வன்னியர் வழிபாட்டு மரபுகள் – ஆகாச வீரன் வழிபாடு

இரத்தின புகழேந்தி (கவிஞர், எழுத்தாளர்)

6
3279

போரில் இறந்தவர்களின் நினைவாக நடுகல் அமைத்து வழிபடும் மரபு தமிழர்களிடையே உண்டு என்பதற்கு சான்றுகள் காணப்படுகின்றன. இது ஒரு தொன்மையான வழிபாட்டு முறையாகக் கருதப்படுகிறது. இதனைத்தான் முன்னோர் வழிபாடு என்ற கோட்பாடாக அறிஞர்கள் வளர்த்தெடுத்தனர். இறந்தோரின் ஆற்றல் வாழ்வோரின் நலனில் பெரும்பங்காற்றுகிறது எனும் கருத்தாக்கத்தால் ஏற்பட்டதே முன்னோர் வழிபாடாகும்.

இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் இத்தகைய வழிபாடு காணப்படுகிறது என்பார் முனைவர் ஆறு. இராமநாதன். இந்த வழிபாட்டு முறைதான் நாளடைவில் குல தெய்வ வழிபாடாக மாறியிருக்கலாம். இதனை பகுத்தறிவுப் பார்வையில் மூட நம்பிக்கை என்று புறம் தள்ளிவிட முடியாது. மக்களின் வழிபாட்டு முறை என்பது நாட்டின் பண்பாட்டு வரலாற்றோடு தொடர்புடைய ஒன்றாகும்.

குலதெய்வ வழிபாடு இனக்குழு மக்களின் பண்பாட்டுத் தொன்மையை வெளிப்படுத்துவதாகும். சிற்றூர்கள் தோறும் இன்றும் இவ்வழிபாட்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தில் மணிமுத்தாறு, வெள்ளாறு ஆகிய இரு ஆறுகளுக்கிடையில் அமைந்துள்ள அழகிய சிற்றூர் மருங்கூர். அங்கு வாழும் வன்னிய இன மக்களில் கலிங்கராயர் என்ற பட்டப்பெயருடைய பங்காளிகள் குல தெய்வமாக ஆகாச வீரனை வழிபட்டு வருகின்றனர். இவ்வழிபாட்டு முறை முற்றிலும் மாறுபட்டதாகவும், பண்பாட்டுத் தொன்மையுடையதாகவும் விளங்குகிறது. சிறு தெய்வம் என நிறுவன சமயத்தினரால் குறிப்பிடப்படும் வழிபாட்டு இடங்களில் வேல், சிலை, மரம் என ஏதேனும் ஓர் அடையாளம் காணப்படும். ஆனால் ஆகாச வீரனுக்கு எவ்வித அடையாளமும் பூமியில் இல்லை. வானத்தில் அவர்களின் வீரன் இருப்பதாக நம்புகின்றனர். பங்காளிக் குழுவில் உள்ள ஒரு குடும்பத்தினர் வேண்டிக்கொண்டு ஆகாச வீரனுக்கு பூசை செய்வது வழக்கம். ஆடு, பன்றி ஆகிய உயிர்களை வீரனுக்கு வேண்டி விட்டு அவற்றைப் பலியிடுவர். இவ்வாறு உயிர்ப்பலி கொடுத்து நடத்தப்படும் பூசை, பிலி பூசை எனக் குறிப்பிடப் படுகிறது (பலி பூசை என்பது பிலி பூசை என மருவியிருக்கலாம்) உயிர்ப்பலியின்றி, பொங்கல் மட்டும் பொங்கி செய்யப்படும் பூசை பா(ல்) பூசை எனப்படும். பூசைக்கு இன்றும் கைக்குத்தல் அரிசியே பயன்படுத்தப்படுகிறது. மண்பானை, சட்டி, அகப்பை ஆகியவற்றை மட்டுமே சமைக்கப் பயன்படுத்துகின்றனர். மஞ்சள், மிளகு ஆகியவற்றைத் தவிர உப்பு, புளி, மிளகாய் என எதையும் பயன்படுத்துவது இல்லை.

