யார் தமிழர்?

கணேஷன் குருநாதன்

0
124

மனப்பூர்வமாக தங்களைத் தமிழர் என உணரும், தான் தமிழன் என பெருமையுடன் கூறும் எவரும் தமிழர்களே. ஆதியில்; எந்த சாதியினர், எந்த மதத்தினர், தமிழ் மொழியை உருவாக்கினார்கள் என ஆதார ரீதியாக எவரும் கூற இயலாது. ஒரு மொழி என்பது பொதுவானது. அதை தங்களது வாழ்க்கைப் பறிமாறுதலுக்கு எவரும் ஏற்றுக்கொள்ளலாம். மதம் என்பதை விரும்பினால் மாற்றிக்கொள்ள முடிவதைப்போல, விரும்பும் மொழிக்கும் எவராலும் மாறிக்கொள்ள இயலும். தமிழ் மொழிக்கும் மற்ற மொழிகளுக்கும் உள்ள வேறுபாடு யாதெனில்; நாம் ஆங்கிலம் கற்றாலும், நம்மால் ஆங்கிலேயராக உணர இயலாது. ஆங்கிலேயர்கள் நம்மை ஆங்கிலேயராக ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். இதற்கு காரணம், நாம் பண்பாட்டு ரீதியில், அடிப்படையிலேயே வேறுபாடு உடையவர்களாக இருக்கிறோம். ஆனால், இந்திய துணைக்கண்டத்தில் ஒரே மாதிரியான பண்பாடு கொண்டோர், தமிழ் மொழியைக் கற்று, தங்களைத் தமிழர்களாக உணர இயலும். இவ்வாறு தங்களைத் தமிழர்களாக உணர்பவர்கள் அனைவரும் தமிழர்களே.

உலகில், தமிழ் மொழிக்குத்தான் நான் அறிந்தவரை தாய்மைக் குணம் உள்ளது. எவர் தங்களைத் தமிழராக உணர்ந்தாலும், அவர்களை அன்புடன் அரவணைத்து, தன் பிள்ளைகளாக ஏற்றுக்கொள்வதில், தமிழன்னைக்கு நிகர் வேறு எந்த மொழிகளும் இல்லை.

என்னைப்பொருத்தவரை; மொழியை முன்னிருத்தி, சமூகநீதியை ஏற்படுத்த இயலாது. மொழி அனைவருக்குமானது. அது பொதுவானது.

அரசியலில், வாழ்வாதார உரிமைகளில், மொழியை வைத்து சரியான பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்த இயலாது. இந்தியா போன்ற நாட்டில்; ஒவ்வொரு சாதியினரின் எண்ணிக்கை, ஒவ்வொரு மதத்தினரின் எண்ணிக்கை சார்ந்து மட்டுமே, அவர்களுக்கான சரியான பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்த இயலும்.

“கம்யூனிசஸம், மதச்சார்பின்மை, இந்துத்துவம், திராவிடம், தலித்தியம், தமிழ்த்தேசியம்” என எந்த வகை அரசியலை செய்தாலும்; அதற்குள், ஒவ்வொரு சாதியினருக்கும், ஒவ்வொரு மதத்தினருக்கும், அவர்களது சமூகத் திரளின் எண்ணிக்கை சார்ந்து, பிரதிநிதித்துவம் அளித்தால் மட்டுமே, அதனை மக்களுக்கான அரசியல், சமூக நீதிக்கான அரசியல் எனக் கூற இயலும்.

என்னைப் பொருத்தவரை; இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தமிழ் மொழியைக் கற்றுக்கொடுத்து, அனைவரையும் தமிழராக ஏற்கும் மனோபாவத்தையும், தொலைநோக்குப் சிந்தனைகளையும், தமிழர்கள் கொள்கையாக கொண்டிருக்கவேண்டும்.

கணேஷன் குருநாதன்

குறிப்பு: இந்த கட்டுரையைப் போன்ற ஆக்கச்செழுமையான படைப்புகளைத் தொடர்ந்து படிக்க, தமிழ்விங் தளத்தின் Facebook மற்றும் Twitter பக்கங்களை லைக் செய்யுங்கள். விரைவில் பயனுள்ள காணொளிகளை தமிழ்விங் தளம் வெளியிட இருப்பதால், இதன் YouTube பக்கத்திலும் சப்ஸ்கிரைப் செய்து உங்களது ஆதரவினை நல்குங்கள். உங்களது தொடர்ந்த ஆதரவானது, தமிழ்விங் தளத்தில் பல நல்ல படைப்புகள் வெளிவர உதவும். மிக்க நன்றி.

Leave a Reply