பிரசாந்தி ஜெயபாலன்
மாவட்ட எல்லையில்
மானிட சஞ்சாரம்
மந்தமாகிய அந்த ஊருக்கு
மழை நாளொன்றிலே
மாற்றலாகிச் சென்றேன்.
காடு வெட்டி கல்லும் பொறுக்கி
கட்டடம் பல ஆக்கி
ஏழு வயது தாண்டியோர்க்கும்
ஏடு தொடக்கி
எழுத்தாணி பிடிக்க
கற்றுக் கொடுத்திடும்
கடமை புரிந்து
தங்குமிடத்தினில்
தனித்து வாழ்கையில்
தானே வந்து துணையான
நாய் ஒன்றும்
நானே ஆக்கி நானே உண்டு
நாக்கும் செத்திட
அதிகமாய் எஞ்சிடும்
அடுப்படிப் பழசுக்காய்
அதனுடன் அ(க)டிபடும்
அழகிய பூனையும்
எங்கிருந்தோ வந்து
என் வேலி மூலைக்குள்
முட்டைகள் இட்டு
அடையும் காத்து
பஞ்சுப் பொதிகளாய்
அஞ்சு குஞ்சுடன் அரக்கித் திரியும்
அந்தப் பெடையும்
பாத்திரம் தேய்க்கும்
பனைமரம் அருகே
பறந்து திரியும்
கருநிறக் காக்கையும்
உடனிருப்பாலே உறவுகளாகின.
பள்ளி வரைக்கும் காவல் வீரனாய்
துள்ளி வந்து அருகே குழைந்திடும்
நாயாரின் நன்றி
பயிர்களை மேய்ந்திடும் வேலிகளான வேசமுள்ள
மானிடரை விடவும்
மேலெனத் தோன்றிற்று.
அர்த்த யாமத்தில்
அரண்டு விழிக்கையில்
அருகிலே சுருண்டு
அரணாய்த் தூங்கிடும்
பூனையைக் காண்கையிலும்
ஏனோ அதே நினைப்பு.
குறுணி அரிசி
பொறுக்கி எறிகையில்
குறுகுறு நடையுடன்
கொத்தித் தின்றிடும் குஞ்சுகளிற்காய்
ஒதுங்கி வழிவிடும்
பெடையை நோக்கையில்
தாய்மனம் இல்லா
பெண்கள் சிலரென்
கண்முன்னே தோன்றிப்போயினர்.
அழுக்குப் பாத்திரத்தில்
ஒட்டிய பருக்கைக்காய்
கா..கா…காவென கச்சேரி வைத்து
சுற்றத்தை அழைத்து
விருந்தோம்பி நிற்கும்
காக்கையாரும்
தாய் வயிற்றுக்கும் ஈயாத
தனயரிலும் மேலாய்.
இருண்ட என் தனிமை
வெருண்டு மறைய
ஏகாந்த வெளியில்
ஏங்கிக் கிடந்து
நிசப்த அலைகளால்
நினைவழிந்த என்னை
வள்..வள்..மியாவ்..மியா..
கொக்..கொக்..கா..கா..என
சப்தங்களாலே சாந்திப்படுத்திய
சாதனை வீரராய் – நான்
கண்டேன் அவற்றை.
நெருங்கிப் பழகி
நெஞ்சார ஏற்கையில்
ஊரிலே உள்ள உறவுகளை விட
உத்தமம் இந்த உயிர்கள் என்ற
உண்மை புரிந்தது…
நிம்மதி பெற்று நீட்டி நிமிர்ந்து
நேரே நோக்கையில்
உச்சி முகட்டில்
உருண்டது ஒரு பாம்பு..
“பாம்பைக் கண்டால்
படையும் நடுங்கும்”
பகலில் நானே
பள்ளியில் போதித்தும்
ஏனோ எனக்கு பயம் வரவில்லை
பக்கத்து வீட்டு மாந்தரை விடவும்
படுக்கைக்கு மேலுள்ள
பாம்பே மேலென
புரண்டு படுத்தேன் – அதுவும்
நெளிந்து சென்றது.
ஊரிலே உள்ள ஆறுகளை விட
ஊர்ந்தாலும் பறந்தாலும்
ஐ(ஜ)ந்துகளே மேலாய்.