நீங்காத நினைவுகளில் அப்பு சொன்ன வீடு

ரஞ்சிதா, இலங்கை

0
252

உச்சி வெயில் உடம்பை சுட்டெரித்துக்கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் வாகனங்களின் நெருக்கடியும், பேரிரைச்சலும், புகை நாற்றமும் தலையை சுற்றிக்கொண்டு வந்தது. திரும்பும் திசையெல்லாம் உயர்ந்த கட்டிடங்களும் அதன் ஒவ்வொரு சாளரத்திலும் உடைகளின் ஆக்கிரமிப்பும், விளம்பரப்பலகைகளும் அமைதியை நிலைகுழையச் செய்தது. கொழும்பு போன்ற நகர்புரங்களில் இவ்வாறான காட்சிகள் வழமையானவைதானே. மரம், செடி, கொடி என இயற்கையை சுவைப்பதற்கான எவ்வித அறிகுறியும் தெரியாதவாறு நெருக்கடியான மாடிக்கட்டிடங்களால் நிறைந்திருந்திருந்தது எங்கள் வளவு. முற்றத்தின் அனைத்து பரப்புகளிலும் ‘சிமென்ட்’ இடப்பட்டு நவீன பாணியில் தரை வடிவமைக்கப்பட்டிருந்தது. நிலத்திலுள்ள மண்ணைக் காணவேண்டுமானால் பத்தடித்தள்ளி கொழும்பு – யாழ்ப்பாணப் பிரதான ‘மெயின் ரோட்’டிற்குச் சென்று அதன் இரு மருங்கிலும் நெற்றியில் பூசிக்கொள்ளும் விபூதியின் அளவுதான் தரிசிக்கமுடியும். எங்கள் வீட்டிற்கு முன்னால் மதிலின் ஓரமாக காய்ந்து, கருகிய மாமரம் ஒன்று முதுமையைத் தாங்கிக்கொண்டு தன் ஆயுட்காலத்தின் இறுதி தருணங்களை எண்ணிக்கொண்டிருந்தது. பக்கத்து வீட்டு வீரமாத்தியா ஐயாவின் காணியில் துவாரபாலகர்கள் போல இரண்டு நெல்லிக்காய் மரங்கள் நிழல் பரப்பிக்கொண்டிருந்தன. இதமான காற்று உடலை ஸ்பரிசிக்க வேண்டுமானால் வாடகை வாங்க அங்குதான் நாங்கள் அனைவரும் குடும்பத்துடன் சென்று தங்குமடம் போடுவோம். வீட்டில் ‘ஏ.சி.’ பூட்டப்பட்டிருந்தாலும் அது குளிர்ச்சியை மட்டுமே தந்தது. குளிர்சாதனப்பெட்டிக்குள் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. உடல் நடுநடுங்குகின்றது. இதனாலேயே இயற்கை காற்றை வேண்டி அங்குச் செல்கின்றோம்.

வீரமாத்தியா களனிப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். என்னுடைய பெரிய அத்தையின் மகள் தேவந்தி அதே பல்கலைக்கழகத்தில் கடந்த தை மாதம் உதவி விரிவுரையாளராக நியமனம் பெற்றுக்கொண்டாள். இதனால் வீரமாத்தியாவுடன் எங்கள் குடும்பத்திற்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. நாங்கள் கொழும்பு நகரத்திற்கு வந்து குடியேறிய இந்த பத்து வருடங்களில் நகரத்தின் பரபரப்புக்குள் சிக்குண்டு கல்வி, தொழில், திருமணம் என வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களையும் கடந்துக்கொண்டிருக்கிறோம்.

