இயற்கையின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்று யானை. அதன் கம்பீரமும், அழகும் காண்பவர்களை சில நொடிகளில் அசரடித்துவிடும். மெல்ல அடியெடுத்து நடந்து வரும் அதன் அழகு ஒரு கரிய குன்று இடப்பெயர்வது போன்று காட்சியளிக்கும். இந்து மதம் மற்றும் புத்த மதத்தில் யானைகள் வழிபாட்டிற்குரியதாகவும், புனிதமானவையாகவும் போற்றப்படுகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்களோடு பின்னிப்பிணைந்தது யானைகளின் வாழ்வியலும், வரலாறும். தமிழர்களின் அறிவுச்சேகரமான செவ்விலக்கியங்களில் யானைகள் பற்றி எண்ணிலடங்கா செய்திகளும், அத்தி, அறுகு, ஆம்பல், இபம், கரிணி என தொடங்கி ஐம்பதுக்கும் மேற்பட்ட பெயர்களில் அழைக்கப்பட்டுள்ள குறிப்புகளும் காணக்கிடைக்கின்றன.
உலகில் காலத்தால் மிகவும் தொன்மையான இலக்கியங்களில் யானைகளைப் பற்றிய அதிக குறிப்புகள் இடம்பெற்றிருக்கும் மொழியாக தமிழே இருக்கக்கூடும். யானைகள் குறித்தும் அதன் தன்மைகள் குறித்தும் நீண்ட நெடிய அனுபவ அறிவு, இருந்ததால் தான் நம் முன்னோர்கள் யானையைப் பற்றி ‘கரிநூல்’ என்ற நூலை எழுதியுள்ளனர். ஆனால், துரதிருஷ்ட வசமாக இந்நூல் நமக்கு இதுவரை கிடைக்கவில்லை. அழிந்துபோன தமிழர்களின் அறிவுசார் சொத்தில் இதுவும் ஒன்று. தமிழ்த்தாத்தா உ. வே. சாமிநாதையர் மாவுத்தன்கள் (யானைப் பாகர்கள்) பலரிடம் ‘கரிநூல்’ நூலைப் பார்த்ததாகப் பதிவுசெய்துள்ளார். யானைகளின் செயல்பாடுகள், அவற்றின் குணநலன்கள், அவற்றுக்கு வரக்கூடிய நோய்கள், அதைத் தீர்க்கும் வழிமுறைகள் முதலியவை அந்தச் சுவடியில் இருந்ததாகக் கூறுகிறார். ‘கரிநூல்’ கிடைக்காவிட்டாலும், செவ்விலக்கியங்களில் உள்ள சான்றுகளிலிருந்தும், இன்னும் பிற மொழிகளில் எழுதப்பட்டுள்ள நூல்களிலிருந்தும் யானைகள் பற்றி நாம் பல்வேறு தகவல்களை அறிந்துகொள்ள முடிகிறது. உலகில் 24 வகையான யானை இனங்களில் 22 வகை யானை இனங்கள் அழிந்துவிட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தற்போது எஞ்சியுள்ளவை ஆப்பிரிக்க மற்றும் ஆசிய வகை யானைகளேயாகும்.
யானைகளின் பரிணாம வளர்ச்சி என்பது பலகோடி மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ‘மூன்தெரியம்’ என்றழைக்கப்பட்ட பன்றி போன்ற உருவத்தில் தோன்றின. அதன்பின், ‘மாமூத்’ என்ற பரிணாம வளர்ச்சியைப் பெற்றது. அதிலிருந்து படிப்படியாக பரிணாம வளர்ச்சியை அடைந்து தற்போதைய உருவத்தை யானைகள் பெற்றன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
காடுகளை அழிப்பது தான் வளர்ச்சியா?
