கெடா விருந்து

சிவம் முனுசாமி

2
746

காத்து மழைக்கு பேர் போன ஆடி மாசமது, ஒரு பெருமழை வெளுத்து வாங்கிய முந்தைய நாள் இரவின் இருளை தெளியவைக்க பொழுது போராடிக்கொண்டிருந்த இளங்காலைபொழுதில் சினுங்கிக்கொண்டிருக்கும் வானம் எங்கே கொட்டித்தீர்த்துவிடுமோ என்ற அவசரத்தில் வேகவேகமாக தீவனப்பில்லை அறுத்து அடுக்கிக்கொண்டிருந்தான் ஊமையன். பெத்தவங்க வச்ச பேரு என்னான்னு பெத்தவங்களுக்கு மட்டுமில்ல ஊமையனுக்கே மறந்துப்போச்சி, பேசவராத பிள்ளைக்கெல்லாம் நிலைச்சி நிக்கற பேரே அவனுக்கும் நிலைச்சி போச்சு.

பில்ல அறுத்த கையோட ஆடுகளுக்கு மேவு பாக்கனும், வேப்பமரத்துல ஒரு செட்டைய ஒடைச்சா கூட இருக்கற மூனு உருப்படிக்கு போதுந்தான், ஆனா இன்னைக்கு கரியனுக்கு வேம்பு ஆகாது, பின்ன பேப்பந்தல போட்டா எப்படி வெட்டி திம்பாங்க, கரி கசக்குமாம், நேத்தே அம்மாக்காரி சொல்லிட்டா கரியன புடிச்சிட்டு போவ காலைல ஆளு வந்தாலும் வந்துடுவாங்க சாமி வேப்பந்தலைய கிலைய போட்றாதான்னு. ஆமா போன வாரமே வரதா சொன்னவங்க கடைசி நேரத்துல வரல, அப்படியே நாளைக்கும் வந்துடக்கூடாதுன்னு மனசு அடிச்சிக்குது ஊமையனுக்கு.

அவனுக்கு ஆடு ,மாடு, நாய்ன்னு எல்லா ஜீவராசிங்க மேலயும் உசுருன்னாலும் ஊமையனுக்கு கரியன் மேல தனி கரிசனம், இந்த கரியன் குட்டியா இருக்கும்போது இந்த ஊரு சொசைட்டி தலைவரு அரசமரத்தடி முனியப்பனுக்கு வேண்டிட்டு இங்க கொண்டாந்து விட்டுட்டு இதையும் மந்தைல வச்சி பாத்துக்க பெருமாளு, மேச்சலுக்கானதை கொடுத்துடறேன்னு அப்பங்கிட்ட சொல்லிட்டு போனாரு. அந்த வேண்டுதலுக்கு கூட அப்பனத்தான் சாட்சியா வச்சி கும்புட்டாராம் சொசைட்டி தலைவரு.

அப்பனுக்கு இதயத்துல ஏதோ பிசகாம். சேலத்து பெரிய ஆஸ்பத்திரில பத்து நாளா படுத்த படுக்கையா கெடக்குது, “இனியும் நா எழுந்து மாடு கண்ண பாப்பன்னு தோனல, எதுக்கு இதுங்கள வச்சினு ஓரியாடற, மாடுங்கள மத்ரம் வச்சினு ஆடுகள வித்துப்புடு” ன்னுட்டாரம் அப்பன். முந்தாநாளே ஆட்டுவேவாரி அரிகிஷ்ணன் வந்து மொத்தமா ஓட்டினு போனது போக மீந்தது இந்த மூனும்தா.

ஒருவேல அப்பனுக்கு ஒடம்பு சரியாயிருந்திருந்தா கரியன் இன்னும் கொஞ்ச நாளு வாழ குடுப்பன இருந்திருக்குமோ என்னவோ? மேய்க்க ஆளில்லததாலதான் அம்மா ஆள வுட்டு அனுப்பியிருக்கா, வேண்டுதல சீக்கிரம் முடிங்க சாமின்னு.

