என்ன செய்தாய் கரோனா?

மாயன் மெய்யறிவன்

0
571

உழைக்க ஒரு தொழிலும் இல்லை
வருமானத்திற்கான திசையும் இல்லை
பசி மறக்க உணவும் இல்லை
பிறப்பிடம் திரும்ப வழியும் இல்லை
எங்களை
என்ன செய்தாய் கரோனா?

வெளியில் வந்தால் அடிக்கிறாய்
மனம் நொந்து கோவில் சென்றால் உதைக்கிறாய்
என் வயிற்றுக்கொரு வழி சொல் என்றால்
ஏறி எங்களை மிதிக்கிறாய்
எங்களை
என்ன செய்தாய் கரோனா?

பரவுது பரவுது கரோனா என்றாய்
ஒழித்து விடுவோம் அது வரை
வீட்டிற்குள் முடங்கி இரு என்றாய்
வீடில்லாதோர் முடங்க இடம் தந்தாயா
எங்களை
என்ன செய்தாய் கரோனா?

பசியில் துடிக்கிறோம்
கண்ணீர் சிந்துகிறோம்
வெயிலில் நடக்கிறோம்
துயரில் மடிகிறோம்
எங்களை
என்ன செய்தாய் கரோனா?

ஏதேனும் நல்லவை செய்
எளியோர் உயிர் பிழைக்க வழி செய்
உனக்கு வாக்களித்து
உன்னை ஆட்சி செய்ய வைத்த
ஏழை மக்களின் துயரை நீக்கச் செய்.
ஆட்சிமை தவறினால்
கரோனா உன்னை அணைப்பாள்.

மாயன் மெய்யறிவன்

Leave a Reply