வளர்ச்சி என்ற பெயரில், சாலை விரிவாக்கப் பணிகளுக்காகவும், தொடர்வண்டி இருப்புப் பாதைகளுக்காகவும், சொகுசு விடுதிகளுக்காகவும் மற்றும் சட்டவிரோத கும்பல்கள் மூலமாகவும் காடுகளில் உள்ள மரங்கள் பெருமளவில் வெட்டி வீழ்த்தப்படுகின்றன. அதுபோக, சில நேரங்களில் ஏற்படுகிற காட்டுத்தீயின் காரணமாகவும் மரங்கள் மற்றும் காடுகள் அழிவுக்குள்ளாகின்றன. இப்படி பல்வேறு, ஆக்கிரமிப்புகள் மற்றும் காட்டுத்தீ காரணமாக காடுகளின் பரப்பளவு நாளுக்கு நாள் உள்ளங்கை அளவு சுருங்கிக்கொண்டே வருகிறதென்றால் அது மிகையில்லை. காடுகளை அழித்து சாலைகள் போடுவதும், இருப்புப்பாதைகள் அமைப்பதும், கட்டிடங்கள் எழுப்புவதும் தான் வளர்ச்சியின் அடையாளம் என்று நினைத்துக்கொண்டு அரசாங்கம் திட்டம் தீட்டுகிறது. எதுவொன்றையும் அழித்தொழிப்பதல்ல வளர்ச்சி. அழிவின் முடிவில் வளர்ச்சி தொடங்குவதில்லை. மாறாக, அழிக்க நினைக்கும் அக்கணத்திலேயே அழிவு தொடங்கிவிடுகிறது. உருவாக்குவதும், பாதுகாப்பதும் தான் உண்மையான வளர்ச்சி என்பதை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.
உலக வனத்துறையின் சட்ட வழிகாட்டுதலின் படி ஒரு மரத்தை வெட்டினால், அதற்கு ஈடாகப் பத்து மரங்கள் நடவேண்டுமென சட்டம் சொல்கிறது. ஆனால், மரங்களை வெட்டுகிறவர்கள் மரத்தோடு சேர்த்து சட்டத்தையும் வெட்டி சாய்த்து விடுகிறார்கள். கடந்த இருபது ஆண்டுகளில் ஒரு விழுக்காடு மரங்கள் மட்டுமே புதிதாக வளர்த்தெடுக்கப் பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தநிலை இனிவரும் காலங்களிலும் தொடருமேயானால், இப்பூமி மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக மாறிவிடும். இந்நிலைக்கு யார் காரணம்? சமூகப் பொறுப்பின்றி செயல்படுகிற மக்களா? அல்லது அவர்களை வழி நடத்துகிற அரசா? அல்லது அரசை வழி நடத்துகிற சட்டமா?
காடுகள்தான் உலகின் தட்பவெப்ப நிலையை சமப்படுத்துவதில் மிகமுக்கிய பங்கு வகிக்கின்றன். நன்கு வளர்ச்சியடைந்த ஒரு மரத்தின் இலைகள், ஓராண்டுக்கு 40 மனிதர்கள் சுவாசிப்பதற்கு போதுமான பிராண வாயுவை தருகிறது. அதற்காகவேனும் காடுகளும், மரங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்
‘மரம் சார் மருந்தும் கொளார்’ என்ற இலக்கிய வரிகள் போதும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் முன்னோர்களுக்கும் மரங்களுக்குமான உறவு எத்தகையது என்பதை அறிந்துகொள்வதற்கு. இயற்கையோடு இயற்கையாகப் பின்னிப்பினைந்து தம் வாழ்க்கை முறைமைகளை அமைத்துக்கொண்டவர்கள் நம் முன்னோர்கள். அவர்களின் கைத்தலம் பற்றிக்கொண்டு நடக்கிற நாம் மட்டும் இயற்கைக்கு இடையூறு செய்வது ஏன்?
யானைகளின் நிலை
2019-ம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள மொத்த வாரணங்களின் எண்ணிக்கை 28,000 முதல் 30,000 வரை உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில், ஆண் களிறுகளின் எண்ணிக்கை வெறும் 3,000 மட்டுமே இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் கணக்கெடுப்பின் படி, 4,200 யானைகள் தமிழகத்தில் உள்ளதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த யானைகளின் எண்ணிக்கை குறையாமல் மென்மேலும் அதிகரிக்கப்பட வேண்டுமென்றால், அதற்கு காடுகளும் அவைகளின் வாழிடங்களும் மற்றும் வழித்தடங்களும் மிகமுக்கியமாக பேணி பாதுகாக்கப்பட வேண்டும். அவ்வப்போது மனிதர்களால் யானைகளுக்கு நிகழ்த்தப்படும் கொடுமைகளையும், அக்கிரமங்களையும் மீறி அவைகள் உயிர்பிழைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவை, தம் வாழிடத்தைக் காத்துக் கொள்வதற்காகப் போராடுகின்றன. அந்தப் போராட்டத்திற்கு வெற்றிகிட்டவில்லையெனில், அவைகள் இல்லாதொழிந்துவிடும். அப்படி நடந்துவிட்டால் அது மனிதகுலத்திற்கு மட்டுமல்ல, சில உயிரினங்களுக்கும், பல்லுயிர் சூழலுக்கும் மிகப்பெரும் அழிவை உண்டாக்கிவிடும்.
