திமுக, அதிமுக கட்சிகளைப் போல மற்ற கட்சிகள் வளராமல் இருப்பது ஏன்?

மாயன் மெய்யறிவன்

1
1011

அரசியல் கட்சிகளில் அணைத்து சமூகங்களுக்கும் அதிகாரம் என்பது பரவலாக இருக்கவேண்டும். இரண்டாம் நிலை, மூன்றாம் நிலைகளில் பெருந்திரளான மக்களை அந்தந்தப் பகுதிகளில் ஈர்க்கும் வல்லமை கொண்ட வலுவான தலைவர்கள் இருக்கவேண்டும். அவர்களும் அவர்தம் சமூகங்களும் சார்ந்துள்ள கட்சியின் வழியாக வளரும் வாய்ப்பு இருக்க வேண்டும். இப்படியான சமூக கட்டமைப்பு இருந்தால் மட்டுமே எந்த அரசியல் கட்சியும் வளரும்.

எங்களிடம் நல்ல கொள்கைகள் இருக்கின்றன. நல்ல தலைவர் இருக்கிறார். எங்கள் கட்சிக்கு வாங்க, வாங்க என்றால் எவரும் வரமாட்டார்கள். உங்களால் தங்களுக்கு என்ன ஆதாயம் என்று பார்த்துத்தான் மக்கள் வருவார்கள். இதுதான் யதார்த்த களம். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இது நன்றாகவே தெரியும். ஆனாலும் தங்களைத் தாண்டி எவரும் வளர்ந்துவிடக் கூடாது என்கிற எண்ணத்தால், தங்களது கட்சி எல்லையைக் குறுக்கிக் கொள்கிறார்கள்.

கொள்கைகள் பலவும் ஏட்டளவில் இருக்கின்றன. யார் யாருடன் இணைவது என்பதைச் சாதி, மொழி, மதம் ஆகிய காரணிகளே தீர்மானிக்கின்றன.

திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் பல சமூகங்களின் தொகுப்பு. தமிழக அரசியலில் அண்ணாதுரை மட்டுமே, வலிமையான இரண்டாம் நிலை தலைவர்களை உருவாக்கினார். வளர்த்தார். இவரைத்தவிர வேறு யாருக்கும் இந்த தைரியம் இருக்கவில்லை. ஈவெராவுக்கு இல்லை, காமராசருக்கு இல்லை. அண்ணாவைத் தவிர வேறு யாருக்குமே வலுவான இரண்டாம் நிலைத் தலைவர்களைக் கையாளும் திறனும் தைரியமும் இருக்கவில்லை என்றே தோன்றுகிறது.

திமுகவில், கருணாநிதி இருந்தவரை, அண்ணாவைப் பார்த்து அரசியலுக்கு வந்த இரண்டாம் நிலைத் தலைவர்கள் வலுவாக இருந்தனர். அவரவர் மாவட்டங்களில் மிகுந்த மக்கள் செல்வாக்குடன் இருந்தனர். கட்சியின் கொள்கை சார்ந்து எந்த கருத்தினையும் தைரியமாகக் கூறும் நிலையிலிருந்தனர். அந்த கால திமுகவை அறிந்த அனைவருக்கும், தற்போதைய நிலை அவ்வாறாக இல்லை என்பது புரியும். என்றாலும், பாஜகவை விரும்பாத சிறுபான்மை மதம் சார்ந்தோர், மொழி சிறுபான்மையினர், மற்றும் உள்ள தமிழக சமூகங்களிலிருந்து சில பிரதிநிதித்துவம் தந்து கட்சியைத் தக்க வைத்துள்ளனர்.

அதிமுகவில், எம்ஜிஆர் மக்கள் செல்வாக்குடன் இருந்தார். ஜெயலலிதா வந்த பிறகு, தமிழ் சாதிகளில் பெரும்பான்மை சாதியினருக்கு அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் தந்து கட்சியை வளர்த்தார். தற்போது எடப்பாடியார் பல இரண்டாம் நிலைத் தலைவர்களையும் அனுசரித்தே செல்கிறார். வேறு வழி இல்லை என்பதும் ஒரு காரணம். ஆனாலும் ஜெயலலிதா பாணியில் தமிழ்ச் சமூகங்களுக்கு முக்கியத்துவம் தந்து அதிமுக ஆட்சியை நடத்துகிறார்.

