விருட்சத்தின் விதை

பிரபு வெங்கடேசன்

0
558

நேற்றோடு நான்கு மாதங்களாகி விட்டது பிள்ளைகள் பள்ளிக்குக் கடைசியாகச் சென்றுவந்து. இது மேலும் குறைந்தது ஆறு மாதங்கள் தொடரும் போல. இதுவும் கடந்து போகுமெனக் காத்துக் கொண்டிருக்கிறோம். அனைத்தையும் வீட்டிலிருந்து செய்து கொள்ள கற்றுக் கொண்டு இருக்கிறோம்.

அதே நேரத்தில் நாம் நமது அன்றாட வேலைகளையும் கடமைகளையும் செய்யும் ஆற்றலை வயது காரணமாக மெதுவாக இழந்து வருகிறோம் என்பதையும் உணரத்தொடங்கி இருக்கிறோம்.

ஆற்றல் என்பது உடல் மற்றும் மனம் என்னும் மூளையின் ஆற்றல் என இருவகைப்படும். நாம் எதைச் செய்யவிரும்பினாலும் இரண்டும் தேவைப்படும். செய்யும் செயலைப் பொருத்து அவையிரண்டிற்கான தேவைகளின் விகிதாச்சாரம் மாறலாம்.

அதேவேளைக் குழந்தைகளுக்கு அவ்வாற்றலானது அதிகரிப்பதைக் காணலாம். ஆனால் அந்த ஆற்றலானது எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்பது பற்றி நாம் பெரிதாகக் கவலைப் படுகிறோமா என்பது சந்தேகமே.

பெரும்பாலான நகரப்புர குழந்தைகளின் ஆற்றல் பெரும்பகுதி தொலைக்காட்சிகளிலும், யூடியூப் காணொளிகளிலும் மற்றும் கணினி விளையாட்டுகளிலும் விரயமாவதைக் காணலாம். தொடரும் கொரானா கட்டுப்பாடுகள் அதை மேலும் அதிகப்படுத்துகிறதோ என்ற கவலையும் தொற்றிக் கொள்வதைக் காணலாம்.

குழந்தைகளிடமிருக்கும் அபரிமித வளர் ஆற்றலை எப்படியாவது ஏதாவது உருப்படியான ஒன்றில் திருப்பிவிடவேண்டும் என்று எங்கள் அண்டை வீட்டுக்காரர் எப்போதும் சொல்வதுண்டு. அவரைப் பற்றி ஒரு வாக்கியத்தில் சொல்லவேண்டுமானால் அவர் ஒரு நடமாடும் தகவல் மையம். செடிகளுக்கான எரு முதல் ஏரோபிளேன் பயணம் வரை எங்கு எப்போது இலவசமாகக் கிடைக்கும் என்பது அவருக்கு அத்துப்படி. மேலும் கடும் உழைப்பாளியும் கூட. அவர் வீட்டிலிருந்து குப்பையைக்கூட எளிதில் வெளியில் கொட்டமாட்டார். அந்த குப்பையை வீட்டுத் தோட்டத்தின் மூலையில் கொட்டி அதில் தக்காளி நறுக்கும் போது சிதரும் விதைகளை கொண்டு செடியாக்கி விடுவார்.

அதெப்படி யாராவது எருவை இலவசமாகத் தருவார்கள் எனக் கேட்கலாம். அமெரிக்க வீடுகளிருந்து வாரம் ஒருமுறை எனச் சேகரிக்கப்படும் குப்பைகளிருந்து மக்கும் குப்பையைத் தனியாகச் சேகரித்து மலை போலக் கொட்டி வைக்கிறார்கள். ஓராண்டு கழித்து அதைப் பெருநிறுவனங்கள் முதல் விவசாய நிலங்களுக்கு எருவாக விற்று விடுகிறார்கள். அதே வேலை அந்த பகுதி மக்களின் வீட்டுத் தேவைக்கு இலவசமாகத் தருகிறார்கள் என்ற விபரம் அவர் மூலம் அறிந்தேன். எரு கிடைக்கும் அதெப்படி ஏரோபிளேன் சவாரி இலவசமாக எனக் கேட்கலாம். அமெரிக்காவில் தமக்கென தனியாகச் சிறு விமானம் வைத்துக் கொள்ளலாம். அவ்வாறு வைத்திருப்போர் பொதுவாக ஏதாவது பறக்கும் கிளப்பில் உறுப்பினராக இருப்பார். அவர்கள் மூலம் இலவசமாகச் சிறிய ரகவிமானத்தில் ஊரைச் சுற்றி வரலாம். அவர்களையும் இவர் நண்பர்களாக்கி தன் மகனை விமானி அருகில் அமரவைத்து விமானம் எவ்வாறு இயக்குகிறார்கள் என்பதை மாதம் ஒருமுறை கற்றுத் தரும் தகவலையும் பகிர்ந்தார்.

