அமெரிக்கா to இந்தியா – கொரோனா காலத்தில் ஒரு பயணம்

சுரேஷ் ராஜசேகரன்

0
724

முதல் தலைமுறையாக அமெரிக்காவில் குடியேறியவர்களான, எங்களைப் போன்ற பெரும்பாலோர் தங்களின் தனிப்பட்ட சூழ்நிலைகள், வேலை இழப்பு, விசா அல்லது ஜி.சி பிரச்சினைகள், வயதான பெற்றோர்கள் மற்றும் இந்தியக் கலாச்சாரத்தை தங்கள் குழந்தைகளும் பின் பற்றுவது என்று பலவித காரணிகளுக்காக இந்தியாவிற்குத் திரும்பி வந்துள்ளனர். குழந்தைகள் தங்களது தாத்தா பாட்டி, மற்றும் உறவினர்களுடன் வளர வேண்டும் என்று விரும்பும் பெற்றோர்களும் உள்ளனர். ஆனால் அங்கேயே இதே போலப் பலவித காரணிகளுக்காகத் தங்கியிருக்கும் தமிழர்களுக்கு, மண்ணின் மணம் மனம் முழுவதும் இருக்கும். இதை அங்குப் பேசிய பலரிடம் கவனித்திருக்கிறேன். இப்போது கோவிட் நேரத்தில் பலர் பலவித சூழல் காரணமாக (பெற்றோர்கள், குழந்தைகள், மரபுசார் ஈர்ப்பு, மண்சார்பு மற்றும் புதிய அரசு தடைகள் இன்னல்கள்) திரும்பி இந்தியாவிற்கு வருவதைப் பார்க்கிறேன். நான் வளைகுடாவிலும் இருந்திருப்பதால், இந்த சூழல் அங்கும் ஒவ்வொருவர் மனதிலும் பிரதிபலித்ததையும் கண்டிருக்கிறேன்.

தற்போது கோவிட் நெருக்கடியைக் கையாள்வதில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான உறவு வலுப்பெற வேண்டும் என்பது பெரும்பாலோர் விரும்புகிறோம். தற்போதைய நிலைமை அமெரிக்கா மற்றும் இந்தியா இரண்டிற்கும் போட்டி வருவது உகந்ததல்ல. முதலில் கோவிட் அறிவிக்கப்பட்ட சில வாரங்களுக்குள் NY / NJ இன் அதிக இறப்பு எண்களைப் பற்றிப் படித்தபோது சற்று வருத்தமாக இருந்தது, ஏழை புலம்பெயர்ந்தோர் வேலை இல்லாமல் மற்றும் போக்குவரத்து இல்லாமல் பெருநகரங்களில் சிக்கித் தவிப்பதைப் பற்றிப் படிக்கும்போதும் வருத்தமாக இருந்தது.

அங்கிருந்து இந்தியா வர தற்போதைய சூழலில் படும் இன்னல்களே சிறிது வலியைத் தந்தது. எல்லோரும் அவ்வளவு எளிதாகத் திரும்பிவர முடிவதில்லை. உதாரணத்திற்கு என்னுடைய நண்பரின் பெண் வந்த அனுபவத்தை எடுத்துரைக்கிறேன். ரித்தி டியூக் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடம் படிக்கிறாள். இவள் ஒரு OCI அட்டை வைத்திருப்பவள். அவளது பெற்றோர்கள் இந்தியக் குடிமக்கள்.

ரித்திக்கு ஆறாம் தேதி விமானத்திற்காக ஜூன் ஐந்தாம் தேதி தூதரகத்திலிருந்து அழைப்பு வந்தது. டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பணம் செலுத்துவதற்கு ஏர் இந்தியா மின்னஞ்சல் முகவரி வழங்கப்பட்டது. இவள் அவர்களிடமிருந்து ஒரே ஒரு பதிலுக்காக பலமுறை ஏர் இந்தியாவுக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டியிருந்தது, இறுதியில் கட்டணம் செலுத்தி டிக்கெட் விவரங்கள் ரித்திக்கு அனுப்பப்பட்டன.

அவள் சிகாகோ விமான நிலையம் அடைந்தவுடன், விமான அலுவலர்கள் வெப்பநிலையைச் சரிபார்த்து, செக்-இன் செய்வதற்கு முன் சுய அறிவிப்பு படிவங்களை நிரப்பும்படி கேட்டார்களாம். அவர்கள் செக்கின் பெட்டிகளை பரிசோதிப்பதில் எடைகள் மற்றும் பொருட்கள் மீது மிகவும் கண்டிப்பாக இருந்தனராம். போர்டிங் பாஸ்கள் கொடுப்பதற்கு முன்பு பாஸ்போர்ட் / ஓசிஐ விவரங்களைச் சோதித்திருக்கின்றனர். பாதுகாப்பு சோதனைக்குப் பிறகு, விமானத்தில் ஏறுவதற்கு முன்பு கைகளைத் தூய்மைப்படுத்தவும், முகமூடிகளை அணியவும் செய்திருக்கின்றனர்.

