தாமிர உருக்காலை வேண்டுமா? என்றால், ஆம் வேண்டும். எல்லா தொழிற்சாலைகளின் உற்பத்திகளும், மனிதனின் தேவைகளைப் பூர்த்திசெய்யவே தொடங்கப்படுகின்றன.
இத்தகைய பெரிய தொழிற்சாலைகள் கடற்கரை அருகில் அமைக்க வேண்டுமா? என்றால், ஆம் இறக்குமதி, ஏற்றுமதி தேவைகள் சார்ந்து, துறைமுகங்கள் அருகில் அமைப்பது தான் சரி.
தாமிர உருக்காலை என்று இல்லை. அணுஉலை, இரும்பு உருக்கு ஆலை, கெமிக்கல் ஆலை, கச்சா எண்ணை சுத்திகரிப்பு ஆலை, மருந்து பொருட்கள் உற்பத்தி ஆலை, சாராய ஆலை, சோப்பு பொருட்கள் ஆலை, பிளாஸ்டிக் பொருட்கள் ஆலை, விவசாய மருந்து பொருட்கள் ஆலை, பூச்சிகொல்லி ஆலை. காகித உற்பத்தி ஆலை, அனல்மின் ஆலை என்று பல தொழிற்சாலைகளை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். இவை எல்லாம் தேவையா? என்றால், ஆம் மனிதன் விரும்புகிறான், ஆகவே தேவை என்பதுதான் பதில்.
மாறிவரும் உலகச் சூழலுக்கு ஏற்ப, புதிய புதிய தொழிற்சாலைகள் வரவே செய்யும். ஆனால், அந்த கார்ப்பரேட்டுகள், தான்தோன்றித்தனமாக எந்த இடத்தையும் தேர்வு செய்வது இல்லை. எந்தெந்த இடங்களில் தொழிற்சாலைகள் அமைத்தால், உள்கட்டுமானம், மனிதவளம் இருக்கும் என்றும், செலவினம் குறைவாக இருக்கும் என்றும், பல காரணிகளை முன்வைத்து இடத்தை தோராயமாக குறித்து அரசாங்கங்களை அனுகுகிறார்கள்
ஆக, ஓர் அரசாங்கமானது மக்கள் அரசாங்கமாக, மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசாங்கமாக இருக்கும் எனில், தொழிற்சாலைகளுக்கு இடம் ஒதுக்கும் போதே, மக்களுக்கு பாதிப்பு வராத இடமாக ஆய்வறிக்கை தயார் செய்து, அதற்கேற்ப இடம் ஒதுக்குவதே நல்லது. இனியாவது மாநிலத்தில் ஆட்சிக்கு வருகிறவர்கள். தொழிற்சாலைகளுக்கு இடம் ஒதுக்குவதற்கு கடைபிடிக்க வேண்டிய சரியான வழிமுறைகளை, மக்கள் நலன் சார்ந்து வரையறை செய்யவேண்டும்.
எல்லா தொழிற்சாலைகளும் வேண்டும் என்பதே என் பார்வை. அதை எந்த அளவிற்கு பாதுகாப்பு நிறைந்ததாக செயல்படுத்துவது, மக்கள் பாதிக்காமல் செயல்படுத்துவது என்பதையே இந்த தலைமுறை அதிகமும் யோசிக்க வேண்டும். இதிலும் குறிப்பாக இன்ஜினியரிங் படித்த தமிழகத்தினர், இந்த விஷயங்களில் ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளைச் செய்யவேண்டும். அப்போது தான் பல தொழில் வளங்களும் தமிழகத்திற்கு வரும்.
மாயன் மெய்யறிவன்