துறவுக் கடவுள் சுவாமி விவேகானந்தர்

ச. பராக்கிரம பாண்டியன்

4
1275

1863-ம் ஆண்டு சனவரி 12-ம் நாள், நரேந்திரநாத் தத்தா என்ற இயற்பெயர் கொண்ட வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் பிறந்தார். மிகச்சிறந்த மாந்தநேயம் கொண்டவராகவும், தலைசிறந்த சிந்தனையாளராகவும், சிறந்த தேசபக்தராகவும் பரிணமித்தார். இந்திய மக்களை ஆன்ம பலம் கொண்டவர்களாக மாற்றுவதற்காகவும், மக்கள் தொண்டே இறைத்தொண்டு என்று நினைந்து மக்கள் துயர் துடைக்கவும், அவர்களை அறியாமை இருளிலிருந்து மீட்டெடுப்பதற்காகவும் அரும்பாடுபட்ட விடிவெள்ளி தான் சுவாமி விவேகானந்தர்.

இமயமலைச் சாரலில் தனிமையில் அமர்ந்து தியானம் செய்வதும், மனிதர்களிடமிருந்து ஒதுங்கி வாழ்வதும் தான் ஆன்மீகம் என்று இருந்த மாயையை உடைத்தெறிந்து ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்வதும், தொண்டு புரிவதும் தான் உண்மையான துறவு, உண்மையான ஆன்மீகம் என்று உலகிற்கே உரக்கச் சொன்னவர் சுவாமி விவேகானந்தர்.

இருள் கவ்விய சிந்தனையும், எழுச்சியும், தன்னம்பிக்கையுமற்று செயல்பட முடியாத நிலையில் இருக்கும் இந்திய இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் சமுதாயம் தன்னிடம் கொட்டிக்கிடக்கும் மூட நம்பிக்கைகளை களைவதற்கும், தன்னுள் புதைந்து கிடக்கும் வரம்பில்லா ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்கும், எழுச்சிக்கொண்டு தன்னம்பிக்கையோடு செயல்படுவதற்கும், எதிர்காலத்தைப் புரிந்துகொள்வதற்கும் விவேகானந்தரோடு உறையாடுவது மிகமிக அவசியமானதாகிறது.

ஆரம்ப காலங்களில், பிரம்ம சமாஜக் கொள்கைகள் மீது பற்றுக்கொண்டவராக இருந்தார் நரேந்திரர். இவ்வுலகில் இறைவன் என்றொருவன் இருந்தால் அவன் பக்தர்களின் உண்மையான வழிபாட்டிற்கு செவிமடுத்து காட்சியளிக்க வேண்டும். அவனை அறிந்து, உணர்ந்து கொள்வதற்கு ஏதேனும் ஒரு வழியிருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு கொண்டிருந்தார் நரேந்திரர். ஆனால், பிரம்ம சமாஜம் இத்தகைய கொள்கைகளுக்கு எதிர்மறையான கருத்துக்களைக் கொண்டிருந்தது என்பதை மெல்ல மெல்ல உணரத் தொடங்கினார். அதன் விளைவாக, தன்னைத் தானே தியானப் பயிற்சியில் ஈடுபடுத்திக் கொண்டார். எத்தனையோ நாட்கள் இரவு முழுவதும் தன்னிலை மறந்து தியானத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஒரு வழிகாட்டி தேவைப்பட்டார். கடவுள் குறித்து அறிஞர்கள், மதகுருமார்கள், ஆன்மீக வழிகாட்டிகள் என்று யாரைப் பார்த்தாலும் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா? என்ற கேள்வியை எழுப்பத் தொடங்கினார். ஆனால், அதற்கான பதில் அவருக்கு கிட்டவில்லை. மகரிஷி தேவேந்திரநாத தாகூரை நேரில் சந்தித்த பின்னர் தான் தியானத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு முதிர்ச்சி பெறத் தொடங்கினார்.

நரேந்திரர் 1881-ம் ஆண்டு நவம்பர் மாதம் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் வில்லியம் ஹேஸ்டி என்ற பேராசிரியர் ஆங்கில வகுப்பை நடத்திக்கொண்டிருந்தார். அவ்வகுப்பில் கவிஞர் வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் எழுதிய ‘சுற்றுலா (Excursion)’ என்ற கவிதை பற்றி பாடம் நடத்திக்கொண்டிருந்தார். இயற்கையை நேசித்து அதில் பரவசம் அடைந்து மனதைப் பறிகொடுக்கும் வழிபோக்கன் ஒருவனைப் பற்றிய கவிதை அது. அக்கவிதையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, தற்போது அப்படிப்பட்ட பரவசநிலையை அடையக்கூடியவர் தட்சினேசுவரத்தில் வாழ்ந்து வருகிற ஶ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் என்று பேராசிரியர் ஹேஸ்டி மாணவர்களிடம் எடுத்துரைத்தார். பரமஹம்சர் என்ற பெயர் தான் எதிர்காலத்தில் தன் வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கொண்டுவரப் போகிறது என்பதை அன்று அவர் உணர்ந்திருக்கவில்லை.

