ஒருகாலத்தில் புகைப்படக் கலை ஓரளவு வசதி படைத்தவர்களுக்கும் அதைத் தொழிலாகக் கொண்டோருக்கு மட்டுமே சாத்தியமாக இருந்தது. முக்கிய காரணம் கேமரா விலை மற்றும் தொழில்நுட்ப வசதிகள் நகர்ப்புறங்களில் மட்டும் இருந்தது. ஆனால் இது கணினி, அலைப்பேசி யுகம்! அனைவரும் படம் பிடிக்க விரும்புகிறவர்கள். ஆனால் நல்ல கேமரா இல்லாமல் வெறும் அலைபேசி மூலம் தரமான படங்கள் எடுக்க முடியுமா? என்கிற கேள்வி எவருக்கும் எழும். நிச்சயமாக மொபைல் போன் கேமரா மூலம் தரமான படங்களை எடுக்க முடியும்.
உலகின் சிறந்த பிரபல புகைப்பட கலைஞர்கள் முதல் புதிதாக எடுக்கத் தொடங்கியிருப்பவர்கள் வரை, பலரும் எதிர்கொள்ளும் ஒரு கேள்வி, அவர்களது நல்லப் படங்களைப் பார்த்ததும் அவர்களது நண்பர்கள், உறவுகள் எனப் பலரும் கேட்பது ‘நல்லாருக்கே, என்ன கேமரா வச்சிருக்கீங்க?’. ஆர்வமும் வெகுளித்தனமும் கலந்த கேள்வி என்றாலும், அவர்களே அறியாமல், உணராமல் படமெடுத்தவரைக் கேவலப்படுத்தும் கேள்வி. நன்றாக சமைத்தவரிடம் என்ன பாத்திரத்தில் சமைத்தீர்கள்?, நன்றாக ஓடுபவரிடம் என்ன ஷூ அணிந்தீர்கள்? என்று கேட்பதற்கு ஒப்பானது. எனில் சிறப்பாக ஒளிப்படம் எடுக்க விலையுயர்ந்த கேமரா தேவையில்லையா? என்றால், அதற்கான பதில், இந்த இரண்டு படங்களும் Galaxy S4 அலைபேசியில் எடுத்தவை தான்.
நன்றாகப் படமெடுக்க என்னவெல்லாம் வேண்டும்? என்பது, ஒருவரின் குணநலன்கள் சார்ந்தது. ஆர்வம், விருப்பம், ரசனை போன்ற அடிப்படைகளைத் தாண்டி பொறுமை தேவை. ஆம் ஒரு படத்தைப் பிடிப்பதற்கு முன்; எங்கிருந்து, எப்படி, எந்த கோணத்தில் எடுத்தால் நன்றாகயிருக்கும் எனச் சிந்திப்பதில் தொடங்கி, பல சமயங்களில் சரியான தருணத்திற்குக் காத்திருத்தல் எனப் பலவற்றிற்கும் பொறுமை மிக அவசியம்.
புகைப்பட நுட்பம் சார்ந்து எனப் பார்த்தால் அதை பொதுவாக இருவழியில் அணுகலாம்.
1) கருவி-கேமரா நுட்பம் மற்றும் துணைக் கருவிகள் (Tripod, filters etc) சார்ந்து, எந்த சந்தர்ப்பங்களில் எதை, எப்படிக் கையாள்வது போன்றவை
2) ஒரு காட்சியை நாம் எப்படிப் பார்க்கிறோம், அணுகுகிறோம் போன்றவை.
இந்த இரண்டாவது வழி முற்றிலும் நம்மைச் சார்ந்தது. சில எளிய நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டால், நாம் அனைவருமே சிறப்பாகப் படங்கள் எடுக்கமுடியும். அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். அடிப்படையில் இக்கலை ஒளி (Light) சம்பந்தப்பட்டது, ஒளிப்படம் என்பது கூட பொருத்தமான பெயர்தான். ஒளியைப் பற்றிய சில அடிப்படைகளை ஓரளவு புரிந்து கொள்வது மிக அவசியம். அதைக் கவனிக்க ஆரம்பித்துவிட்டாலே அது புரியவும் தொடங்கிவிடும். ஐந்தடி இடைவெளியில் அடுத்தடுத்து எடுத்த இவ்விரு படங்களைப் பாருங்கள். ஒரு காட்சியை ஒளி எவ்வளவு மாற்றிவிடுகிறது? வேறுபாடு என்ன, ஏன் என்பது புரிந்திருக்கும். இரண்டாவதில் பிரதிபலிப்பு (Reflection) தவிர்க்கப்பட்டுள்ளது.
ஒளியை, ஒளியும் நிழலும் (Light & Shade) எனப் பிரித்துப் பார்ப்பவர்களும் உண்டு. நிழல் ஒளியின் மற்றொரு பகுதிதான், எனவே ஒளி நிழலையும் உள்ளடக்கியது தான் என்போரும் உண்டு. எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள், நோக்கம் அதனைப் புரிந்து கொள்வதுதான். அதை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பது ஒருவரது அறிதல், புரிதல், ரசனை என பலவற்றால் மாறுபடும்.
