நாளைய தினம் புது வருடம் பிறக்கிறது. நம் எல்லோருக்கும் வயது ஒன்று கூடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அதைச் செய்யவேண்டும், இதைச் செய்யவேண்டும் என நினைத்தும் சபதம் எடுத்தும், எதையும் செய்யாமலும் பொழுதுகள் ஓடிவிடுகின்றன. ஒரு சிலவற்றை செய்து முடித்தோம் என்றும் சிலருக்கு வாய்க்கவும் செய்கிறது.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. வாய்க்கு எட்டியது வயிற்றுக்குள் போகவில்லை என்கிற வகையான தோல்விகளும் கடந்தே செல்கின்றன.
ஒவ்வொரு நாளும்; அவமானம், துன்பம், சங்கடம், மகிழ்ச்சி, அன்பு, பரிதாபம், பரிகாசம், பரிவு, திருப்தி என பலவகைகளில் மனம் ஊடாடவே செய்கின்றது.
நாளை என்றொன்று இல்லை எனில், இன்றைய பொழுதை மனம் போன போக்கில் இனிதே கடத்திவிடலாம். ஆனால் நாளை இருக்கிறது. அடுத்த நாள் இருக்கிறது. அடுத்த ஆண்டும் இருக்கிறது. ஆகவே கடந்த காலத்தை விட, எதிர்காலம் குறித்த சிந்தனை, அவரவர் அளவில் பலருக்கும் ஓர் சவால் தான்.
இன்றைய தினத்தில் சிறப்பாக வாழ்ந்தோம் என்பதும், எதிர்காலத்திலும் சிறப்பாக வாழ்வோம் என்பதும், ஒவ்வொருவருக்கும் மிக மிக முக்கியமானதாக உள்ளது. பலரும் இதை நோக்கித்தான் ஓடிக்கொண்டிருக்குறோம்.
இந்த வருடத்தில், நினைத்த எதையுமே என்னால் செய்ய இயலாமல் போனது. இந்த வகையில் இது எனக்கு தோல்வியான வருடம். ஆனால் திட்டமிடாத சில எதிர்கால விஷயங்கள் அதுவாகவே நடந்தேறி உள்ளன. அவற்றை கடந்தால் பிறிதொரு சமயம் இதுவும் வெற்றிகரமான வருடமாகத் தோன்றக் கூடும்.
எல்லோருக்கும் தனிப்பட்ட கனவுகளும், சமூகம் சார்ந்த கனவுகளும் இருக்கின்றன. எனக்கோ ஏராளமான கனவுகள் இருக்கின்றன. எந்த வெளிநாட்டு பயணத்தின் போதும், அங்கு தமிழையும் ஒரு பாடமாக நடத்தும் உயர்தர பள்ளிக்கூடம் இருக்கிறதா? என இணையதளத்தில் தேடிப் பார்ப்பேன். பொதுவாகவே அப்படியொரு இன்டர்னேஷனல் தர அளவிற்கான தமிழ்ப்பள்ளி இருப்பது போல தென்பட்டதே இல்லை.
வளைகுடா நாடுகளில் கணிசமான எண்ணிக்கையில் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஆனால் தமிழ் மொழியையும், தமிழர் நாகரீகத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் விதமாக எந்த பள்ளியும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ் ஒரு பாடமாக இருக்கும் பள்ளிக்கு சென்று பார்த்தால், அங்கு உங்களது குழந்தைகளை சேர்க்கவே தோன்றாத நிலையில் இருக்கும்.
தமிழர்கள் கணிசமாக வசிக்கும் ஒவ்வொரு நாட்டிலும்; தமிழ் மொழியை ஒரு பாடமாகவும், தமிழர் கலாச்சாரம், பெருமைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் விதமாகவும், “தமிழ் சர்வதேச பள்ளி / Tamil International School” ஒன்றினை ஒவ்வொரு நாட்டிலும், உயர்தரத்துடன் அமைக்கும் கனவினை, தமிழ் அமைப்புகள் முன்னெடுத்து சாத்தியமாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்பதனை, இந்த புது வருட சமயத்திலே கூறிக்கொண்டு, அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்கிறேன்.
கணேஷன் குருநாதன்