பக்கத்து வளவு வீரமாத்தியாவின் காணிக்குள் சென்று அதன் மரநிழலின் அரவணைப்பில் சுகம் காண்பதில் எங்கள் அப்புவிற்கு அவ்வளவு விருப்பமில்லை. நாங்கள் அனைவரும் அங்குச் சென்று அமர்ந்து சம்பாசணை செய்தாலும், விளையாடினாலும் அப்பு வரமாட்டார். அப்பப்பாவை செல்லமாக “அப்பு” என்றுதான் நாங்கள் அழைப்போம். அவருக்கு வயது எழுபதாகிறது. அப்பப்பாவின் அப்பா மட்டும்தான் இத்தனை வயது வரைக்கும் எங்களுடன் இருக்கிறார். எங்கள் அப்பு பார்ப்பதற்கு குள்ளமாக இருப்பார். கால் ஒன்று நடக்கமுடியாது. கைத்தடிதான் எப்பொழுதும் அவருக்கு துணையாக நடந்துக்கொண்டிருக்கும். அப்புவிற்கு பேரப்பிள்ளைகள் நாங்கள் ஐந்துபேர். இளைய மகனின் கடைக்குட்டித்தான் நான். நான் என்றால் அப்புவிற்கு ரொம்பவும் பிரியம். மூன்று பெண் பிள்ளைகளுக்கு அடுத்ததாக அப்புவிற்கு என் அப்பா மட்டுமே ஆண் வாரிசு. அப்பாவிற்கு அடுத்து எங்கள் பரம்பரையில் ஒரே ஆண் வாரிசும் நான்தான் என்பதால் எல்லோருக்கும் என் மீது அலாதியான பிரியம் இருக்கின்றது. எனக்கு பெயர் வைத்ததும் அப்புதான். எங்கள் அப்பு “ராசு” என்ற எனது பெயரை சுருக்கமாகவும், செல்லமாகவும் “ராசிக்குட்டி” என்றுதான் கூப்பிடுவார்.

அப்புவிடம் சென்று “வா பக்கத்து வளவு வீரமாத்தியா வீட்டுக்குப் போவோம். இங்கு ஒரே புழுக்கமாக இருக்கிறது” என்றால் அவர் கூறும் ஒரே பதில் “என்ட சொத்த திருப்பித்தாங்கடா” என்ற மந்திரம்தான். சுப்பிரபாதம் போல அப்பு விடிந்தாலும் பொழுது சாய்ந்தாலும் இதையே கூறிக்கொண்டிருப்பார். ஒரு தடவை பெரிய அத்தைக்கு கோபம் வந்து, “அப்பா சும்மா தொனதொனக்காத, கேட்டு கேட்டு புளிச்சுபோச்சு”ன்னு திட்டிவிட்டார்.

அப்புவை திட்டும்போதெல்லாம் நான் அவர் பக்கத்துலேயே சென்று அமர்ந்துக்கொண்டு “நீ ரேடியோவை போடு அப்பு, நாம பழைய ‘சோங்’ கேட்போ” என்று சமாதான வார்த்தைகள் கூறி தலையை தடவி விடுவேன். என்னுடைய அநாயாசமான பேச்சுகளில் சிலவேளை அப்பு மெய்மறந்து போவதும் உண்டு. அப்புவைத் தவிர எங்கள் வீட்டில் அனைவரும் கொழும்பு வாழ்க்கையில் இன்பத்தை கண்டனர். அவரின் ஏக்கங்களை புரிந்துகொள்ளமுடிந்தாலும் அதனை மாற்றியமைக்கும் திராணி என்னிடம் இல்லை. முயற்சியும் இல்லை. வயது சென்றுவிட்டதால் வீட்டில் ஒதுக்கப்பட்டவராகவே அப்பு இருக்கின்றார். நேரத்திற்கு உணவு மட்டும் அவரைத் தேடி வரும். ஆனால் பழைய சோற்றில் நீரை ஊற்றி கஞ்சி குடிப்பார். தன்னுடைய வேலைகளை முடிந்தவரை தானே செய்துகொள்ள முயற்சியும் செய்வார். உதவி தேவைப்பட்டால் நான் பாடசாலை முடிந்து வரும் வரை காத்திருப்பார்.

அன்று சனிக்கிழமை. பௌர்ணமி நாள். பூரணச் சந்திரன் தன் முகத்தின் பிரகாசத்தில் ஒரு பகுதியை எங்கள் முற்றத்திற்கும் வழங்கிக்கொண்டிருந்தான். அப்பு கைத்தடியை “டக், டக்” என ஊன்றிக்கொண்டு கதவருகே வந்து நின்றதை நிலவொளியின் நிழலில் கண்டுவிட்டு திரும்பி பார்த்தேன்.

