கண் நீரோடை

பா. சிவக்குமார்

0
82

அந்த சிற்றோடையை கடக்கக் குறைந்தபட்சம் முப்பது நிமிடங்களாவது ஆகும். நாள்தோறும் ஒரே ஒரு பரிசல் மட்டுமே இக்கரையிலிருந்து அக்கறைக்குச் செல்லும். ஆனாலும் குப்பாயியும் அவள் கூட்டத்தினரும் மட்டும் ஓடையில் இறங்கித்தான் செல்ல வேண்டும், வெள்ள காலங்களில் கூட.

குப்பாயி அக்கறைக்குச் சென்று மாட்டிறைச்சி விற்று வருபவள். அவள் கணவனோ ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஊரில் நடந்த கோவில் தேர்த் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே நடந்த கலவரத்தில் கொல்லப்பட்டான். ஆனால் அவன் கொலைக்கு எந்த வித வழக்கும் பதியப்படவில்லை, விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக, குப்பாயி மிரட்டப்பட்டாள். தன் குழந்தையின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, கணவனின் நினைவுகளை மட்டும் மனதில் சுமந்துகொண்டு வாழ்க்கையை நகர்த்தத் தொடங்கினாள்.

மகன் இராமசாமி மட்டுமே அவளுக்கு ஒரே ஆறுதல். பதினோறு வயதைக் கடந்திருந்தான்.

ஊரில் கசாப்பு போடப்படும் அடிமாட்டு இறைச்சியை தன் கையில் உள்ள பணத்தைக் கொடுத்து வாங்கி பக்கத்துக்கு ஊர்களில் விற்று சொற்ப வருமானம் ஈட்டி தன் வயிற்றைக் கழுவி வந்தாள், மகனையும் காப்பாற்றினாள்.

இவ்வாறாக அன்று இறைச்சியைச் சுமந்துகொண்டு தன் மகனுடன் ஓடையைக் கடந்துகொண்டு இருந்தாள்.

ஒரே ஒரு பரிசல் மட்டும் சில மனிதர்களையும், ஆடுகளையும் மற்றும் கோழிகளையும் சுமந்துகொண்டு தள்ளாடித் தள்ளாடி அக்கறையை நோக்கி போய்க்கொண்டு இருந்தது.

ராமசாமியோ குப்பாயிடம், “ஆத்தா, நாமளும் பரிசல போலாம்ல”. உடனே அவள், “இல்ல ராசா மேல் சாதிக்காரங்க பரிசல நாம ஏறக்கூடாது, நம்ம தொட்டாலே வயிவாங்க ராசா”.

உடனே அவனோ குறுக்கு மறுக்காகக் கேள்விகளைத் தொடுத்தான், “ஏன் ஆத்தா, நாம ஆடு கோழியை விட கீழயா? அவங்கள மாரிதான் நமக்கும் ரெண்டு காது, ரெண்டு கண்ணு இருக்குது அப்புறம் என்ன ஆத்தா?, பேச முடியாத ஆடு, கோழி எல்லாம் அவங்க கூட பரிசல போலாம் நம்ம போவ கூடாதா?”

பதில் சொல்ல இயலாமல் கூனி குறுகிப்போனாள் குப்பாயி.

திடீரென பரிசலில் இருந்து ஒரு ஆடு ஓடையில் தவறி விழுந்து தத்தளித்தது.

ராமசாமியோ தொட்டால் வயிவார்களோ என்ற பயத்தில் காப்பாற்றலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தான்.

பரிசலில் இருந்த பெண்களோ, “ஏய், என்ன வேடிக்க பாத்துகிட்டு இருக்கறவன், ஆட்ட தூக்கி பரிசல விடு” எனக் கத்த ஆரம்பித்தார்கள்.

இராமசாமிக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி, பரிசலில் ஏற்றி கொள்வார்கள் என மனம் திளைத்தது. ஒரு வேளை ஆத்தா சொன்னதுதான் தவறோனு உள்ளுணர்வு சொல்லிற்று.

எப்படியாவது ஆட்டை காப்பாற்றி பரிசலில் ஏறிவிடவேண்டும் என உள்ளம் துடித்தது. தன் முழு பலத்தையும் கொண்டு எப்படியோ ஆட்டை காப்பாற்றி பரிசலில் ஏற்றினான்.

ஆட்டின் உரிமைக்கார பெண்ணோ ஒரு நன்றி கூடச் சொல்லாமல், மாறாக ஓடையில் சிறிது நீர் எடுத்து ஆட்டின் மேல் தெளித்தாள். ராமசாமியோ அவள் செய்கையின் பொருள் புரியாமல் விழித்தான்.

பரிசலில் இருந்த அனைவரும் ஒன்றாக “ஏய் ச்சீ பரிசல தொடாத தூர போ” எனக் கத்தினார்கள்.

ராமசாமிக்கோ ஆற்றாமையால் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

ஓடை நீரில் இந்த ஈனப் பிறவியாக்கப்பட்ட குழந்தையின் கண்ணீர் அவன் பிறப்புரிமை இன்மை போலக் காணாமல் போனது.

பா. சிவக்குமார்

Leave a Reply