தமிழ் வளர்ச்சி, தமிழர் வளர்ச்சி

குணவாசல் தமிழ்நாடன்

0
278

தமிழ் வாழ வேண்டுமென்பது வெறும் ஒரு மாற்று அரசியல் கூற்று அல்ல. ஒரு மொழியை காப்பதானது மனித குலத்தின் ஒரு பகுதி வரலாற்றைக் காப்பதாகும். ஆழ்ந்த மொழி அறிவை ஆராய்ந்தால் இவ்வுண்மையை நாம் அறியலாம். ஒரு மொழியில் ஆளப்படும் சொற்கள் அம்மக்களின் வாழ்வினையும் அறிவியல் அறிவினையும் நிலப்பகுதிகளையும் இன்னும் ஏராளமான மரபினை பிரதிபலிப்பதாக இருக்கக் காணலாம்.

ஒரு மொழி காக்கப்படும்போது உலக மாந்த வரலாற்றின் ஒரு பகுதி காக்கப்படுகின்றது, அவை அழியும் போது அதே வரலாற்றின் ஒரு பகுதி அழிக்கப்படுகின்றது. தமிழ்மொழி காப்பு செல்வாக்குடைய வேற்று அரசியல்வாதிகளுக்கு அரசியலாகவும், உயிர்ப்புடன் போராடும் போராளி இனத்திற்கு என்றென்றும் தேவையான போராட்டமாகவும் மாறிவிட்டது அல்லாமல் மக்கள் மனங்களில் எவ்விதமாதமான மாற்றத்தையும் இன்னும் உருவாக்கவில்லை என்பதே உண்மை.

ஒரு மொழிக்கான உரிமையாளரும் உரிமையோடு கையாளக் கூடியவரும் மக்களே ஆவர், இவர்களிடத்திலே தோன்றாத மாற்றத்தினால் எவ்வித பயனுமில்லை. இன்று வரை மக்கள் மனங்களில் மாற்றம் ஏற்ப்படுத்தக் கூடியதான செயல்பாடுகள் எதுவும் யாராலும் முன்னெடுக்கப்படவில்லை. தமிழ் வளர்ச்சி என்பது தமிழரின் வளர்ச்சியும் ஆகும், தமிழர்களுடன் தோன்றக்கூடிய வளர்ச்சி தமிழிலும் பிரதிபலிக்கும். அதாவது தமிழன் வளராவிட்டால் தமிழ் வளராது. இன்றைய புத்துலகில் நுகர்வுக்கலாச்சாரத்தில் வளர்ச்சி என்பது மனம் மனிதம் என்பதோடு தொடர்பில்லாமலும், பொருளாதாரத்திலும் ஆடம்பரம் அதிகாரம் என்பவற்றிலுமாக அடங்கிவிட்டது.

இந்நிலையில் தமிழ் வளர்ச்சிப் பணிகள் என்பது, அரசியல்வாதிகளின் மேடை முழக்கங்கள் என ஒரு புறம் இருக்க மறுபுறம் இவர்களின் ஆட்சியில் தமிழ் வளரவென ஆக்கப்பூர்வமாக ஒன்றும் செய்வதுவுமில்லை.

தமிழ்த் தேசியவாதிகள் முன் ஒவ்வொரு மணித்துளியிலும் தோன்றும் பிரச்சனைகள் அனைத்தும் போராட்ட முன்னெடுப்புக்களையும் அடிப்படை முதல் முடிவுவரை செயல்பட வேண்டிய கட்டாயமும் ஏற்படுவதாலும், பொருளாதார அளவில் மிகவும் பின்தங்கியுள்ள நிலை, வெகுமக்கள் ஒத்துழைப்பின்மை ஆகிய காரணங்களால் இவர்களால் முழுமையான அளவில் செயல்பட முடிவதில்லை.