நெல்லைக் குற்றுவது மஞ்சளரைப்பது என அனைத்துப் பணிகளையும் ஆண்களே செய்யவேண்டும். பூசைக்குப் பொருள்களைக் கொண்டு செல்லும் போதும், மஞ்சளரைத்து எடுத்துச்செல்லும் போதும், எதிரில் யாரும் வராமலிருக்கும்படி அறிவிப்பு செய்து அதன் பிறகே எடுத்துச்செல்வர். சமைத்த உணவு வகைகளைப் படைப்பதற்கு வாழை இலையைப் பயன்படுத்துவதில்லை. பொரச இலையைத் தைத்துத் தையல் இலையாகப் பயன்படுத்துவர். இன்றும் இம்முறையே பின்பற்றப்படுகிறது. காட்டுமல்லிப் பூவைத்தான் பூசைக்குப் பயன்படுத்துகின்றனர். படைக்கும்போது பூசை செய்பவர் வாயைக் கட்டிக்கொள்வார். பூசைக்கு சூடம், சாம்பிராணி தவிர பிற பொருள்கள் பயன்படுத்துவதில்லை. ஒவ்வொரு இலைக்கும் முன்பாகச் சூடத்தைக் கொளுத்தி எரியச்செய்வர். பூசையில் கலந்து கொள்ளும் ஆண், பெண், சிறுவர்கள் அனைவரும் வெள்ளை உடையில்தான் வர வேண்டும். கறுப்பு நிற நாடாவோ, அறைஞாண்கயிரோ அணியக் கூடாது. ஆகாச வீரனுக்குக் கறுப்பு ஆகாது என்பதால் அக்குடும்பத்தினர் எப்போதும் கறுப்பு நிற அரைஞாண் கயிறு அணிவதில்லை.

பூசை முடிந்ததும் முதல் உணவை ஆகாயத்தை நோக்கி வீசுவது மரபு. ஆகாச வீரன் அவ்வுணவைப் பெற்றுக்கொள்வார் என நம்புகின்றனர். இப்பூசையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் நீத்தார் நினைவுச் சடங்கு போலவே அமைந்துள்ளன. பூசையன்று பெண்கள் தலையில் பூச்சூடுவதில்லை. அன்று தங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினரை வரவேற்பதில்லை. உப்பின்றிச் சமைப்பது, பூசைப் பொருள்களைக் கூடையில் வைத்து எடுத்துச் செல்வது, அப்போது எதிரில் யாரும் வராமலிருப்பது, பெண்கள் வெள்ளை உடை அணிவது ஆகிய அனைத்தும் இறப்புச் சடங்கோடு தொடர்புடையவை. எனவே தங்கள் இல்லத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு போரில் இறந்த வீரனையே இவர்கள் தெய்வமாக வழிபடுவதாகக் கருதலாம். இக்காலிங்கராயர்களின் குடும்பம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பங்காளிச் சண்டையில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் என்பதை இவர்களிடம் நிலவும் வாய்மொழிக் கதையின் மூலம் அறிய முடிகிறது.

இரத்தின புகழேந்தி (கவிஞர், எழுத்தாளர்)

6 COMMENTS

  1. நாங்களும் இதைப்போன்று முறையில்தான் வழிபட்டு வருகிறோம் .நாங்கள் இருப்பது அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் அருகில் ஆனால் எங்களது பூர்வீகம் பெண்ணாடம் திட்டக்குடி என்று முன்னோர் சொல்ல கேட்டு இருக்கிறோம்
    ஆனால் ஆகாச வீரனுக்கு பதிலாக கருப்பன் என்று வழிபட்டு வருகிறோம் கருப்பனுக்கு கருப்பு நிறம் ஆகாது என்றும் எம் முன்னோர் சொல்லக் கேட்டிருக்கிறோம்.