“ராசிக்குட்டி நல்ல நெலவு வெளிச்சமா இருக்கு. அந்த பிரம்பு நாற்காலிய எடுத்துப் போடு, மனசுக்கு சந்தோசமா இருக்குடா” அப்பு இவ்வாறு கூறிய நாட்கள் மிக மிக அரிது. மகிழ்ச்சியில் எனக்குத் தலைகால் புரியவில்லை. மூங்கிலால் இழைக்கப்பட்ட சாய்நாற்காலியை தடுமாறிக்கொண்டு வந்து முற்றத்தில் போட்டேன். இந்த நாற்காலியின் பிறப்பிற்கு ஒரு வரலாறு உண்டு. முன்பு எங்கள் காணியில் இருந்த மூங்கில் மரங்களை வெட்டி அப்புவே செய்த நாற்காலியாம். அப்பா ஒரு முறை சொன்ன ஞாபகம் இருக்கிறது. ஆச்சிக்காக அப்பு முதன் முதல் செய்த இந்த நாற்காலி அப்பு – ஆச்சியின் காதல் சின்னம் என வீட்டில் எல்லோரும் பேசிக்கொள்வர். அடிக்கடி சின்ன அத்தை ஹாஸ்யமாக “அப்புவின் காதல் சின்னத்தை கவனமாக எடுத்து வை ராசு. இல்லாட்டி அவர் கோவிச்சுக்க போறார்.” என கூறுவார். எனக்கும் சில தருணங்களில் சின்ன அத்தை அப்புவை கிண்டல் செய்யும்போது சிரிப்பு வந்துவிடும். பாவம் அப்பு ஆச்சி இறந்த பின்னர் அவரின் நினைவாக, பொக்கிஷமாக இந்த நாற்காலியை வைத்திருக்கிறார். பழைய பொருட்களை பொன் போல பேணும் பண்பு எங்கள் அப்புவின் ‘ப்லஸ்பொய்ன்ட்’ஆக இருக்கின்றது. இன்றும் ஆய்வாளர்கள் பழைய பொருட்களை கிரமாபுரங்களிலிருந்தும், தெரிந்தவர்களிடமிருந்தும் விலைகொடுத்து வாங்கி வந்து சேமிக்கின்றனர் என்றும் தானும் பழைய பண்பாடுகளைப் பற்றி அறிந்துகொள்வதற்காகவும் விசேடமாக தமிழர் பண்பாடு குறித்து ‘ரிசேர்ச்’ செய்யப்போவதாகவும் விரிவுரையாளர் வீரமாத்தியா கூறியது நினைவில் இருக்கிறது. ஆட்டுக்கல், அம்மி, தூக்குச் சட்டி, பனையோலையால் இழைக்கப்பட்ட கடகம், மூக்குப் பேணி முதலிய பல பொருட்களை அவர் ஒரு அலுமாரியில் பெயர் குறித்து வைத்திருப்பதை அன்று ஒரு நாள் பார்த்தேன்.

“ராசிக்குட்டி நம்ம பழைய வீட்டுக்கு முன்னால இருக்குறமாதிரி உணர்ரேண்டா, அது ஒரு காலம்டா! திரும்பி வருமா அந்த சொர்க்கம்!” அப்பு ஏக்க பெருமூச்சுடன் கடந்தகாலத்திற்குள் சென்றுவிட்டார். எப்படியும் கதையை கூறாமல் நித்திரைக்குச் செல்லமாட்டார். அப்புவின் காலடியிடம் வந்து அமர்ந்துக்கொண்டு “கதையை சொல்லே, ஏன் நிறுத்திட்ட? ‘க்லைமெட்’ நல்லாதானே இருக்கு. சொல்லேன் ‘ப்லீஸ்’ என கெஞ்சுகிறேன். முற்றத்தில் ஒரே நிசப்தம். நிலவு ஒளியில் கலந்து நானும் அப்புவும் மட்டும் எங்கோ பசுமையான ஒரு புது உலகத்தில் இருப்பது போன்ற உணர்வு. அப்பு மீண்டும் தொடர்ந்தார்.

