தமிழக சட்ட மன்றத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் முண்டியடித்து தயாராகி வருகின்றன. முந்தைய தேர்தல்களைப் போல இல்லாமல், 2021 ஆம் வருடத்திய தேர்தல் களம் மாறுபட்டதாக உள்ளது. தமிழகத்தின் முக்கிய தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தல்.
மூன்றாவது அணி என்பதற்கு தமிழகத்தில் இடம் இருந்ததில்லை. திமுக அல்லது அதிமுக என்பதே மக்களின் விருப்பமாக இருந்துள்ளது. இந்த இரு கட்சிகளுமே, சமூக நீதி, தமிழக நலன் என்கிற வகையில் செயல்படக்கூடியவை தான். ஆனால் அணுகுமுறைகளில் வேறுபட்டவை. இந்த இரண்டில் ஏதேனும் ஒரு கூட்டணிக்கு முழுமையாக ஆதரவு தரும் வகையிலேயே தமிழக மக்கள் வாக்களித்து வந்துள்ளனர். இந்த தேர்தலிலும் இதுவே போக்காக உள்ளது.
எவரும் எதிர்பாராத வகையில் முதலமைச்சர் ஆகிய எடப்பாடியார், தமிழக மக்கள் விரும்பும் வகையில் திறம்பட ஆட்சி செய்து வருகிறார். அதிமுகவின் சாதனைகள் என சொல்லும் வகையில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சமீபத்தில்; கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் தள்ளுபடி, விவசாயிகள், ஏழை எளிய மக்கள் வாங்கிய 6 சவரன் வரையிலான நகை கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழுக்கள் வாங்கிய கடன் தள்ளுபடி என அறிவித்து தமிழக மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளார்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடப்பங்கீடு என்பது; பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் ஆகியோரின் நாற்பதாண்டு கால போராட்டத்திற்குப் பிறகு, மூன்றாக பிரிக்கப்படுள்ளது. 20% தனி பங்கீடு கேட்ட பாமக, 10.5% இடப்பங்கீடை தற்காலிகமாகப் பெற்றுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பிறகுப் பிறகு, இந்த தனிப் பங்கீடானது, அந்தந்த சமூகங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதனால், வன்னிய பகுதியில், அதிமுக மற்றும் பாமக கூட்டணி பலம் அதிகரித்து இருப்பதாக கூறுகின்றனர்.
காவிரி ஆணையம், காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம், மினி கிளினிக், மருத்துவக் கல்லூரி, சட்டக்கல்லூரி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என பல திட்டங்களை அதிமுக அரசு கொண்டு வந்துள்ளது.
கொங்கு பகுதியில், எடப்பாடியாருக்கு தனிப்பட்ட சமூக செல்வாக்கும் கூடி இருப்பதால், அங்கும் அதிமுக கூட்டணி பலத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது. தென் பகுதியில் தினகரனுக்கு செல்வாக்கு இருப்பதால், அந்த பகுதியில் மட்டும் அதிமுகவுக்கு சற்று பின்னடைவு ஏற்படலாம் என கருதுகிறார்கள்.
மறுபக்கம், கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க போராடுகிறது. திமுகவில் ஒரே குடும்ப ஆட்சி நடக்கிறது என்கிற குற்றச்சாட்டு உள்ளது. திமுக கூட்டணி காட்சிகள் அதிருப்தியில் உள்ளன. ஆனால், அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளதால், தமிழகத்தில் பாஜக மீது இருக்கும் அதிருப்தி என்பது தங்களுக்கு உதவும் என திமுக கூட்டணி கட்சிகள் எதிர்பார்கிறார்கள்.
முன்பைவிட, தற்போது தமிழகத்தில் இந்து ஓர்மை என்பது உருவாகி வருகிறது என்பதை எவரும் மறுக்க இயலாது. திமுகவின் போலி மதச்சார்பின்மை என்பதை தமிழக மக்கள் ஏற்கவில்லை. இதனை திமுக உணர்ந்துள்ளதால், ‘முருக கடவுளின் வேல்’ தங்களுக்கும் உரியதே என மேடைகளில் தூக்கிப் பிடிக்கும் நிலைக்கு வந்துள்ளனர்.
திமுக கூட்டணி இரண்டு பிரதான விஷயங்களை நம்புகிறது. தமிழகத்தில் உள்ள பாஜக எதிர்ப்பு நிலை, மத சிறுபான்மையினரின் பெரும்பகுதி ஓட்டுகள். இதனை தாண்டி இவர்களால் வேறெதையும் பெரிதாக முன்னிறுத்த இயலவில்லை.
அதிமுக கூட்டணி என்பது, இதுவரை செய்த மக்கள் சாதனைகள், புதிய ஆளுமையாக உருவெடுத்துள்ள எடப்பாடியார், பாமக மற்றும் பாஜகவின் வாக்கு பலம், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசுடன் உள்ள இணக்கப்போக்கு ஆகியவை உதவும் என இருக்கிறது. அதிமுக ஆட்சிக்கு எதிராக பெரிய குற்றச்சாட்டுகள் இல்லை.
திமுக கூட்டணி என்பது; காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, விசிக, முலீ, மமக என்பதாக உள்ளது.
அதிமுக கூட்டணி என்பது; பாமக, பாஜக, தமாக என்பதாக உள்ளது.
இந்த தேர்தலில்; வன்னிய பகுதி, கொங்கு பகுதி, தென் பகுதி ஆகியவற்றில் முடிவுகள் வேறுவேறு மாதிரி இருக்கும் என கூறப்படுகிறது. தமிழக அரசியலில் கலக்கப்போவது யார் என்பது தமிழக மக்களின் மனங்களில் மட்டுமே உள்ளது.
மாயன் மெய்யறிவன்
மக்கள் மனங்களில் எடப்பாடியார் நிலைத்துவிட்டார்…