ஊரிலிருந்து வந்தவுடன்,
முதல் வேலையாய்க்
கையில் துடைப்பமும்,
துணியுமாய்,
வீட்டைச் சுத்தம்
செய்யும் அப்பாக்களைப்
பார்க்கிறேன் அக்கம்பக்கத்தில்
அவ்வப்போது.
சன்னல்களைத் துடைப்பது
சுற்றிப் பெருக்குவது
பழையதைக் கழிப்பது
தோட்டம் இருந்தால்
சீர்ப்படுத்துவது
காய்கனிகளை வாங்கி வருவது,
அப்பப்பா…
எத்தனை எத்தனை வேலைகள்.!
அலுவலகம் செல்லும்
பெண் என்றால்,
இன்னும் கூடுதல் அக்கறை.
“ஒரேடியா செய்யாதீங்க;
நாளைக்குச் செஞ்சிக்கலாம்”.
“கொடியில காய்ஞ்ச துணிய
எடுத்துட்டு வந்துடுங்கப்பா”.
“எங்கப்பா இப்படித்தான்;
பொங்கலுக்கு மறுபடியும்
வருவாரு”.
பெருமை பேசும்
மகள்கள்.
திருமணமாகியும்
மகள் சிரமப்படக்கூடாது என்று
வரிந்து கட்டிக்கொண்டு
செய்வது.
மனைவிக்கு உதவுபவர்கள்
மகளுக்கும் உதவுவார்கள்.
நாள் போதாமல்
எழுதுவதும், படிப்பதுமாய்
ஊரில் ஓய்வின்றி
இயங்கும் அப்பாவை
நினைத்துப்பார்க்கிறேன்-
மகளாய்.
அவர் என்ன சொல்வார்?
இவர்களைப் பற்றி…
“எழுதறதில்ல;
படிக்கறதில்ல;
வேற வேல
தெரியாதவங்க”.
ப.உ.தென்றல்