சாதி அரசியல் எடுபடுமா?

கணேஷன் குருநாதன்

0
108

ஒரே சாதியினரின் வாக்குகளைத் திரட்டி, சாதி அரசியல் செய்து, ஆட்சி அதிகாரத்திற்கு வர இயலுமா? எனில், அது ஒரு போதும் சாத்தியம் இல்லாத விஷயம் என்பதே தமிழக சூழல்.

ஒரே சாதியினர், ஒரே அமைப்பின் கீழ் திரளுவது என்பது நடைமுறையில் சாத்தியமற்ற விஷயம். இத்தனை வருட பாமக அரசியல் இதைத்தான் உணர்த்துகிறது. ஒட்டுமொத்த வன்னியர்களில், இருபது சதவிகிதத்திற்கும் குறைவான வன்னியர்களே பாமகவை ஆதரிக்கின்றனர். இதே போல, ஒட்டுமொத்த பறையர்களும் விசிகவை ஆதரிப்பது இல்லை என்பதும் நிதர்சனம். போலவே, ஒட்டுமொத்த பள்ளர்களும் புதிய தமிழகத்தை ஆதரிப்பது இல்லை. பல முஸ்லிம் கட்சிகள் உள்ளன. ஒப்பீடு அளவில், சாதி ரீதியாக திரள்வதை விட, முஸ்லிம்களால் மத ரீதியாக ஒரே அணியில் திரள்வது எளிதான விஷயம். ஆனால் இப்படி வாய்ப்பிருந்தும், முஸ்லிம்களால் ஒரே அணியில் திரள இயலுவதில்லை என்பதே தமிழக அரசியல்.

தலித்துகள் தலித் கட்சிகளுக்கே வாக்களிக்க வேண்டும் என்கிற அரசியல் குரல் தவறொன்றும் இல்லை. ஆனால், தலித் சாதியினர் ஒரே தலைமையை ஏற்பார்களா என்றால், நிச்சயம் சாத்தியம் இல்லை. மேலும் எந்தெந்த சாதியினர் தலித் என்பதில் தீர்மானம் இல்லை. பறையர்கள் தங்களை தலித்தாக ஏற்கிறார்கள் என்றே நினைக்கிறேன். குறிப்பிட்ட சதவிகித பள்ளர்கள் தங்களை தலித்தாக ஏற்பதில்லை. அருந்ததியினரும் தங்களை தலித்தாக ஏற்பதில்லை என்றே கருதுகிறேன்.

தலித் என்பது சாதியல்ல. அது ஒடுக்கப்பட்டவர்களை குறிக்கிறது என்கிற சித்தாந்தம் புத்தகங்களில் மட்டுமே உண்டு. யதார்த்தத்தில் தலித் என்பது பட்டியல் சமூகங்களை குறிக்கவே பயன்பட்டு வருகின்றது.

ஒப்பீடு அளவில், எளிய தலித் சமூக மக்களின் வாக்குகளை பணம் கொடுத்து வாங்குவது எளிதான விஷயம் என்பதையும் பெரிய கட்சிகள் நிரூபணம் செய்துள்ளனர்.

இப்படி இருந்தும் ஏன் சிலர் சாதி அரசியலை முன்னிறுத்துகிறார்கள் எனில், இதன் மூலமாக மொத்த தமிழக வாக்காளர்களில்; இரண்டில் இருந்து நான்கு சதவிகித வாக்காளர்களை ஈர்க்க இயலும். இதன் வழியாக அந்தந்த கட்சிகளின் தலைவர்களால், அவர்களுக்கு வேண்டியதை பெரிய கட்சிகளிடம் பேரம் பேச இயலும், அவர்களால் வளர இயலும். ஆனால் அந்தந்த சமூகம் வளருமா எனில், அது கேள்விக்குறியே.

ஒரே சாதி என்றில்லாமல், மூன்று நான்கு சாதியினர் பொதுவான கருத்தின் கீழ் அரசியல் செய்தால், அவர்களால் ஆட்சி அதிகாரத்திற்கு வர இயலும்.

சாதி பார்த்து தான் பெரும்பாலும் வாக்களிக்கிறார்கள். ஆனால் ஒரே சாதி கட்சிக்கு வாக்களிப்பது இல்லை. அனைத்து சாதியினருக்கும் இடம் தரும் கட்சியில், தன் சாதிக்காரர் போட்டி இடும் போது, அவரது சாதியினர் அவருக்கு திரளாக வாக்களிக்க விரும்புகின்றனர் என்பதே நிதர்சனம்

ஒரே சாதி அரசியல் என்பது, தோற்றுப்போகிற அரசியல் வழி என்பதே இதுவரையான யதார்த்தம்.

கணேஷன் குருநாதன்

Leave a Reply