இந்த இரு கட்சிகளைத் தாண்டி வேறு எந்த கட்சியும், 2021-ல் நடைபெற இருக்கிற சட்டமன்றத் தேர்தலில், தனியே கூட்டணி அமைத்து வெல்லும் நிலையில் இல்லை என்பதே அரசியல் யதார்த்தம். மற்ற கட்சிகள் வளராமல் இருப்பதன் காரணிகள் எவை என்று பார்ப்போம்.

வைகோ-வின் மதிமுக வளரவில்லை. காரணம் தன்னைத் தவிர வேறு யாரும் வளர்ந்துவிடாமல் வைகோ பார்த்துக்கொண்டார் எனத் தோன்றுகிறது. அவரை நம்பி திமுகவிலிருந்து பிரிந்து வந்த அத்துணை வலுவான தலைவர்களும், கொஞ்சம் கொஞ்சமாக அவரிடம் இருந்து பிரிந்து சென்றுவிட்டனர். தற்போது வைகோவைத் தவிர அந்த கட்சியில் சொல்லக்கூடிய அளவிலான அடுத்த நிலை தலைவர்களே இல்லை.

ராமதாஸ், வன்னியர் சங்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பித்த பாமக கட்சியானது, வட தமிழகத்தில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் என்கிற நிலையைத் தாண்டி வளரவில்லை. ராமதாஸைத் தவிர மக்களை ஈர்க்கும் அளவிற்கு அங்கு வலுவான இரண்டாம் நிலைத் தலைவர்கள் பாமகவில் இல்லை. காடுவெட்டி குரு, குறிப்பிட்ட சத அளவிலான வன்னியர்களின் வாக்குகளை ஈர்க்கும் நிலையிலிருந்தார். அவர் மறைவிற்குப் பிறகு அத்தகைய ஒருவர் அந்த கட்சியில் உருவாகவில்லை. அன்புமணி இருக்கிறார், இவரது தனித்த திறன் மூலம் எத்தனை சத வாக்குகளை ஈர்ப்பார் என்பதை இனி வரும் தேர்தல் மூலமாகவே கணக்கிட முடியும். ஆக, ராமதாஸ் மற்றும் அன்புமணி தவிர்த்து பாமகவில் தனித்த மக்கள் செல்வாக்கு கொண்ட யாரும் தற்போது இல்லை. வேண்டுமானால் அவரவர் சார்ந்த ஊர்களில் சிலர் இருக்கலாம். ஒரு மாவட்ட தேர்தல் முடிவுகளையே மாற்றக்கூடிய வலுவானவர்கள் எவரும் இல்லை.

விஜயகாந்த் சரியான நேரத்தில் கட்சி ஆரம்பித்தார். ஆரம்பக் காலங்களில் பண்ருட்டியார் போன்ற அனுபவம் வாய்ந்த தலைவர்களின் ஆலோசனைப்படி தேமுதிக நன்கு வளர்ந்து வந்தது. ஒரு கட்டத்தில் தேமுதிகவின் அதிகார மையமானது அவரது மனைவி மச்சான் ஆகியோரிடம் சென்றுவிட்டது. தங்களுக்கு மதிப்பில்லை எனப் பலரும் விலகிவிட்டனர். அதன் பிறகு தேமுதிக வளரவில்லை. தற்போது, விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதாவைத் தவிர அங்கு மக்களுக்கு அறிமுகமான இரண்டாம் நிலைத் தலைவர்கள் என எவரும் இல்லை.

