குடியிருந்த நிலம்

0
133

ரஞ்சிதா, இலங்கை

மணி பத்து ஆகிவிட்டது. “டாங்…டாங்…” என மருதனார் மடம் ஆஞ்சநேயர் கோயில் மணியோசை பக்தர்களை பூஜைக்கு அழைப்புவிடுத்துக்கொண்டிருந்தது. இன்று சனிக்கிழமை – சனநெறிசல் அதிகமாகவே இடைஞ்சலை ஏற்படுத்தியது. ஆஞ்சநேயர் கோயிலில் ஒவ்வொரு சனிக்கிழமையும் அன்னதானம் வழங்குவதால் பக்தர்கள் மட்டுமல்ல, பிச்சைக்காரர்கள், கைவிடப்பட்ட அங்கவீனர்கள், முதியோர்கள் என அனைவரும் இன்று கோயிலைச் சூழ்ந்துக்கொண்டனர்.

வானளவு உயர்ந்து நிற்கும் ஆஞ்சநேயரை வான்நோக்கி அண்ணார்ந்து பார்க்கமுடியாமல் சூரியன் கண்களை கட்டுப்படுத்திக்கொண்டிருந்தான். “இண்டைக்கு ஒரு வெற்றிலை மாலையை போட்டுவிட்டுத்தான் போகவேணும். இல்லாட்டி அம்மா கோவிச்சுப்போடுவா” என நினைத்துக்கொண்டு கோயிலின் பக்கத்தில் உள்ள சந்தைக்குள் புகுந்துக்கொண்டேன். ஒரே சத்தம். “தம்பி, இங்க வாங்கோ நல்ல மாம்பழம் நான்கு நூறு ரூபா, தம்பி இஞ்சாலை வந்து கரும்பு வாங்குங்கோ ஒரு கட்டு ஐம்பது ரூபா, குறைச்சுப் போடலாம் வாங்கோ” இந்த இறைச்சலுக்கு மத்தியில் என்னை விடுவித்துக்கொண்டு வெற்றிலைகள் விற்கப்படும் இடத்திற்குள் நுழைந்துகொண்டேன். ஒருவாறு சனநெறிசல்களை வெற்றிகொண்டு நூற்றியெட்டு வெற்றிலைகள் கோர்க்கப்பட்ட மாலையுடன் சந்தையை விட்டு வெளியே வந்து சேர்ந்துவிட்டேன்.

பூஜை முடிய பன்னிரண்டு மணி ஆகிவிட்டது. சந்தைக்கு ‘ஒப்பசீட்டாக’ இருந்த ‘பஸ் ஹோல்’டில் வந்து அமர்ந்துக்கொண்டேன். ஒரே களைப்பு. வெயில் கொழுத்திக்கொண்டிருந்தது. யாழ்ப்பாண வெயில் என்றால் சொல்லவா வேண்டும். அப்பர் சுவாமிகள் “மூசு வண்டரை பொய்கையை போன்றது” என பாடிய தேவார வரிகளே என் நினைவை உரசிச் சென்றன. சுண்ணாம்பு அறைக்குள் இருந்த வெப்பம்கூட இறைவனை நினைக்க குளிர்ச்சியான பொய்கையில் இருந்தது போல அப்பருக்கே இருந்தது. எனக்கும் அப்படியே என என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.

யாழ்ப்பாணம் போகும் பஸ் வந்தவுடன் ‘டவுனுக்குச் சென்று பின்னர் பளைக்குச் செல்ல வேண்டும். போனால்தான் திங்கட்கிழமை அந்த காரியத்தை முடிக்கலாம். இன்றுகூட கோயிலுக்கு வந்ததன் நோக்கம் அந்த காரியம் வெற்றியளிக்க வேண்டும் என்பதற்கான கோரிக்கையை இறைவனிடம் முன்வைப்பதற்காகவே.