விமானம் முழு பயணத்திற்கும் ரித்தி அணிய வேண்டிய முகதிரைதுணி மற்றும் மூன்று வேலைக்கான முன்னரே செய்து பதபடுத்திய உணவுகள், ஒரு முக கவசம் மற்றும் ஒரு பை வழங்கப்பட்டிருக்கிறது. விமானத்தில் கூடுதல் உணவு சேவையோ, குளிர் பானங்களோ அல்லது எந்தவிதமான வசதிகளோ தரப்படவில்லை. ஏனெனில் விமான பணிகுழுவினருக்கும் பயணிகளுக்கும் இடையில் குறைந்தபட்ச சமூக தொடர்பை பராமரிக்க (Social distancing) பயணம் முழுவதும் கடைபிடித்திருக்கின்றனர். .

நடுத்தர இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்கள் பாதுகாப்பு கவுன் அணியுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றனர். 6௦ சதவீத விமான பயணிகளே பயணம் மேற்கொள்ளுமாறு ஏர்இந்தியா நிறுவனம் இப்போதைய சூழலில் சேவை செய்கிறது. ஆதலால் உள்ளே அதிக இடைவெளியும் இருந்திருக்கிறது. அவசரத்தேவைக்கு எந்த நேரத்திலும் ஒரு நபர் மட்டுமே எழுந்து செல்ல அனுமதிக்கபட்டிருக்கின்றனர். இருந்தாலும் இடைவெளி அதிகம் இருந்ததால் ஓய்வுற வசதியாகத்தான் இருந்ததாம்.

டெல்லியில் விமானம் தரையிறங்கிய பின்னர், டெல்லி பயணிகள் முதலில் இறங்கியும் ஏனைய பயணிகள் விமானத்திலேயே அமர்ந்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றனர். சுமார் இரண்டு மணி நேரம் கழித்து ஏனைய பயணிகளுக்கு அனுமதி தந்ததாகவும் ரித்தி கூறினாள். இவள் சென்னைக்கு செல்லும் விமானத்தில் ஒருவழியாக ஏறி அமர்ந்ததும் சர்வதேசபயணத்தில் கடைபிடிக்கபட்டவை இங்கும் தொடர்ந்திருக்கிறது.

சென்னையில் தரையிறங்கிய பின், எல்லா பயணிகளும் ஸ்க்ரீனிங், வெப்பநிலை மற்றும் இரத்த அழுத்த சோதனைகளை மேற்கொண்டனராம். இதில் பாசிடிவ் இல்லாதிருந்தால் பயணிகளுக்கு அந்த 7 நாட்கள் (பாக்கியராஜ் படமல்ல) தனிமைப்படுத்த கடிதம் தந்திருக்கின்றனர்.

ரித்தி கூட வந்த பெண் ஒருவருக்கு (குடியேற்றம் OCI அட்டை வைத்திருப்பவர்) கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனையின் போது அதிக நேரம் எடுத்ததாம். தனிப்பட்ட முறையில் என் நண்பர் பெண்ணுக்கு இந்த சோதனை சுமூகமாகச் சென்றதாம். ஏனென்றால் பெற்றோர் இருவரும் இந்திய குடிமக்கள் என்பதால் அவர்களின் பாஸ்போர்ட் விவரங்கள், வீட்டு முகவரி மற்றும் கல்லூரி ஐடி ஆகியவை தெளிவாக இருந்ததால் இலகுவாக சரிபார்த்து அனுமதி தந்திருக்கின்றனர். ரித்தியின் பின்னால் இருந்த இன்னொரு பெண்ணுக்கும் (அவளும் OCI அட்டை வைத்திருப்பவள்) அவளுடைய பெற்றோர்கள் இந்தியாவில் வசித்தாலும் அமெரிக்க குடிமக்கள் ஆகையால் அவளுக்கு அனுமதி தர மறுத்திருக்கின்றனர். பின்னர் பெற்றோரின் பாஸ்போர்ட் விவரங்களை வழங்கியவுடன், இறுதியில் செல்ல அனுமதிக்கப்பட்திருக்கிறாள். முழு செயல்முறையும் அந்த பெண்ணுக்கு எப்படி சென்றது என்று ரித்திக்கு தெரியவில்லை என்றாலும் தனக்கு சற்று நேரம் எடுத்ததே தவிர அணைத்து சோதனை முறைகளும் சுமூகமாகவே சென்றிருக்கிறது என்றாள்.

