மருத்துவர் ராமதாஸ் எழுதிய இட ஒதுக்கீடு வரலாறு – ஓர் பார்வை

குரு கோபாலகிருஷ்ணன்

0
3037

முகநூலில் பாமக நிறுவனத்தலைவர் திரு. ச. ராமதாஸ் அவர்களால் எழுதப்பட்ட ”சுக்கா, மிளகா, சமூகநீதி?” என்ற தொடர் ஓர் வரலாற்று ஆவணம். இட ஒதுக்கீடு பெற எடுத்துக்கொண்ட முயற்சிகள் மற்றும் இதற்குப் பாடுபட்டவர்கள் பற்றிய அறியத் தகவல்களை 51 அத்தியாயங்களில் பதிவுசெய்துள்ளார்.

தமிழகத்தில் 100% இட ஒதுக்கீடு நடைமுறை இந்தியச் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இருந்தது தொடங்கி, தற்காலத்தில் ஓபிசி-களுடைய 27% இட ஒதுக்கீடு மற்றும் வன்னியர்களுக்குக் கிடைக்கவேண்டிய சமூகநீதி வரை பல்வேறு விபரங்களை விரிவாக எழுதியுள்ளார்.

10(3) உட்பிரிவில் ‘அம்பேத்கர்’ சேர்த்த ‘பிற்படுத்தப்பட்ட’ என்ற அந்த ஒற்றை வார்த்தைதான் அதிசயத்தை நிகழ்த்தியது, அது இந்தியாவில் சமூகநீதி கிடைக்க முக்கியமானது என்ற தகவலிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிற்காக ‘அய்யா வே. ஆனைமுத்து’ அவர்களும் ராம் அவதேஷ் சிங் அவர்களும் மேற்கொண்ட அளப்பரிய உழைப்பைப் பதிவு செய்திருக்கின்றார்.

அதிகாரம் படைத்தோர் வரலாற்றை தங்களின் புகழ்பாடும் விதமாகத் திரித்துவிடுவார்கள், அது ‘மண்டல் கமிஷன்’ அறிக்கையைத் தாக்கல் செய்ததிலிருந்து அதைச் செயல்படுத்தும்வரை பாடுபட்ட ‘வே.ஆனைமுத்து’ மற்றும் ‘ராம் அவதேஷ் சிங்’ ஆகியோரின் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளதை அறியமுடிகின்றது.

காகா கலேல்கர் தலைமையிலான முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கையை நடைமுறைப்படுத்தாமல் அதைக் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்தார் பண்டித நேரு. அறிக்கையை தன் கையில் வாங்கியவுடனே கலேல்கரிடம், நேரு ஒரு கேள்வி கேட்டார்: ‘’நீங்கள் இந்த அறிக்கையில் ஏழை பிராமணர் வகுப்பு எதையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இருக்கிறீர்களா? என்பது தான் அந்த கேள்வி. கலேல்கர் நேருவிடம், ‘‘இது பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் ஆணையம். அதனால் பிராமணர்களைச் சேர்க்கவில்லை. அது இந்த ஆணையத்தின் பணி வரம்புக்குள் வரவில்லை’’ என்று கூறினார்.

பிராமணர்களைச் சேர்க்கவில்லை என்று கலேல்கர் சொன்னதைக் கேட்டு ஆத்திரமடைந்த பிரதமர் நேரு அந்த அறிக்கையைத் தூக்கி எறிந்தார்.

காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமைகள் (ஆட்சியதிகாரத்திற்கு வந்தவை) ஓபிசி-களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராகவே இருந்துள்ளதையும் காங்கிரஸ் பாஜக அல்லாத அரசு தோன்றும்போது கொடுக்கும் அழுத்தத்தினால்தான் இன்று ஓரளவுக்கேனும் இட ஒதுக்கீடு கிடைத்துள்ளதையும் இந்த தொடரைப் படிக்கும் போது அறியலாம்.

காங்கிரஸ் அல்லாத பிரதமராக இருந்த ‘மொரார்ஜி தேசாய்’ தான் பிற்படுத்தப்பட்டோர்க்கான மண்டல் தலைமையிலான ஆணையத்தை அமைத்தார். பிறகு காங்கிரஸ் ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டு மீண்டும் காங்கிரஸ் அல்லாத பிரதமராக ‘வி பி சிங்’ பதவியேற்ற பிறகுதான் மண்டல்கமிஷன் சட்டவடிவம் பெற்றது.

இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை 52% என்று மண்டல் ஆணையம் கண்டறிந்தது. இந்தியாவில் மொத்தம் 3743 சாதிகள் பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்று ஆணையம் அறிவித்தது. 2006-ஆம் ஆண்டு நிலவரப்படி இந்த எண்ணிக்கை 5013 ஆக அதிகரித்து விட்டது.

ஏற்கனவே பட்டியலினத்தவர்களுக்கு 15% மற்றும் பழங்குடியினருக்கு 7.5% ஆக மொத்தம் 22.5% இட ஒதுக்கீடு நடைமுறையிலிருந்தது. நீதிமன்றம் 50% மேல் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று தீர்ப்பளித்திருந்ததால்தான் ஓபிசி-களுக்கான இட ஒதுக்கீடு 27% என்று நிர்ணயிக்கப்பட்டது. இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை, அதனால் பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை விபரம் முழுமையாக அறியமுடியவில்லை.

நீதிமன்றம் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என்று கூறியும், அரசுகள் இன்றுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதைத் தவிர்கின்றது. இது சமூகநீதிக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும். கலைஞர் முதல்வராக இருந்தபோது தமிழ்நாட்டுக்கான முதலாவது மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் திரு .சட்டநாதன் அவர்களைத் தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்டது.

திரு. சட்டநாதன் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கை கலைஞரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆணையத்தின் அறிக்கையை வெளியிடாவிட்டாலும் 25% என்றிருந்த பிற்பட்டோர்க்கான ஒதுக்கீட்டை 31% மாக உயர்த்தினார். இந்த உயர்வு எதிர்மறை விளைவையே ஏற்படுத்தியது , உண்மையில் சமூகநீதி பெறவேண்டியவர்களின் வாய்ப்புகள் பறிபோயின.

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க ‘பாமக’ எடுத்த நடவடிக்கையும் தமிழகத்தின் கூட்டணிக்கட்சி காட்டிய அலட்சியத்தையும் அறியலாம் , இன்று உயர்கல்வி நிறுவனங்களில் கிடைக்கும் இட ஒதுக்கீடு ‘பாமக’ வினால் பெறப்பட்டவை.
வன்னியர் சங்கம் மற்றும் பாமக பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டுமல்லாமல் சிறுபான்மையினர் மற்றும் பட்டியலினத்தவர்க்குமான இட ஒதுக்கீடு பெற எடுத்த நடவடிக்கையும் அதன் பயனாக கிடைத்த சமூகநீதியையும் இந்த தொடரில் அறியமுடியும்.

தமிழகத்தின் மிகபெரும்பான்மை சமூகமான ‘வன்னியர்’ சமூகம் இன்னும் விழிப்படையாததுடன் அதற்கான அரசியல் மற்றும் அரசு பதவிகளில் போதிய பிரதிநிதித்துவம் பெறாத விபரங்கள் கூறப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களின் இட ஒதுக்கீடு வரலாற்றையும் இதில் பதிவுசெய்துள்ளார்.
பாமக என்பது சமூகநீதிக்காகத் தொடங்கப்பட்ட ஓர் இயக்கம் என்பதாலும் அமைப்பிலுள்ளோர் சமூகநீதி பற்றி விரிவாக அறியவேண்டும் என்ற அடிப்படையிலும் ஓர் அரசியல் பயிலரங்கமாகவே இந்த தொடர் எழுதப்பட்டுள்ளது.

கட்சி சார்பில்லாமல் சமூகநீதி வரலாற்றைத் தெரிந்துகொள்ள மற்றும் ஆவணப்படுத்த இந்த தொடர் முக்கியமானதாகும்.

சமூக நீதி வரலாற்றை அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் ”சுக்கா, மிளகா, சமூகநீதி?” தொடரின் ஒவ்வொரு இரண்டு அத்தியாயங்களும் எளிமையான 20 கேள்விகள் கொண்ட ஆன்லைன் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அனைவரும் இதில் பங்கேற்கலாம். மிக எளிதான தேர்வு, கொடுக்கப்பட்ட பதிலில் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவேண்டும் அவ்வளவுதான்.
அனைவரும் கலந்துகொள்ளுங்கள்! வெற்றிபெறுங்கள்!! 20/20. இணைய முகவரி www.pmkofficial.com

குரு கோபாலகிருஷ்ணன்

Leave a Reply