“என்னப்பா ராசு, பெரிய யோசணைப் போல கிடக்கு” என்னுடைய முதுகைத் தட்டியவாறு எனக்குப் பின்னால் தம்பியண்ணை நின்றுக்கொண்டிருந்தார்.

“என்ன அண்ணை இந்த பக்கம் செய்யிறியல்! எப்ப ஊராலை இருந்து வந்தியல்?”

“நேத்துத்தானப்பா வந்தனான். அம்மாவுக்கு உடம்பு இப்ப கொஞ்சம் தேரிட்டு. மனுசிக்கு வயசும் ஏறிப்போச்சு, அதுதான் என்ட மனுசிய விட்டுப்போட்டு வந்தனான், இண்டைக்கு பனங்கிழங்கு ஐம்பது கட்டு கொண்டு வந்தன். சந்தைக்குப் போடவேணும், அதை விடு உன்ட சோழி என்ன ஆச்சு? உங்கட பனங்காணிக்கு அரசாங்கத்துல என்ன சொல்றினம்?”

“அதுதான் அண்ணை, திங்கட்கிழமை ஒருக்கா பனை அபிவிருத்தி சபைக்குப் போகவேணும், வரச்சொல்லி ‘லெட்டர்’ அனுப்பியிருக்கினம். ஐந்து வருஷ போராட்டம், ம், என்ன தீர்வுன்னுதான் தெரியல” என்று கூறும்போதே என்னுடைய தொண்டை ஒரு நிமிடம் அடைத்துக்கொண்டது. வார்த்தைகள் வெளிவர மறுத்தன.

“விட்டுடாதையடா. நம்ம பண்பாடு, பாரம்பரியத்தை வெளிப்படுத்துறதுல பனைக்கு முதல் இடம். கற்பகத் தருன்னு சும்மா சொல்லிப் போட்டுப் போகலை நம்மட ஆட்கள். நம்ம நாட்டுல அரசாங்கம் ஒழுங்கில்ல. பொருளாதாரமும் தலைகீழா போச்சுது. நமக்கிட்ட இருந்த காணி பூமி எல்லாம் இராணுவம் எடுத்துப்போட்டுது. மரங்களை எல்லாம் வெட்டி நாற்காலி, மேசைன்னு அலங்காரப்பொருட்களையும் செய்து வைச்சிருகானுக, இப்பதா காணிகளை விடுவிக்கப் போயினமே!”

தம்பியண்ணை எங்கள் அப்பாவின் நெருங்கிய நண்பர். ஒரு காலத்தில் எங்கள் பனங்காணியை குத்தகை வாங்கி ஆறு மாதம் பனை உற்பத்திகளைச் செய்தவர். அவருடைய இரண்டு குமருகளையும் கரை சேர்த்தது எங்கள் பனங்கூடல் காணிதான் என்பது ஊருக்கேத் தெரியும். தற்பொழுது பத்து பனை மரங்களை வைத்து சீவியம் நடத்துகின்றார்.