இச்சூழ்நிலைகளுக்கு முற்றிலும் வேறுபட்ட நிலையில் இலக்கியவாதிகள் என ஒருபுறமும், ஆய்வாளர்கள் என ஒருபுறமும் தங்கள் அளவில் தோன்றியவற்றை எவ்வித ஒத்துழைப்பும் கட்டுப்பாடுகளும் வரைமுறைகளும் இன்றி செய்துவருகின்றனர். இவை பொதுச்சபைகளின் முன்வைக்கப்படும் போது பெரிதும் சர்ச்சைகளுக்குள்ளாகி நோக்கமும் முடிபும் முறையற்றவகையாகச் சித்தரிக்கப்படும் நிலையே உள்ளது. எனவே இம்முயற்சிகளும் எதிலுமே முழுமையான அளவில் இன்றுவரைத் தோல்வியிலேயே முடிந்துவருவதாகத்தான்
கணக்கில்கொள்ளவியலும்.

எனவே, அனைத்துப் பிரிவினரும் அனைத்து இயக்கங்களும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தத்தமது கருத்துக்களும் இலக்குகளும் செயல்களும் வேறுபட்டாலும், தமிழ் தமிழர் வளர்ச்சி என்ற அளவில் ஒரே முகமாக ஒரே இலக்காக ஒரே கொள்கையுடன் ஒருவராக இருந்து செயல்பட வேண்டிய தருணம் மட்டுமல்ல கட்டாயமும் இன்று நமக்குள்ளது.

இந்த அடிப்படையில் அவசியமானதும் அடிப்படையானதுமான ஒருசில கருத்துக்கள் இங்கே பகிரப்பட்டுள்ளன. இவை மட்டுமே தேவையானது என்பதும் இல்லை, இவை அனைத்துமே தேவையானது என்பதாகவும் கருதவேண்டாம். ஆனால் இவை விவாதிக்கப்பட வேண்டுமென்பதும், தேவையான அனைத்து கருத்துக்களும் உள்ளடக்கிய ஒத்த முடிவு
எட்டப்படவேண்டுமென்பதும் காலத்தின் கட்டாயமாகும்.

அவற்றுள், முதன்மையானதென்பது, தமிழரைத் தமிழர் ஆளவேண்டுமென்பதாகும். இது வெறும் முதலமைச்சர் பதவியைக் குறித்ததன்று. அனைத்துப் பதிவிகளுக்கும் பொருந்தும், அனைத்து நிலைகளிலும், அனைத்துத் துறைகளுக்கும் (அரசு சார்ந்த சாராத) பொருந்தக் கூடியதாகும். தமிழகத்தில் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரோ, வேற்றுநாட்டைச் சார்ந்தவரோ தொழில் தொடங்கினால் கூட அதில் கணிசமான பங்குகளைக் கொண்டவராக தமிழர் இருத்தல் அவசியம். திரைத்துறையில் முதன்மையானவர்களாக தமிழர்களே இருத்தல் அவசியம். இலக்கிய முன்னோடிகளாக தமிழரே அறியப்படல் வேண்டும். இது போன்ற நிலைகளே எங்கும் எதிலும் காணப்படல் வேண்டும்.

தமிழர் நிலங்கள் காப்பாற்றப்பட்டு உழவுத்தொழில் ஊக்குவிக்கப்படல் வேண்டும். தமிழகத்தில் பெருநில முதலாளிகளாகவும், ஆயிரக்கணக்கான காணிகளுக்கு சொந்தக்காரர்களாகவும் தமிழர்கள் இல்லை. வேற்றுமொழி இனத்தவரே உள்ளனர், இவர்களிடம் கூலிகளாக தமிழர்கள் உள்ளனர். தமிழரின் பாரம்பரிய தொழில் அதன் வழிமுறைகளை பின்பற்றவோ காக்கவோ எண்ணம் உடையவர்கள் அல்லர் இவர்கள். இப்புவியை சிதைக்கும் எதையும் எப்பொழுதும் செய்யத்தயங்காதவர்கள் இவர்கள். இவர்களின் போக்கையே பிரதிபலிக்கும் மனநிலைக்குத் தமிழர்கள் தள்ளப்படுகின்றனர். மகாராட்டிரம் போன்ற மாநிலங்களில் வேற்று மாநிலத்தவர்கள் நிலம் வாங்கத் தடையுள்ளது. இது சட்டமாக்கப்பட வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. தமிழர்களின் ஒன்றுமையும் உறுதியான மனமும் இதனை செயல்படுத்தத் தேவையானதாகும். இத்தன்மையிலான முன்னெடுப்புக்களை அனைத்துத் தமிழர்களும் மேற்கொள்ளவேண்டும்.

