பெண்களும் தொழிலதிபர் ஆகலாம்

புவனா கணேஷன்

0
308

கடிகார முட்களோடு நாமும் சேர்ந்து சுழன்று கொண்டிருக்கிறோம். மாத சம்பளத்திற்கு வேலை பார்த்து, உழைத்து தேய்கிற பொழுதின் இடையே, ஒரு நாள் விடுப்பு எடுக்கவும் ஓராயிரம் முறை யோசிக்கிறோம். மேலதிகாரியின் கடுப்புக்காட்டலை எல்லாம் சகித்து, பொருளாதார போக்கின் சிக்கலை சந்திந்துக் கொண்டிருக்கும் நமது நடுத்தர வர்க்கத்தினர் எல்லோருக்கும்; “சின்னதாகவேணும் ஏதாவதொரு சொந்த தொழிலைத் தொடங்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றாவே செய்யும்”.

அவரவருக்கு ஏற்ற வகைப்பாட்டில், சின்னதாக ஓர் சொந்தத் தொழிலை ஆரம்பித்து வெற்றிகரமாகவே நடத்தலாம். சொந்தத் தொழிலை தொடங்கி நடத்துவது கடினமானதில்லை என்பதைப் போலவே சுலபானதுமில்லை. சிறு தொழில் தொடங்குவதற்கு முன், எதையெல்லாம் கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டுமென பார்ப்போம்.

முதலாவதும் முக்கியமானதுமான ஒன்று; ஓரளவு பண சேமிப்பு இருக்கிறது. போதாமைக்கு பேங்கில் லோன் போட்டுக்கொள்வோம். கையில் பணம் இருக்கு, ஆனால் தொடங்கப் போகிற தொழிலைப் பற்றி அதிகம் தெரியாது என்கிற நிலையில், இறங்கிவிட்டுப் போற போக்கில் வருவதைப் பார்த்துக் கொள்வோம் என மெத்தனமாக எதிலுமே இறங்கிவிடக் கூடாது.

உதாரணமாக ஒரு ஃபேன்ஸி நகைகள் விற்பனை அங்காடி தொடங்குகிறோமென வைத்துக்கலாம்.
எந்த ஊரில் அதிகம் தயாரிக்கிறார்கள்? எங்கிருந்து கொள்முதல் செய்தால் நல்லது, அங்கிருந்து கொண்டுவர ஆகும் நேரடி மற்றும் மறைமுக செலவினங்கள் முதற்கொண்டு, கஸ்டம்ஸ் டியூட்டி வரை நுணுக்கி ஆராய்ந்து தகவல்களைத் திரட்டி வைத்திருக்க வேண்டும். கொள்முதல் செய்யும் இடத்தின் தயாரிப்பாளர்கள் நம்பிக்கைக் உரியவர்களா? தரமான பொருள் கிடைக்குமா? என்பதையும் அலசி ஆராய்ந்து தெரிந்து கொள்ளவேண்டும்.

இதே போல, எந்த இடத்தில் கடையை விரிக்கப்போகிறோம் என்பதும் முக்கியம். விரும்பித் தேடி வரும் வாடிக்கையாளர்கள் வந்து போகக்கூடிய பகுதியாக தேர்ந்தெடுக்க வேண்டும். ஆண்கள் மட்டுமே புழங்கும் இண்டஸ்ட்ரியல் ஏரியாவில் பெண்களுக்கான கடைவிரித்தால் செல்லாது என்பதைப் போன்ற அடிப்படை விஷயங்கள்.

தொடக்கத்கதிலேயே கையில் இருக்கும் பணத்தை எல்லாம் மொத்தமாக போட்டு அகலக்கால் வைத்து விடவும் கூடாது. சந்தையின் போக்கு எப்படியிருக்கிறது? நமது கடைப் பொருட்களுக்கான வரவேற்பு எப்படியிருக்கும்? பக்கத்தில் அதே வகை கடைகளைப் போட்டிருக்கும் போட்டியாளர்கள் இருக்கிறார்களா? எனில் போட்டியை சமாளித்து வாடிக்கையாளர்களை நமது கடையை நோக்கி இழுக்கச்செய்யும் யுக்திகள் எவையெவை? எந்த மாதிரியான கவர்ச்சியான சலுகைகள் அறிவிக்கலாம்? என்பதையெல்லாம் நட்டம் வராத வகையில் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.

