மாயன் மெய்யறிவன்
ருத்ரதாண்டவம் திரைப்படமானது தமிழ்த் திரைமொழியில் சொல்லப்படாத கதைக்களத்திற்குள் பயணித்திருக்கிறது. இதுவே இப்படத்தினை வெற்றிப்படமாக மாற்றும் முக்கிய காரணியாக இருக்கிறது.
நீண்ட நெடிய கதை. போதைப் பொருட்களால் சீரழியும் இளைய தலைமுறை. ஆன்லைன் கேம்களால் சிதையும் இளைஞர்களின் வாழ்க்கை. இரவு நேர நடன குடி விடுதிகளில் சிக்கி சீரழியும் பெண்கள். தவறாகப் பயன்படுத்தப்பட்ட பிசிஆர் ஆக்ட் மூலம் பாதிக்கப்படும் காவல்துறை ஆய்வாளர். பிழைக்க வேலை தேடும் முன்பாக காதல் என்கிற வலையில் சிக்கி, கட்டப்பஞ்சாயத்து அரசியல் கும்பலிடம் மாட்டிக்கொள்ளும் பெண். அம்பேத்கர் பெயரால் நடத்தப்படும் சாதி அரசியல்வாதிகளின் சமூகப்பிரிவினை அரசியல். அரசியலுக்கான மதமாற்றம் என கதைக்களம் விரிந்து செல்கின்றது.
தன் மனதில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் இந்தப் படத்திலேயே எடுத்துவிட வேண்டும் என இயக்குனர் எல்லா விஷயங்களையும் படமாக்கி உள்ளார்.
படத்தின் முதல் பாதியில், கதைக்களத்தை அடித்தளமிடும் காட்சிகள், கதாநாயகனின் குணாம்சத்தைக் கட்டி எழுப்ப வேண்டிய காட்சிகள் என திரைப்படம் நகர்கிறது. இன்னும் கூட எடிட்டிங் செய்திருக்கலாமோ என பார்வையாளராகத் தோன்றுகிறது. தமிழில் தற்போது வெளிவரும் பல படங்களிலும் இத்தகைய நீண்ட விவரணைக் காட்சிகளைக் காண்கிறோம். திரைப்பட இயக்குனருக்கு இந்த விவரணைகள் கதைக்களத்தை நிறுவ தேவையானதாக இருக்கலாம். ஆனால் பார்வையாளராக இதிலுள்ள சிறு தொய்வினை சரி செய்திருக்கலாம் என தோன்றவே செய்கிறது. சமீபத்தில் வெளிவந்த ‘சார்பட்டா பரம்பரை’ படத்திலும் இதே போன்ற தொய்வுகள் உள்ளதாக தோன்றவே செய்தது.
இடைவேளைக்குப் பிறகு, ருத்ரதாண்டவம் வேகம் கூடுகிறது. ஒவ்வொரு காட்சியும் படத்திற்கு மிக முக்கியமானதாக இருக்கின்றது. இயக்குனர் தன்னால் முடிந்த அனைத்து வகையிலும் படத்தினை சிறப்பாக எடுக்க முயற்சித்துள்ளது திரைமொழியில் தெரிகின்றது. காட்சிகள் விருவிருப்பாக அடுத்தடுத்து நகர்கின்றன.
அடுத்தடுத்து என்ன நடக்கும் என எளிதில் கதையின் போக்கினை யூகிக்கமுடியாத அளவிற்கு பல திருப்பங்களுடன் கதை செல்கிறது.
போதைப் பொருட்களுக்கு பள்ளி மாணவர்கள் பலியாகுவதை வெளிச்சமிட்டு காட்டுகிறது. இதனை தடுப்பது ஆட்சியாளர்களின் கையில் உள்ளது.
மதம் மாறிய பிறகும், இந்து என சான்றிதழை மட்டும் வைத்துக்கொண்டு, பிசிஆர் சட்டத்தினை தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ள சம்பவத்தைப் படம் சுட்டிக் காட்டுகிறது. இது குறித்து பொதுவெளியில் பலர் பேசி இருக்கிறார்கள். அரசியல் தலைவர்கள், நீதி துறையினைச் சார்ந்தவர்களும், பிசிஆர் சட்டத்தினை, அரசியல் நோக்கத்துடன் தவறாக சில நேரங்களில் பயன்படுத்தப்படுவதைப் பற்றி பேசி உள்ளனர். இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை இப்படம் தடுக்கக் கோருகிறது.
அம்பேத்கர் அனைவருக்குமான தலைவர், அவரை வைத்து சாதி அரசியல் செய்யாதீர்கள் என்கிறது படத்தின் கதை.
திரைப்படம் என்பது வெறும் பொழுது போக்கு மட்டுமல்ல, அதனைத் தாண்டி, இந்தச் சமூகத்திற்கு எடுத்துச் சொல்ல மிக அவசியமான விஷயங்கள் உள்ளன என்பதை ருத்ரதாண்டவம் நிரூபித்துள்ளது.
இப்படியான கதைக்களம் கொண்ட படத்தினை நாம் ஏன் எடுக்கத் தவறினோம் என மற்ற இயக்குனர்களுக்கு தோன்றக்கூடிய அளவிற்குத் துணிச்சலான முயற்சி.
தமிழக மக்கள் அனைவரும் பார்க்கத் தக்க படம். முதல் பாதியில் சற்று தொய்வு, இரண்டாம் பாதியில் விருவிருப்பு என மொத்தத்தில் இன்றைய சமூகத்திற்குத் தேவையான நல்ல படம்.
ருத்ரதாண்டவம் படத்தினைப் பார்க்கும் பலதரப்பு சமூக மக்களும் நிச்சயம் பாராட்டுவார்கள். எள் முனை அளவு கூட இதில் சந்தேகம் வேண்டாம். படத்தில் காட்டியுள்ளது போல, காழ்ப்புணர்வு கொண்ட சில ஊடகத்தினர் சாதி, மதம் என கோர்த்துவிட்டு சலசலப்பை ஏற்படுத்த கீழ் புத்தியுடன் எதையேனும் எழுதலாம். இதனைத் தாண்டி வெற்றி பெறுகிற அளவிற்குப் படம் உள்ளது. காரணம் கதைக்களம் அத்தகையது.
‘திரௌபதி’ படம் வந்த போது, “தமிழ் திரைப்பட வரலாறு என்பது, திரௌபதிக்கு முன், திரௌபதிக்கு பின் என மாறி உள்ளது என நிச்சயம் கூற இயலும், இந்த அளவிற்கு இப்படம் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது” என ‘தமிழ்விங் மீடியா’ தளத்தில் எழுதினேன்.
இதேபோல, “தமிழ்த் திரைமொழியின் கதைக்களம் என்பது, ருத்ரதாண்டவத்திற்கு முன், ருத்ரதாண்டவத்திற்குப் பின் என மாறக்கூடிய சூழல் உருவாகி உள்ளது”.
இயக்குனர் மோகனுக்கும், திரைப்படக் குழுவினருக்கும், சிறப்பாக நடித்திருக்கும் அனைத்து நடிகர்களுக்கும் மனமார்ந்த இனிய வாழ்த்துக்கள். அவசியம் நீங்களும் படத்தினைப் பாருங்கள். படத்தில் குறியீடுகள் எல்லாம் இல்லை. நேரடியாகவே முகத்திற்கு நேராக சமூக சீரழிவு விஷயங்களைப் படம் பேசுகிறது. தமிழ்த் திரைப்படத்திற்கு இத்தகைய போக்கு புதுசு தான்.