புதிய நம்பிக்கையும் பொன் விஜயனும்

1
330

கணேஷன் குருநாதன்

எழுத்தை மட்டும் நம்பி வாழ்க்கை நடத்துவதென்பது, தனக்குத்தானே சவக்குழியை தோண்டிக்கொள்கிற பிரியவதம் நிறைந்த வாழ்க்கை முறை.

என்பதுகளின் இறுதியில், மாதம் ஐந்நூறு ரூபாய் இருந்தால் போதும், வாழ்க்கையை எந்த சங்கடமும் இன்றி கடந்துவிடலாம், என்கிற நம்பிக்கை எனக்கிருந்தது. அது எவ்வளவு தவறான விஷயம் என்பது இன்றைய நிலையில் எவரும் அறியக்கூடியதே. இப்போதெல்லாம், ஒரு மணி நேரத்தைக் கடத்தவே ஐந்நூறு ரூபாய் போதுமானதாக இல்லை.

இலக்கியத்தின் மீதும், புதிய விஷயங்களை அறிவதிலும், என்னையே மீளுருவாக்கம் செய்வதிலும் அதீத ஆர்வம் கொண்ட இளைஞனாக, எண்பதுகளின் இறுதியிலும், தொண்ணூறுகளில் தொடக்கத்திலும், புத்தகங்களுக்குள் வாழ்ந்தேன். அப்போது என்னுடைய ஆகப்பெரிய கனவு என்பது, மாதம் ஐந்நூறு ரூபாய் சம்பாதிப்பதும், அதைக்கொண்டு ஒரு தரமான இலக்கிய சிற்றிதழ் நடத்துவது என்பதுமாகவே இருந்தது. ஆனால், இத்தகைய என் கனவுகளை நான் சந்திக்க நேர்ந்த இலக்கிய மனிதர்களின் வாழ்க்கைமுறை, கூறுபோட்டு என்னை வேறு திசை நோக்கி பயணிக்க செய்யும் என, நான் ஒருபோதும் கற்பனை செய்ததில்லை. அப்படியாக நான் சந்தித்த மனிதர்களில் ஒருவர் பொன் விஜயன்.

தொண்ணூறுகளில், சென்னை வரும்போது, நான் தங்கக்கூடிய இடங்களில் ஒன்று, பொன்விஜயனின் கோடம்பாக்கம் வீடு. முதல் தளத்தில், மொட்டைமாடி அகண்டதாகவும், அறை சிறியதாகவும் உள்ள வீடு. அந்த மொட்டைமாடியில் தங்குவது வழக்கம். அந்த வீடுதான் அவரது அச்சு கோர்ப்பகம் மற்றும் குடியிருப்பு. வாடகை வீடுதான். பிறகு, ஒரு இலக்கிய சிறுபத்திரிகையாளன் சென்னையில் சொந்த வீடா வைத்திருக்க முடியும்.

பொன் விஜயன், ‘புதிய நம்பிக்கை’ இதழின் ஆசிரியர். விடாப்பிடயாக அந்த இதழை தொடர்ந்து நடத்தியவர். அவரது பத்திரிகையில் என் கவிதைகள் வந்திருக்கின்றன. அந்த பழக்கத்தில், அவரிடம் நெய்வேலி நண்பர்கள் சிலர் இணைந்து நடத்திய ‘மீறல்’ இதழ்களை அச்சடித்து தர தந்திருந்தோம். இதன் நிமித்தமாக அவரது வீட்டிற்கு சிலமுறை சென்ற ஞாபகம். பிறகு சென்னை அம்பத்தூரில் வேலைக்கு சேர்ந்த போது, கொரட்டூரில் தங்கினேன். அந்நாட்களில், பொன் விஜயனின் வீட்டிற்கு அடிக்கடி செல்வது வழக்கம்.