இப்போதைக்கு ட்ரெண்டில் இருக்கும் ஒன்றின் மீது ஏகத்திற்கு முதலீடு செய்து, பிரமாதமாக விற்பனையாகுமென ஒரேடியாக வாங்கி குவித்தால், அடுத்த ஆறே மாதத்தில் மற்றொன்றை நோக்கி ட்ரெண்ட் மாறியிருக்கும். இம்மாதிரி ஆபரணங்கள், ஆடைகள் விசயத்தில் ட்ரெண்ட் மாறிக்கொண்டே இருக்கும். அதற்கேற்ப திட்டமில் அவசியம்.

எவ்வளவு மூலதனம் போட்டிருக்கிறோம்? எவ்வளவு செலவாகிறது? எந்தளவு விலை வைக்கலாம்? எந்தளவு விலை வைத்தால் கட்டுபடியாகும் என்கிற கணக்கில் கூர்மையாக சிந்தித்து செயல்பட வேண்டும்.

தொழில் சார்ந்து எதைச் செய்தாலும்; பாதகம், சாதகம் இரண்டையும் யோசித்து, ப்ளான் A, ப்ளான் B என இரு வேறு மாற்று வழிகளில் செயல்பட கற்றுக் கொள்ளவேண்டும்.

எதை வாங்கினாலும், விற்றாலும், மேல் செலவுகள் செய்தாலும் அததற்கான பில்களை சரி பார்த்து வைத்துக் கொள்வது மிக அவசியம்.

கணக்கு வழக்கு இல்லாமல், மேலும் மேலும் மூலதனத்தைப் போட்டுக்கொண்டே இருப்பது நல்லதில்லை. மேலும் மேலும் கடன் வாங்கி சமாளித்துவிடலாமெனும் எண்ணம் சொந்த தொழிலுக்கு முதல் எதிரி. கடன் தொல்லைகள் நெருக்கத்தொடங்கினால், போட்டதை எடுத்துவிடவேண்டும் எனும் உத்வேக அவசரத்தில் தொழிலுக்கு தேவையான தரத்தை தர தவறிவிடுவோம். பிடிவாதமாய் இனி தொழிலிருந்து எடுக்கும் இலாபத்தைக் கொண்டே தொழிலை விரிவாக்குவேன் என்று கங்கணம் கட்டிக்கொள்ள வேண்டும்.

“இதென்ன! கடையை திறந்து வைத்தால் வேணும்னு கேக்கிறவங்களுக்கு எடுத்து கொடுத்து விற்க வேண்டுயதுதானே. அதற்கு ஒரு ஆளப்போட்டா போச்சு. நாமும் முழுநேரமும் கடையில் நிக்கனும்ன்னு அவசியமில்லை” எனும் மேம்போக்கு தனத்தைத் தூக்கி எறிந்தே ஆகணும். சின்ன மளிகை கடையோ பெட்டிக்கடையோ, இல்லை எதுவோ, சொந்தத் தொழிலென இறங்கிட்டா அதில் கண்ணும் கருத்துமா முழு ஈடுபாடு அவசியம். ” உடையவன் பாரா வேலை ஒரு முழம் கட்டை”, “உடையவன் பாராப் பயிர் உருப்படுமா?” போன்ற பழமொழிகள் நினைவிருக்கட்டும்.

நமது கடை பொருளின் தரம் அதிகம், விலை குறைவு என எவ்வளவுதான் இருந்தாலும், வரும் வாடிக்கையாளர்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்பது அதிமுக்கியம். பல கடைகளில் கவனித்திருக்கிறேன். நாம் போய் நிற்போம். நம்மகிட்ட கவனம் வைக்காமல், அப்பதான் எதையோ மும்முரமாக எடுத்து அடுக்கி வைத்துக்கொண்டிருப்பார்கள், அல்லது தொலைபேசியில் யாரிடமாவது தேவையே இல்லாதவைகளை முடிக்காமல் பேசிக்கொண்டே இருப்பார்கள், அல்லது நாம் கேட்கும் பொருட்களை அசட்டையாக எடுத்துக்கொடுப்பார்கள், ஏனோ தானோவென பதிலுரைப்பார்கள், இதுவெல்லாம் வாங்கவந்தவர்களை திரும்ப வரப்பிடிக்காமல் செய்துவிடும்.