நரேந்திரரின் உறவினர் இராமச்சந்திர தத்தர் பரமஹம்சரின் தீவிர பக்தர். அவர் ஒருநாள் ‘உன்னை பரமஹம்சரிடம் அழைத்துப் போகிறேன் என்னுடன் வா’ என்று அழைத்தார். அதற்கு நரேந்திரர் ‘அவரைப்பற்றி எனக்குத் தெரியும். படிப்பறிவு இல்லாத அவர் எனக்கு எப்படி வழிகாட்ட முடியும்’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அவரது உறவினர் எந்த பதிலும் சொல்லாமல் கடந்துவிட்டார்.

நரேந்திரரின் வீட்டுக்கருகில் வசித்து வந்த சுரேந்திரநாத் மித்திரர் என்பவர் தனது வீட்டு விழாவிற்கு ஶ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரை அழைத்து வந்தார். அவ்விழாவில் பக்தி பாடல்கள் பாடுவதற்கு எவருமில்லாததால், நரேந்திரனை பக்தி பாடல்களை பாடும்படி கேட்டுக்கொண்டனர். அவரும் மறுப்பு சொல்லாமல் பாடினார். அவரது பக்தி பாடலை மெய்மறந்து கேட்டார் பரமஹம்சர். அவரைப்பற்றி அறிந்துகொண்டு ஒருமுறை தட்சினேசுவரம் வருமாறு அழைப்பு விடுத்தார். இதுதான் பரமஹம்சருக்கும் விவேகானந்தருக்கும் இடையே ஏற்பட்ட முதல் சந்திப்பாகும். இச்சந்திப்பு தான் நரேந்திரர் பிற்காலத்தில் இவ்வுலகமே கொண்டாடும் சுவாமி விவேகானந்தராக மாறுவதற்கான ஆரம்பப்புள்ளி இங்கிருந்து தான் தொடங்கப்பட்டது என்றால், அது மிகையில்லை.

கடவுள் இருக்கிறாரா? என்ற தேடல் மனம் முழுவதும் லயித்துக் கிடந்தது நரேந்திரருக்கு. அதன் விளைவாக, தனது உறவினர் இராமச்சந்திர தத்தரையும் மற்றும் சில நண்பர்களையும் உடனழைத்துக் கொண்டு 1882-ம் ஆண்டு சனவரி மாதத்தில் பரமஹம்சரை சந்தித்தார். கடவுள் இருக்கிறாரா? கடவுளை நீங்கள் நேரில் கண்டிருக்கிறீர்களா? என்பதை கேட்டறிந்து கொள்ளும் முனைப்போடு அவரிடமும் அக்கேள்வியை முன்வைக்க வேண்டும் என்ற ஆவலில் இருந்தார் நரேந்திரர். ஆனால், நரேந்திரனைக் கண்டுகொன்ட பரமஹம்சர் அவரைக் கைப்பிடித்து தனியாக அழைத்துச் சென்றார். தனக்கு அவர் ஏதோ உபதேசம் செய்யப்போகிறார் என்று நினைத்திருந்தார் நரேந்திரர். ஆனால், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்றும் அன்று என்ன நடந்தது என்பது பற்றியும் விவேகானந்தரின் நினைவுக் குறிப்புகளிலிருந்து, ‘பரமஹம்சர் என் கைபிடித்து ஆனந்தக் கண்ணீர் விட ஆரம்பித்தார். நெடுநாள் பழகியவர் போன்று என்னுடன் பேசத் தொடங்கிவிட்டார். என் ஆழ்ந்த அனுபவங்களை தகுந்த ஒருவரிடம் கூறுவதற்கு எவ்வளவு பரிதவித்திருக்கிறேன் என்று அழுதுகொண்டே கூறினார். மறுகணம் என்னை கைகூப்பி வணங்கினார். கைகூப்பியபடி நின்று கொண்டே என்னிடம் ரிஷியான நாராயணனின் அவதாரம் என்றார். உலக மக்களின் துயர் துடைக்க இந்த உலகத்தில் மனிதனாகப் பிறந்திருக்கிறீர்கள் என்றெல்லாம் கூறினார். நான் எனக்குள் இது என்ன விபரீதம், நான் விசுவநாத தத்தரின் மகன், ஆனால், இவர் என்னை ரிஷி என்கிறார். நாராயணன் என்கிறார். சந்தேகமே இல்லை இவர் பைத்தியக்காரராகத் தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு நான் எதுவும் பேசவில்லை’ என்று பரமஹம்சருடனனான சந்திப்பின் போது தனக்கு நேர்ந்த அனுபவங்களை பின்னாளில் இப்படி விவரித்துள்ளார் விவேகானந்தர்.