பொன்விஜயன், ஜென்னிராம் பிரின்டர்ஸ் என்கிற பெயரில் தான் அச்சுத்தொழில் நடத்திவந்தார். ஜென்னி என்பது அவருடைய மூத்த மகள் பெயர், ராம் என்பது அவருடைய இளைய மகன் பெயர். சில பெண்களை அவருடைய அச்சு கோர்ப்பு பணிக்கு நியமித்திருந்தார். கோர்ப்பு வேலைகள் முடிந்ததும், அந்த ஃபிரேமை சைக்கிளில் கட்டி, கோடம்பாக்கம் பாலத்துக்கு அடியில் இருந்த, சிறிய அச்சகரிடம் தருவார். அங்குதான் அவருடைய புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டன. தற்போது அவரது பிள்ளைகளுக்கு கிட்டதட்ட முப்பது வயது வரை ஆகியிருக்கலாம். எங்கே வசிக்கிறார்கள்? எப்படி இருக்கிறார்கள்? என்ன படித்திருக்கிறார்கள்? என்கிற விபரங்கள் எதுவும் எனக்கு தெரியவில்லை.

எந்த நம்பிக்கையில், புதிய நம்பிக்கை இதழை ஆசிரியராக இருந்து நடத்தினார் என்பது, இப்போது நினைத்துப்பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. நிச்சயமாக அந்த சிற்றிதழ் மூலம் அவருக்கு வருமானம் வந்திருக்காது. ஆனால், தொடர்ந்து நடத்தினார். விக்கிரமாதித்யன் ஆரம்பித்த ‘நவீன கவிதை’ இதழையும், பொன்விஜயன் அச்சிட்ட ஞாபகம். விக்கிரமாதித்யன் விட்ட பிறகு, அந்த இதழுக்கும் ஆசிரியராக இருந்து சில இதழ்களை வெளியிட்டார்.

நான் பார்த்தவரை, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத வழ்க்கைதான் பொன்விஜயனுடையது. இதில், குடும்பத்தை எப்படி நடத்தினார் என்பது பற்றி சொல்ல எதுவுமில்லை. தில்லியில், நான் பணிபுரிந்த போது, பொன்விஜயன் நோய்க்கு ஆளாகி இறந்துவிட்டார் என்று அறிய நேர்ந்தேன். எதுவும் சொல்லவோ, செய்யவோ முடியாத நிலையாக உணர்ந்தேன். அவர் குடும்பம் சொந்த ஊருக்கு திரும்பி சென்று விட்டதாக பிறகு அறிந்தேன்.

வேர்கள் ராமலிங்கம், தனது இலக்கிய புஸ்தக விஸ்தரிப்புகளுக்காக, சென்னையில் ஒருவர் இருந்தால் நல்லது என்கிற வகையில், பொன் விஜயனுக்கு பண உதவிகள் செய்த ஞாபகம். அந்த பணத்தை எல்லாம், புதிய நம்பிக்கை இதழை அச்சடிக்க பொன் விஜயன் பயன்படுத்திக்கொண்டதாக கேள்விப்பட்டேன். இந்த விஷயத்தில், ராமலிங்கத்திற்கு சற்று மன வருத்தம் இருந்ததாகவும் ஞாபகம்.

பொன் விஜயன் கவிதைகள் எழுதியிருக்கிறார். சிறுகதை தொகுப்பும் வெளிவந்த ஞாபகம். என்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் எழுத தொடங்கிய பலருடைய கவிதைகளும், கதைகளும், கட்டுரைகளும் புதிய நம்பிக்கையில் வந்திருக்கின்றன. என்றாலும், இவரைப்பற்றி யாராவது குறிப்பிட்டிருக்கிறார்களா என இணையத்தில் தேடினால், முக்கியமான பதிவுகள் என்று எதுவும் என் கண்ணில் படவில்லை. மிக சில பதிவுகள் மட்டுமே பார்த்தேன்.