ஆனாலும் அப்பந்தான் ஊர்ல இல்லையே சாட்சி வச்சி கும்பிட்டவங்க இல்லாம சாமி செய்யலமான்னு யோசிக்கறாங்களாம், அதான் போன வாரம் கூட வரேன்னு சொல்லிட்டு கடைசில அவங்க வரலையாம்ன்னு ராத்திரி அம்மா சொல்லிட்ருந்ததை நினைக்கைல மனசுக்கு செத்த ஆறுதலா இருந்தது ஊமையனுக்கு.

யாருக்குமே புரியாத இவனோட சத்தத்த கூட கரியன் புரிஞ்சிக்கும், இவன் சோகம், வலி, சந்தோசம் எல்லாமே அதுக்கு புரியும், ஆமா அதுக்கு மட்டுந்தான் புரியும். அத பல நேரத்துல உணர்ந்துருக்கான் ஊமையன்.

இப்படித்தான் ஒரு நாளு, பாறைக்கொட்டாய தாண்டி எறங்காட்ல ஆட்ட மேய்ச்சலுக்கு விட்டுட்டு வழில புடுங்கன கல்லகொடில இருக்கற கலக்காய உரிச்சி தின்னுனே மொட்டப்பாறை எறக்கத்துல படுத்து அப்படியே தூங்கிட்டான் ஊமையன், கலக்கா வாசத்த மோப்பம் புடிச்சினே வந்து சேந்த காட்டுப்பன்னி மூக்க துருத்தினு இவன பின்பக்கமா நெருங்க, உனிமுள்கொடிய மேஞ்சிட்ருந்த கரியன் “ம்மேமே” ன்னு கத்தினு ஒரே தாவா தாவி வந்து ஊமையன அனைச்ச மேனிக்கு நிக்குது. சடார்னு சுதாரிச்ச ஊமையன் ஊனுக்கோல எடுத்து பன்னி மண்டைய நோக்கி வீச, பொழைச்சா போதும்னு ஓடுது பன்னி. என்ன நினைச்சதோ அன்னைக்கு பூரா ஊமையன சுத்திட்டே மேயாம கெடந்த்தது கரியன். அன்னைலேந்து கரியன்னா ஊமையனுக்கு உசுரு. அதோட ஒரொரு கத்தலுக்கும் அர்த்தம் புரியும் இவனுக்கு, இவனோட பார்வைய கூட புரிஞ்சி நடக்கும் கரியனும்.

ஏதோதேதோ நெனப்புல வேகவேகமா பில்லறுத்துட்ருந்த ஊமையன் சடசடன்னு மழை இறங்கவும் அறுத்தவரை பில்ல கட்டி தூக்கிட்டு வந்து வைக்கப்போர் ஓரமா போட்டுட்டு கைருவா எடுக்க மாட்டுக்கொட்டாய்க்கு ஓடும்போதுதான், ‘கிரிச்’ ங்கற சத்தத்தோட ஒரு ஆட்டோ வந்து வூட்டுவாசல்ல நிக்குது, அந்த ஆட்டோவுலருந்து இறங்கனவங்கள பாத்ததுமே ஊமையனுக்கு புரிஞ்சிப்போச்சி கரியனுக்கு கழுத்து கவுறு இறுகப்போவுதுன்னு. ஆமா ஆட்டோ சொசைட்டி தலைவரோடதுதான்.

அடிச்ச மழைல நனைஞ்சி ஊரிப்போன விறகோட ஊதி ஊதி அடுப்போட மல்லுக்கட்டிட்டு இருந்த அம்மா எழுந்து வாயெல்லாம் வெத்தல கறை தெரிய வாங்க வாங்கன்னு சொம்புல தண்ணிய மொண்டுனு ஓடற, அவங்கள வரவேற்க. ஊமையனுக்கோ அவங்கள பாக்க வேப்பங்காய கசக்குது.

