வாழ்க்கையில் முன்னேறும் வழிகளைக் கண்டறிவது எப்படி

மாயன் மெய்யறிவன்

0
3585

பிறப்பும் இறப்பும் நாம் தெரிவு செய்ய இயலாதவை. புரியாத புதிரான இயற்கையின் கொடைகளில் உயிர்கள் ஓர் அற்புதம். பிறந்துவிட்டோம், வளர்ந்துவிட்டோம், படித்துவிட்டோம், அடுத்ததாக என்ன செய்யப்போகிறோம்? என்கிற கேள்வி எழாத எவருமே இருக்க இயலாது. குழந்தைகளைப் பெற்று வளர்த்துப் படிக்க வைத்து, ஆளாக்கும் வரையில் பெற்றோர்களின் பங்களிப்பு முதன்மையானது. தங்களது குழந்தைகளை நல்ல நிலைக்கு உயர்த்த வேண்டும் என்கிற வேட்கை எல்லா பெற்றோர்களிடமும் இயல்பாகவே இருக்கும்.

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்கிற ஆவல் உள்ளது, ஆனால் முன்னேறும் வழிகள் எவை என அறிந்துகொள்ள இயலாமல் இருப்பவர்கள் மிக அதிகம்.

எதையும் அறிந்துகொள்ள, தன்நிலை அறிதல் மிக முக்கியம். சுயநிலையை அறிந்துகொண்டால் தான் வளர்ச்சி அடையமுடியும். இந்த புரிதல் இருந்தால் தான் அடுத்ததாக என்ன செய்வது என முடிவெடுக்க இயலும்.

தங்களது வாழ்க்கையை, தங்களது பொருளாதார வளத்தை மேம்படுத்த உதவும் என நம்பும் விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அவற்றுக்குக் கூடுதல் நேரம் ஒதுக்குங்கள். சூழலுக்கு ஏற்ற யதார்த்த நிலை உணர்ந்து, அதற்குத்தக வாழ்வில் முன்னேறுங்கள்.

சுயநிலையை அறிய நான்கு முக்கிய காரணிகள் உள்ளன என எனது அனுபவங்களின் வழியாக உணர்ந்திருக்கிறேன். “நமது அறிவுத்திறன் அறிதல், நமது தனித்திறன் அறிதல், நமது பொருளாதாரம் அறிதல், நமது முன்னேறும் வாய்ப்பு அறிதல்”.

இந்த நான்கு விஷயங்களையும், இருபத்தைந்து வயதிற்குள், தங்களது வாழ்க்கை அனுபவங்கள் மூலமாகவோ, நல்லறிவு உடையோர் கூறக் கேட்டோ, நன்கு புரிந்துகொள்கிறவர்கள், ஏதேனும் ஒரு வழியில் தங்களது சாமானிய நிலையிலிருந்து மேம்பட்டு விடுகிறார்கள்.

இந்திய, தமிழக அரசியல் மற்றும் சமூகச் சூழலில் பலராலும் இருபத்தைந்து வயதிற்குள் சுயம் அறிய இயலாத நிலை உள்ளது. அந்த அளவிற்கு அரசியல், சமூக காரணிகள், குடும்ப சூழ்நிலைகள், அவர்களது மனதை வெவ்வேறு திசைகளில் இழுத்தும், வெவ்வேறு தேவையற்றப் பிரச்சனைகளை நோக்கி ஓடவும் செய்துவிடுகின்றன.

அதிகபட்சம் முப்பது வயதிற்குள்ளாவது, தேவையற்ற உணர்ச்சி அரசியல், சமூகத் தூண்டல் வலைவிரிப்புகளைத் தாண்டி, சுயம் அறிந்துவிட வேண்டும். அதாவது தங்களது சுய நிலையை அறிந்துவிட வேண்டும்.

ஆனால் பலரும் அடிபட்டு அடிபட்டு ஐம்பது வயதிற்கு மேல் தான் சுயம் அறிகிறார்கள். இது கூட அவர்களாக அறிவதில்லை. காலம் அவர்களைக் கசக்கிப் பிழிந்து வலுக்கட்டாயமாகப் பாடம் கற்பித்துவிடுகிறது. இந்த வயதிற்குப் பிறகு முன்னேறும் வாய்ப்பு பலருக்குக் கிடைக்காமல் போய்விடுகிறது. இதனால் நாள்தோறும் பலசிரமங்களை எதிர்கொண்டு மனவலியுடன் வாழ்க்கையைக் கடத்துபவர்கள் பலர்.

நாற்பது வயதிற்குள் பொருளாதார பாதுகாப்பு வளையத்திற்குள் வராத பெரும்பாலானவர்களின் வாழ்க்கை; கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டவில்லை என்கிற போராட்டமாகவே அமைந்துவிடுகிறது. நாற்பது வயதிற்குப் பிறகு, வாழ்க்கையைத் தொலைத்துவிட்டோமே என வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை.

முப்பது வயதிற்குக் குறைவான இளைஞர்கள், இந்த விஷயத்தைத் தினமும் மனதில் நினைத்துக்கொள்ளுங்கள். உங்களுடன் படித்தவர்கள், வளர்ந்தவர்கள் வெட்டியாக, பொறுப்பின்றி சுற்றுகிறார்களே, அவர்களைவிட நாம் பரவாயில்லையே என்று இருந்துவிடாதீர்கள். வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றம் மட்டுமே உங்களுக்குக் கவலையற்ற வாழ்வைத் தரும். பொருளாதார பலம் என்பதே பாதுகாப்பான வாழ்க்கை. பொறுப்பின்றி வெட்டியாகச் சுற்றுவது ஊதாரித்தனம். இந்த ஊதாரித்தனமானது, நமது பெற்றோர்களுக்கு, நமது உயர்வை விரும்புவோருக்கு, கவலையும் மனவலியும் தரும்.