“நான் எழுதிய கதைகளில் அதிகமாக பிரபலமானது மாடன் மோட்சம். அது 200 பிரதிகள் அச்சிடப்பட்ட புதியநம்பிக்கை வெளியிட்ட கதை” என்று ஜெயமோகன் தன் இணையபக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

“என் முதல் புத்தகத்தை, பொன் விஜயன்தான் வேர்கள் ராமலிங்கத்துடன் இணைந்து பதிப்பித்தார். அவர் இலக்கியம் மட்டுமன்றி சமூக அரசியல் பார்வையுடன் வெளியிட்ட புதிய நம்பிக்கை இதழையும் பல புத்தகங்களையும் அவரே அச்சுக் கோர்த்தார். தமிழில் சிறு பத்திரிகை நடத்தி இலக்கிய மேம்பாட்டுக்காகத் தன் சொந்த வாழ்க்கையைக் காவு கொடுத்தவர்கள் பட்டியலில் விஜயனுக்கு நிச்சயம் முக்கியமான இடம் உண்டு” என்று ஞாநி தன்னுடைய சைக்கிள் கலாச்சாரம் பற்றிய பகிர்வில் குறிப்பிட்டிருக்கிறார்.

மற்றபடி எந்த பகிர்வும் பொன் விஜயனைப்பற்றி காணக்கிடைக்கவில்லை. இவரது புகைப்படம் கிடைக்குமா என தேடிப்பார்த்தேன் எங்கும் எனக்கு கிடைக்கவில்லை. பிறந்த, இறந்த வருடம் பற்றிய தகவலும் இணையத்தில் என் கண்ணில் படவில்லை. தன் வாழ்வையே இலக்கிய சிறுபத்திரிகை நடத்தி பலி கொடுத்த ஒரு சிறுபத்திரிகையாளனை பற்றிய நம் கவனம் குறைவாகவே இருக்கின்றது.

பொன் விஜயன், தேனி பகுதியை சார்ந்தவர். இயக்குனர் பாரதி ராஜாவின் ’16 வயதினிலே’ ஏற்படுத்திய பாதிப்பால், அதைப்போலவே தானும் இயக்குனராக வேண்டும் என சென்னைக்கு வந்ததாக சொல்லியிருக்கிறார். சென்னைக்கு வந்து, வாய்ப்பு தேடி அலைந்து, உணவகங்களில் சர்வராக வேலை பார்த்த அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்.

சர்வராக இருந்ததைவிட, ஒரு சிறுபத்திரிகையாளனாக இருப்பதால் உண்டாகிற சிறு மகிழ்வே, வறுமையான நாட்களை கடக்க உதவுவதாக சொல்லியிருக்கிறார்.

அவரை சந்தித்த நாட்களில், ராம்ஜி சுவாமிநாதன் என்கிற நண்பர் அவ்வப்போது சிறு அளவில் பண உதவிகள் செய்ததாக குறிப்பிட்ட ஞாபகம் வருகிறது.

அவருடன், கோடம்பாக்கம் ராம் தியேட்டரில் பல திரப்படங்களை இரவுக்காட்சிக்கு சென்று பார்த்திருக்கிறேன். சிறிது நேரம் வறுமை சூழலை மறக்க அது அவருக்கு உதவி இருக்கிறது என இப்போது தோன்றுகிறது. பொன் விஜயனுக்கு மது பழக்கமோ, சிகரெட் பழக்கமோ கிடையாது. பணம் இருந்தால், ஏதாவதொரு ஓட்டலில் நன்கு சாப்பிலாம் வாங்க என கூறி செல்வார்.

நெய்வேலிக்கு வந்தபோது, ஒரு முறை எங்கள் வீட்டிற்கு வந்தார். மதிய உணவு அருந்தினார். எங்கள் வீடும் சிறியதுதான். நீங்களும் என்னைய மாதிரியே பாட்டாளிதான் போலிருக்கு என்றார். ஆம், என்ன செய்ய, இலக்கியத்திற்கும் வறுமைக்கும் தான் உறவு நெருக்கமாக அமைந்துவிடுகிறது போலும்.