சிறந்த ஒளிப்படக்காரர்கள் காலை மற்றும் மாலை நேரத்தை விரும்புவார்கள். காரணம், அந்த பொலிவான பொன்னிறம், காட்சிகள் தெளிவுற எடுக்க ஏதுவான தாழ்வான கோணத்தில் ஒளி, நிழலுருவ (silhouette), படிமவகை (Pattern) பாணி படங்கள் எடுக்க அதிக வாய்ப்பு போன்றவை. உச்சி வெயிலில் வெளிச்ச வேறுபாடுகள் (Contrast) அதிகமாக இருக்கும், அது சில பகுதிகளை இருட்டாக அல்லது அதிகம் வெளுத்தும் காட்சியளிக்க வைத்துவிடும். மனிதர்களை இவ்வேளையில் எடுத்தால், அவர்களது தலை நிழலே அவர்கள் உருவத்தில், குறிப்பாகக் கண்களை இருளாக்கி விடும். மனிதர்களோ, விலங்குகளோ முகம் தெரிய எடுத்தால் அந்த கண்கள் தனி முக்கியத்துவம் பெற்றுவிடும். அதைப் பற்றித் தனி கட்டுரையே எழுதலாம். கீழே, வலப்புற படங்கள் நண்பகல் அல்லது கதிரவன் சற்று மேலேறிவிட்ட ஒளியில் எடுத்தவை, அவைகளில் முகம், கண்கள் நிழலால் மறைக்கப்படுவதைக் காணலாம். வேறு நல்ல ஒளியில் எடுத்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும்.
அதற்காக நன்பகல் பொழுதுகளில் படமெடுக்கக் கூடாது என்பதல்ல, மாறாக ஒளி அமைப்பிற்கேற்ப ஏற்ற காட்சிகளை எடுக்க முற்பட வேண்டுமென்பதே. இவ்விரு படங்களும் அப்படிப்பட்ட ஒளியில் எடுத்ததுதான். தனிப்பட்ட அளவில் நான் இயற்கை ஒளி-வெளிச்சம் சிறந்தது என்பவன், விரும்புபவன். ஆனால் இது ஒருவரது சூழல், தேவைக்கேற்ப மாறுபடலாம். விளம்பரத்துறையில் இருப்பவர்கள் கணிசமாகச் செயற்கை ஒளியைப் பயன்படுத்துவார்கள்.
நீங்களே ஒரு காட்சியை, மனிதரை; காலை, மதியம், மாலை என வெவ்வேறு ஒளியில், நிழலில் படமெடுத்து ஒப்பிட்டுப் பாருங்களேன். அதைவிடச் சிறந்த பயிற்சி வேறேதும் இருக்கமுடியாது. வெவ்வேறு ஒளியில், நிழலில் வண்ணங்கள் எப்படி மாறுபடுகிறது, காட்சியை எப்படி மாற்றுகிறது என்பதைக் கவனியுங்கள். அதை எவ்வாறு கையாள்வது என்பதை கற்றுவிட்டால் நீங்களும் சிறந்த ஒளிப்பதிவாளர்தான். ஒரு பத்து நிமிட இடைவெளியில் ஒரு காட்சி எப்படியெல்லாம் மாறிவிடுகிறது?
மனதைக் கவரும் ஒளிப்படங்கள் எடுக்கும் வழிகள் இவ்வளவு தானா? என்றால், இல்லவே இல்லை. ஒளி ஒரு பகுதிதான். கோணம், காட்சி அமைப்பு (Composition), ஒரு படத்தின் வழியே செய்தி அல்லது கதையைக் கூறுதல் எனப் பல சங்கதிகள் உள்ளன. இந்த கதை சொல்லுதல் செய்தி-பத்திரிகை தொழிலில் உள்ளவர்களுக்கு மிக அவசியம்.
ஆயிரம் வார்த்தைகள் மூலம் சொல்ல விழைவதை, ஒரு தரமான ஒளிப்படம் சொல்லிவிடும் என்பார்கள்.
வியட்நாம் போர் முடிவிற்கு வர, ஒரு ஒளிப்படமும் காரணமாக இருந்தது. “சாலையில் துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினருக்கு மத்தியில், நிர்வாணமாக அழுதபடி ஒரு சிறுமி ஓடிவரும் காட்சி எவரது மனதையும் உலுக்கும்”. Napalm Girl என உலகம் முழுவதும் அறியப்பட்ட அந்த ஒளிப்படம், வியட்நாம் போரின் அவலத்தை, கோரத்தை உலகிற்கு உணர்த்தியது. அந்த ஒளிப் படத்தை எடுத்தவர் நிக் உட்(Nick Ut).
ஆர்வம், விருப்பம், ரசனை ஆகியவை இருந்தால், மொபைல் போன் கேமரா மூலமாகவும் நாம் மனதைக் கவரும் ஒளிப்படங்களை எடுக்கலாம்.
இரா. கார்ல் மார்க்ஸ்
குறிப்பு: இந்த கட்டுரையைப் போன்ற ஆக்கச்செழுமையான படைப்புகளைத் தொடர்ந்து படிக்க, தமிழ்விங் தளத்தின் Facebook மற்றும் Twitter பக்கங்களை லைக் செய்யுங்கள். விரைவில் பயனுள்ள காணொளிகளை தமிழ்விங் தளம் வெளியிட இருப்பதால், இதன் YouTube பக்கத்திலும் சப்ஸ்கிரைப் செய்து உங்களது ஆதரவினை நல்குங்கள். உங்களது தொடர்ந்த ஆதரவானது, தமிழ்விங் தளத்தில் பல நல்ல படைப்புகள் வெளிவர உதவும். மிக்க நன்றி.