பொன்மகள் வந்தாள் – பாலியல் வன்முறைக்கு எதிரான குரல்

மாயன் மெய்யறிவன்

0
644

சமீபத்தில் வெளியான தமிழ்த் திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க நல்லதொரு விழிப்புணர்வு திரைப்படம் பொன்மகள் வந்தாள். படமாக்கப்பட்ட விதம், திரைத்துறை சார்ந்தோர் கவனித்து செய்யும் தொழில் நுணுக்க விமர்சனம் போன்றவை, சாதாரணமாக படம் பார்ப்போருக்கு அந்தளவிற்கு முக்கியம் இல்லை. நாம் கவனிக்க வேண்டியவை, படத்தின் கதை, பேசப்படும் வசனங்கள், மனதைத் தாக்கும் காட்சிகள், அவை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் மனநிலை மாற்றங்கள், தேவையான விழிப்புணர்வு கூறல்கள் ஆகியவை தான்.

சிறுமிகளைக் கடத்தி, குரூரமாக பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களை இரக்கமின்றி கொன்று புதைக்கும், இரண்டு கொடூர இளைஞர்களைப் பற்றிய சினிமா தான் பொன்மகள் வந்தாள்.

தனது மகளை கடத்தி பாலியல் வல்லுறவு செய்து கொன்ற குரூர இளைஞர்களை, சந்தர்ப்ப வசத்தால் அந்த தாய் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிடுகிறார். பணபலம் கொண்ட குரூர இளைஞரின் தந்தை, தனது செல்வாக்கால், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயையே குற்றவாளியாக, அதாவது சிறுமிகளைக் கொல்லும் மனநோயாளியாக பொய்யாகப் புனைந்து, காவல்துறையில் உள்ள சிலரின் உதவியுடன் சுட்டுக் கொன்றுவிடுகிறார்.

குரூர இளைஞர்களிடம் பாலியல் கொடுமைக்கு உள்ளாகி காப்பாற்றப்பட்ட மற்றொரு சிறுமி, வளர்ந்து வக்கீலாகி, அதன் பிறகு அந்த தாயின் மீதுள்ள பொய்யான கொலைப் பழியை, நீதிமன்றத்தின் மூலம் தகர்த்து, குரூர இளைஞனின் குற்றத்தை மறைக்க பல தவறுகள் செய்த, அவனது தந்தைக்கு தண்டனை பெற்றுத் தருவதே பொன்மகள் வந்தாள் படம்.

பெண்கள் மீதான, கல்லூரி மாணவிகள் மீதான, பள்ளிச் சிறுமிகள் மீதான பாலியல் கொடுமைகள் அத்துமீறி நடந்தேறி வருவதை, அவ்வப்பொழுது கேள்விப்பட்டு மனச் சங்கடமும், கோபமும் அடைகிறோம். தறுதலைகளாக, பொறுக்கிகளாக, குரூரம் கொண்டவர்களாக, பெண்கள் மீது பாலியல் கொடுமைகளை நிகழ்த்துகிறவர்களாக, சில இளைஞர்களும், சில வயதானவர்களும் இந்த உலகில் இன்னமும் இருப்பது, சகலவிதமான பெண்களுக்குமான பாதுகாப்பு அச்சுறுத்தல். பெற்றோர்களுக்கான நிரந்தர மனவலி.

விழுப்புரம் மாணவி நவீனா, விருத்தாசலம் திலகவதி, நெய்வேலி ராதிகா என பல பெண்கள், சமீபத்திய வருடங்களில், பொறுக்கித்தனமான, குரூரம் கொண்ட இளைஞர்களின், கேடுகெட்ட செயல்களால், கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்தம் பெற்றோர், உறவினர்களுக்குத் துயரத்தை தந்து மறைந்துவிட்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணமானவர்களின் முகத்திரையைக் கிழித்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்திருக்கிறார் வக்கீல் ஏஞ்சல்.

ஆண்களும் பெண்களும் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்.
.
சமூக விழிப்புணர்விற்காக படம் எடுத்து வெளியிட்ட படக்குழுவினர் அனைவரையும் வாழ்த்துவோம். இப்படியான திரைப் படங்கள் தொடர்ந்து தமிழில் வரவேண்டும். பெண்கள் மீதான வன்முறைகள், பாலியல் கொடுமைகள் குறைய வேண்டும்.

மாயன் மெய்யறிவன்

Leave a Reply