“ராசிக்குட்டி ஒரு காலத்துல நானும் ஒங்க ஆச்சியும் சின்ன அத்த, பெரிய அத்த, ஒங்க அப்பா எல்லாரு பெரிய குடும்பமா பூத்து, காய்ச்சிக் குலுங்குற பெரிய தோட்டத்துல – விசாலமான வீட்டுல வாழ்ந்தோ, எங்க ஊரிலேயே பெரிய வீடு கலையழகோட, அமைதியோட, காத்தோட்டத்தோட இருந்தது நம்ம வீடுதான்டா! வீட்டுக்கு முன்னால ரெண்டு கருத்த கொலம்பான் மாங்கா மரம். முற்றத்து நீட்டுக்கும் தும்பு மாங்கா, விலாட்டு மாங்கா, பத்து தென்னை மரங்கள், ஒரு சீத்தாப் பழ மரமும் இருந்துச்சி. பூஞ்செடிகளுக்கு குறைவே இருக்காது. வீட்டுக்குப் பின்னால குளிக்கிற தொட்டிக்கிட்ட கொய்யா மரம், வாழை மரம், பலா மரம், பெரிய பந்தல் போல தோடம் மரம் ஒண்டும் நிழல் பரப்பி நின்னுச்சி. உங்க அப்பா சின்ன பிள்ளையா இருக்கும்போது அத்தைங்களோட நம்ம வாழைத் தோப்புக்குள்ளதான்டா ஓடிவிளையாடுவான்.”

“என்ன அப்பு சொல்ற! சத்தியமதா சொல்றியா? நம்ம வளவு அப்பிடி இருந்துச்சா? ‘ஒகே’ ‘ஒகே’ வீடு எப்பிடி இருந்துச்சி?

“நம்ம வீடு பெரிய வீடு அந்த வீடு..!” அப்பு அழுகிறார். என்னால் தாங்க முடியவில்லை. “வேண்டாம் அப்பு. கதை சொன்னது போதும். வா வீட்டிற்குள் போவோம்” என்னுடைய பேச்சுக்களைப் பொருட்படுத்தாமல் கண்களைத் துடைத்துக்கொண்டு எங்களுடைய பழைய வீடு பற்றி சொல்கின்றார்.

“பெரிய வீடு. கூரைக்கு ஓடு போட்டிருந்தோம். முன் விறாந்தையில பத்து, பன்னிரெண்டு பேர் தூங்கலாம். நாலு அறைகள் இருந்துச்சி. வெளியில பெரிய திண்ணை ஒண்ணும் கட்டியிருந்தோ. ஒங்க ஆச்சி அந்த திண்ணையிலேயேதான் படுத்துக்கொள்ளும். வீட்டுக்கு முன்னால சின்ன பிள்ளையார் கோயில் கட்டியிருந்தோ. பூசையெல்லாம் வேலா வேலைக்கு நடத்திருவோ. நாய், கோழி, பூனை எல்லாம் வீட்ட சுத்தி திருஞ்சிக்கிட்டு இருக்கு. நம்ம மரங்களில குருவி கூடுகள் கட்டி, முட்டையிட்டு, என்னவொரு அழகுடா. பின்னேரத்துல கிளிகள் மரத்துகளில வந்து தஞ்சம் புகும். ம்…ம்…அமைதி, நிம்மதி, சந்தோசோந்தாண்டா நம்ம வீடு. இயற்கை காற்று எப்பவும் வீட்ட சுற்றி வீசிக்கிட்டே இருக்கும். ஓடியாடி விளையாட, மண் குழைச்சு விளையாட தாராளமா எடம் இருந்துச்சி. எல்லாம் போச்சு, என்ட சொத்தே அந்த வீடுதான். உங்க ஆச்சு செத்துபோனதும், என்ட காலு உடைஞ்சி போனதும், உங்க அப்பா அத்தைங்க கல்யாணம் பண்ணதும் எல்லாம் போச்சு”