ஊமையனுக்கு இப்பவும் ஒரு நப்பாசை, இன்னைக்கு வேனாம், இன்னொருநாள் வச்சிக்கலாம்னு சொல்லத்தான் வந்துருப்பாங்களோன்னு. அவங்க பேசறதெதும் இவனுக்கு சரியா கேக்கல, இருந்தும் அவங்கலையே பாத்துனு குளுத்தி மேல உட்காந்துருக்கான் ஊமையன். பேசிட்ருந்த அம்மா ஆட்டுக்கொட்டாய நோக்கி போறா, கைல மஞ்ச குங்கத்தோட கரியன நெருங்கறா, என்னைய கூப்ட்டு தொட்டில தண்ணி மொன்னுவர சொல்றா. தண்ணிய கரியன் நெத்தி, காலுக்கெல்லாம் ஊத்தி மஞ்சலை தேச்சி, பொட்ட வைக்கறா.

இதோ அவங்க கொண்டாந்த மாலைய கரியன் கழுத்துல போட்டு கையெடுத்து கெழக்க பாத்து கும்பிடறா. எதுவும் புரியாத கரியன் கழுத்த ஆட்டி ஆட்டி மாலைய கடிக்க பாக்குது. அப்பன் ஆஸ்பத்திரி போனப்ப, அண்ணன் என்ன எட்டி மிதிச்சப்ப கூட வராத கண்ணீர் மலமலன்னு இறங்குது கன்னத்தில. ஐயோ கரியன் அவ்வளதானா?

எல்லாம் முடிஞ்சி கரியன ஆட்டோல ஏத்தறாங்க, அது ஏறாம நாங்கொண்டாந்த பில்லையும், என்னையும் மாத்தி மாத்தி பாக்குது, கத்துது. எனக்கு புரியுது அது என்னதான் கூப்டுது. நான் தலைய கவுந்துட்டு அழுதுட்ருக்கேன். இதோ அம்மா அவங்ககிட்ட ஏதோ சொல்றா, அவங்க வண்டிய நிறுத்திட்டு என்ன பாக்கறாங்க, நிமுந்துபாக்கறேன், அம்மா சொல்றா “சாமி செத்த நீயும் கூட போ, அது உதும்புது அவங்களால புடிக்க முடியல”

கொஞ்சங்கூட புடிக்கலன்னாலும் இன்னுங்கொஞ்ச நேரம் கரியனோட இருக்கலாம்னு நானும் போய் வண்டில ஏற, கரியன் அவனா ஓடியாந்து வண்டில ஏறிட்டான், அம்புட்டு நம்பிக்கை. வண்டி கிளம்பிடுச்சி.

இதோ வண்டி ஆத்த கடந்து மேடேறுது, கோயிலை நெருங்கிடிச்சு, கோயில சுத்தி கம்பிவேலி போட்டு கேட்ல பெரிய பூட்டு தொங்குது, அங்க ஏற்கனவே நெறைய பேரு நிக்கறாங்க, சொசைட்டிக்காரரு யாருக்கோ போன்ல பேசறாரு, ஆட்டோ ஓட்டினு வந்த அவரு அண்ணம்மகன்ட்ட ஏதோ சொல்றாரு. இவரும் ஆட்டோவ விட்டுட்டு ஒரு ஸ்கூட்டர எடுத்துனு வேகமா கோயிலுக்கு போர வழிக்கு எதித்த மாதிரி இருந்த மேட்ல வண்டிய கஷ்டப்பட்டு ஏத்திட்டு போராரு. எல்லார் மூஞ்சிலயும் கோபம் தெறிக்குது.