ஒரு மாதம் கழித்து இரண்டாம் முறையாக பரமஹம்சரை சந்திக்க சென்றார் நரேந்திரர். நேரடியாக பரமஹம்சரின் அறைக்குள் சென்றார். அங்கு அவர் ஒரு விந்தையான மனநிலையில் இருந்ததைக் கண்டுகொண்டு இன்றும் ஏதோ உலரப்போகிறார் என்று நினைத்துக்கொண்டிருந்தார் நரேந்திரர். ஆனால், பரமஹம்சரோ நரேந்திரனை நெருங்கி வந்து தனது வலதுபாதத்தை அவர் மீது வைத்தார். அப்போது தனக்குள் ஏற்பட்ட ஒரு விந்தையான அனுபவம் குறித்து விவேகானந்தர் பதிவு செய்துள்ளது, ‘அந்தக் கணமே ஒர் அற்புத அனுபவம் உண்டாயிற்று. என் கண்கள் திறந்தே இருந்தன. நான் கண்டது என்னவென்று தெரியுமா? அறையில் இருந்த எல்லா பொருட்களும், சுவர்களும் சுழன்று எங்கோ கரைந்தன. நான் என்ற உணர்வு என்னுள் கரைந்து போனதைப் போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. சொல்லமுடியாத பேரச்சம் என்னை ஆட்கொண்டது. நான் என்ற உணர்வின் அழிவுதான் மரணம். அந்த மரணம் இதோ என் கண்முன்னே நிற்பதைப் போன்று தோன்றியது. என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நீங்கள் என்னை என்ன செய்கிறீர்கள்? எனக்கு பெற்றோர் இருக்கிறார்கள் என்று அலறினேன். அதைக்கேட்டு அந்த அற்புதப் பைத்தியக்காரர் கலகலவென்று சிரித்தபடியே என் மார்பை தன் கையால் தொட்டு, அப்படியானால் போதும் ஒரேயடியாக வேண்டாம். உரிய காலத்தில் எல்லாம் நடக்கும் என்று கூறினார். அவ்வாறு கூறி அவர் தொட்டதுமே நான் இயல்பான நிலையை அடைந்தேன். அறையில் உள்ளேயும், வெளியேயும் இருந்த பொருட்கள் முன்பிருந்ததைப் போன்றே இருப்பதைப் பார்த்தேன். அந்த அதிசய மனிதரின் ஆற்றலினால் தான் இந்த அனுபவம் நொடிப்பொழுதில் ஏற்பட்டு அதே வேகத்தில் மறைந்து போயிற்று. எனக்கு இந்த நிலை எப்படி ஏற்பட்டது? என்று ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தேன் என்னால் எந்த முடிவிற்கும் வர இயலவில்லை. ஏனெனில், தொடக்கத்தில் இருந்தே அவரை நான் ஒரு பபைத்தியம் என்றே முடிவு செய்திருந்தேன்.’

பின் சில நாட்கள் கழித்து மூன்றாம் முறையாக பரமஹம்சரை சந்தித்தார் நரேந்திரர். அப்போது பரமஹம்சர் விவேகானந்தரை முழுமையாக ஆட்கொண்டார். அன்று அவர் தொட்ட போது நரேந்திரர் முற்றிலுமாக தனது புறவுணர்வை இழந்து, மெய் மறந்த நிலையில் இருந்தார். அவரது அடிமனதின் ஆழத்திலிருந்து பல செய்திகளை அறிந்துகொண்டார் பரமஹம்சர். ஆனால், நரேந்திரரோ பரமஹம்சரைப் பற்றி எந்த முடிவுக்கும் வராமல் இருந்தார். ஒருநாள் பரமஹம்சர் விவேகானந்தரிடம் என்னைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு விவேகானந்தர் ‘ஆயிரம் பேர் உங்களை கடவுளின் அவதாரம் என்று சொல்லலாம். ஆனால், எனக்கு அதில் உறுதியான நம்பிக்கை வரும்வரை என்னால் அதை உறுதியாக ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று கூறினார். இதைக் கேட்டுவிட்டு பரமஹம்சர் மெல்ல சிரித்துக்கொண்டார்.