இருவரும் சம்பாசித்துக் கொண்டிருக்கும் போதே யாழ்ப்பாணம் போகும் ‘மினி பஸ்’ ஒன்று சனத் திரளுடன் சரிந்து விழப்போகுமாறு வந்து நின்றது. அடிப்பட்டும், மிதிப்பட்டும் இருவரும் ஆளுக்கொரு ‘சீட்டில்’ அமர்ந்து கொண்டோம். வியர்வை மனமும், டீசல் மனமும் குடலைப் பிரட்டிக்கொண்டு வந்தன. ஒருவாரு ஜன்னல் பக்கம் திரும்பவே காற்று மெதுவாக வியர்வையை விசிறிவிட்டு உடம்பை ஸ்பரிசித்தது. “ ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே, பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே.” என்ற பாடல் ‘பஸ்ஸி’ல் பொருத்தப்பட்டிருந்த ‘ரேடியோ’வில் பாடிக்கொண்டிருக்க, மனமும் அமைதி கொண்டது. எனது எண்ண அலைகளும் பஸ் வண்டியின் சில்லுகளைப் போல கடந்த காலத்தை நோக்கி ஓடத்தொடங்கின.
பளை எங்கள் ஊர். யுத்த வடுக்களும் வரட்சியும், இணைந்து காடாக காட்சியளித்தாலும், ஆங்காங்கு இருந்த பனை மரங்களே ஊருக்கு வாழ்வாதாரமாகியது ஆறுதலும் அளித்தது. விழுந்து கிடக்கும் பனங்காய்களில் அணில்கள் வந்து விளையாடுவதும், காகங்கள் அவற்றை விரட்டி பனம் பாணிகளை உண்பதுமாக காட்சியளிக்கும், எங்கள் முற்றம். என்னுடைய அப்பப்பாவிற்கு நாற்பது ஏக்கர் பனங்கூடல் காணியொன்று இருந்தது. அந்த காணி ஒன்று மட்டுமே உயிர்ப்பாகவும், முதுசொமாகவும் எங்களிடம் இருந்தது. நான், என்னுடைய தங்கை, அப்பா, அம்மா, அப்பப்பா, அம்மம்மா எல்லோரும் அந்த காணியிலேயே குடியிருந்து சீவியம் நடத்தி வந்தோம். வீட்டிற்கு பனையோலைகளே காவல் மதிலாகவும், படலையாகவும் அமைக்கப்பட்டிருந்தன. ஊரில் உள்ள அனைவரின் வீடுகளிலும் பனையோலைகளே பாதுகாப்பு அரண்களாக அமைக்கப்பட்டிருந்தன.

எனக்கு அப்பொழுது பதினைந்து வயது இருக்கும். எங்கள் அப்பப்பா சீவல் தொழிலுக்காக பனைமரம் ஏறும் அழகை பனங்கூடல்களுக்கு இடையில் நின்று பார்த்துக்கொண்டிருப்பேன். கால்களில் தளைநார் மாட்டி, நெஞ்சை மரத்துடன் அணைத்து, இரு கைகளாலும் பனையைத் தழுவி முழத்துக்கு முழம் மேல்நோக்கிப் போகும்போது சில கணங்கள் அச்சத்தால் மனம் அடைப்படுவதும் உண்டு. “விழுந்து விடக்கூடாது முருகா, காப்பாற்று காப்பாற்று” என நல்லூர் முருகனுக்கு வேண்டுதல்களும் தொடங்கிவிடுவதுண்டு.
அப்பப்பா காலையிலும், மாலையிலும் பானையை இடுக்கியும், வரிந்துக்கட்டியும், சீவியும், தட்டியும் சாறு எடுப்பார். மண்முட்டிகளில் சாறு எடுக்கும் முன்னர் பானையின் உட்புறத்தில் சுண்ணாம்பு பூசுவார்.

“ஏன் அப்பப்பா பானைக்குள்ள சுண்ணாம்பு பூசுறியல்? கள் குடிக்கேக்க வாய் வெந்துபோடும். உங்களுக்கு அறிவில்லையே?”

“அடேய் முட்டிக்குள்ள சுண்ணாம்பு பூசினால்தான் புளிப்பு ஏறாமல் இருக்கும். வாயை மூடிக்கொண்டு பேசாமல் இரு”

அப்பப்பா புத்திசாலிதான். நான்தான் பெரிய ‘இன்டலிஜன்ட்’ எண்டு நினைச்சுக்கொண்டு வாய்விட்டுப்போட்டன்.”

நானும் எனது சக நண்பர்களும் விடுமுறை நாட்களில் விளையாடச் செல்லும்போது பனையோலைகளையே துணைக்கு எடுத்துச் செல்வோம். அதில் சிறிய பைகளை பின்னுவோம். பனங்கருப்பட்டி ஊற்றுவதற்காக அவற்றை ஒரு சதம் என விற்று உள்ளோம். ‘பார்ட் டைம் ஜொப்’ ஆக இதனை செய்வது எங்களுக்கு அலாதியான இன்பத்தை அள்ளித் தந்தது.