கோவில்களில் உள்ள யானைகளை நன்கு பராமரிக்கவும், அவைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கவும் வருடத்திற்கு ஒருமுறை சில இலட்சங்களை செலவிடுகிற தமிழக அரசு காடுகளில் உள்ள யானைகளைப் பாதுகாக்க அலட்சியம் காட்டுவது ஏன்? அவைகளை பராமரிக்க சில ஆயிரங்களை செலவிட வேண்டாம். அவைகளின் வாழிடங்களை அழிக்காமல் பாதுகாத்தாலே போதுமானதாக இருக்கும். அதைச் செய்வதற்கு அரசு முன்வரவேண்டும்.
வலசைப்பாதைகளின் நிலை
யானைகள் ஒரு அடவியிலிருந்து மற்றொரு அடவிக்கு கூட்டம் கூட்டமாக இடப்பெயர்ந்துதான் தங்களது உணவுத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றன. இடப்பெயர்வு காலங்களில் கூட்டத்தில் உள்ள வயது முதிர்ந்த பெண் கரிணி தான் கூட்டத்தை தலைமையேற்று வழிநடத்திச் செல்லும். இவ்வாறு ஒரு காட்டிலிருந்து மற்றொரு காட்டிற்கு செல்கிற பாதைகளைத் தான் வலசைப்பாதைகள் (எலிபெண்ட் காரிடார்) என்று அழைக்கின்றனர். இப்பாதைகள் சராசரியாக அரை கிலோ மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கும். பிற கூட்டத்தில் உள்ள யானைகளை சந்திப்பதற்கும் இப்பாதைகளைப் பயன்படுத்திக் கொள்கின்றன.
உலகெங்கிலுமுள்ள யானைகள் கிட்டத்தட்ட 20,000-க்கும் மேற்பட்ட வலசைப்பாதைகளை தங்களது வழித்தடங்களாகக் கொண்டுள்ளன. இந்தியாவில் மட்டும் 100-க்கும் அதிகமான வழித்தடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வலசைப்பாதைகள் வடக்கே உத்தரகாண்ட் வரையிலும், கிழக்கே வியட்நாம் வரையிலும் யானைகள் பயணிக்க உதவுகின்றன. இதில் 33 விழுக்காடு வழித்தடங்கள் பல்வேறு ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகியிருக்கின்றன. அதுமட்டுமின்றி, 74 விழுக்காடு பாதைகள் வளர்ச்சி என்ற பெயரில் சாலைகள் அமைத்தும், கட்டிடங்கள் எழுப்பியும் ஒரு கி.மீ-க்கும் குறைவாகச் சுருக்கப்பட்டுவிட்டன.
நன்கு வளர்ந்த யானைகள் நாளொன்றுக்கு சுமார் 200 முதல் 250 கிலோ வரையிலான உணவை உட்கொள்ளும், 100 முதல் 150 லிட்டர் வரை தண்ணீர் அருந்தும். எனவே, உணவுக்காக பல மைல் தூரம் பயணம் செய்யவேண்டிய சூழல் யானைகளுக்கு உருவாகிறது. ஒரு யானை உணவு மற்றும் தண்ணீர் தேடி ஆண்டொண்டிற்கு சராசரியாக 750 ச.கி.மீ வரை சுற்றிவரும். கானகத்தில் போதிய உணவு கிடைக்காததாலும், வாழ்விடங்களின் பரப்பளவு குறுகி வருவதாலும், உணவு மற்றும் தண்ணீர் தேடி செல்லக்கூடிய வலசைப்பாதைகள் அழிக்கப்பட்டதாலும் அவைகள் உணவு தேடி விவசாய நிலங்களையும், குடியிருப்புகளையும் நோக்கி படையெடுத்து வருகின்றன. அதன் காரணமாக, யானை-மனித எதிர்கொள்ளல் நேரிட்டு சில நேரங்களில் விலைமதிப்பற்ற மனித உயிர்களை இழக்க நேரிடுகிறது. அத்தோடு வேளாண்மை பயிர்களும் நாசமாகிறது.
கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள வனப்பகுதிகளில் சொகுசு உணவு விடுதிகள் தொடங்குவதற்கு அனுமதி கிடையாது. ஆனால், தமிழகத்தில் அப்படியொரு நிலைமை உள்ளதா? இங்குள்ள வனப்பகுதிகளில் தான் அதிகளவில் உணவு விடுதிகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஆசிரமங்கள், கோவில்கள் போன்ற கட்டிடங்கள் கட்டுவதற்கும் அனுமதி கொடுக்கப்படுகிறது. வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் ஈஷா யோகா மையம் வலசைப்பாதைகளை அழித்து அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டியுள்ளது. காடுகளைப் பாதுக்காக்க வேண்டிய காட்டிலாகா அதிகாரிகள் கையூட்டுப் பெற்றுக்கொண்டு எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் கடந்து சென்று விடுகிறார்கள்.
கடந்த 2018-ம் ஆண்டு IndiaSpend என்ற இதழுக்குக் கோயம்புத்தூர் வனச்சரகம் கொடுத்த தரவுகளில், ‘அம்ரிதா, விஷ்வ வித்யபீத் பல்கலைக்கழகம், காருண்யா பல்கலைக்கழகம், கார்ல் குபெல் நிறுவனம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் என்று இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் யானைகளின் வழித்தடங்களில் செயல்படுவதாக, தெரிவித்துள்ளது’. இது யாருடைய பிழை? அனுமதி கொடுத்த அரசின் பிழையா? அல்லது அனுமதி வாங்கிய நிறுவனங்களின் பிழையா?
காடுகளில் யானைகள் இருக்கிறது. ஆனால், அவைகளின் வாழிடங்கள் எங்கே? வலசைப்பாதைகள் எங்கே? அதைத்தான் அவைகள் தேடித்தேடி அலைகின்றன. அவைகளுக்கு காவல் நிலையம் தெரியாது. நீதிமன்றம் தெரியாது. அங்கே சென்று புகார் கொடுக்கவும் தெரியாது. ஒருவேளை இதுவெல்லாம் அவைகளுக்கு தெரிந்திருந்தால் நீதி கிட்டியிருக்குமோ?
யானை-மனித எதிர்கொள்ளல்
யானைகளின் வாழிடங்களும் வலசைப்பாதைகளும் ஆக்கிரமிக்கப்படுவதே யானை-மனித எதிர்கொள்ளலுக்கு மிகமுக்கியக் காரணமாகும். இதில் சொல்லொண்ணா வேதனை என்னவென்றால், இத்தகைய ஆக்கிரமிப்புகளைச் செய்கிற நிறுவனங்களோ, அமைப்புகளோ இதற்கு பலியாவதில்லை. எளிய மக்கள் தான் பலிக்கடாவாகிறார்கள்.
தமிழகத்தில் 2001-ம் ஆண்டு தொடங்கி 2016-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 1,135 யானைகள் உயிரிழந்த சம்பவம் தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. யானை, மனித எதிர்கொள்ளலில் கடந்த பத்தாண்டுகளில் கோவையில் மட்டும் 191 யானைகளும், மனிதர்களில் 143 பேரும் உயிரிழந்துள்ளனர். இதற்கு யானைகள் மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியுமா? இரு பக்கத்திலும் உயிரிழப்பு இருந்தாலும், இதில் அதிகம் பாதிப்பிற்குள்ளாவது யானைகள் தான். ஒத்த கொம்பன், சில்லுக் கொம்பன், கட்ட கொம்பன், மொன்ன வாலு, பேய், பெரிய தம்பி, மதுக்கரை மகாராஜ், விநாயகன் என்று தொடங்கி தற்போது சின்னத்தம்பி வரை நீளுகிறது இப்பட்டியல். இப்படி பல யானைகள் கோவையை விட்டும் இந்த உலகத்தை விட்டும் விரட்டியடிக்கப் பட்டுள்ளன.
ஆசிய கண்டத்திலேயே யானைகள் இறப்பில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் கடந்த ஆறு ஆண்டுகளில் முள்வேலியில் வைக்கப்பட்ட மின்சாரம் பாய்ந்தும், தொடர்வண்டி இருப்புப்பாதைகளைக் கடக்கும் போதும், நஞ்சு வைத்தும், வேட்டையாடியும் இதுவரை 2,330 யானைகள் கொல்லப்பட்டுள்ளன. அதேவேளையில், யானைகள் தாக்கி மனிதர்களில் 2,398 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு யார் காரணம்? பொறுப்பின்றி செயல்படும் அரசா? அல்லது தங்களது கடமைகளை செய்யத் தவறுகிற வனத்துறை அதிகாரிகளா? அல்லது காடுகளை ஆக்கிரமிக்கும் நிறுவனங்களா?