பொன் விஜயனின் மனைவி முகம் சுளித்து நான் பார்த்ததில்லை. அவர்கள் வீட்டில் என்ன இருக்கிறதோ அதை எனக்கும் உணவாக பகிர்ந்திருக்கிறார்கள்.

புதிய நம்பிக்கையின் மூலம் அவருக்கு வருமானம் எதுவும் கிடைத்ததாக தெரியவில்லை. ஒவ்வொரு இதழும் 100 பிரதிகள் விற்றிருந்தாலே பெரிய விஷயம் தான். தன்னிடம் வேலை பார்த்த பெண்களுக்கு ஏதேனும் வேலை கொடுக்கவேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து இதழை அச்சடித்தாரோ என்றும் இப்போது தோன்றுகிறது.

இலக்கியம் என்பதை, தமிழ் சூழலில், வார இறுதியில் ஓட்டலுக்குப்போய் சாப்பிடுகிற அளவுக்கு மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும் என்று என்னுள் மாற்றம் ஏற்பட நால்வருடைய வாழ்க்கைப் பார்க்க நேர்ந்ததுதான் காரணம் என்று கருதுகிறேன். ஒருவர் பிரமிள், மற்றொருவர் விக்கிரமாதித்யன், இன்னொருவர் பொன்விஜயன், பிறகு கோபிகிருஷ்ணன். இந்த நால்வரின் பொருளாதார வாழ்க்கை நிலையை ஓரளவு அறிந்ததன் விளைவு, கொஞ்சம் கொஞ்சமாக இலக்கிய விஷயங்களில் இருந்து நான் விடுபடத் தொடங்கினேன். பொருள் தேடி ஓடினேன். ஓரளவாவது சம்பாத்தியம் கிடைத்தபின்பே, இலக்கிய விஷயங்களுக்குள் தலைகாட்டுவது என்று தீர்மானம் எடுத்தேன். அந்த நாட்களில், அதாவது, தொண்ணூறுகளின் தொடக்கத்தில், கோணங்கியும் அவருடைய நண்பர் எஸ். ராமகிருஷ்ணனும் தேசாந்திரிகளாக இருந்ததாக ஞாபகம். இதில், எஸ். ராமகிருஷ்ணன் மட்டும் எழுத்தின் மூலம் எப்படி வாழ்க்கையை வெற்றிகரமாக நகர்த்துவது என்கிற கலையை கற்றுத்தேர்ந்திருப்பதை தற்போது காண முடிகிறது. கோணங்கி பற்றி அதிகம் தெரியவில்லை. எப்போதும் போல, மாஸ் மீடியாவுக்கும் தன் இயக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று இருக்கிறாரோ என்னவோ?

ஒருநாள், பொன்விஜயன் தனக்கு எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி வீட்டில் கொஞ்சம் வேலையிருப்பதாகவும், உடன் வாருங்கள் என்றார். இருவரும் பொன்விஜயனின் சைக்கிளில் போயிருந்தோம். இந்திரா பார்த்தசாரதியின் வீடு கோடம்பாக்கத்தை ஒட்டிய பகுதியில் இருந்தது. ஏரியா பெயர் தற்போது நினைவிலில்லை. இந்திரா பார்த்தசாரதியின் வீடு பெரியது, வசதியானதாக இருந்தது. அவருடைய வசதியான வாழ்க்கை முறையும், பொன்விஜயனின் வாழ்க்கை முறையும், எதை வைத்தாலும் எட்டாத மாதிரி தோன்றியது. பொன் விஜயன் என்னை சம்பிரதாயமாக அறிமுகப்படுத்தினார். அவர்கள் இருவரும் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். விடைபெறும்போது, எப்படி வந்தீர்கள் என்று இந்திரா பார்த்தசாரதி கேட்டார். தம்பி வந்தாரு, அவரோட சைக்கிளில், அப்படியே வந்துவிட்டேன் என்றார் பொன்விஜயன். தன்னுடைய சைக்கிளில் வந்ததை வெளிப்படையாக சொல்ல முடியாத கூச்சம் அவரிடம் இருந்தது. வெளியே வந்ததும் இது பற்றி குறிப்பிட்டு வருந்தினார்.

