எண்பதுகளின் இறுதியில், தொண்ணூறுகளின் ஆரம்பத்தில், அதிகமும் புத்தகங்களைத் தேடித்தேடிப் படித்தேன். அந்த வருடங்களில் நான் எழுதிய பல கவிதைகள், பல புனைப் பெயர்களில் (விடுதலை விரும்பி, மனோரஞ்சன், மற்றும் பல பெயர்கள்), பல இலக்கிய சிறுபத்திரிக்கைகளிலும் வெளி வந்துள்ளன. அவை அனைத்தும் தொகுப்பாக, “துளிரும் சிறகு”, “கனவை விதைப்பவன்” ஆகிய கவிதைத் தொகுப்பில் வெளிவந்துள்ளன. இப்படியாக நான் எழுதிய பெரும்பாலான கவிதைகள், அடர்ந்த இருளில் எழுதியவை தாம்.
தூங்கச் செல்லும் போது, சில காகிதங்களையும், பென்சில் அல்லது பேனாவையும் அருகில் வைத்துக்கொண்டு தூங்கச் செல்வேன். உறக்கம் வராத இரவுகளின் நடுவில், மனம் விகசித்த கணங்களில் எழுந்து, லைட் எதையும் போடாமல், அப்படியே இருள் சூழ்ந்த நிலையில், அந்த காகிதத்தில் எழுதிவிடுவேன். வரிகள் வரிசையாக இல்லாமல், சில நேரங்களில் ஒன்றின் மேல் ஒன்றாக, படிக்க சிரமம் தரும் வகையில் தான் இருளில் எழுத இயன்றது. அதன் பிறகு, அடுத்த நாள் பகலில், அந்தக் கவிதைகளை அழகாக மற்றொரு தாளில் எழுதி சிறுபத்திரிக்கைகளுக்கு அனுப்புவேன். கிட்டத்தட்ட கோஸ்ட் கவிஞர் மாதிரி தான் பலவற்றையும் அப்போது எழுதினேன்.
இரண்டாயிரத்தின் தொடக்கத்தில், திருமணம் ஆன பிறகு, பொருளாதாரம் தேடி ஓடியதில் பல வருடங்கள் எழுதுவதை விட்டுவிட்டேன். பிறகு முகநூல் வந்த பிறகு தான் எழுத ஆரம்பித்தேன். இதிலும் ஐபோன் மூலமாகத் தமிழில் எழுதும் வசதி இருந்தது மிக முக்கிய காரணம். முகநூல் மற்றும் ஐபோன் இல்லை எனில், மீண்டும் எழுதும் சந்தர்ப்பம் வாய்த்திருக்குமா எனத் தெரியவில்லை.
நிறைய எழுதவேண்டும் என, ஆப்பிள் மேக் லேப்டாப் வாங்கினேன், பிறகு ஆப்பிள் டேப்லெட் வாங்கினேன், இதனால் எல்லாம் எழுதுவது அதிகரிக்கவேயில்லை என்பதே உண்மை.
வசதிகள் என்னை எழுதத் தூண்டவில்லை. எழுத்தாளன் எனப் பெருமையாகச் சொல்லிக்கொள்வதற்காக எழுதலாம் எனப் பார்த்தால், இதுவும் என்னை எழுதத் தூண்டவில்லை.
எழுதுவதற்கான வசதிகள், எழுதுவதற்கான ஆசை இருந்தும் கூட, இவை எழுதும் பழக்கத்தை இம்மி அளவு கூட உயர்த்தவில்லை.
“எழுதுவதற்கு எனப் பிரத்தியேக மனநிலை தேவைப்படுகிறது”. சஞ்சலம் கொண்ட மனம், ஆற்றாமை கொண்ட மனம், ஏமாற்றம் கண்ட மனம், கோபம் கொண்ட மனம், அழகை ஆராதிக்கும் மனம், அன்பில் உருகும் மனம், கருணை கொண்ட மனம், மாற்றம் விரும்பும் மனம், முன்னேறத் துடிக்கும் மனம், என வேறுபட்ட பிரத்தியேக மனநிலைகள் தான் என்னை எழுதத் தூண்டுகின்றன.
கடந்த ஆறு வருடங்களாக, ஐபோன் மொபைல் மூலமாக, ஓரிரு விரல்களைப் பயன்படுத்தியே எழுதி வருகிறேன். எங்கேனும் அமர்ந்திருக்கும் போது, எங்கேனும் வரிசையில் நிற்கும் போது, டாக்சியில் செல்லும் போது, யாருக்கேனும் காத்திருக்கும் போது, விமானத்தில் பறக்கும் போது, டீ குடிக்கும் போது, உறக்கம் வராமல் படுத்திருக்கும் போது என, எப்போதெல்லாம் நேரமும் மனமும் ஒருங்கிணைகிறதோ, அப்போதெல்லாம் எதையேனும் எழுதுகிறேன்.
எழுதத் தேவைப்படும் சூழல்; வசதியானதாக, சப்தம் இல்லாமல் அமைதியானதாக, ரம்மியமானதாக இருக்கவேண்டுமா? என்றால், எனக்கு இவை எல்லாவற்றையும் விட, பிரத்தியேகமான மனநிலை பிரதானமாக உள்ளது.
மாயன் மெய்யறிவன்
குறிப்பு: இந்த கட்டுரையைப் போன்ற ஆக்கச்செழுமையான படைப்புகளைத் தொடர்ந்து படிக்க, தமிழ்விங் தளத்தின் Facebook மற்றும் Twitter பக்கங்களை லைக் செய்யுங்கள். விரைவில் பயனுள்ள காணொளிகளை தமிழ்விங் தளம் வெளியிட இருப்பதால், இதன் YouTube பக்கத்திலும் சப்ஸ்கிரைப் செய்து உங்களது ஆதரவினை நல்குங்கள். உங்களது தொடர்ந்த ஆதரவானது, தமிழ்விங் தளத்தில் பல நல்ல படைப்புகள் வெளிவர உதவும். மிக்க நன்றி.
எழுத்தை மட்டுமே பார்த்து படித்த நாங்கள் தற்போது எழுத்தாளர் எந்த சூழ்நிலையில் அதை எழுதியிருப்பார் என்று அறிவு விருந்து யோசிக்க தொடங்கியுள்ளது