யாருக்கு எது மத நூல்?

கணேஷன் குருநாதன்

3
167

நான் ஓர் இந்து என்பதில் இருந்து இதை ஆரம்பிக்கிறேன். இந்து என்று ஓர் மதமே இல்லை என்போரும் உண்டு. கடந்தகால வரலாறு நோக்கில் இப்படியாக சிலர் சொல்வதுண்டு. ஆனால் இன்றைய சர்வதேச அளவில் இந்து என்றொரு மதம் உண்டு. இது பல சிறிய சிறிய மதங்களின் ஓர் பொதுப்பெயர் என்கிற பார்வையும் உண்டு. இன்றைய நிலையில் இந்து மதம் உண்டு. ஆனால் இந்துக்களுக்கென ஒற்றை தலைமை கிடையாது. இப்படியான ஒற்றை தலைமை எப்போதும் இந்துக்களிடையே உருவாகாது. இந்து என்றால் சுதந்திரமான சிந்தனையுடன் தனக்கான இறை தன்மையை அடைய விரும்பும் மக்கள் என்பதே சரியான பொருள். இதனால் தான் இந்து மதத்தில் ஏகப்பட்ட கடவுளர்கள் இருக்கிறார்கள். இன்னும் கூட புதிது புதிதாக பல கடவுளர்கள் காலப்போக்கில் உருவாக்குவார்கள். இந்த பன்மை குணம் தான் இந்து மதத்தின் சிறப்பு.

பகவத் கீதை இந்துக்களின் ஒரே புனித நூல் அல்ல. இன்னும் சொல்லப் போனால் இந்துக்களுக்கென ஒரே ஒரு புனிதநூல் என்று ஒரு நூலும் இல்லவே இல்லை. இப்படி இருக்கவும் இயலாது. பல நூல்கள், பன்மைப் பார்வைகள், அவரவர் உணரும் இறை தன்மைகளுக்கு இடம் அளிப்பதே இந்து மதம்.

மத நூல்கள் என்று எவற்றை ஏற்க வேண்டுமானால், ஒவ்வொருவரது தாய் மொழியில் எழுதப்பட்ட ஆகச் சிறந்த நூல்கள் மட்டுமே, அந்த குறிப்பிட்ட மொழியைச் சார்ந்தவர்களுக்கு மத நூல்களாக இருக்க இயலும். மற்ற மொழிகளில், மற்ற நிலப்பரப்பின் களத்திற்கு ஏற்ப எழுதப்பட்ட எந்த நூல்களும் தமிழ் மக்களுக்கு மத நூல்களாக இருக்க இயலாது என்பதே என் பார்வை.

எனது தமிழ் நிலப்பரப்பை, வேற்று மொழிக்காரன் எழுதிய நூல்களை வைத்து மனிதர்களைப் பிரித்து அரசியல் செய்யவே மற்ற மொழி மத நூல்கள் உதவுகின்றன. வேறு எந்த தேசத்தவனோ அவனுக்காக அவனது மக்களுக்காக எழுதிய மத நூல்களை வைத்துக்கொண்டு, தமிழ் நிலப்பரப்பில் அடித்துக்கொள்வது, தமிழ் மக்களின் அறியாமை என்றே கருதுகிறேன். இதைப் பற்றி இதற்கு மேல் நான் விரிவாக எழுதுவதை விட, நீங்களே சிந்தித்து புரிந்துகொள்ளுங்கள்.

நூல்கள் என்பது எந்தளவிற்கு வலிமையானவை என்பதை புரிந்துகொள்ளுங்கள். ஏதேனும் ஒரு மத நூலை முன் வைத்து, அதற்கு வெவ்வேறு அர்த்தங்களைப் புனைந்து தான், மக்கள் மூளை மழுங்கடிக்கப் படுகிறார்கள். மூல மொழியில் என்ன எழுதப்பட்டுள்ளது என அப்பாவி மக்களால் புரிந்துகொள்ள இயலாது என்பதால், இடையில் புகுந்து பலரும் அவரவருக்கு ஏற்றபடி மொழி பெயர்த்து, அர்த்தம் உருவாக்கி அரசியல் செய்கிறார்கள்.

ஆகவே தான் கூறுகிறேன். அந்தந்த மொழியில் எழுதப்பட்ட சிறந்த நூல்கள் மட்டுமே, அந்தந்த மொழியினரின் மத நெறி நூல்களாக இருக்க இயலும். மற்றவை அரசியல் நூல்கள் மட்டுமே.

தமிழ் மக்களின் வாழ்வையும், எண்ணங்களையும், மனித தன்மைகளையும், இறை நெறியையும், அற நெறியையும், தமிழில் எழுதப்பட்ட நூல்களில் மட்டுமே காண இயலும். இவை தான் தமிழ் பேசுவோரின் எண்ணப் பிரதிபலிப்பாக இருக்க இயலும். நமது மொழியிலேயே இறை நெறி, அறநெறி நூல்கள் அநேகம் இருக்கின்றன. இவை மட்டுமே தமிழ் மக்களின் மத நூல்கள் என்பது எனது பார்வையாக இருக்கின்றது.

கணேஷன் குருநாதன்

3 COMMENTS

  1. இந்து என்றால் சுதந்திரமான சிந்தனையுடன் தனக்கான இறை தன்மையை அடைய விரும்பும் மக்கள் என்பதே சரியான பொருள். அருமை ஐயா.

    • தங்களது மேலான கருத்துக்கு நன்றி. தொடர்ந்து தமிழ்விங்.காம் தளத்தின் ஆக்கங்களைப் படித்து, உங்களது கருத்துக்களைப் பகிருங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Leave a Reply