1884-ம் ஆண்டு பிப்ரவரி 25-ம் நாள் விவேகானந்தர் தந்தை மாரடைப்பால் மரணம் எய்தினார். அதன்பின், குடும்பத்தில் நிலவிய வறுமையை ஒழிப்பதற்காக வேலைத்தேடி அலைந்தார் விவேகானந்தர். பலநாட்கள் பசிப்பிணியால் மயங்கி கீழே விழுந்தார். 1884-ம் ஆண்டின் பிற்பகுதியில் அவர் படித்த மெட்ரோபாலிடன் பள்ளியிலேயே அவருக்கு ஆசிரியர் வேலை கிடைத்தது. அதன்பின் 1886-ம் ஆண்டில் அதே பள்ளியில் மற்றொரு பிரிவுக்கு தலைமையாசிரியர் ஆனார். ஆனாலும் அவர் மனம் ஏனோ அமைதியை நாடவில்லை. எல்லா மனிதர்களையும் போல் பணம் சேர்த்து, குடும்ப வாழ்வில் இன்ப, துன்பம் துய்க்க தான் பிறக்கவில்லை என்பதை தீர்மானித்துக் கொண்டார். அதன் விளைவாக துறவியாவதென்று முடிவு செய்து அதற்கான நாளையும் தேர்ந்தெடுத்து பரமஹம்சரை சந்தித்து அவரது ஆசியோடு துறவியாக நினைத்தார். அனால், பரமஹம்சரோ ‘உன்னால் உலகியல் வாழ்க்கையை தற்போது மேற்கொள்ள முடியாது. ஆனாலும் நான் இருக்கும் வரை எனக்காக உன் வீட்டில் இரு’ என்று சொல்லி அனுப்பி வைத்துவிட்டார். மீண்டும் பழையபடி வேலைத்தேடி அலைந்தார் விவேகானந்தர்.

உருவ வழிபாட்டின் மீது நம்பிக்கையில்லாத விவேகானந்தர் தான் பின்னாளில் காளி தெய்வத்தை ஏற்றுக்கொண்டார். ‘காளியிடம் சென்று குடும்ப பாரத்தை நீக்குவதற்கு பொருள், செல்வம் கேட்டு வேண்டிக்கொள்’ என்று பரமஹம்சர் சொன்னார். ஆனால், விவேகானந்தரோ, ‘எனக்கு விவேகத்தைக் கொடு, உன்னை இடையறாமல் தரிசிக்கும் பேற்றினைக் கொடு’ என்று வேண்டிக்கொண்டார். ஆனால், பரமஹம்சரோ ‘மீண்டும் காளியிடம் சென்று குடும்பத்திற்காக வேண்டிக்கொள்’ என்று வலியுறுத்தினார். இம்முறையும் விவேகானந்தர் பொருள் கேட்டு வேண்டிக்கொள்ளவில்லை. அதைத்தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் அனுப்பி வைத்தார் பரமஹம்சர். அப்போதும் விவேகானந்தர் ‘அம்மா எனக்கு வேறுதுவும் வேண்டாம். ஞானத்தையும், பக்தியையும் மட்டும் தந்தருள்வாய்’ என்று வேண்டிக்கொண்டார்.

1886 -ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் நாளன்று புற்று நோய் காரணமாக பரமஹம்சர் இவ்வுலக வாழ்விலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டார். அதன்பின், விவேகானந்தர் இந்தியா முழுவதும் துறவு பயணம் மேற்கொண்டார். அந்தச் சமயத்தில் தான் சக துறவிகள் யாரும் தன்னை பின்தொடரக்கூடாது என்பதற்காக, 1891-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 1892-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் விவேகானந்தர் என்று தனக்கு பெயர் சூட்டிக்கொண்டார். அதுவே பின்னாளில் நிரந்தர பெயராக மாறிப்போனது.