ஆச்சி சமைச்சுத்தருவாப் பாரு, அதுதா சாப்பாடு! இப்பவும் எச்சி ஊருது. காலையில பழைய கஞ்சி, பகலில வாழை இலையில மீன், இறைச்சி, முட்டை, கீரை, இப்பதா புதுசா ஒங்க அத்தைகளுக்கு வெளிநாட்டு புருசன்க வந்ததும் பீட்சா, நூட்ல்ஸ் சாப்புடுறாங்க. புது நாகரிகமும் பிறந்துச்சி. ஒங்க பாட்டி தெனமும் இரவு ஒன்பது மணிக்கெல்லாம் திண்ணையில வந்து உட்கார்ந்திருந்து ஒங்க அப்பா, அத்தைங்களுக்கு அல்லி அரசாணி கதை, நல்லத்தங்காள் கதை, விக்ரமாதித்தன் கதை சொல்லும்…ம்…ம்… எல்லாம் போச்சி…கனவா போச்சி”

“அது என்ன அப்பு அல்லி அரசாணி, நல்லத்தங்காள், புதுசா இண்டைக்குதா கேள்விப்படுறேன் போ” அப்பு என்னை முறைத்து பார்த்துவிட்டு “நீங்க எல்லாம் இந்த காலத்து புள்ளைங்க அதுதா பழைய சொத்துக்கள்ட அருமை தெரியாம இருக்கீங்க. இதெல்லாம் வெளங்கப்படுத்த ஏலாது. முடிஞ்சா போயி ஒங்க அத்தைமார்களிட்ட கேளு, வாய் திறக்குறாங்களானு பார்ப்போம்…ம்…” அப்பு மெதுவாக மூங்கில் சாய்நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டார்.

அப்பாவிடம் ஒரு முறை அப்புவின் கோபத்திற்கு என்ன காரணம் என கேட்டபோது எங்களுடைய பழைய வீட்டை விற்றுவிட்டு கொழும்பில் கல்வியைத் தொடரவும் நல்ல வேலை வாய்ப்பைபெற்றுக் கொள்ளவும் குடும்பத்துடன் வந்ததை பற்றி கூறியது இன்னும் எனது நினைவில் நின்றது. கண்டியில் உள்ள தெல்தோட்ட எங்களுடைய ஊர். இயற்கை வளம் கொஞ்சி விளையாடும் அந்த இடத்தில் பரம்பரை பரம்பரையாக எங்களுடைய அப்பு – ஆச்சி அவர்களது பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தனர். காலம் மாறியபோது அப்பு அத்தை, அப்பா ஆகியோரை கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு உயர் கல்வியை பெறுவதற்காக அனுப்பிவைத்தார். கல்வியுடன் காதல் திருமணங்களை அப்புவின் விருப்பத்துடன் செய்துகொண்டனர். இதனால் ஆடம்பர வாழ்வில் ஆசைக்கொண்டு கொழும்பிலேயே தொழில், வாழ்வு என நிரந்தர பதிவை ஏற்படுத்திகொண்டனர். அத்தைகளின் கணவன்மார்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வருவது, அங்கு தொழில் செய்வது என எங்களுடைய கிராம வாழ்க்கையில் ஒரு பெரும்மாற்றத்தை ஏற்படுத்தினர். முற்றிலும் கிராம வாழ்விலிருந்து விடுபட்டனர். அப்புவையும் கட்டாயப்படுத்தி இங்கு அழைத்து வந்துவிட்டனர். பெறுமதி மிக்க எங்களுடைய வீட்டை – இயற்கை எழில் கொஞ்சும் வீட்டை விற்க வேண்டாம் என அப்பு போராடியும் எவ்வித பயனும் விளையவில்லையாம். பழைய பொங்கிஷங்களையும் காலங்காலமாக வாழ்ந்த வீட்டையும் சுற்றத்தாரையும் துறந்து நாகரீக வாழ்வு வாழ நகரத்திற்குள் ஏன் வந்தோம் என எனக்கு வெறுப்பாக இப்பொழுது உள்ளது. அப்பா தன்னுடைய சிறுவயதில் விளையாடிய விளையாட்டு, ஆச்சியிடம் கேட்ட கதைகள், வீட்டுத்தோட்டம், இயற்கை காற்று எதுவும் எங்களுக்கு இப்போது இல்லையே. தரம் பத்தில் கல்விக் கற்றுக்கொண்டிருக்கும் எனக்கு பாடசாலையில் கிராம – நகர வாழ்க்கையின் சாதக, பாதகங்களை ஆசிரியர்கள் கற்றத் தந்துள்ளனர். அன்று ஒரு நாள் புவியியல் பாடத்தில் அம்பிகை ‘டீச்சர்’ “சூழல் மாசடைதல்” என்னும் ‘டைட்டிலில்’ படிப்பித்தவை என்னுடைய நினைவுகளில் புகுந்துக்கொண்டன. குறிப்பாக கொழும்பில்தான் கட்டிடங்களுக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன, குப்பைகூலங்கள் முறையற்ற விதத்தில் வீசப்படுகின்றன, வளி மாசடைதல், தூய்மையற்ற காற்றை சுவாசித்தல் எனவும் பல விடயங்களை கற்றுத்தந்தார். அதுமட்டுமல்ல இங்கு வாழும் மக்கள் இயந்திரங்களாக, தன்னை, தனது அமைதியான வாழ்க்கையை மறந்து வாழ்கின்றனர் எனவும் அம்பிகை ஆசிரியர் கூறினார். தொடர் மாடி கட்டிடங்களில் வாழும் கொழும்பு வாழ் மக்களுடன் அவர்களது நாகரிக கடலில் மூழ்கி முத்தெடுக்கமுடியாமல் தவிப்பதை இச்சிறிய வயதில் என்னால் உணரமுடிகின்றது. ஏன் பெரியோர்களுக்கு மட்டும் அது வேதாந்தி கையில் அகப்படாத சித்தாந்தம் போல இருக்கின்றது? காலத்திற்கு ஏற்றவாறு மாறுவது காலத்தின் கட்டாயம். ஆனால் முற்றிலும் பழைமையை மறந்து அதிலிருந்து விடுபடுவது நியாயமற்றதாகவே இருக்கின்றது.