கொரானா காரணமாக அனைவரும் கடைக்குக்கூடப் போக முடியாமல் வீட்டிற்குள் முடங்குவதைப் புலம்பினால் அவர் அதை வேறுவிதமாகப் பார்த்தார். அதாவது கடைக்கே சொல்லாமல் எப்படி நமக்குத் தேவையான அத்தியாவசிய காய்கறிகளை வீட்டிலிருந்து உற்பத்தி செய்யலாம் என்று.

அப்படிப்பட்ட அவரிடம் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகன் கணினி விளையாட்டு சாதனம் (Gaming console) வாங்கித்தரும்படி கேட்டான். அதன் விலையோ $299. அவன் அதை வாங்கித்தரச் சொல்லிக் கேட்பது இது முதல் முறையல்ல. எனக்குத் தெரிந்து அவன் மூன்றாம் வகுப்பு முதல் அதைக் கேட்டுக்கொண்டிருக்கிறான். அவனோடு படிக்கும் சகமாணவர்களின் வீடுகளில் பெரும்பாலும் இருக்கும். அதனால் இவன் வீட்டில் அது இல்லை என்பது இவனுக்கு பெரும் குறையே. அதைப் போக்கிக் கொள்ளக் கணினி மூலம் (zoom meeting) அவன் நண்பனின் கணினியில் இணைந்து அவ்வப்போது புதுவரவு விளையாட்டுகளை ஆடி வந்தான்.

எப்போதும் முடியாது என்பதை நாசூக்காக நாள் முழுவதும் சலிப்பின்றி சொல்லும் அவர் அன்று சரி என்றதும் அவனால் நம்பவே முடியவில்லை. மீண்டும் ஒரு முறை கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டான். இன்றே வாங்கப் போகிறோமா என்று அவன் கேட்பதற்கு முன் என்னோடு வா என்று அவனை சமையலறைக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த ஒரு நெகிழிப்பையைக் கையில் கொடுத்து “தம்பியைக் கூட்டிக் கொண்டு தோட்டத்துக்கு வா” எனசொல்லிவிட்டு சென்றார். அவனும் ஓடோடி அவன் தம்பியை அழைத்துக் கொண்டு தோட்டத்திற்கு ஓடினான்.

மீண்டும் எப்போது வாங்கப் போகிறோம் என்று அவன் கேட்பதற்குள் “பை எங்கே” என்று அவர் கேட்டார்.

“அதைக் குப்பையில் போட்டுவிட்டேன்” என்று அவன் சொல்லிவிட்டு “வாங்குவதற்குப் பணம் எப்போது தரப்போகிறீர்கள்” என்று கேட்டான். “வாங்குவதற்கான பணம் அதில்தான் இருக்கிறது” என்று சொன்னதுடன் சந்தோசத்தோடும் கூடவே சந்தேகத்தோடு குப்பைத் தொட்டிக்கு ஓடிச்சென்று அதை எடுத்து அலசினான். ஏற்கனவே குப்பையில் போடுவதற்கு முன்பிருந்த ஒரு கட்டுக் கடை ரசீது, நேற்று கிள்ளிய மிச்சமான கீரைத்தண்டுகள், புதினா தண்டுகள், சில பழுத்த மிளகாய்கள், தக்காளி கழிவுகள், இன்னும் பெயர் தெரியாத சில விதைகள் என ஒரு பசுமைக்குப்பை தொட்டிக்கான எல்லாத் தகுதிகளும் கொண்ட சமையலறை கழிவுகள்.

