நமது குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயரைச் சூட்டுவோம்

ராஜலட்சுமி சுரேஷ்

0
812

சமீபத்தில் எனக்குத் தெரிந்தவரின் மகளுக்குப் பிறந்த குழந்தைக்கு, பெயர் சூட்டு விழா நடந்தது. நான் அவரிடம் குழந்தைக்கு என்ன பெயர் வைத்தார்கள் என்று கேட்டேன். அவரோ, ‘ஏதோ அவர்கள் இஷ்டத்துக்குப் பெயர் வைத்து இருக்கிறார்கள். எத்தனை முறை முயற்சி செய்தாலும் வாயிலேயே நுழைய மாட்டேங்குது.’ என்று சற்றே கிண்டலோடு கூறினார். அவர் கிண்டலோடு கூறினாலும், எனக்கு என்னவோ இப்போதைய குழந்தைகளின் பெயர்களை நினைத்தால் வருத்தமாகவே இருக்கிறது. அந்தக் காலத்தில் முன்னோர்களின் பெயர்களையும், நல்ல தமிழ்ப் பெயர்களையும் அழகாகவும், அர்த்தமாகவும் வைத்தார்கள். நமக்குக் குப்பன், சுப்பன் என்று பெயர் வைக்க விருப்பம் இல்லை எனில், அழகான நல்ல தமிழ்ப் பெயர்கள் எவ்வளவு இருக்கிறது, அதையெல்லாம் வைக்கலாமே.

வாயில் நுழையாத வடநாட்டுப் பெயர்களையும், கூகிளில் தேடித் தேடிக் கூப்பிடவே கடினமான பெயர்களையும் வைக்க வேண்டியதன் அவசியம் என்ன இருக்கிறது. உலகத்திலேயே அதிகமான எழுத்துக்களையும், வார்த்தைகளையும் கொண்ட மொழிகளில் நம் தமிழ் மொழியும் ஒன்று. அதில் உள்ள பெயர்களை நம் பிள்ளைகளுக்கு வைத்து வாயாரக் கூப்பிட்டு மகிழ்வோமே. இன்று பல பெற்றோருக்கு தம் குழந்தைகளின் பெயருக்கான அர்த்தங்கள் தெரியாமல் இருக்கிறது. அர்த்தம் உள்ள தமிழ்ப் பெயர்கள் ஏராளமாக உள்ளன. நம் முன்னோர்களின் பெயர்கள் கூட, நல்ல தமிழ்ப் பெயர்களாக இருந்தால் அதை நம் பிள்ளைகளுக்கு வைப்பதன் மூலம் நமது முன்னோர்கள் பற்றி அவர்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

ஒரு மனிதனின் பெயர் அவனுக்கு மட்டும் அடையாளம் அல்ல. அந்தப் பெயரால் அவனைச் சார்ந்த பண்பாடு, கலாச்சாரம் போன்றவையும் அடையாளம் காணப்படுகின்றன. எனவே நமது தமிழ்ப் பெயர்களையே முடிந்தவரை நம் குழந்தைகளுக்கு வைக்க முயற்சி செய்வோமா?

ராஜலட்சுமி சுரேஷ்

குறிப்பு: இந்த கட்டுரையைப் போன்ற ஆக்கச்செழுமையான படைப்புகளைத் தொடர்ந்து படிக்க, தமிழ்விங் தளத்தின் Facebook மற்றும் Twitter பக்கங்களை லைக் செய்யுங்கள். விரைவில் பயனுள்ள காணொளிகளை தமிழ்விங் தளம் வெளியிட இருப்பதால், இதன் YouTube பக்கத்திலும் சப்ஸ்கிரைப் செய்து உங்களது ஆதரவினை நல்குங்கள். உங்களது தொடர்ந்த ஆதரவானது, தமிழ்விங் தளத்தில் பல நல்ல படைப்புகள் வெளிவர உதவும். மிக்க நன்றி.

Leave a Reply