இவற்றைப்போலவே மற்ற எல்லா சிறு சிறு கட்சிகளும் வளராமல் இருக்க, அந்தந்த கட்சித் தலைவர்கள், இரண்டாம் நிலையில் வலுவான தலைவர்கள் எவரையும் உருவாக்காததே காரணம் என்பது, ஓரளவிற்கு அரசியல் அறிந்த எவருக்கும் புரியக்கூடிய விஷயம். ஒன்று அப்படியான வலுவான இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை தலைவர்களை உருவாக்கத் தவறுகிறார்கள் எனப் புரிந்துகொள்ளலாம், அல்லது தங்களை மீறி எவரும் செல்வாக்குடன் உருவாகிவிடாதபடி பார்த்துக்கொள்கிறார்கள் என்றும் புரிந்துகொள்ளலாம்.

அரசியல் பொது அடையாள கருத்துருவாக்கங்களான; தமிழர், திராவிடர், இடதுசாரி, வலதுசாரி, இந்துத்துவம், தலித், ஒடுக்கப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர், மதசிறுபான்மையினர், மொழி சிறுபான்மையினர் என்பதெல்லாமே பொதுவெளியில் கூற மட்டுமே உகந்தவை. மற்றபடி எந்த கருத்துருவாக்க அடையாளத்தை மாட்டிக்கொண்டாலும், யார் முன்னெடுப்பது, யாரெல்லாம் இணைவது, அதாவது எந்தெந்த சமூகங்கள் எல்லாம் ஒன்றிணைவது, யாருக்கெல்லாம் அரசியல் அதிகார பலம் கிடைக்கிறது என்பதைப் பொறுத்தே, பெருந்திரளானவர்கள், தங்களுக்கான அரசியல் கட்சியினை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதே யதார்த்த அரசியல்.

மொழிவழி மாநிலங்களாகப் பிரிந்துள்ள எல்லா இந்திய மாநிலங்களிலும், அந்தந்த மாநிலத்தின் மொழியினரே ஆட்சியில் இருக்கிறார்கள். ஆட்சிக்கு வருகிறார்கள். ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் தமிழர்கள் முதலமைச்சர் ஆகுவது தடைப்படும் அளவிற்கு அரசியல் உள்ளது. தற்போது எடப்படியார் தமிழ்ச் சமூகத்திலிருந்து வந்துள்ளார். அடுத்த முறையும் வருவாரா என்பது அதிமுக அமைக்கும் கூட்டணியைப் பொறுத்த விஷயம். தமிழர்கள் நடத்தும் கட்சிகள், பெருந்திரள் கொண்ட பல சமூகத்தினரை ஒருங்கிணைப்பதில் பின்தங்கி உள்ளனர். பல சமூகங்களைச் சேர்ந்தவர்களையும் வலுவான இரண்டாம் நிலைத் தலைவர்களாக உருவாக்கும் தமிழர் கட்சி மட்டுமே வளரும். தற்போது எடப்பாடியார் மட்டுமே தமிழர்களை ஒருங்கிணைப்பதில் ஓரளவிற்கு நம்பிக்கை தருகிறார்.

மாயன் மெய்யறிவன்

1 COMMENT

  1. அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் வளர்ந்த காலத்திய கட்சிகளுக்கு இடையிலான எதிர்ப்பு என்பது கருத்தியல் ரீதியாகவே இருந்தது.

    மாறாக பாமக மதிமுக தேமுதிக இன்ன பிற கட்சிகளின் அரசியல் என்பது தங்கள் கட்சியில் வளர்ந்து வரும் இரண்டாம் நிலை தலைவர்களை திமுக அதிமுக போன்ற கட்சிகளின் அபகரிப்பு அரசியலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.

    எல்லாவற்றுக்கும் மேலாக ஆண்ட கட்சிகள் தமிழர் தலைமையிலான கட்சிகளை இணைந்து களமாடும் வாய்ப்பினை அளிக்காமல் தமிழர் கட்சிகள் தங்களுக்குள் எதிர்ப்பு அரசியல் செய்யும் நிலையை தொடர செய்யும் நயவஞ்சக அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்லாமல் தமிழகத்திற்கே அபாயகரமான போக்காகும்.

Leave a Reply