இதில் எங்கிருக்கிறது பணம் என்ற குழப்பத்தோடு சென்று பையை அவர் கையில் கொடுத்தான். அவர் அந்தப்பையிருந்து, கடை ரசீது கட்டை எடுத்து கையில் கொடுத்து பார்க்கச் சொன்னார்.

ஒரு வேளை பணத்தை ரசீதுகளுக்கு இடையில் இருக்குமோ என எண்ணி எல்லா பக்கத்தையும் இரண்டு மூன்று முறை திருப்பிப்பார்த்தான். எல்லா ரசீதுகளிலும் பச்சை மஞ்சள் எனப் பல வண்ணங்களில் கோடிடப்பட்ட கடை ரசீதுகளும் கடைசிப் பக்கத்தில் மொத்தம் $310.05 என்று எழுதப்பட்டு இருந்தது.

மீண்டும் ஒருமுறை நாம் ஏமாற்றப்படுகிறோமோ என்ற சந்தேகத்துடன் அவர் முகத்தைப் பார்த்தான்.

“நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொள். புரியவில்லை என்றால் இன்னொரு முறை கூடச் சொல்கிறேன். இந்த $310 என்பது மூன்று மாத காய்கறிகள் வாங்க ஆன செலவு. அத்தோட ரசீதுகள் தான் இது. நீ அதை மொத்தமா விளையாட்டு சாதனம் வாங்கக் கேட்கிறாய். இப்போது அதை வாங்குவதற்கு உனக்கு வாய்ப்புத்தருகிறேன். நீ தினமும் இந்த வீட்டுத் தோட்டத்தில் வேண்டா வெறுப்பாகச் செய்யும் ஒரு மணிநேர வேலையோடு சேர்த்து இரண்டு சிறிய காரியங்களைச் செய்தால் போதும், உனக்குத் தேவையான பணம் தானாகக் கிடைக்கும். அது உன்னுடைய பணம். நீ உன் விருப்படி உனக்குத் தேவையானதை வாங்கிக் கொள்ளலாம்” என்றார்.

அவன் பாதி புரிந்தும் புரியாமலும் விழித்தான். அவர் வீட்டுத் தோட்டத்தின் இடத்தைக் காட்டி, இந்த இடத்தை நான்காகப் பிரித்து ஒரு இடத்தில் தக்காளி ஒரு இடத்தில் கத்திரிக்காய் ஒரு இடத்தில் பச்சைமிளகாய் என்று நட்டுவைத்து விடு. அந்தக் கீரை காம்புகளையும் புதினா காம்புகளையும் ஒரு பக்கமாக நட்டு விட்டு தண்ணீர் ஊற்றினால் போதும், ஒரு வாரம் இல்ல இரண்டு வாரத்திலேயே புதினாவும் கீரையையும் அதிலிருந்து பறிக்கலாம்.

எப்படியும் இரண்டு மாதத்திற்குப் பிறகு பச்சைமிளகாய், தக்காளி கத்தரிக்காய் அதெல்லாம் காய்க்கத் தொடங்கும். அதை நீ அப்படியே பறித்து எடைபோட்டு உன் அம்மாவிடம் கொடுத்து விட்டு அதற்கான பணத்தை அவளிடம் இருந்து ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதி வாங்கிக் கொள். அந்த மாதக் கடைசியில் நான் உனக்கு மொத்தமாக நீ உற்பத்தி செய்து உன் அம்மாவிடம் விற்ற கீரை, காய்கறிக்கான பணத்தைத் தந்து விடுகிறேன்.

ஒரு கீரை கட்டின் விலை 5 டாலர். நான் கொடுத்த அந்த ரசீது கட்டில் அத்தோட விலை இருக்கிறது. வாரம் ஒரு கீரை கட்டு என்று வைத்துக் கொண்டாலும் கூட ஆறு மாசத்துக்கு மொத்தம் எவ்வளவு காசு கிடைக்கும் எனக் கணக்கு பண்ணிப் பார்த்துக்கொள். அது மட்டுமில்லாமல் இன்னும் நிறையக் காய்கறிகளும் நீ விளைவிக்கப் போகிறாய். அம்மாதிரியாகவே நீ உற்பத்தி செய்யும் பொருட்களை உங்க அம்மாவிடம் விற்று பணம் வாங்கிக்கொல்லலாம்.