இந்த நிலத்தை புதிதாக வாங்குன தர்ம்பிரியான் கோயிலுக்கு போற வழியையும் சேர்த்து அடச்சி பூட்டு போட்டுட்டு சாவிய எடுத்துட்டு போயிட்டானாம், சாவிய தேடித்தான் ஆளுக்கொரு பக்கம் போயிருக்காங்க ஆளுங்க.

அதெப்படி ஒரு பொதுக்கோயிலுக்கு போற எடத்த இவங்க வேலி போட்டு அடைக்கலாம்ன்னு ஆளாளுக்கு கத்திட்ருக்காங்க, சாவி தேடி போனவங்க மணி நேரமாகியும் யாரும் வரல, இருக்க இருக்க எல்லார் மூஞ்சிலையும் கோவம் அதிகமாகுது. ஆனா ஊமையனுக்கு மட்டும் மனசுக்குள்ள ஒரு நிம்மதி, சாவி கிடைக்கலன்னா கரியன் இன்னைக்கு பொழச்சிக்குவான்.

அவன் நெனைச்ச மாதிரியே வண்டில போனவங்க திரும்பி வந்து சாவி இங்க இல்லையாம், தர்ம்பிரியானே பூட்டிட்டு கொண்டு போய்ட்டானாம், வர ரெண்டு நாளாகுமாம்ங்கறா வடிவேலு பொண்டாட்டிங்கறாங்க.

அந்த பேண்ட் சர்ட்ட போட்டுனு செடி, கொடி, பூவல்லாம் போட்டோ புடிச்சினுந்தவனும் சொல்றான், “சரி மாமா, விடுங்க இருந்ததெல்லாம் இருந்தீங்க இன்னும் ரெண்டு நாள் கழிச்சிதான் பன்னிடுவோம், எதுக்கு இங்க வீணா சண்டை?, ரெண்டு நாள்ள ஒன்னும் தெய்வகுத்தமாய்டாது” ங்கறான். இதையெல்லாம் கேட்ட ஊமையன் கரியன தடவிக்கொடுக்கறான், அழுத தொண்ட வலிக்கூட கொறஞ்சிடுச்சு அவனுக்கு.

அதெப்படி கோயிலுக்கு போற வழிய கூட விடாம இவங்க அடச்சி வச்சிடுவானுங்க, நாம திரும்பிப்போவனுமா? ன்னு கத்தியபடி காவி வேட்டி கட்டிய ஒருத்தன் கைல கல்லோட பூட்ட உடைக்க போறான், சொசைட்டிக்காரரு கல்ல புடுங்கிப்போட்டுட்டு “செத்த பொருடா” போனவங்க வரட்டும்ங்கறாரு.

கத்திரிக்கா அறுத்துட்டே இதையெல்லாம் வேடிக்க பாத்துட்டுருந்த கேட்டுக்கு பக்கத்து கயினிக்காரன் கொஞ்சமா இறங்கி வரான். “அண்ணா வேனா இந்த ஒரு தரம் எங்கயினி வழியா போய் பொங்க வச்சி கும்பிட்டு போங்க” ன்னு சொசைட்டிக்காரர்ட்ட சொல்லியபடி அவனே முள்ள எடுக்க, எங்கயோ இருந்து கத்தினே வரா அவம்பொண்டாட்டி “ஏன்டா கட்டைய கடிச்சவனே, காலங்காலமா போன வழிய அடைச்சி பூட்டிட்டு சாவிய தூக்கி சூத்துல சொருவினு அவம்போய்ட்டான், நீ புது வழி பன்னி வுடறியா? மரியாதைய முள்ள போடு இல்ல தொடப்பகட்ட பிஞ்சிருமுனக்கு” ன்னு ஓடியார்றா.