பனையுடன் தொடர்புடைய வேலைகளுக்கு அம்மம்மாவும், அம்மாவும் எங்கள் ஊரில் பெயர் பெற்றவர்கள். கடகம் பின்னுவதற்கு இருவரும் பருத்தித்துறைக்குச் சென்று வருவது வழக்கம். இன்றும் அம்மம்மாவால் பின்னப்பட்ட இரண்டு கடகங்கள் முதுசொமாக அம்மாவால் பேணி காக்கப்பட்டு வருகின்றன. அந்த கடகங்கள் இரண்டு மட்டும்தான் “நாங்கள் பனை பற்றாளர்கள், எங்களிடமும் பனங் காணி இருந்தது” என்பதற்கான ஆதாரம்.

அதிகாலை நான்கு மணிக்கு நானும் எனது தங்கை கனகாம்பியும் பனங்காய்களைப் பொறுக்கவதற்காக போட்டிப்போட்டுக்கொண்டு ஆளுக்கொரு கூடையுடன் தோட்டத்திற்குள் செல்வோம். என்னைவிட பனங்காய்களை வேகமாகப் பொறுக்குவதில் அவளே திறமைசாலி. போட்டியில் தோற்றுவிடக்கூடாது என்பதற்காக திருட்டுத்தனமாக அவளுடைய கூடையில் இருக்கும் பனங்காய்களை எடுத்து என்னுடைய கூடையை நிரப்பிவிட்டு அமைதியாக இருந்துவிடுவதும் உண்டு.

திடீரென நினைவுகளை களைத்த வண்ணம் கண்டக்கடர் “புங்கன்குளம் சந்தி இறக்கம் இருக்கா? அக்கா பின்னால நிற்காம முன்னால வாங்கோ, வாங்கோ, ஐயா வாங்கோ ”

‘டவுண்’ வந்தவுடன் நானும் தம்பியண்ணையும் இறங்கி பளை ஊடாக போகும் கொடிகாமம் பஸ்ஸில் ஏறிக்கொண்டோம். இருவருக்கும் தோதாக இரு இருக்கைகள் அருகருகே இருந்தன, அமர்ந்துக்கொண்டோம். தம்பியண்ணை பழைய படி ஆரம்பித்தார். “ஏன் ராசு உனக்குத் தெரியுமே பனங்கிழங்கு, ஒடியல் எல்லாம் விலையேறிப் போச்சு, கிலோ முந்நூறு ரூபா தேறும், ஒரு துண்டு கிழங்கு சாப்பிடனும்னா காசுதானப்பா வேணும், முன்ன எல்லாம் கிழங்குகள் எங்களிடம் ஏறாளம் இருந்தன, நம்ம வாழ்க்கை ஓடிச்சு, நம்மக்கிட்ட வந்து சாப்பிட்டினம். ம்…ம்… இப்ப…?! பார்த்தியா அப்பு நிலைமைய…!”