அதை ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதி வைப்பதுதான் நான் சொன்ன சிறிய கூடுதல் வேலை. நம் வீட்டுத்தோட்டத்தில் எவ்வாறு நம்மிடம் உள்ள பொருட்களை வைத்து நமக்குத் தேவையான காய்கறிகளை உற்பத்திசெய்வது என்பதைப் பற்றி யூடியூப்-ல் பார்த்து அறிந்து கொள்வது தான் நான் சொல்ல வந்த இரண்டாவது வேலை. இவை அனைத்தையும் அழகாகத் தேதி போட்டு ஒவ்வொரு நாளும் நீ செய்யும் வேலைகளை ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதி வந்தாலே போதும். உனக்குத் தேவையான பணம் அனைத்தும் நீயே உற்பத்தி செய்து முடித்திருப்பாய்.

உனக்கு சிறுசிறு வேலை செய்ய உன் தம்பியை வைத்துக்கொள். அவனுக்கும் அதைக் கற்றுக் கொடு.

இந்த ஒப்பந்தம் சரி என்று தோன்றினால் போய் ஒரு நோட்டுப் புத்தகம் எடுத்து வா. இல்லையென்றால் இந்த மண்வெட்டி எடுத்துக் கொண்டு போய் அங்கே இருக்கும் புற்களைக் கொற்றி தள்ளிவிட்டு எப்போதும் போல நீ போய் உன் நண்பன் வீட்டில் ஒரு ஒரு மணி நேரம் வீடியோ கேம் விளையாடிவிட்டு வந்துவிடு அவ்வளவுதான்.

நீ இப்படியே வேலை செய்து விட்டு கூலியாக விளையாடப் போகிறாயா அல்லது சுயமாகக் காய்கறிகளை உற்பத்தி செய்து விற்று உனக்குத் தேவையானதை வாங்கிக் கொள்ளப்போகிறாயா என நீயே முடிவு செய்துகொள் என்றுகூறி முடித்தார்.

சிறிது ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு அவன் உள்ளே சென்று ஒரு நோட்டுப்புத்தகம் எடுத்து வந்தான்.

புதிதாக ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அதில் தினமும் ஒரு மணி நேரம் காய்கறி உற்பத்தி செய்வதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும். ஒவ்வொரு மாத இறுதியில் உற்பத்தி பொருளுக்கான விலையை பெற்றுக்கொள்ளலாம். மேலும் எப்போதும் போல ஒரு மணி நேரம் அவன் அவனுடைய தோழன் வீட்டிற்குச் சென்றுவிளையாடலாம் என ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை எப்படியும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திக்காட்டக் கூடிய வல்லவர் அவர் என்பதில் எந்த சந்தேகமும் எனக்கு இல்லை. இதன் மூலம் ஒரு தந்தையாக தன் மகன் மனதில் ஆழமான விதை ஒன்றையும் அவனுக்கே தெரியாமல் ஊன்றி விட்டார் என்பதைக் கவனிக்க வேண்டும்.

அடுத்த ஆறு மாதத்திற்குள் அவர்கள் வீட்டில் தினமும் என்னன்ன காய்கறிகள் தேவை, அவற்றின் வகைகள், அது எவ்வாறு விளைவிக்கப்படுகிறது, அவைகளின் விலைகள் முதற்கொண்டு வெறும் மண்ணில் விதைக்கப்படும் சமையலறை கழிவுகளும் விதைகளும் எவ்வாறு காய்கறிகளாகவும், கீரைகளாகவும் மனித உழைப்பின் மூலம் மீண்டும் பரிணமிக்கும் சூத்திரத்தையும் சேர்த்தே கற்றிருப்பான். இதன்மூலம் தனக்குத் தேவையானவற்றைத் தாமே எவ்வாறு உருவாக்கிக் கொள்வது என்பதையும் அவனுக்கே தெரியாமல் அவன் கற்றுத் தேர்ந்திருப்பான்.