யானைகள் மனிதனால் கொல்லப்படுவதை விட பிற விலங்குகளால் உணவுக்காக வேட்டையாடிக் கொல்லப்படுவது மிகவும் சொற்பமானது. 2018-ம் ஆண்டு உலக வனவிலங்கு நிதியத்தின் கணக்குப்படி, உலகில் 4,15,000 ஆப்பிரிக்க யானைகளும், 40,000 முதல் 50,000 வரையிலான ஆசிய யானைகளும் உள்ளது தெரியவந்துள்ளது. இது எண்ணிக்கையில் சற்று கூடுதலாக தெரிந்தாலும், இவை அழிந்துவரும் விலங்கினப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதற்கு முழுமையான காரணம் மனிதனைத் தவிர வேறு யாராக இருக்கமுடியும்?
சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஆய்வுகளின் தரவுப்படி, இந்தியாவில் 59 விழுக்காடு யானைகள் திருட்டுத்தனமாக வேட்டையாடப்பட்டும், 15 விழுக்காடு யானைகள் இருப்புப்பாதைகளைக் கடக்கும்போது தொடர்வண்டியில் அடிபட்டும், 13 விழுக்காடு யானைகள் நஞ்சு வைத்தும், 8 விழுக்காடு யானைகள் முள்வேலியில் வைக்கப்பட்ட மின்சாரம் பாய்ந்தும் உயிரிழந்துள்ளன. வனப்பகுதிகளை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகள் போதிய விழிப்புணர்வின்றி நெகிழி பைகள் மற்றும் தண்ணீர் போத்தல் போன்றவற்றை சமூகப் பொறுப்பின்றி அங்கேயே விட்டுவிட்டு வருகின்றனர். அதை உண்ணும் யானை மற்றும் பிற விலங்குகளும், செரிமானமாகாமல், உயிரிழப்பது இன்றும் தொடர்கதையாக உள்ளது. அதுமட்டுமின்றி, போதை ஆசாமிகளால் போட்டு உடைக்கப்படும் சாராயப் போத்தல்களின் கண்ணாடி சில்லுகள் விலங்குளின் கால்களை கிழித்து அவைகள் நடமாட முடியாதபடி செய்துவிடுகின்றன. இதன் காரணமாக விலங்குகளால் உணவு மற்றும் தண்ணீர் தேடி செல்லமுடியாத சூழல் உருவாகி இறுதியில் உயிரிழக்கும் சம்பவங்கள் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
இப்படி அடுக்கடுக்காகத் தவறுகளை செய்துவிட்டு யானைகள் மீது பழி போடுவது எந்த விதத்தில் நியாயம்?
யானைகள் ஏன் பாதுகாக்கப் படவேண்டும்?
காடுகளில் வெயில் சுட்டெரிக்கும் கோடைகாலங்களில், பூமிக்கடியில் உள்ள தண்ணீரைக் கண்டறியும் நுட்பமான திறன் கொண்டது யானைகள் மட்டுமே. அந்த நீருள்ள மணற்பரப்பை தனது தந்தத்தினால் தோண்டித் தோண்டி நீரை வரவழைக்கும். அப்படி வருகிற தண்ணீரைக் குடிக்காமல் சேற்றோடு, தண்ணீரையும் சேர்த்து தனது உடலில் பூசிக்கொண்டு உடல் வெப்பத்தைத் தனித்துக்கொள்ளும். தோண்டிய பள்ளங்களில் இருந்து கசிந்து வருகிற நீரானது பிற உயிரனங்களின் தாகத்தைத் தணிக்க உதவுகிறது.
