‘திரௌபதி’ திரைப்படம் பேசும் அறம்

0
1341

மாயன் மெய்யறிவன்

இது ஓர் திரைப்படம் என்பதை விட, பெண்களைப் பெற்ற பெற்றோர்களது மனதில் உள்ள ஆற்றாமைகளைப் பேசும் சமூக யதார்த்தம் என்பதே நிஜம். தமிழகத்திலே நயவஞ்சக திட்டத்துடன் பெண்களை காதல் என்கிற பெயரில் ஏமாற்றி பணம் பறிக்கும் ஓர் அராஜக கும்பல், அராஜகத்தை தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டி, மக்களிடம் விழப்புணர்வை ஏற்படுத்தும் படம். இதனாலேயே மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட, எந்த பெரிய நடிகரும் நடிக்காத, அதிக விளம்பரங்கள் செய்யப்படாத இந்தப்படத்தை, தமிழக மக்கள் குடும்பம் குடும்பமாக சென்று பார்க்கிறார்கள்.

சாதி ஒழிப்பு என்கிற முகமூடியுடன், வசதியான வீட்டுப் பெண்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றி, அவர்களது பெற்றோர்களுடம் பணம் பேரம் பேசும் கட்டப்பஞ்சாயத்து கும்பல் தமிழகத்தில் இருப்பது, நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டிய, வேதனைப்பட வேண்டிய விஷயம். இத்தகைய சமூக விரோத கட்டப்பஞ்சாயத்து கும்பலை ‘திரௌபதி’ அம்பலப்படுத்தி காட்டி இருக்கிறாள்.

இந்தப்படம் திரைக்கு வந்த பிறகு, தமிழகத்தில் இரு பிரிவுகளாக கருத்து கூறுவோரை பார்க்க இயலுகின்றது. ஒன்று, தாங்கள் பெண்களை ஏமாற்றி செய்துவந்த அட்டூழியங்களை, ‘திரௌபதி’ படம் பொதுவெளியில் காட்டிவிட்டதே என கதறும் சமூக விரோத பொறுக்கி கும்பல். இரண்டு, பெண்களை ஏமாற்றும் கும்பலை பொதுவெளியில் எடுத்துச் சொல்லி, இதனால் தங்களது பெண்கள் விழிப்புணர்வு பெற்று, இத்தகைய நாடக காதல் கும்பலின் வலையில் விழாமல் இருப்பார்கள் எனக் கருதும் பெற்றோர்கள்.

திரௌபதி படத்தின் கதை, அந்தப் படத்தில் இல்லை. அது நிஜ வாழ்வில் நம் அருகே நடந்துகொண்டிருக்கிறது. உங்களுக்கு தெரிந்தவர்களும், எனக்கு தெரிந்தவர்களும் பாதிப்படைந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் மக்கள் அலையென சென்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

சமூக நீதி, சமூக அறம், சமூக பாதுகாப்பு என பேசும் எவரும், திரௌபதி படத்தைப் பற்றி பேசாமல் கடந்து செல்ல இயலாது. பொது மக்கள் அனைவரும் இந்தப் படத்தை கொண்டாடுகிறார்கள். குடும்பம் குடும்பமாக சென்று பார்க்கிறார்கள் எனில், பெண்களை ஏமாற்றும் கட்டப்பஞ்சாயத்து கும்பலால் அவர்கள் எந்த அளவிற்கு பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர் என்பதை எவரும் புரிந்துகொள்ள முடியும்.

விசாலத் தன்மையுடன், உண்மையை எதிர்கொள்ளத் துணியும் எவரும் இந்தப் படத்தில் வெளிச்சமிட்டு காட்டப்படும் சமூக சீர்கேட்டின் அபாயத்தை நிச்சயம் உணர்வார்கள். இந்தப் படத்தைப் பார்த்தாவது, பெண்களைப் பெற்றோர்களின் பாதிப்புகளை உணர்ந்து, பெண்களை நாடக காதல் மூலம் ஏமாற்றி அராஜகத்தில் ஈடுபடுவோர் திருந்தவேண்டும்.

திரௌபதி போன்ற சமூக விழிப்புணர்வு படங்கள், ஒவ்வொரு பள்ளியிலும், கல்லூரியிலும் திரையிட்டுக் காட்டப்பட வேண்டும்.

தமிழ் திரைப்பட வரலாறு என்பது, திரௌபதிக்கு முன், திரௌபதிக்கு பின் என மாறி உள்ளது என நிச்சயம் கூற இயலும், இந்த அளவிற்கு இப்படம் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இத்திரைப்படத்தை எடுத்த இயக்குநரும், படக்குழுவினரும் தமிழக மக்களின் பாராட்டிற்கு உரியவர்கள்.

திரௌபதி படம் அல்ல, சமூக விழிப்புணர்வின் நெருப்பு.

Leave a Reply