பின்னர் தனது செக்கின் பைகளை எடுக்க சென்று அப்பெட்டிகள் உரிமைகோரலுக்குப் பிறகு, ஏழு நாட்கள் தனிமைப்படுத்தலுக்காக ஹோட்டல்களைத் தேர்ந்தெடுக்கும்படி கேட்கப்பட்டனராம். இவள் ஹயாத் ரெசிடென்சியை தேர்ந்தெடுத்தாள்.

இவளுடன் வந்த சில பயணிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்கிறோம் என்று வினவ அரசு அதிகாரிகள் கண்டிப்புடன் அதற்கு சம்மதிக்காமல் ஏழு நாள் விடுதியில் தனிமைப்படுத்தல் குறித்து மிகவும் கறாராக கூறியிருக்கின்றனர்.

ரித்தி, விமான நிலையத்தில் ஒரு இந்திய சிம் வாங்கியிருக்கிறாள். பின்னர் பஸ்கள் நியமிக்கப்பட்ட ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்றனவாம். அங்கு ஓட்டல் வரவேர்பபாளர் முன்பணம் செலுத்துமாறு கண்டிப்பாக கேட்டிருக்கின்றனர். பின்னர் ஹயாத்தில் அறைகள் வழங்கப்பட்டனவாம். இவர்கள் ஒருவரையும் அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை. ஆனால் உணவு மற்றும் தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டிக்கின்றன.

ஒட்டுமொத்தமாக இது நிச்சயமாக ஒரு சாதாரண விமான பயணம் அல்ல என்று மட்டும் தெரிகிறது. ரித்தியின் தந்தை ரஞ்சித் கூறுகையில் அவளது பயணம் எதிர்பார்த்ததை விட சற்று இலகுவாகத்தான் இருந்தது என்றார். ரித்தியின் அம்மா கூறுகையில் இங்கு வந்தும் குழந்தையை பார்க்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டாலும் ஹோட்டலின் வெளியே சற்றுதூரத்தில் நின்று ரித்திக்கு கை அசைத்து கண்ணீர் பெருக வீடு திரும்பியது ஒரு ஆறுதல் அளித்தது என்றார். அவள் வீடு வரும் வரை ஒருவித கலக்கம் இருந்ததாக கூறி கலங்கினார்.

COVID-19 தொடர்பாக அரசாங்கத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளை பராமரிக்கவும் விதிமுறைகளை பின்பற்றவும் அதிகாரிகள் அவர்களால் முடிந்த அனைத்தையும் செய்ய முயற்சிக்கிறார்கள். இந்திய விமான நிலையத்தில் குறிப்பாக சில பாதுகாப்பு நடவடிக்கைகள் ரித்தி வந்த சில நாட்களாக இருந்ததுபோல் எந்த அமெரிக்க விமான நிலையங்களிலும் அவள் கண்டதில்லை என்றாள். ஏழு நாட்கள் கழித்து வீடு திரும்பி பிறகு வீட்டில் ஏழு நாட்கள் தனிமை படுத்தபட்டாள். முற்றிலுமாக அவளுக்கு இது ஒரு புது அனுபவம் என்றாள். இப்படி ஒவ்வொருவருக்கும் சில இன்னல்கள் இருந்தாலும் இந்திய அரசாங்கம் அதன் வேலையை செவ்வனே செய்கிறது என்று நாம் பெருமிதம் கொள்ளவேண்டுமே தவிர இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர்களை தூற்றுவது தவறு. மொத்தத்தில் வெளிநாட்டிலிருந்து தற்போதைய சூழலில் வருவது சற்று கடினமாக இருந்தாலும், ரித்தி போன்ற எண்ணற்ற பலர் வந்த பிறகு குடும்பத்துடன் இருப்பது ஒரு தனி சிறப்புதான். நீண்ட நாட்களுக்கு பிறகு பார்க்கும் பெற்றொரும் ஏனைய சொந்தங்களும் மட்டற்ற மகிழ்ச்சியுடன் அவர்களுக்கு பிடித்த உணவை தந்து, அவர்களுடன் பலவித கதைகள் கூறி உரையாட இந்திய சுதந்திர மண்ணை சுவாசிக்கும் ரித்தி போன்றோருக்கு பெரும் சந்தோஷம்தான்.

சுரேஷ் ராஜசேகரன்

Leave a Reply