பொன் விஜயனின் கவிதைகளும், கதைகளும் எவருடைய நினைவிலும் தற்போது இருக்காது என்று தோன்றுகிறது. அவைகள் அந்தளவுக்கு முக்கியமானவை இல்லை போலும். ஆனால், அவரது ‘புதிய நம்பிக்கை’ இதழ் பல எழுத்தாளர்களுக்கு களமாக விளங்கியது. அவரது இலக்கிய பங்களிப்பு, ஒரு சிறுபத்திரிகையாளனாக மிகவும் குறிப்பிடத்தக்கது.

என் நினைவுகளிலிருந்து முடிந்தமட்டிலும் இதை எழுதியிருக்கிறேன். இன்னமும் சிறப்பாக, பொன் விஜயனுடன் பழகியவர்கள் அவரைப்பற்றி பகிரலாம்.

இன்றைய நிலையில் இலக்கிய களம் என்பது வெகுவாக மாறிவிட்டது. பிளாக்குகள், இணையதளம், ஃபேஸ்புக் என ஏராளமான வெளியீட்டு தளங்கள் தற்போது உள்ளது. எவரும் தன் ஆக்கங்களை எளிதில் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். ஆனால், தொண்ணூறுகள் வரை இந்த நிலை இல்லை. காத்திரமான படைப்புகளுக்கு, மாறுபட்ட முயற்சிகளுக்கு சிறுபத்திரிகைகள் மட்டுமே ஆதர்சமாக இருந்தன. இதை அந்த காலகட்டத்தை கடந்த அனைத்து எழுத்தாளர்களும் அறிவார்கள். அந்தவகையில், பொன் விஜயன் ஒரு குறிப்பிடத்தகுந்த வெளியீட்டு களத்தை இந்த இலக்கிய உலகிற்கு அளித்தவர் என்பது, எப்போதும் நினைவில் இருக்கும்.

1 COMMENT

  1. வணக்கம் கணேசன் குருநாதன் சார். .

    பொன் விஜயன் அவர்கள் குறித்த கட்டுரையை வாசித்தேன். அநேகமாக, பொன் விஜயன் குறித்து இணையத்தில் கிடைக்கும் ஒரே கட்டுரை இதுவாகத்தான் இருக்கும்.

    நான் கம்பத்தில் வசிக்கிறேன். நான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் 1995 ஆம் வருடம் இணைந்தேன். தேனி மாவட்ட முன்னணி எழுத்தாளர்கள் சீருடையான், காமுத்துரை, அல்லி உதயன் மூவரும் பொன் விஜயன் எனும் பெயரை பலமுறை சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர் சென்னையிலிருந்து தேனி திரும்பிய பிறகு “புதிய நம்பிக்கை” யை தொடர்ந்து நடத்தியிருக்கிறார். புதிய எழுத்தாளர்கள் பலரை வளர்த்தெடுத்திருக்கிறார். மேற்குறிப்பிட்ட மூவரும் பொன் விஜயன் அவர்களால் ஊக்குவிக்கப்பட்டு, தீவிர இலக்கியத்திற்கு ஈர்க்கப்பட்டவர்கள். 1976 ஆம் ஆண்டு தமுஎச வை தேனி அல்லிநகரம் பகுதியில் உருவாக்கி, அதன் நிர்வாகியாகப் பணியாற்றியிருக்கிறார் பொன் விஜயன். 1990 களின் துவக்கத்தில் உடல்நலக்குறைவால் காலமாகிவிட்டார். அவர் குடும்பம் அல்லிநகரத்தில் வசிக்கிறது.
    என் மின்னஞ்சல். . healerumar@gmail.com

Leave a Reply