வட இந்தியப் பயணங்களை முடித்துக்கொண்டு தென்னிந்தியப் பயணம் மேற்கொண்டார் விவேகானந்தர். மைசூரிலிருந்து கொச்சி வந்த அவர் புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவிலில் வழிபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் கோவிலின் அருகில் இருந்த ஆலமரத்தடியில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். அப்போது கொடுங்களூர் இளவரசர்களான கொச்சுண்ணித் தம்பிரானும், பட்டம் தம்பிரானும் கோவிலுக்கு வந்தனர். ஆலமரத்தடியில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருந்த விவேகானந்தரைக் கண்டனர். அதன் பின் அவரிடம் உரையாடி அவரின் அறிவாற்றலையும், கல்வித் திறனையும் பற்றி அறிந்துகொண்ட இளவரசர்கள் விவேகானந்தரை கோவிலுக்குள் வருமாறு அழைத்தனர். ஆனால், விவேகானந்தரோ உள்ளூர் வழக்கங்களை மீற முயலாமல் மறுத்துவிட்டார். அதன் பின் திருவனந்தபுரத்தை அடைந்தார். அங்கு திருவாங்கூர் மன்னரின் மருமகனான இளவரசர் மார்த்தாண்ட வர்மனின் ஆசிரியரான, பேராசிரியர் சுந்தரராம ஐயர் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது ஐய்யரின் மகனான ராமஸ்வாமி ஐய்யரிடம் உண்மையான தேசப்பற்றென்பது என்னவென்று தனது கருத்துக்களை எடுத்துரைத்தார் விவேகானந்தர். ‘தேச பக்தி, தேச பக்தி என்கிறார்களே, உண்மையில் அது என்ன? கண்மூடித்தனமான ஒரு நம்பிக்கையா? இல்லை. நாட்டு மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதில் உள்ள பேரார்வம்தான் உண்மையில் தேசபக்தி. பாரதம் முழுவதும் பார்த்துவிட்டேன். அறியாமையும், துன்பமும், ஒழுக்கச் சீர்குலைவுகளும் தான் நான் கண்டவை. என் உள்ளம் பற்றியெரிகிறது. இந்தத் தீமைகளை வேரோடு களைய வேண்டும் என்று துடிக்கிறேன். அவர்களின் தீவினை அது. அதனால் கஷ்டப்படுகிறார்கள் என்று கர்மம் பற்றி பேசுகிறார்கள். தயவுசெய்து அப்படிப் பேசாதீர்கள். கஷ்டப்படுவது அவர்களின் கர்மம் என்றால் அதிலிருந்து அவர்களை விடுவிப்பது நமது தர்மம். கடவுளைக் காணவேண்டுமானால் மனிதனுக்கு தொண்டு செய்யுங்கள். நாராயணனை அடைய வேண்டுமானால் பட்டினியில் வாடுகின்ற ஏழை நாராயணர்களுக்குச் சேவை செய்யுங்கள். அதுதான் உண்மையான தேச பக்தி’ என்றார் விவேகானந்தர்.

திருவனந்தபுரத்தில் 9 நாட்கள் தங்கிவிட்டு 1882-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கன்னியாகுமாரிக்குப் புறப்பட்டார் விவேகானந்தர். கன்னியாகுமாரியை வந்தடைந்த அவர் கடலில் சற்று தொலைவிலிருந்த இரண்டு பாறைகளை பார்த்துவிட்டு அங்கே சென்று தியானிக்க வேண்டுமென்று விரும்பினார். கட்டுமரத்தில் தன்னை அப்பாறைக்கு அழைத்துச் செல்லும்படி மீனவர்களிடம் கேட்டார். ஆனால், அவர்களோ பணம் கேட்டனர். அவரிடம் பணமில்லை. அதனால், மீனவர்கள் அவரை அழைத்துச் செல்ல மறுத்துவிட்டனர். பாறையை நோக்கி நீந்திச் சென்று மூன்று நாட்கள் (டிசம்பர் 24 முதல் 26 வரை) ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்து சிந்தித்தார். நான்காவது நாள் விவேகானந்தரை கட்டுமரத்தில் அழைத்து வந்தார்கள். அவரைக்காண பலர் கூடினார்கள். கன்னியாகுமாரியிலிருந்து மதுரை சென்ற விவேகானந்தர் அங்கே இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியை சந்தித்து இந்தியாவில் உள்ள மிகமுக்கிய பிரச்னைகளான ஏழ்மை மற்றும் கல்வி குறித்தும் அவற்றைக் களைவது பற்றியும் விவாதித்தனர். பின்னர், இராமேசுவரத்திலிருந்து பாண்டிச்சேரி வழியாக சென்னை வந்தடைந்தார் விவேகானந்தர்.

