உலகில் நிலக்கரி உற்பத்தி செய்யும் முதல் பத்து நாடுகள்; சீனா, அமெரிக்கா, ஆஸ்த்ரேலியா, இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, தென் ஆப்ரிக்கா, ஜெர்மனி, போலந்து, கஸகிஸ்தான்.
இந்தியாவில் நெய்வேலியைப் பொருத்தவரை, வெட்டி எடுக்கப்படுவது சுத்தமான முதல் தர நிலக்கரி அல்ல. இது பழுப்பு நிலக்கரி. வெட்டி எடுத்த பிறகு மேலும் பல பிராஸசிங் செய்தே, இந்த இரண்டாம் தர லிக்னைட்டை உற்பத்தி செய்ய இயலும்.
நெய்வேலி நிலக்கரி உருவான காலத்தில், உலகமயமாக்கல் இல்லை. தற்போதைய உலக திறந்தவெளி பொருளாதார சூழலில், இறக்குமதி ஏற்றுமதி என்பது எளிது.
ஆஸ்த்திரேலியா, இந்தோனேசியா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து முதல் தர நிலக்கரியை இறக்குமதி செய்வதை விட, புதிய நெய்வேலி சுரங்கம் என்பது, பல வகையிலும் அதிக செலவினங்கள் கொண்ட திட்டமாகவே இருக்கும் என்று கருதுகிறேன்.
புதிய நிலக்கரி சுரங்கத்திற்காக, நெய்வேலியைச் சுற்றி உள்ள கிராமங்களின் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை விட, நீண்ட கால அடிப்படையில் மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யலாம்.
நிலப்பரப்பு அதிகமும், நிலக்கரி வளம் அதிகமும் உள்ள ஆஸ்த்ரேலியாவில், கூட்டு ஸ்தாபன அடிப்படையில் இந்திய நிறுவனங்கள் நிலக்கரி உற்பத்தி தொழிற் சாலைகளை அமைக்கலாம். என்எல்சி நிறுவனமும் இது போன்ற நிறுவனங்களை நிலக்கரி அதிகம் உள்ள, உற்பத்தி செலவு குறைவாக உள்ள வெளிநாடுகளில் தொடங்கலாம்.
புதிய தொழிற் சாலை என்பது, நிலம் கையைப் படுத்தப்படும் பகுதியில் உள்ளோருக்கு வேலை வாய்ப்புகளை நேரடியாகவும், மறைமுகவும் அளிக்க வேண்டும். ஆனால், நெய்வேலியை சுற்றி உள்ள கிராமங்களில் நிலம் எடுப்பதன் மூலம், எப்படியும் ஒரு லட்சத்திற்கும் மேலானோர் பாதிக்கப்படுவார்கள். இவ்வளவு பேருக்கும் வேலை வாய்ப்பை நிச்சயமாக என்எல்சி நிறுவனத்தால் தர இயலாது. மேலும் விவசாயம் பாதிக்கப்படும், அது சார்ந்த தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகும்.
ஆகவே, நிலம் கையகப்படுத்த ஆகும் செலவு, இழப்பீடு வழங்கும் செலவு, பாதிக்கப்படும் அனைவருக்கும் வேலைவாய்ப்புத் தர வாய்ப்பின்மை, விவசாய உற்பத்தி பாதிப்பு, அது சார்ந்த தொழில் பாதிப்பு, மக்களின் வாழ்வாதார அழிவு என பல இன்னல்களை, இடையூறுகளை மக்களுக்கு ஏற்படுத்தி, இரண்டாம் தர பழுப்பு நிலக்கரியை உற்பத்தி செய்வதை விட, இதற்கு ஆகும் செலவுகளைக் கொண்டு, வெளிநாட்டில் கூட்டு ஸ்தாபன முறையில் தொழில் தொடங்கி, முதல் தர நிலக்கரியை இறக்குமதி செய்யலாம். இதனால் இந்தியர்களுக்கு கூடுதலான வேலைவாய்ப்பும், தொழில் வாய்ப்பும் உருவாகும்.
மத்திய அரசும், என்எல்சி நிறுவனமும், மாற்று வழிகளில் நிலக்கரி உற்பத்தி செய்யும் வழிகளைப் பற்றி சிந்திக்க வேண்டும். ஏழை விவசாய மக்களை அச்சுறுத்தி நிலம் கையகப்படுத்தக் கூடாது.
கணேஷன் குருநாதன்