“என்ன அக்கா கொஞ்ச நாளா ஆளயே காணோம், ஊருக்கு எதும் போயிருந்தீங்களோ” போன்ற நட்புமுறை பேச்சுவாகு வாங்கவந்தவர்களை நிரந்தர வாடிக்கையாளர்கள் ஆக்கும். “இதோ நீங்க கேட்ட பொருளை குறிச்சு வச்சு ஆர்டர் போட்ருக்கேன். வந்ததும் உங்களுக்கு உடனே தகவல் அனுப்பிடறேன்” என பொறுப்பாக நேர்த்தியாக பதில் தருவதும், சொன்னபடியே செய்வதும், முக்கியமான விசேச பண்டிகை நாட்களுக்கு, ஒரு வாழ்த்தும் சின்னதாக அன்பளிப்பும் தருவது நம் தொழில் பிணைப்பிற்கு தரும் சூப்பர் மேஜிக்.

நாம் எடுத்து செய்யும் தொழில் எதுவாக இருப்பினும், சொன்ன வார்த்தையை காப்பாற்றுவது மிக முக்கியம். இந்த நேரத்திற்கு, இதைத் தருகிறேன்னு வாக்கு தந்திருந்தால், பிசகாமல் காலதாமதம் செய்யாமல் அதை தந்துவிடவோ செய்துவிடவோ தவறவே கூடாது. இப்போ அப்போவென இழுத்தடிப்பதும், மழுப்பல் பதில்களும், வாடிக்கையாளர் போனில் அழைத்தால் கண்டுகொள்ளாமல், எடுக்காமல் இருப்பது போன்றவை நம் மீதும் நமது தொழில் மீதும் இருக்கும் நம்பிக்கையை அழித்துவிடும்.

சொந்த தொழிலைத் தொடங்கி, அதை வெற்றிகரமாக இலாபத்தோடு கொண்டு போக முடியாமல் செய்யும் அடுத்த எதிரி; பகைமை மட்டுமில்லை, நட்பும் தான். அதாவது நமது நண்பர்களிடமும், நமக்கு வேண்டிய சொந்தக்காரர்களிடமும், நாம் காட்டும் முகதாட்சன்யம். உதாரணத்திற்கு, “அது என் பிரண்டோட ரெஸ்ட்டாராண்ட் தான், எப்போ போனாலும் சாப்பாடு ப்ரீ ” என பெருமை பீற்றிக்கொள்பவர்கள், “என்னதிது நாம எவ்வளவு வருசம் பழகிருக்கோம் எனக்கும் இதே விலையை சொல்றியே” என அநியாயத்திற்கு நட்பை பயன்படித்தி சலுகைகளை எதிர்ப்பார்பவர்கள், இன்னும் சிலர் ஒருபடி மேலே போய், நீங்க எங்கிருந்து இதெல்லாம் வாங்கிட்டு வந்து விக்கிறீங்க? எனக்கும் மொத்தமாக வாங்க வேண்டியிருக்கு, அட்ரஸ் கொடுவென அட்வாண்டேஜ் எடுப்பவர்கள். இவர்களுக்கு எல்லாம் நட்பின் அடிப்படையில் நாம் இடம் கொடுத்தால், முதலுக்கே மோசம்.

எந்த காரணத்தைக் கொண்டும், பொருட்களை கடனுக்கோ அல்லது போலி வாக்குறுதிகளை நம்பியோ கொடுப்பது கூடாது. நமக்கும் அவர்களைப் போலவே பல சவால்கள் பணம் சார்ந்து இருக்கும். போட்ட பணத்தை திருப்பி எடுத்தால் தான், புதிதாக திரும்ப வாங்கிப்போட முடியும் என்பதை உணர்த்திவிட வேண்டும். ஆக “அப்ப ஒன்னுக்குவொன்னா அப்படி இருந்தோமே இப்ப புதுசா பிஸ்னஸ் தொடங்கிட்ட பவுசில் நீங்க மாறிட்டீங்க” என முகத்தைத் திருப்பிக்கொண்டு போனார்கள் எனில் போகட்டும். அவ்வளவு தான் அவர்களது நட்பின் தரம். நட்பு வேறு, தொழில் வேறு என்பதில் கட்டாயம் நாம் கண்டிப்புடன் இருக்க வேண்டும்.