நாற்பது வயதிற்குப் பிறகு, உள்ளுக்குள் கவலை கொண்டு, வெளியில் சிரித்து நடித்து வாழ்வதை விட, பொருளாதாரத்தில் முன்னேற, இளம் வயதிலேயே திட்டமிட்டு முன்னேறுங்கள். கிடைத்த வேலையைக் கொழுகொம்பாகப் பற்றி உழைக்கத் தொடங்குங்கள். அங்குக் கிடைக்கும் தொடர்புகளின் வழியாக வேறு வேறு வேலைக்கோ, சுய தொழிலுக்கோ வழி பிறக்கும்.

பொதுவாகவே தங்களைவிடத் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களைக் கண்டு, அவர்களைவிட நாம் நன்றாகத்தானே இருக்கிறோம் என்கிற வாழ்க்கை சமரசப் போக்கினைப் பலர் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று எனக்குத்தோன்றுகிறது. இத்தகைய சமரசம் பலரை அடுத்த மேம்பட்ட பொருளாதார நிலை சார்ந்து முன்னேறவிடாமல் தடுத்துவிடுகிறது.

பிறப்பு இறப்புக்கு நடுவே, வாழ்க்கை என்பது அனுபவங்களும் அனுபவிப்புகளும் தான். விரும்பும் எதையும் நேர்வழியில் அனுபவிப்பதும், தரமான ரசனையும் தான் வாழ்க்கை.

சுயம் அறிய விரும்பும் போது, தாங்கள் தற்போது உள்ளதைவிட, மேலான வாழ்க்கை நிலை இருப்பதை உணர்ந்து, மேலான நிலைகளுடன் ஒப்பிட்டு, தாங்களும் மேலானவர்களாக மாற விரும்பினால் மட்டுமே, எவருக்கும் உயர்வுக்கான வழிகள் தோன்றும். உயர்வுக்கான வழி என்பது ஒவ்வொருவருக்கும் அவரவர் திறனுக்கு ஏற்ப மாறுபடும்.

நேர்வழி, குறுக்குவழி என எல்லாவற்றிலும் இரு வழிகள் எப்போதும் உள்ளன. எந்த வழியில் முன்னேறுவது எனத் தேர்ந்தெடுப்பது, அவரவர் மரபு, பண்பாடு, வளர்ந்த விதம் சார்ந்தது. நேர்வழியில் உயர்வது, நிம்மதியான அனுபவங்களைத் தரும் என்பதும், சுயமான பலத்தைத் தரும் என்பதும் எனது அனுபவம்.

வாழ்க்கையில் எந்த விஷயம் சார்ந்தும் தங்களது ரசனையை உயர்த்திக்கொள்வதும், நல்லவற்றை அனுபவிக்கக் கற்றுக்கொள்வதும், அதற்கேற்ப நேர்வழியில் முன்னேறுவதும் தான் வாழ்க்கை. உங்களுக்கான முன்னேறும் வழியைச் சுயவிமர்சனம் செய்து அறியுங்கள். முன்னேறும் பாதையினைத் திட்டமிட்டுச் செல்லுங்கள். வெற்றி நிச்சயம். நிம்மதி சத்தியம்.

திரும்பவும் கூறிய விஷயத்தை அழுத்தமாகக் கூற நினைக்கிறேன். இருபத்தி ஐந்திலிருந்து, நாற்பது வயது வரையிலான பதினைந்து வருடங்கள், வாழ்க்கையில் மிக மிக முக்கியமானவை. இந்த வயதிற்குள் ஏதேனும் ஓர் வேலை, தொழில் மூலமாக, வாழ்க்கைக்குத் தேவையான பொருளாதாரங்களைச் சேர்த்துவிட வேண்டும். அதிகப்படியாக முப்பத்தைந்து வயது வரைதான், வளைந்து நெளிந்து சமரசங்களுக்கு உட்பட்டு, ஏதேனுமொரு வருமானம் தரும் வேலை, தொழிலில் ஈடுபட முடியும். அதன் பிறகு வயது ஆன பிறகு, நமக்கென திடமான பார்வைகள், வைராக்கியங்கள் உருவாகிவிடும். இதற்குள் நமக்கான பொருளாதார பாதையைத் தெரிவு செய்து, பிற்காலத்தில் வருமானம் தரக்கூடியவற்றில் முதலீடு, சேமிப்பு செய்து, பொருளாதார ரீதியாகப் பாதுகாப்பான வளையத்திற்குள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.

உங்களது வாழ்க்கை விளையாட்டை, வெற்றிகரமாக விளையாடக் கற்றுக்கொள்ளுங்கள்.
முன்னேறத் துடிக்கும் மனசு இருந்தால், சுயநிலை அறியும் மனசு இருந்தால், உயர்வுக்கானப் பாதை மனதில் உருவாகும்.

மாயன் மெய்யறிவன்

குறிப்பு: இந்த கட்டுரையைப் போன்ற ஆக்கச்செழுமையான படைப்புகளைத் தொடர்ந்து படிக்க, தமிழ்விங் தளத்தின் Facebook மற்றும் Twitter பக்கங்களை லைக் செய்யுங்கள். விரைவில் பயனுள்ள காணொளிகளை தமிழ்விங் தளம் வெளியிட இருப்பதால், இதன் YouTube பக்கத்திலும் சப்ஸ்கிரைப் செய்து உங்களது ஆதரவினை நல்குங்கள். உங்களது தொடர்ந்த ஆதரவானது, தமிழ்விங் தளத்தில் பல நல்ல படைப்புகள் வெளிவர உதவும். மிக்க நன்றி.