இதென்னடா வம்பா போச்சின்னு எல்லாம் திரும்ப எத்தனிக்கையில், திடீர்னு ஒரு கெளவி சாமி வந்து ஆடறா. “என்னடா திமுரு உங்களுக்கு என் பலிய கொண்டாந்து கண்ல காட்டிட்டு திருப்பினு போனா என்னாடா அர்த்தம்? போங்கடா போங்க ஏஞ்சொல்ல மீறி எங்கோவத்துக்கு ஆளாவனும்னா போங்க” ன்னு நறநன்ன்னு பல்ல கடிக்கறா. ஊமையனுக்கு கண்ல தண்ணி முட்டிட்டு நிக்குது. இருந்த வழியும் மறையுது, காலுக்கு கீழ பூமி நழுவுது அவனுக்கு.

கரை மேல நின்னு இதையெல்லாம் வேடிக்க பாத்த விடலைபசங்க “கெளவிக்கு மத்தியான கரிசோறு போயிரும்னு தெரிஞ்சதுமே சாமி வந்துடுச்சுடோய்” ன்னு சிரிக்கறாங்க. “விடறா கெளவி நமக்கும் சேத்துதான் பேசறா” ங்கறான் இன்னொருத்தன்.

இப்ப எங்கள என்ன பன்ன சொல்ற சாமி? உனக்கு சேர வேண்டியத உனக்கு சேத்ததானே நாங்க வந்திருக்கோம், வழிய கூட வுடாம வேலி போட்டு அடைச்சி வெளாடறவங்கள நாங்க என்ன பன்னட்டும், உன்னாலானா எங்கள உள்ளவுடுன்னு கும்பிட்டு நிக்குது சொசைட்டிகாரர் பொண்டாட்டி.

“பொருடி என்னால ஆகாதுன்னு நெனச்சிக்கினியா நீனு, நா முனிடீ, அரசமரத்தோட்டமுட்டுமா இந்த ஊரே எந்து, எனக்கே வேலி போடறவன வர சொல்லுங்கடா, வந்து எம்முன்னால நிக்க சொல்லு” ன்னு சாமியாடி கிழவி கத்தறா.

இருந்த நம்பிக்கையும் உடைஞ்சி போன ஏக்கத்துல வண்டிய விட்டு இறங்கி வேலில கெடந்த அவுத்தி தலைய ஒடைச்சி கரியனுக்கு நீட்றான் ஊமையன், “தின்னு இதுதான் கடைசியாருக்கும் போல” ன்னுது மனசு.

இதோ சாமியாடி கெளவி தலைக்கு மேல கைய தூக்கினு தலைய ராட்ணம் மாதிரி சுத்தறா, பல்ல நறநறன்னு கடிக்கறா, கண்ணு செவந்து கோவம் கண்ணீரா இறங்குது, இது எம்பூமிடா, எனக்கேவாடா தடை போடறிங்க, எனக்கு போட்டாலும், என்ன நம்பி வரவங்களுக்கு போட்டாலும் ஒன்னுதான்டா. பாப்பீங்கடா இந்த முனியனோட அவேசத்த பாப்பீங்கடான்னு கத்தி ஓயற நேரம் டீவீஸ்50 ல வந்து நிக்கறான் வடிவேலு.

சாவிய தர்ம்பிரியான் எங்கிட்ட கொடுத்தது எம்பொண்டாட்டிக்கு தெரியாதுங்க, அதை இல்லேன்னுட்டா. தப்பா எடுத்துக்காதிங்கன்னு சொசைட்டிக்காரர பாத்து சொல்ல தொடங்கி சாமியாடி கிழவிய கும்புட்டு முடிச்சான் வடிவேலு, நமக்கேன் வம்புன்னு ஆளுக்கு அஞ்சாதவன் சாமிக்கு பயந்து வந்த வேகத்துல பூட்ட தொறந்துட்டான். எல்லாம் மலமலன்னு உள்ள போராங்க, கூடவே ஊமையனும், அவனை உரசியபடியே கரியனும்.

