முடி

ப.உ. தென்றல்

1
2610

எழுதத்தான் வேண்டுமா?
முடியைப் பற்றி.
எழுதத்தான் வேண்டும்
தீர்க்கமாய்.

‘மயிர் நீப்பின் வாழாதாம் கவரிமான்’
கொத்து கொத்தாய்த்
தரையில் விழுகிறது
தலைசீவும் போதெல்லாம்.

தலையில் இருக்கும்
முடியின் மதிப்பு
தரையில் விழும்போது
பறிபோகிறது.
முடிசூடா மன்னர்களாய்.

உதிர்தலைத் தடுக்க, வளர்க்க
மூலிகை எண்ணெய்கள் ஏராளம்.
மருத்துவ அறிவுரைகளோ தாராளம்.

முன் வழுக்கை, பின் வழுக்கை
முடி உதிர்தலைத் தடுத்தும்
பலனில்லாமல் போவது.
பரம்பரைச் சொத்தாய்க் கிடைப்பது.

கன்னங்கள் ஒடுங்கினாலும்,
தோல்கள் சுருங்கினாலும்
நரையை வெல்லலாம்
சாயப்பூச்சுகளின் துணையோடு.

ஒன்றிரண்டு எனில்,
மை தீட்டும் பென்சில்கள்.
அதற்கும் மேற்பட்டால்,
இயற்கை வைத்தியமாய்
மருதாணிக் கலவை.
செயற்கையாய்,
வகை வகையாய்ச்
சாயப்பூச்சுகள் விற்பனைக்கு.

“இருந்துட்டுப் போவுது;
அதுவும் அழகுதான்”
அலட்டிக் கொள்ளாதவர்களும் உண்டு.

கருப்பு வெள்ளையாய்,
நரை தட்டிய கதாநாயகர்களும்
‘சால்ட் அன்ட் பெப்பராய்’ திரையில்.

“மயிரு போச்சுன்னு போவியா?”
கோபத்தில் சொல்லலாம்.
உணர்ந்தவர் யாரும்,
சுலபமாய்ச் சொல்லி விட முடியாது.

ப.உ. தென்றல்

1 COMMENT

  1. அருமையான கவிதை ஓரிரு வெள்ளைக்கே மனசு வலிக்கிறது.

Leave a Reply