தமிழர் நிதியம் உருவாக்கப்படல் வேண்டும். சிறுசேமிப்புத் தொடங்கி பெரு முதலீடுகள் வரையிலான தமிழர் பொருளாதாரம் தமிழர்களாலேயே ஆளப்படல்வேண்டும். இன்றைய அளவில் தமிழர்கள் பொருளாதாரத்திலே மிகவும் பின்தங்கிய நிலையிலும், வேற்று மொழி பேசுவோர் பெருமுதலாளிகளாகவும் செல்வந்தர்களாகவும் இருப்பதைக்கான்கின்றோம். இந்நிலை மாறவேண்டும், அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதல்ல இதன் பொருள், நமது முயற்சியால் ஒத்துழைப்பால் ஒருங்கிணைந்த செயல்பாட்டால் நாம் அனைவரைவிடவும் ஓங்கிய நிலை எய்தல் வேண்டும்.

தமிழர் ஊடகம்: தமிழர்களால் தமிழருக்காக செயல்படும் ஊடகங்கள் உருவாக வேண்டும், பெருக வேண்டும். எத்தன்மையிலும் சமரசம் செய்வதோ செல்வாக்கிற்கு உடன்படுதலோக்கூடாது. இன்றைய ஊடகங்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல தமிழ் விரோதப் போக்குகளையும் தமிழர்க்கு எதிரான கருத்துக்களையும் விதைத்து வருகின்றன.

தமிழை தமிழரை மட்டுமே முன்னிறுத்தும் இயக்கங்கள் ஊர்தோறும் தொடங்கப்படல் வேண்டும். இது தமிழர்த் தம்மை விலக்கும் அடிப்படைகள் ஒழிந்து, ஒன்றுபட வழிவகை செய்யும்.

தமிழர்கள் தமக்கே உரித்தானவற்றையும் தேவையானவைகளையும் படிப்பதற்கும் பயில்வதற்குமான கூடங்கள் ஊர்தோறும் உருவாகவேண்டும். இங்கு மொழிப் பயிற்சி, இலக்கிய இலக்கணப் பயிற்சி. தொன்கலை மரபுப் பயிற்சி, சிறுதொழில் பயிற்சிகள் என தேவையான அனைத்தும் கிடைக்கும் வகையிலும்,
கற்போம் கற்பிப்போம் என்ற அடிப்படையில் கற்றறிந்த ஒருவர் பிறருக்கு கட்டணமின்றி கற்றுத்தரும் வகையில் செயல்பட வேண்டும்.

குறைந்த அளவாக மாவட்ட அளவிளாவது தமிழ்மொழிக் காப்பகங்களை உருவாக்க வேண்டும். இங்கு தமிழ் நூல்கள், தொல்பொருட்கள், ஓலைச்சுவடிகள், கல்வெட்டுக்கள், இதழ்கள், ஒலி ஒளிக் கோப்புக்கள், சிற்பங்கள், ஓவியங்கள் என்பன பாதுகாக்கப் படுவதோடு, புதிய படைப்புக்களை ஆராய்ந்து, மொழி இலக்கண அடிப்படையிலும், தமிழர் மரபு அடிப்படையிலும், பிழையில்லாமலும் வெளிவருவதற்கான கட்டுப்பாட்டு அமைப்பும் இயங்குதல் வேண்டும்.

மேற்கூறியவைப் போன்ற அனைத்து வகையான முதன்மைச் செயல்பாட்டுக் காரணிகளும் தமிழர்களிடையே விவாதிக்கப்பட வேண்டும். அனைவரும் ஏற்கத்தக்க முடிபுகள் அறிவிக்கப்பட்டு செயல்களைத் தொடங்க வேண்டும். தமிழர்களே ஒன்றுபடுவோம், தமிழும் தமிழர்களும் வாழ வகை செய்குவோம்.

குணவாசல் தமிழ்நாடன்

Leave a Reply