என்னுடைய இருபத்தைந்து வருட வேலைவாய்ப்பில், ஐந்து வருடங்கள் மட்டும் தான் சென்னையில் பணி புரிந்தேன். மற்ற இருபது வருடங்களும் பெங்களூர், புது தில்லி, வளைகுடா நாடுகள் என ஓடிவிட்டன.
தமிழகத்தில், நூறு சத வேலைவாய்ப்பும் தமிழக மக்களுக்கே என்பது நடைமுறை சாத்தியம் அற்ற, உணர்ச்சி சார்ந்த விஷயம். தமிழக மக்களிடமோ, இந்திய மக்களிடமோ மற்ற உலக நாடுகளுக்கு அறிமுகம் செய்ய எந்த தொழில் நுட்பமும் தற்போது இல்லை. அறிவியல் கண்டுபிடிப்புகள் சார்ந்த தேக்க நிலை ஏன் நமது நாட்டில் உள்ளது என்று சிந்திக்க வேண்டும். இங்கே ஆரம்பிக்கப்படும் அனைத்து தொழிற்சாலைகள், தொழில் சார்ந்த சேவைகள் அனைத்தும், மேற்கத்திய நாடுகளின் கண்டுபிடிப்புகள் மற்றும் முன்னெடுப்புகள். நாம் அவற்றை கற்றுக்கொண்டு பணிபுரிகிறோம். ஆகவே தொழில் அறிவுத்திறன் கொண்ட சமூகம் பல மாநிலங்களை, பல நாடுகளைச் சார்ந்ததாகவே இருக்கும்.
தமிழ்நாடு மாநில அரசு பணிகளில், நூறு சதவிகிதம் தமிழக மக்களுக்கு மட்டுமே என சட்டம் இயற்றலாம். இது நடைமுறை சாத்தியம். இது அவசியம் கடைபிடிக்கவேண்டிய மாநிலம் சார்ந்த கொள்கை வழி.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில், என்பது சதவிகிதம் தமிழக மக்களுக்கு, மீதி இருபது சதவிகிதம் வெளிமாநில மக்களுக்கு என விகிதாசாரப் படி சட்டம் இயற்ற அரசியல் கட்சிகள் முன்னெடுத்துச் செல்லவேண்டும். அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம், அந்தந்த மாவட்டத்தினருக்கு முன்னுரிமை தரவேண்டும்.
பெரிய காரப்பரேட்டுகளாக இருக்கும் தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்பது சற்று சிக்கலான விஷயம். பொதுவாகவே பெரிய தனியார் நிறுவனங்கள் பல மாநிலங்களைச் சார்ந்தவர்களையும் கலந்துகட்டி எடுப்பதை நடைமுறையாக வைத்துள்ளனர். யூனியன், ஸ்ட்ரைக் போன்ற விஷயங்களைத் தவிர்க்க இது உதவுகிறது என நினைக்கிறேன். என்றாலும், உலக அளவில் வேலைவாய்ப்புகளில் லோக்கலைசேஷன் என்பது தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. எனவே, தனியார் துறை வேலைவாய்ப்புகளில், எழுபத்தைந்து சதவிகிதம் தமிழக மக்கள், இருபத்தைந்து சதவிகிதம் வெளிமாநில மக்கள் என ஏதேனும் நடைமுறைக்கு சாத்தியமான சதவிகிதத்தை ஆய்வறிந்து நடைமுறைப் படுத்த வேண்டும்.
கணேஷன் குருநாதன்