பொருள் மற்றும் பணம் எவ்வாறு உருவாகிறது தொடங்கி அதன் மதிப்பு முதல் எவ்வாறு கையாள வேண்டும் என்பதும் புரிந்துகொள்வான்.

அவனின் தந்தையின் கூற்றுப்படி அவனின் ஆற்றலானது அவனுக்கே தெரியாமல் வாழ்க்கைக்குத் தேவையான ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளத் திருப்பிவிடப்பட்டு இருக்கும்.

வாழ்க்கைக்குத் தேவையான இந்த முக்கிய பாடத்தை ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளுக்குக் கற்றுத்தரவேண்டும். இந்த தந்தை மகனுக்கிடையிலான ஒப்பந்தம் ஒருவொரு பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் செய்துகொள்ள வேண்டும். இதைச் செய்யப் பெரிய இடவசதியோ பொருள் வசதியோ தேவைப்படாது. நாமிருக்கும் இடவசதி பெரிதாக இல்லாத அடுக்குமாடிக் குடியிருப்பிலும் நமக்கு எளிதில் கிடைக்கும் பொருட்களில் மண்ணை நிரப்பி எவ்வாறு பயனுள்ள செடிகள் வளர்ப்பது என்பது பற்றி ஆயிரக்கணக்கான காணொளிகள் கொட்டிக்கிடக்கின்றன. ஒரு சிறிய மண் நிரம்பிய கொட்டாங்கச்சியில் இரண்டு புதினா தண்டுகளை நடலாம். இரண்டு மூன்று வாரங்கள் நீர் ஊற்றி வெயில் படும் இடத்தில் வைத்தால் அது துளிர்த்து வளர்வதைக் காணலாம். இரண்டு இலைகளைக் கிள்ளி டீ போட்டுக் கொதிக்கவிட்டால் ஒரு புதுவித புத்துணர்வு வாசமும் சுவையும் கூடிக் கிடைப்பதைச் சுவைக்கும் போது உணரலாம். இவ்வாரான எளிய செய்முறைகள் மூலம் மிகவும் சிக்கலான வாழ்க்கை பாடங்களை வீட்டிலிருந்தே அதுவும் அவர்களின் விருப்பத்தின் பேரிலேயே கற்றுக் கொடுக்கலாம்.

நம் வீட்டு மாடியில் நான்கைந்து தக்காளிச் செடிகளை நட்டு வளர்க்கலாம். நமக்குத் தினமும் கிடைக்கும் நான்கு தக்காளிகளில் இரண்டை கொடுத்து இரண்டு கத்திரிக்காய்களை அடுத்த வீட்டு மாடித் தோட்டத்திலிருந்து பண்டமாற்று முறையில் வாங்கிக் கொள்ளலாம். இதன் மூலம் ஏற்றுமதி-இறக்குமதி மற்றும் உள்நாட்டு-வெளிநாட்டுச் சந்தைகள் பொருளாதாரத்தையும் எளிதில் புரிய வைக்கலாம்.

இங்கு நம் குழந்தைகள் உருவாக்கும் பொருட்களைக் காட்டிலும் அதிலிருந்து அவர்கள் கற்றுக் கொள்ளும் பாடம் பெரியது என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

அவ்வாறு கருதும் பட்சத்தில் இந்த நற்சிந்தனையை நம் சிந்தனையாகக் கருதி மற்றவர்களுக்குக் கடத்தலாம். ஒரு குடும்பம் என்பதைத் தாண்டி இன்னும் பல குடும்பங்களில் உள்ள குழந்தைகள் சேர்ந்து கூட்டுப் பண்ணைகளை அவர்களின் அடுக்குமாடிகளில் அமைக்கலாம்.

நற்சிந்தனையை சமூக பரவலாக்க நம்மால் முடியும். அச்சிந்தனை பரவலின் விளைவு நன்மையிலேயே முடியும்.

இளம் வயதில் நல்லவை விதைப்போம், தன்னம்பிக்கை வளர்ப்போம்.

பிரபு வெங்கடேசன்

Leave a Reply