இதைவிடச் சிறியது எல்லாம்
பூக்கும் போது
இது மட்டும் ஏன் பூப்பதில்லை?
வளர்ந்து நிற்பதில்
இன்றைக்கா?
நாளைக்கா? என்று
எத்தனை நாள்தான்
மொக்கை எதிர்பார்த்துக்
காத்திருப்பது.
‘கண்படும்’ அளவிற்குப்
பூத்துக் குலுங்கும் செடியைப்
பார்த்து விட்டு,
இதைக் காணும் போது,
வெறுமையாய்
ஓர் உணர்வு.
“பூக்கலன்னா பிடுங்கிட்டு
வேற நடுங்க!”
யோசனைகள் ஏராளம்.
“இருந்துட்டுப் போகட்டும்
இதுவும் ஓர் அழகுதான்!”
என்னை நானே
சமாதானப்படுத்திக் கொள்ளும்
சொற்கள்.
பூக்காதது, காய்க்காதது,
தேவைப்படாது யாருக்கும்.
ஒற்றைப் பூ
சொல்லும் வாழ்வின் பொருள்கள்
பல.
ப.உ. தென்றல்