யானைகள் நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 30 கி.மீ. தூரம் உணவு மற்றும் தண்ணீர் தேடி செல்கிறது. அப்படி செல்லுகிற வழித்தடங்களில் எல்லாம் தனது சாணத்தால் ஊட்டச்சத்து நிரம்பிய விதைப்பரவலை உருவாக்குகிறது. டாங்கோ நாட்டில் நடந்த சமீபத்திய ஆய்வொன்றில், ‘ஒரு யானை நாளொன்றுக்கு 95 வகையான தாவரங்களிலிருந்து 365 வகையான விதைகளை தன் சாணத்தின் மூலமாகப் பரப்புகிறதென்றும், யானை இல்லையென்றால் காட்டில் சில தாவரங்களுக்கு விதையே இருக்காது என்றும் கண்டறிந்துள்ளனர். மேலும், யானை சாப்பிட்டு செரிமானமாவதற்கு 50 மணி நேரத்திலிருந்து 70 மணி நேரமாகுமென்றும், அந்த நீண்ட நெடிய செரிமானத்தில் ஊறிய விதைகள் சாணத்தின் மூலமாக வெளிவருவதால்தான் சில மரங்கள் முளைக்குமென்றும் கண்டறிந்துள்ளனர்’. யானைகள் இல்லையென்றால் அந்த மரங்கள் இல்லை. மரங்கள் இல்லையென்றால் காட்டில் தட்பவெப்ப நிலை சமமாக இருக்காது. எனவே, காடுகளின் வளர்ச்சிக்கும், பல்லுயிர் சூழலுக்கும் யானைகளின் பங்கு அளப்பரியது.
யானைகள் இல்லையென்றால் காடுகளின் உயிர்ச்சூழல் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகும். யானைகள் உள்ள காடுகள்தான் வளம் நிறைந்த காடுகளாக இருக்கும். அந்தப் பேருயிர்கள் தான் காடுகளைக் கட்டமைக்கின்றன. அவைகள் இல்லையென்றால் வல்லை (அடர்ந்த காடு) இல்லை! வல்லை இல்லையென்றால் நீராதாரம் இல்லை! நீராதாரம் இல்லையென்றால் உயிர்கள் இல்லை! காடுகளுக்கு ‘யானை தான் ஆதார உயிரினம்’ என்று யானை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்காகவேனும் யானைகளும், அவற்றின் வாழிடமான காடுகளும், வலசைப்பாதைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.
யானைகள் கேட்பது, நமக்கான இடத்தையோ, நமக்கான உணவையோ அல்ல. அவைகளிடமிருந்து அபகரிக்கப்பட்டுள்ள வாழ்விடங்களையும், அவைகள் சென்றுவரக் கூடிய வலசைப்பாதைகளையும் தான். அதைத் தேடித்தான் அவைகள் ஊருக்குள் வருகின்றன. யானைகள் ஊருக்குள் வருவது தவறென்றால், அவைகளின் வாழிடங்களை அபகரித்து, வலசைப்பாதைகளை அழித்தொழித்து சாலைகளையும், கட்டிடங்களையும் எழுப்பியது யார் தவறு? அனுமதி கொடுத்த அரசின் தவறா? அனுமதி கொடுத்ததைக் கண்டிக்காத வனத்துறையின் தவறா? அல்லது அங்கு கட்டிடங்களை எழுப்பிய நிறுவனங்களின் தவறா? இப்படி அடுக்கடுக்காகத் தவறுகளை செய்துவிட்டு அவைகளின் மீது பழிபோடுவதை இயற்கை ஒருபோதும் அனுமதிக்காது என்பதை உணராதவரை யானை-மனித எதிர்கொள்ளல் தவிர்க்கமுடியாத விடயமாகத்தான் இருக்கும்.
யானை-மனித எதிர்கொள்ளலுக்கு தீர்வு என்ன?
குறைந்தளவில் மின்சாரம் செல்கிற முள்வேலிகளை அமைப்பது, அகழிகள் தோண்டுவது, மலையடிவாரங்களில் யானைகளுக்குப் பிடிக்காத உணவுப் பயிர்களை விளைவிப்பது போன்ற பல மாற்றுவழிகளைக் கடைபிடித்தாலும் அவற்றால் ஒருபோதும் நிரந்தர தீர்வை அடைந்துவிட முடியாது. யானை-மனித எதிர்கொள்ளலை முற்றிலும் தவிர்க்க வேண்டுமெனில், அவைகள் இழந்துவிட்டு நிர்க்கதியாக நிற்கிற வாழிடங்களையும், வலசைப்பாதைகளையும் அவைகளுக்கு மீட்டுத்தர வேண்டும். அதுவொன்று தான் நிரந்தர தீர்வை அளிக்கும்.
ச. பராக்கிரம பாண்டியன்