மாற்றுக்குரல்கள்

கணேஷன் குருநாதன்

1
88

மாற்றுக்குரல்கள் என்பவை எந்த சமூகத்திற்கும் மிக அவசியமானவை. மாற்றுக் குரல்கள் தேவையற்றவையாக தோன்றும், பல நேரங்களில் முட்டாள்தனமானவையாக தோன்றும், தேவையற்ற செயல் என்றும் தோன்றும், ஆனாலும் மாற்றுக்குரல்கள் அவசியமானவை, அவற்றுக்கான வெளி ஜனநாயகத்தில் எப்போதும் இருக்கவேண்டும்.

கொரோனவை நம்ப மாட்டேன், இது என் கோட்டை, முதல்வரை இங்கு வந்து சொல்லச் சொல்லுங்க என்றானே, அவன் ஒரு வகை மாற்றுக்குரல். காரணம் கொரோனா பற்றி அவனுக்கு சந்தேகம் உள்ளது.

சித்தர் திருத்தணிகாசலத்தின் பேச்சு ஒரு வகை மிகை உணர்ச்சி சார்ந்தது, தன்னையும், தனது கருத்தையும் முன்னிலைப்படுத்தும் வகை சார்ந்தது, ஆனாலும் அதையும் மாற்றுக்குரல் என வகைப்படுத்தலாம். கொரோனா என்பது பயப்படும் அளவிற்கானது அல்ல, அதற்கான சித்த மருத்துவம் தன்னிடம் உள்ளது எனக் கூறுவதில் தவறு எதுவும் இல்லை. அரசாங்கத்தின் சில முடிவுகளை விமர்சிக்கும் உரிமை இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் தேவையான ஒன்று, அதை முடக்கக் கூடாது.

இதோ, இன்றைய தினங்களிலே, அரசு மதுக்கடைகளை திறந்துள்ளது. இன்னமும் கொரோனா பற்றிய அரசின் பார்வை மாறவில்லை, ஆனாலும் மதுக்கடைகளை திறந்து, மதுவிரும்பிகளை அழைத்துள்ளது. அநேகமாக எந்த மதுக்கடையின் முன்பாகவும் “சமூக இடைவெளி” பின்பற்றப்படவில்லை என்பதை, காணக்கிடைக்கும் ஒவ்வொரு புகைப்படமும் கூறுகிறது. ஆக அரசின் பார்வை என்பது, கிட்டத்தட்ட கொரோனாவை காட்டு என்றானே, அவனது பார்வையைப் போல, கொரோனா பற்றி அச்சப்படத் தேவையில்லை என்ற திருத்தணிகாசலம் போல மாறி உள்ளது. அறிக்கை பூர்வமாக சொல்லவில்லை என்றாலும், அரசின் செயல்படுகளை இப்படித்தான் பார்க்க இயலுகிறது.

காய்கறி வாங்கச் சென்றவர்களை அடித்தார்கள். மசூதிக்கு சென்றவர்களை அடித்தார்கள். கோவிலுக்கு சென்றவர்களை அடித்தார்கள். ஆனால் மதுக்கடைகளுக்கு வருகிறவர்களை இதே காவலர்கள் வரிசைப் படுத்துகிறார்கள்.

நடக்கும் நிகழ்வுகள், கொரோனா பற்றி அதீதமாக அச்சப்படத் தேவையில்லை என்பதை கூறுவதாகவே உள்ளன. இதுவே மாற்றுக்குரல்களை கவனிக்க வேண்டிய அவசியத்தையும் கூறுகின்றன.

கணேஷன் குருநாதன்

1 COMMENT

Leave a Reply