டும்.

கல்வி, அரசு நிறுவன வேலை, தனியார் நிறுவன வேலை, ஆகியவற்றைத் தாண்டி, உயர்ந்த பொருளாதாரமே எந்த சமூகத்திற்கும் பலம் தரும். இதற்கு பெருந் தொழிலதிபர்களாக மாறும் வணிக வித்தைகளை, திறன்களை, லாபிகளை தமிழர்கள் கற்றே ஆகவேண்டும். பொருளாதார மையப்பட்ட உலக சூழலில் தமிழர்கள் உயர்ந்து நிற்க வேண்டும்.

சிறந்த வேலைக்காரர்கள் என்கிற பெயர் தமிழர்களுக்கு உண்டு. சிறந்த தொழிலதிபர்கள் என்கிற இடத்தையும் தமிழர்கள் அடைய வேண்டும்.

மாயன் மெய்யறிவன்

குறிப்பு: இந்த கட்டுரையைப் போன்ற ஆக்கச்செழுமையான படைப்புகளைத் தொடர்ந்து படிக்க, தமிழ்விங் தளத்தின் Facebook மற்றும் Twitter பக்கங்களை லைக் செய்யுங்கள். விரைவில் பயனுள்ள காணொளிகளை தமிழ்விங் தளம் வெளியிட இருப்பதால், இதன் YouTube பக்கத்திலும் சப்ஸ்கிரைப் செய்து உங்களது ஆதரவினை நல்குங்கள். உங்களது தொடர்ந்த ஆதரவானது, தமிழ்விங் தளத்தில் பல நல்ல படைப்புகள் வெளிவர உதவும். மிக்க நன்றி.

2 COMMENTS

  1. இந்திய பாக்கிஸ்தான் பிரிவினையின் பின் இருந்தது வணிக நலன்களே. குஜராத்திகள், பனியாக்கள் ஒரு அணியாகவும் அவர்களுக்குப் போட்டியாக இஸ்லாமிய வணிகர்களும் இருந்ததின் விளைவே அந்த பிரிவினை. விடுதலை பெற்ற பின்னர் வங்கிகள் குஜராத்திகளுக்கு வாரி வழங்கிட வசதியாகவே நாட்டுடைமை ஆக்கப்பட்டன. நாட்டுடைமை ஆக்கப்பட்ட வங்கியின் பணம் அவர்களின் தொழில் முனைவிற்கு வாரி வழங்கப்பட்டது. அதை எதிர்ப்பதாக நாடகமாடிய திராவிடர்கள் என்ற பெயரில் இருந்த அண்ணாத்துரைகளின் பணத் தோட்டம் அந்த நிலையை பிரதிபலித்த ஒன்றே. எதிர்த்த திராவிட போர்வையில் இருந்த தெலுங்கர்கள் தங்கள் பங்கிற்கு வளர்ந்தார்கள். வங்கிகளை உருவாக்கிய நாட்டுக்கோட்டைச் செட்டிகள் நொடிந்து போனார்கள். இதுவே வரலாறு.

  2. மழவராயர் ச.இளையராஜா படையாட்சி பிலாக்குறிச்சி, அ

    அண்ணா இது என்னுடைய பல நாள் கேள்வி தான் இதன் முயற்சி முக்கிய அங்கமாக இருக்கும் ஆனால் வழிக்காட்டுதல்கள் முறை முக்கிய அம்சங்கள் பற்றி விளக்கமாக எழுதினால் நன்றாக இருக்கும் தொழில் தொடங்க வேண்டும் அதற்கான தகுதிகள் தேவை எவை என்பது நமக்கு பலபேருக்கு தெரியவில்லை அவை விரிவாக எழுதவும்

Leave a Reply