தம்பியண்ணை சொல்வது வாஸ்துவம்தான். என்ன செய்வதென்று எனக்கும் ஒன்றும் புரியவில்லை. நான் ஒரு பட்டதாரி. பட்டம் பெற்று முடித்தவுடன் வேலை கிடைப்பது சுலபம் அல்ல. சுயதொழில் முயற்சியில் ஈடுபடலாம் என நினைத்தாலும் பணக் கஷ்டம் வீட்டில் தலைவிரித்தாடியது. அம்மாவின் உதவியுடனேயே பல்கலைக்கழக கல்வியை முடித்தேன். பக்கத்துவீட்டு கலா அக்காவின் காணியில் கச்சான் விதைப்பதற்கும், வெங்காயம் வெட்டுவதற்கும் அம்மா சென்று அதன் மூலம் கிடைத்த வருமானத்திலும், மகாபொல புலமைப்பிரிசிலில் கிடைத்த சிறுத்தொகையிலும், விடுமுறை நாட்களில் பிரத்தியேக வகுப்புக்கள் நடத்தியும் பெறப்பட்ட பணம் எனது கல்வி நடவடிக்கைகளுக்கு துணைபுரிந்தது. அடுத்த வருடம் எனது தங்கை கனகாம்பியும் ஆசிரியர் கலாசாலைக்குச் சென்றுவிடுவாள். அவளது கல்வி பொறுப்பை அம்மாவிடமிருந்து பெற்றுக்கொண்டு நானே சுமக்கவேண்டும் என நினைக்கிறேன். எனது அம்மாவிற்கு விவசாயம் செய்வதில் மிகவும் விருப்பம். எங்களுடைய பனங்காணி இருந்திருந்தால் அதை வைத்து பிழைப்பு நடத்தியிருக்கலாம்” என அம்மா அடிக்கடி கவலை கொள்வதும் உண்டு. இதற்கு விடிவு பிறக்க வேண்டும் என்பது எங்களுக்கு மட்டுமல்ல ஊரில் உள்ள அனைவரின் அபிலாஷையுமாகும்.

பனங்கிழங்குகளை உருவாக்குவது எப்படி என்பதை முதன் முதல் எங்கள் அம்மம்மாவிடம் இருந்தே கற்றுக்கொண்டேன். தம்பியண்ணை பனங்கிழங்குகள் பற்றி கூறும்போது அம்மம்மாவின் நினைவுகள் என்னை ஆக்கிரமித்துக்கொண்டன. பள்ளிப்பாடம் படித்ததைவிட பனை பாடம் படித்ததுதான் அதிகம். அன்று ஒரு நாள் பாடசாலையில் கமலா ‘ரீச்சர்’ எங்களிடம் “பிள்ளையள் எங்களுடைய பிரதேசப் பண்பாட்டை வெளிப்படுத்துவன எவையெவை எங்கே ஒராள் சொல்லுங்கோ?”

“ரீச்சர் யாழ்ப்பாண டவுன்தானே?” என ராமு கூறினான். எல்லோரும் “கொல்லென” சிரித்தனர். ரீச்சருக்கு கோபம் வந்துவிட்டது. பாடம் முடிந்துவிட்டதை மணியோசை அறிவித்தபோது ரீச்சரும் சென்றுவிட்டார்.
வீட்டிற்கு வந்தவுடன் அம்மம்மாவிடம் ரீச்சர் வினவிய வினாவிற்கான விடையை கேட்டேன். பதிலுக்கு அம்மம்மா, “அட முட்டாப்பயல ஏன் உனக்கு இதுகூடவா தெரியாமல் போச்சுது? நம்ம பனங்கூடல சொல்லியிருக்கலாம்தானே? வட பகுதி மக்களின்ற பாண்பாட்டில வேர்விட்டது பனைதானடா, பனங்காய், பனாட்டு, பனங்கற்கண்டு, கடகம், பாய், கூடை, கொட்டப்பெட்டின்னு நம்ம வீட்டுல இருக்கிற எல்லாம் பனைதானடா”

“ஆமாம் ஆமாம் அம்மம்மா சரியா சொல்லிப் போட்டியல் ‘ஆன்சரை’, ‘ஓகே ரைட், நாளைக்கு முதல் ஆளா ‘ரீச்சர்’ட்ட இதை சொல்லிப்போட வேணும். ஏன் அம்மம்மா எனக்கு ஒரு ‘டவுட்’ சொல்லுறியலே?”