பாடசாலைக்குச் செல்வதற்கு நேரமாகிக்கொண்டிருந்தது. உரிய நேரத்திற்கு எப்பொழுதும் பாடசாலைக்குச் செல்லமுடிவதில்லை. ‘ட்ரவிக்’ பெரிய பிரச்சினை இங்கு. அம்மா காலையிலேயே பரபரப்புடன் ‘நூடில்ஸ்’ செய்துகொண்டு, “ராசு, ‘கம் ஹியர் என்ட் டேக் யுவர் பிரேக் பாஸ்ட்’ என தொனதொனத்தார். இன்னுமொரு பக்கம் என்னுடைய பெரிய அத்தையின் மகள் பூஜா, ‘மம்மி வெயர் ஈஸ் மை ஹிஸ்ட்ரி புக்’ என சத்தம் இட்டுக்கொண்டிருந்தாள். சின்ன அத்தை கனடாவில் இருக்கும் மாமாவுடன் ஏதோ உரையாடிக்கொண்டிருந்தார். தினமும் பாடசாலை நாட்களில் இப்படிதான் எங்கள் வீடு அமளிதுமளியாக இருக்கும். திடீரென இடது பக்கம் திரும்பியபோது சுவரில் ஒரு படம் மாட்டப்பட்டிருந்தது. ஓடிச்சென்று அருகில் பார்த்தபொழுது அன்று அப்பு கூறிய அதே வீடு, இயற்கைச் சூழல், பூக்கள் – அழகான ஒரு வீட்டின் கிராமிய மண்வாசணை வீசும் படம். நேற்று இரவு அப்பா சுவரில் ஆணி அடித்தது இதற்குத்தான் என இப்பொழுது உணர்ந்துக்கொண்டேன். பழைய பொருட்கள் இட்டு வைக்கும் அறையிலிருந்து தூசு துடைத்து அந்த படத்தை அப்பா மாட்டியிருக்கவேண்டும்.

இப்பொழுது எங்களுடைய பழைய வீட்டின் படம் முதுசொமாக நீங்கா நினைவுகளில் முன்விறாந்தையில் உள்ள சுவற்றிட்கு ஏதோ கதை சொல்லிக்கொண்டிருக்கிறது.

ரஞ்சிதா, இலங்கை

Leave a Reply