அமெரிக்காவில் இருந்த இந்துமத சபையுடன் தொடர்பு கொண்டிருந்தார் சென்னையைச் சேர்ந்த யோகி பாத்தசாரதி ஐயங்கார். அவருடைய மருமகனான அழகிய சிங்கம்பெருமாளுக்கும், விவேகானந்தருக்கும் இடையில் நட்பு உருவானது. சிகாகோ சர்வசமய மகாசபைக்கு செல்வதற்கு தகுதியான நபர் இருந்தால் அவரை அனுப்பி வைக்கலாம் என்று சொல்லி வைத்தார் பாத்தசாரதி ஐயங்கார். விவேகானந்தரின் நுண்ணறிவும், ஆற்றலும், அவரது விசாலமான பார்வையும் அழகிய சிங்கம்பெருமாளையும் மற்றும் பலரையும் ஈர்த்தது. அப்போது, ‘நீங்கள் ஏன் சிகாகோ சர்வசமய மகாசபைக்கு செல்லக்கூடாது’ என்று அழகிய சிங்கம்பெருமாள் கேட்டார். அதற்கு விவேகானந்தர் என்னை எவரேனும் அனுப்பி வைத்தால் போவதற்கு தயார் என்று சொன்னார். கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் விரைவாக எழுந்து விவேகானந்தரிடம் இரண்டு ரூபாய் நிதியளித்தார். அந்த இரண்டு ரூபாயை தான் முதலில் கண்ட பிச்சைக்காரரிடம் கொடுத்துவிட்டார் விவேகானந்தர்.

1893-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ம் நாள் ஹைதராபாத்திற்கு சென்றார் விவேகானந்தர். அங்கு அவருக்கு மிகச்சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அடுத்த நாள் ஹைதராபாத்தில் உள்ள மெகபூக் கல்லூரியில் ‘நான் ஏன் மேலை நாடு செல்ல வேண்டும்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அதன்பின், பிப்ரவரி 17-ம் தேதியன்று மீண்டும் சென்னை வந்தார். அதற்குள் விவேகானந்தரின் சிகாகோ பயணத்திற்காக சென்னை நண்பர்கள் ரூ. 4,000 பணம் திரட்டியிருந்தனர்.

விவேகானந்தர் சென்னையில் இருந்து சிகாகோ சர்வசமய மகாசபையில் கலந்துகொள்வதற்காக 1893-ம் ஆண்டு மே 31-ம் நாள் பெனின்சுலார் என்ற கப்பலில் அவருக்கு இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வதற்கான பயணச்சீட்டு பதிவு செய்யப்பட்டது. பயணச்செலவிற்காக அவரிடம் ரூ. 2685 கொடுத்தார்கள். வட இந்திய பயணத்தின்போது அவருக்கு மிகவும் நட்பாக இருந்த கேத்ரி மன்னருடைய குழந்தையின் பிறந்தநாள் விழாவில் பங்கெடுக்க வேண்டுமென்று மன்னர் விரும்பி கேட்டுக்கொண்டதன் விளைவாக ஏப்ரல் 23-ம் தேதி கேத்ரின் சென்றைடைந்தார் விவேகானந்தர். சென்னையில் இருந்து சிகாகோ செல்வதற்காக வாங்கப்பட்ட பயணச்சீட்டு ரத்து செய்யப்பட்டு, பம்பாயிலிருந்து முதல் வகுப்பில் செல்வதற்கான பயணச்சீட்டு பதிவு செய்யப்பட்டது.

சில மாத பயணங்களுக்குப் பிறகு சிகாகோ சென்றடைந்த அவருக்கு மிகுந்த அதிர்ச்சி காத்திருந்தது. சர்வசமய மகாசபை மாநாடு செப்டம்பர் மாதம் தள்ளிவைக்கப்பட்டிருந்த தகவல் கிடைத்தது. சிகாகோவில் தங்கியிருந்தால் நிறைய செலவும், பணப்பிரச்சனையும் உண்டாகும் என்பதால், அவர் போஸ்டனில் தங்குவதற்கு முடிவெடுத்து தொடர்வண்டியில் பயணம் செய்தார். அவரோடு அதே பெட்டியில் பயணம் செய்த கேதே சேன்பான் என்ற பெண்மணி விவேகானந்தரின் நிலையை அறிந்துகொண்டு தமது வீட்டில் விருந்தினராக தங்க வைத்தார். அப்பெண்மணி மூலம் விவேகானந்தர் பல முக்கியமான மனிதர்களை சந்தித்தார். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் ஜான் ஹென்றிரைட். அவர்தான் சர்வசமய மகாசபையில் விவேகானந்தர் கலந்துகொள்வதற்கான சிபாரிசுக் கடிதம் கொடுத்தார். சர்வசமய மாநாட்டுப் பிரதிநிகளைத் தேர்ந்தடுக்கும் குழுத்தலைவரான டாக்டர் பரோஸிற்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தது, ‘சர்வசமய மகாசபையில் கலந்து கொள்வதற்காக ஒருவரை அனுப்புகிறேன். அவர் மெத்தப்படித்த நமது பேராசிரியர்கள் அனைவரையும் விட அறிவாற்றல் நிரம்பியவர்’ என்று விவேகானந்தர் பற்றி எழுதியிருந்தார்.