விற்பனை யுக்திகளும், விளம்பர யுக்திகளும், தொழிலில் புதிது புதிதாக புதுமைகளைப் புகுத்திக்கொண்டே இருப்பதும், நமது சிறு தொழிலை பெரிய அளவிற்கு கொண்டு செல்ல நிச்சயம் உதவும்.

வருமானம் ஈட்டுதல் என்பது, நம் அனைவருக்குமே அடிப்படை அவசியமானது. அதில் ஆணென்றும் பெண்ணென்றும் வித்தியாசமே இல்லை.

நம்மில் எத்தனையோ பெண்கள், நிறையவே கல்வித் தகுதிகளை, அறிவுத்திறனை வளர்ந்துக்கொண்ட போதும், ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல்; திருமணம், குழந்தைகள், குடும்பம் என்றானபின் பிள்ளைகளை வளர்க்கவேண்டி வெளியே இறங்கி வேலைபார்க்க இயலாத நேரமின்மையின் சுழற்சியில் மாட்டிக்கொண்டு, பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, முழுநேர இல்லத்தரசியாகி, சுயவருமானம் ஈட்ட வழியில்லாத நிர்பந்தந்தில் இருக்கிறோம்.

“அப்படி நீ கஷ்டப்பட்டு வெளியே போய் வேலைதேடி சம்பாதித்து தான் ஆகனும்ங்கிற அளவு நம்ம பொருளாதார நிலை ஒன்னும் மோசமில்லை, என்னால பார்த்துக்க முடியும். நான் சம்பாதிப்பதே போதும் என சொல்கிற கணவன்மார்கள் அறிவதில்லை, சுய சம்பாத்தியம் என்பது பொருளாதார நிலையை மேம்படுத்தி வாழ்க்கைத் தரத்தை உயர்த்திகொள்ள மட்டுமில்லை, “எல்லாவற்றிற்கும் சார்ந்திருக்கோம்” எனும் புள்ளியிலிருந்து மாற்றி, நம்ம தன்னம்பிக்கை லெவலையும், தன்னிச்சையான சுதந்திர உணர்வையும் கூடவே கூட்டித்தரும். ஆகவே வெளியே இறங்கி வேலைபார்க்க முடியாவிட்டாலும், கடை மாதிரி போட்டு முழுநேர தொழிலாய் செய்ய முடியாவிட்டாலும், வீட்டிலிருந்தபடியேவும் சொந்த தொழிலை ஜோராக நடத்தலாம். இப்போதைய நவீன இணைய உலகத்தில், சாத்தியமில்லாத ஒன்றென எதுவுமே இல்லை என்கிற நிலை உருவாகிவருகிறது. ஆன்லைனிலேயே, ஃபேஸ்புக் பேஜ், இன்ஸ்டாகிராம், வாட்ஸப்பென நம்ம கடையை விரித்து, பொருட்களை விற்பனைக்கு வைக்க என எவ்வளவு தளங்கள் கொட்டிக்கிடக்கின்றன.

அடிப்படையில் தெளிவும், திட்டமிடலும் நிறையவே இருந்தால், நமது சொந்த சிறு தொழிலைத் தொடங்கிவிடலாம். முழு முனைப்போடும், நம்பிக்கையோடும், ஈடுபாட்டோடும் செயல்பட்டால், வெற்றிகரமான லாபம் பார்க்கலாம்.

புவனா கணேஷன்

குறிப்பு: இந்த கட்டுரையைப் போன்ற ஆக்கச்செழுமையான படைப்புகளைத் தொடர்ந்து படிக்க, தமிழ்விங் தளத்தின் Facebook மற்றும் Twitter பக்கங்களை லைக் செய்யுங்கள். விரைவில் பயனுள்ள காணொளிகளை தமிழ்விங் தளம் வெளியிட இருப்பதால், இதன் YouTube பக்கத்திலும் சப்ஸ்கிரைப் செய்து உங்களது ஆதரவினை நல்குங்கள். உங்களது தொடர்ந்த ஆதரவானது, தமிழ்விங் தளத்தில் பல நல்ல படைப்புகள் வெளிவர உதவும். மிக்க நன்றி.

Leave a Reply