“அப்பு உன்ட ‘இங்கிலிஷ்’, ‘இந்தி’ எல்லாம் அம்மம்மாவுக்குத் தெரியாது. கேள்விய தெளிவா கேளு சொல்றேன்” அம்மம்மா கிண்டலாக சொல்லிய வார்த்தைகளை கேட்டு மனதிற்குள் சிரித்துக்கொண்டேன். மீண்டும் அம்மம்மாவிடம் “பனங்கிழங்கு எப்படி செய்யிறது? சொல்லுங்கோ கேட்போம்” என கேட்டேன்.

“அதுவா அப்பு… ம்…ம்… பனங்கிழங்கு பாத்திப்போட்டு கிழங்கு எடுக்கவேணும் என்டால் முதலில் பனம் விதைகளை தனியாக பிரித்து எடுக்கவேணும். பேந்து ஒரு வாரம் அதை நிழலில் காயப்போட வேணும். நிலத்தில ஆறு அடி நீளமும் மூன்று அடி அகலமும் கொண்ட பாத்திகள் பிடித்து அதிலை விதையின்ற மேல்புறம் வானத்தை பார்த்து இருக்குமாறு நெருக்கமாக விதைக்க வேணும். குழிகளில் செம்மண்ணையும் மணலையும் கலந்து அதனுடன் எரு கலந்து போட்டால் கிழங்கு பெரியதாக கிடைக்கும். விதைத்தாலும் தண்ணீர் தெளிக்க வேணும். வாரம் ஒரு முறை தண்ணீர் தெளிக்க வேணும். எழுபது நாட்களில் கிழங்கு வளர்ந்து போடும்.”

“ஏன் அம்மம்மா பாத்தியைச் சுற்றி அப்பப்பா முள் போடுறவர்?”

“அதுவா? கோழிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்குத்தான் அப்பிடி செய்யிறவர்”

எங்களுடைய பனங்கூடலின் பிறப்புக்கும் ஒரு வரலாறு உண்டு. வெறும் இரண்டு பனை மரங்கள் இருந்த காணியில் நூறு மரங்கள் பெருகின. பனங்காய்கள் பழுத்து கீழே விழுவதும் அவை உருண்டு சென்று வேரிடத்தில் வளர்வதும் விலங்குகளும் பனம் பாணியை சாப்பிட்டுவிட்டு பனங்கொட்டைகளை போட்டுவிட்டு போவதும் பின் அவை மரங்களாக வளர்வதும் என நடைபெற்ற செயற்பாடுகளின் விளைவே எங்கள் பனங்கூடல். இயற்கையாக வளர்ந்த பனங்கூடல்களில் பெற்ற பயன் ஏராளம்.

‘பஸ்’ உருண்டு உருண்டு தற்பொழுது சாவகச்சேரியை வந்தடைந்தது. தம்பியண்ணை ஆழ்ந்த நித்திரையில் இருக்கின்றார். “ஐயா பேப்பர் வேணுமா? அண்ணா பேப்பர் வேணுமா? வலம்புரி, உதயன் இருக்கு, ஒன்று இருபத்தைந்து ரூபா வாங்குங்கோ” என ஒரு பொடியன் விற்றுக்கொண்டிருந்தான். நானும் ஒரு பேப்பரை வாங்கி படிக்கத்தொடங்கினேன்.

‘பேப்பரின்’ முகப்புச் செய்தியில் பெரிய தலைப்பில் “வட பகுதியில் இராணுவத்தினால் கைப்பெற்றப்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமான பரப்புக்கொண்ட காணிகளை மீண்டும் காணிக்குச் சொந்தமான மக்களிடம் கையளிக்க முடியாமை….??”

பஸ்ஸின் யன்னல்களினூடாக தொலைவில் ஆங்காங்குத் தெரியும் பனை மரங்கள், என்னைவிட்டு இன்னும் பத்து அடி தூரம் சென்று மறைகின்றன. கையில் வைத்திருந்த ஆஞ்சநேயர் கோயில் பிரசாதம் ஜன்னல் காற்றிட்கு இசைந்து சங்கமகாகியது.

Leave a Reply