ஆசையாய்

ப.உ. தென்றல்

0
70

ஊருக்குச் சென்று
திரும்பும்போதெல்லாம்,
கையோடு கொண்டு வருகிறேன்
செடிகளை.

“இருக்கற லக்கேஜ்ல
இது வேறயா;
அடுத்த தடவ எடுத்துக்கலாம்”
அலுத்துக் கொள்ளும் கணவர்.

“இது நல்லா பூக்கும்மா;
இது அழகா இருக்கும்மா,
இது உன்கிட்ட இல்ல”
அடுக்கி வைக்கும் அப்பா.

“கொஞ்சமா குடுங்கப்பா;
நிறைய வேணாம்,
எடுத்துட்டு போறது கஷ்டம்.”
பேசிப்பேசி-
இங்கும் அங்கும்
சமாளித்து,
வீட்டில் போய் இறக்கினால்-
“தலைக்குமேல வேல இருக்கு;
என்னவோ செய்.” என்று
அவர் வேலையை
அவர் பார்க்க.
“தண்ணி தெளிச்சி வை”
“ஆழமா தோண்டி வை” என்று
செடிகளின் பாதுகாப்பை
அப்பா உறுதி செய்ய.
தாய் மண்ணோடு
கொண்டு வந்ததை,
நடும் போது
சொல்வேன்:
“அப்பா ஆசையாய்க்
கொடுத்தது;
பிழைச்சுக்கோ!” என்று.

ப.உ. தென்றல்

Leave a Reply