கேட்லருந்து கூப்புடு தூரத்துல கோயிலு, மரத்து வேரோட வேரா சாஞ்சி கெடக்கறாரு முனியப்பன், சாமிக்கு சிலைய காணல, நாலஞ்சி கல்லுதான், அதுல எப்பவோ பூசின மஞ்சளும், குங்குமமும்தான் சாமியின் அடையாளங்களாக தங்கி நிக்குது. கொடை மாதிரி வளைஞ்சி தரை தொட்டுகெடக்கு மரம், கூடவே வேப்பமரமும் காட்டெழுமிச்சை மரமும் பின்னிக்கெடக்கு.

போன வேகத்துல சாமிய கழுவி சுத்தம் பன்னி, பொங்க வச்சி, பூசைக்கு தயாராய்ட்டாங்க எல்லாம்.

இதோ கரியனோட கால பின்னாடி ஒருத்தனும், தலக்கயிற முன்னாடி ஒருத்தனும் இழுத்து புடிக்க, காவிவேட்டி மேல மஞ்சத்துண்ட இறுக்கி கட்டிய ஒருத்தன் கழுவி பொட்டு வச்சா அருவாளோட நிக்கறான், வெளியே பூட்ட ஒடைக்க போனவன் இவன்தான் போல, தலைல தண்ணிய ஊத்தறாங்க, கரியன் என்ன பாத்து அடிவயித்துலருந்து கத்தறான், அவங்கண்ல மரணபயத்த பாக்கறேன், மறுபடி தண்ணிய ஊத்தறாங்க, தலைய வேகமா ஆட்றான் கரியன், “உத்தரவு கொடுத்துட்டாண்டா முனியன் போடறா”ன்னு யாரோ கத்தறாங்க.

தலை துண்டாகி பத்தடி தூரம் போய் விழுது, அந்த கண்ணு இன்னும் ஊமையனத்தான் பாக்குது, உடம்புல இருந்து இரத்தம் பீறிட்டு அடிக்க மொத்த கூட்டமும் கத்துது ஊமையன தவிர.

கரியன் துடிச்சி அடங்கனப்பறம் எல்லாரும் கத்தறத நிறுத்தறாங்க. ஒரு குரல் மட்டும் தனியா கேக்குது. “ம்மா, சாமி எங்கம்மா?” ஊமையன் திரும்பி பாக்கறான், அது புதுசா மொட்ட போட்ட ஒரு கொழந்தை, சொசைட்டிக்காரரோட பேத்தி போல. இதோ சாமின்னு அவங்கம்மா கழுவி பொட்டு வச்ச கல் சாமிய காட்டுது, “இது சாமியில்ல கல்லு, சாமியெங்கம்மா’ ன்னுது மறுபடியும் கொழந்தை.

ஊமையனும் அததான் கேக்கறான், அவங்கேக்கறது யார் காதிலும் விழல, கரியனோட ரத்தம் தோய்ந்த கழுத்துக்கயித்தோட வந்த வழியே திரும்பி நடக்கறான், வழியெல்லாம் மங்கலா இருக்கு, கண்ணெல்லாம் கண்ணீர்.

சிவம் முனுசாமி

2 COMMENTS

  1. மிக அருமை.. எழுத்துகளில் கிராமத்து மணம்..( தண்ணி மொண்ணு வா எனும் வர்தை சிறப்பு)
    ஆடுகள் எப்போதும் தன்னை பராமரிக்கும் மனிதர்களுடன் டெலிபதி போல எதோ ஒருவித பந்தத்தில் இருப்பவை. நம் உணர்வுகளையும் நம் உடலசைவையும் வைத்தே நம்மை புரிந்துகொள்பவை.
    எனது சிறுவயதில் எங்கள் வீட்டில் வளர்ந்த செல்லம் “அழகுகுட்டி ” எனும் ஆட்டுகுட்டியுடன் பழகிய முந்தைய நினைவுகளை நினைவுபடுத்தியது “கெடா விருந்து”…

Leave a Reply