விவேகானந்தர் சிகாகோ சர்வசமய மகாசபையில் கலந்துகொள்வதற்கு முன்பாக மூன்று வாரங்களில் பதினோரு சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். விவேகானந்தர் டாக்டர் பரோஸின் சிபாரிசுக் கடிதத்தை தொலைத்துவிட்டு செய்வதறியாது திகைத்து நின்றார். உதவி செய்வார் எவருமின்றி சிகாகோ தொடர்வண்டி நிலையத்தில் ஒரு சரக்கு தொடர்வண்டி பெட்டியில் படுத்து அந்த இரவைக் கழித்தார். பொழுது புலர்ந்தது. உதவி கேட்டு சில வீடுகளின் கதவுகளைத் தட்டினார். கதவுகள் திறக்கப்படவே இல்லை. கவலையோடு அமர்ந்திருந்த தருணத்தில் எதிர் வீட்டின் கதவுகள் திறந்து ஒரு பெண்மணி வெளியே வந்தார். அவரது பெயர் கேல். அவர்தான் சர்வசமய மகாசபை பொறுப்பாளருடன் விவேகானந்தர் பேசுவதற்கு உதவி செய்தார். அதன் பின்னர் தான் விவேகானந்தர் சர்வசமய மகாசபையில் கலந்துகொள்வதற்கான பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

1893-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் நாளன்று தொடங்கிய மகாசபை கூட்டத்தில் 31-ம் இருக்கையில் அமர்ந்திருந்தார் விவேகானந்தர். இரண்டு முறை அவர் பேசுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் சிறிது தயக்கத்தோடு வர மறுத்த அவர் மூன்றாம் முறை அழைத்த போது எவ்வித குறிப்புகளுமின்றி பேசத் தொடங்கினார். ‘அமெரிக்க சகோதர, சகோதரிகளே என்று அழைத்தேன். அவ்வளவுதான் இரண்டு நிமிட நேரம் காது செவிடுபடும்படி கைத்தட்டல் அதிர்ந்தது. அதன் பிறகுதான் உரையைத் தொடரமுடிந்தது’ என்று விவேகானந்தர் பின்னாளில் அன்று நடந்தது பற்றி நினைவுகூர்ந்துள்ளார். அச்சொற்பொழிவு தான் இன்று மனிதகுல வரலாற்றில் ஒரு பொக்கிசமாகத் திகழ்கின்றன. ‘வையத்துள் வாழும் தெய்வங்களே! நீங்கள் பாவிகளா? நீங்கள் பாவிகள் அல்ல, நீங்கள் பூமியில் வாழும் தெய்வங்கள். மனிதன் தெய்வீகமானவன், அவன் தனது தெய்வீகத்தை வெளிப்படுத்தினால் போதும்’ என்ற புத்துணர்ச்சியையும், உத்வேகத்தையும் நல்கக்கூடிய புதுமையான செய்தியை இவ்வுலகிற்கு எடுத்துரைத்தார்.

நான்காண்டு காலம் மேற்கத்திய நாடுகளின் சுற்றுப்பயணத்தின் போது இந்து மதத்தின் மேன்மைகளைப் பற்றி உலகறிய செய்த விவேகானந்தர் தான் இந்து மதத்திற்குள் மண்டிக்கிடக்கும் மூடநம்பிக்கைகளையும், சாதித் தீண்டாமைகளையும் கடுமையாக சாடினார். ‘ஒரு சூத்திரன் வேதம் கேட்டால் அவன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று. ஒரு வரி நினைவிருந்தாலும் அவன் நாவை வெட்டிவிடு இம்மாதிரி வாசகங்கள் சில ஏடுகளில் (மனு ஸ்மிருதி) இருக்கின்றன. இப்படிப்பட்ட பிசாசுகள் முற்காலத்திலும் தோன்றி இருந்திருக்கிறார்கள். எல்லா காலத்திலும் இருந்திருக்கிறார்கள்’ என்று இந்து மதத்தை விமர்சனம் செய்யவும் அவர் தவறவில்லை.

மேற்கத்திய நாடுகளின் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு 1897-ம் ஆண்டு இலங்கை வழியாக இராமநாதபுரம் வந்தடைந்தார் விவேகானந்தர். அதன் பிறகு அங்கிருந்து மதுரைக்கு புறப்பட்டார். அப்போது அவரிடம் ‘தி இந்து’ பத்திரிக்கையின் நிருபர் ஒருவர் பேட்டி கண்டார். அப்பேட்டியின் போது இந்து மதம் குறித்தும், சிகாகோ சர்வசமய மகாசபை மாநாடு மற்றும் மேற்கத்திய நாடுகளின் சுற்றுப்பயணம் பற்றியும் பல்வேறு கேள்விகளை அவரிடம் எழுப்பினார் அந்நிருபர். அதில் இந்த மூன்று கேள்விகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

கேள்வி #1: இராமயணம் குறித்து உங்கள் பார்வை என்ன?