    நீங்கள் சொல்லும் முறையிலே நாங்களும் குலதெய்வம் வழிபட்டு வருகிறோம் ஆனால் தையல் இலைக்கு பதிலாக வாழை இலையில் படையில் போடப்படுகிறது மற்றபடி நீங்கள் சொன்னது அனைத்தும் நாங்கள் பின்பற்றி வருகிறோம்…

    தெளிவான வரலாறுக்கு தந்தமைக்கு நன்றி..

  2. வன்னிய குலதெய்வ வழிபாட்டினை பற்றி அறிந்தேன், நன்றி

  3. மூதாதையர் வழிபாடு,குறிப்பாக குழந்தைபேற்றில் இறப்பவர்களை ஆண்டுதோறும் தைவெள்ளியில் வழிபடுவது வழக்கம்.எனது அப்பாவி சகோதரி வெள்ளையம்மா அப்படி காலமானவர்.அப்பா பெரியப்பா எல்லோரும்ஒன்று கூடி வீட்டில் புதுச்சேலை,கருகமணிதாலி,மற்றும்வளையல் ரிப்பன் செண்ட்,பிஸ்கெட் ஆரஞ்சு.கோழிகுழம்பு,அவிதத முட்டை வைத்துபடையலிட்டு இரவு பத்துமணிக்குமேல் அவர் இறந்தபின் சித்தப்பா உறவில் ஒருவர் மந்திரித்து செப்புத்தகட்டில் அவரை கோடுகளால் வரைந்து வைத்ததை வீட்டு சாமிமாடத்தில் வைத்து வழிபடுவோம்.வீட்டார் யார் மீதாவது அந்த சித்தப்பாவோ அத்தையோ சந்நதம் கொண்டு இறங்கி எல்லாருக்கும் அருள் வாக்கு சொல்லி திறுநீரு பூசுவார்,அதன்பின் படையல் உணவு எல்லோருக்கும் பறிமாறப்படும்.நானும் சாப்பிட்டு இருக்கிறேன். படையலில் வைத்த ஆரஞ்சு யாரோ சாப்பிட்டதை போல சப் என்று இருக்கும்அப்படி சாமி கும்பிடாத நாளில் கூட கனவில் வந்து சொன்ன பலவிஷயங்கள் எனக்கே நடந்ததுணடு.அவர்கள் எப்போதும் நம் தொடர்பில்தான் இருக்கிறார்கள்.நாம் தொடர்பு கொண்டால் வழிநடத்துவார்கள். ஆபத்தில் காப்பாற்றுவார்கள்,எனதுமூத்த அக்கா பெயர் வெள்ளத்தாய்.அண்ணன் வெள்ளப்பாண்டி,சின்ன அக்கா வெள்ளதுரைச்சி, என்பெயர் வெள்ளதுரை……இடையில் சிறு வயதிலேயே இறந்துபோனவன் வெள்ளச்சாமி…………..

  4. எங்கள் வீட்டு குல தெய்வ வழிபாட்டு முறையிலும் கோவிலில் தான் சென்று நெல் குத்தி பொங்கலிட்டு படையல் செய்வார்கள் வெளியிலிருந்தும் கடைகளிலும் அரிசி போன்ற பொருட்களை வாங்கிச் செல்ல மாட்டார்கள் கருப்பு நிற உடைகள் அணிவது இல்லை..
    அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் உஞ்சனை காணி பெருவிழிஅப்பர் கோவில்.

  5. எங்கள் ஊரு பக்கம் தான். இருந்தாலும் எனக்கு இதுநாள் வரை தெரியாத விசையத்தை தெரிவித்த ஆசிரியருக்கும், இந்த வலைத்தளத்திற்கும் நன்றி, வாழ்த்துகள்

Leave a Reply