பதில்: முதன்முறையாக காட்டுக்கு சென்ற ஆரியர்கள் தம்மை விட அழகு குறைந்தவர்களை குரங்குகள் என்றார்கள். தம்மைவிட பலசாலிகளை அரக்கர்கள் என்றார்கள்.

கேள்வி #2: இராமன் வரலாற்று நாயகரா? அல்லது இதிகாச புருசரா?

பதில்: நான் அறிந்தவரையில் மதத் தலைவர்களில் வரலாற்று நாயகர்கள் இரண்டு பேர் மட்டுமே ஒருவர் கௌதம புத்தர் மற்றொருவர் முகமது நபி.

கேள்வி #3: இதிகாசங்களில் வரும் இந்துமத கதாபாத்திரங்கள் குறித்து?

பதில்: இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களை நம்புமளவிற்கு இந்து மதம் கோழையானது அல்ல என்றார்.

இன்றைக்கு சுவாமி விவேகானந்தர் உயிரோடு இருந்து இப்படிப்பட்ட பதிலை சொல்லியிருந்தால் அவரையும் தேசத்துரோகி என்றோ இந்துமதத்திற்கு எதிரானவர் என்றோ தான் தூற்றியிருப்பார்கள். நல்லவேளை விவேகானந்தர் இப்போது உயிரோடு இல்லை.

இந்தியா தந்த மாபெரும் அருட்கொடை நிறைந்த ஆன்மீக ஞானிகளில் ஒருவரான சுவாமி விவேகானந்தர் சொல்கிறார், ‘இந்தியனாகப் பிறந்த ஒவ்வொருவரும் மூன்று விரதங்களையும் இரண்டு கடமைகளையும் கைக்கொள்ள வேண்டுமென்று. அவை பசித்தவனுக்கு சோறு, நோயுற்றவனுக்கு மருந்து, அறிவற்றவனுக்கு கல்வி வழங்குவதே அந்த மூன்று விரதங்கள். இரண்டு கடமைகள் அவை, தொண்டும், துறவும். துறவு என்றால் காவி உடுத்தி திரிவதல்ல; சுயநலத்தை துறப்பது’ என்றார். ‘ஏழைகளிடமும், பலவீனர்களிடமும், நோயாளிகளிடமும் சிவபெருமானைக் காண்பவனே உண்மையில் சிவபெருமானை வழிபடுகிறவன் ஆகிறான். சிவபெருமானை சிலை வடிவில் வணங்குகிறவனுடைய வழிபாடு ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது’ என்றார். மக்கள் சேவையே இறைவனுக்கான சேவை என்பதில் உறுதியாக இருந்து செயல்பட்ட அவ்விடிவெள்ளி 1902-ம் ஆண்டு சூலை 4-ம் தேதி இவ்வுலக வாழ்விலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டார். இறைவனோடு நேரடித் தொடர்பு கொண்டிருந்த மகாயோகி விவேகானந்தரைப் போற்றுவதும், அவர் காண விரும்பிய இந்தியாவை உருவாக்குவதும் தான் நம் அடுத்தக்கட்ட செயல்பாடுகளாக இருக்க வேண்டும்.

ச. பராக்கிரம பாண்டியன்

குறிப்பு: இந்த கட்டுரையைப் போன்ற ஆக்கச்செழுமையான படைப்புகளைத் தொடர்ந்து படிக்க, தமிழ்விங் தளத்தின் Facebook மற்றும் Twitter பக்கங்களை லைக் செய்யுங்கள். விரைவில் பயனுள்ள காணொளிகளை தமிழ்விங் தளம் வெளியிட இருப்பதால், இதன் YouTube பக்கத்திலும் சப்ஸ்கிரைப் செய்து உங்களது ஆதரவினை நல்குங்கள். உங்களது தொடர்ந்த ஆதரவானது, தமிழ்விங் தளத்தில் பல நல்ல படைப்புகள் வெளிவர உதவும். மிக்க நன்றி.

4 COMMENTS

  1. இன்று விவேகானந்தர் பற்றி புதிய விசயங்களை அறிந்துகொள்ளமுடிந்தது நன்றி பா.பாண்டியன்

    • உங்கள் கருத்திற்கு மகிழ்ச்சி சகோ.

  2. விவேகானந்தர் பற்றி இப்போதுதான் இந்த அளவிற்கு தெரிந்து கொண்டேன். நன்றி.

    • உங்கள் கருத்திற்கு மகிழ்ச்சி சகோ.

Leave a Reply