தமிழ் இயலன் கவிதைகள் – ஒரு பார்வை

பொன். குமார்

0
444

கவிஞர் தமிழ் இயலனின் கவிதைப் பயணம் மிகச் செறிவானது. திட்டமிடப்பட்டது. வாழ்க்கையில் ஓர் இலட்சியப்பிடிப்புடன், கொள்கையுடன் வாழ்ந்து வருபவர். என்னவாக வேண்டும், எப்படியாக வேண்டும் என்பதைத் தீர்மானித்த படியே படிப்படியாக முன்னேறிக் கொண்டிருப்பவர். அவரின் வளர்ச்சி பல பரிமாணங்களைக் கொண்டது. எழுத்தினும் தன் பரிமாணத்தைக் காட்டியுள்ளார்.

தந்தை மகனுக்குச் செய்யும் கடமைகள் எதுவாயினும் மகன் தந்தைக்குச் செய்யும் கடமை முதுமை காலத்தில் பராமரிப்பது. பெரும்பாலான மகன்கள் தந்தையை முதியோர் இல்லத்தில் பொறுப்பாக விட்டு விடுகின்றனர். உடன் வைத்துப் பராமரிப்பதில்லை. அருகிருந்து அன்பு செலுத்துவதில்லை. ‘மகனின் மகனாகி’ கவிதையில் தந்தைப் போற்றும் ஒரு மகனைக் காட்டுகிறார். அனைத்து மகன்களுக்கும் எடுத்துக் காட்டு ஆக்குகிறார். அந்திமகாலத்தில் பெற்றோரிடம் நடந்து கொள்வது எப்படி என்று விவரித்துள்ளார்.

கதை சொல்லுதல் மக்களிடையே காலம் காலமாக இருந்து வருகிறது. ஒரு ஊரில் ஒரு ராஜா கதையில் தொடங்கி பல்வேறு கதைகள் வாய்மொழியாகவே சொல்லப்பட்டு வந்தன. பதிவு செய்யப் படாமலே போனவை ஏராளம். கதை சொல்வதை விட்டு இன்று ஆளுக்கு ஆள் மாற்றி மாற்றிக் கதை விட்டுக் கொண்டிருக்கின்றனர். இட்டுக் கட்டிச் சொல்வதும் உண்டு. கவிஞரும் ‘கதை’ சொல்லியுள்ளார். கதைக்காக உண்மைக் கதைகள் சொல்லப் படாமலே உள்ளன என்று கவலைப் பட்டுள்ளார். மூலக் கதைகளைச் சொல்பவர்கள் கதைக்கான மூலத்தையும் சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு ‘கதை சொல்’ என்றும் ஒரு கவிதையில் சொல்லியுள்ளார். ‘ பாட்டி’ கவிதை அருமை. பாட்டியிடம் சுட்ட கதையை விற்றுக் கொண்டிருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

விவசாயம் இந்திய நாட்டின் பிரதான தொழில் என்றாலும் விவசாயத்தைக் கை விட்டுவிட்டு வெளி நாட்டு நிறுவனங்களில் வேலைத் தேடிக் கொள்கின்றனர். நம் நாட்டில் பகல் என்றால் வெளி நாட்டில் இரவு, அவனுக்காக இரவு நேரத்தில் வேலை பார்ப்பதால் நம் நாட்டில் பகலில் உறங்க வேண்டி உள்ளது. இச்சூழலிலேயே கவிஞரும் ‘பகலில் உறங்கப்பழகு’ என்று வருத்தப்பட்டுக் கூறியுள்ளார். நாம் நம் வாழ்வைத் தொலைத்து விட்டோம் என்கிறார்.

பெண்கள்
உருவாக்குகிறார்கள்
வாழ்க்கையை
மறைக்கப்
படுகின்றனர்
வரலாற்றில்
“இன்று முதல்’ பெண்ணியம் பேசியுள்ளார். ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் பெண் என்பவள் முக்கிய பங்கு வகிக்கிறாள். பெண்ணின்றி வாழ்வு அமைவதில்லை. மனித வாழ்க்கை முழுமையாவதற்குப் பெண்ணே அடிப் படை. அச்சாரம். ஆதாரம். ஆனால் பெண்கள் முன்னிலைப் படுத்துவதில்லை. சமமாகக் கொள்வதுமில்லை. அடிமைப் படுத்தப்படுத்தப்பட்டே வந்துள்ளனர். அன்று முதல் அடிமைப் படுத்தப்பட்டு வருவதற்குக் கவிஞர் ‘இன்று முதல்’ குரல் கொடுத்துள்ளார். பெண்ணியம் பேசியுள்ளார்.

பெண்கள் குடும்பத்தில் அடிமைப்படுத்தப்பட்டதைப் போல சமூகத்தில் அடிமைப்படுத்தப் பட்டவர்கள் தலித்துகள். காலம் காலமாகவே தீண்டாமை நீடித்து வருகிறது. முன்பு வெளிப் படையாக இருந்தது தற்போது இலை மறை காயாக உள்ளது. ‘நீங்களும் நாங்களும்’ கவிதையில் தலித்தியம் குறித்த தன் பார்வையைத் தெரிவித்துள்ளார்.

கலீலியோ பற்றிப் பேசும் போது பல அறிவியல் உண்மைகளைக் கவிஞர் கூறியுள்ளார். அதில் ஒரு உண்மை.
உண்மை
வெளிச்சமாகும் போது
மதங்கள்
மையம் விட்டு விலகும்
மதங்கள் உண்மையை மறைக்கின்றன என்கிறார். மக்கள் உண்மையை உணர வேண்டும் என்கிறார். மையம் விட்டு என்பதை மனம் விட்டு விலகும் என்பது பொருத்தமாக இருக்கும்.

பூமியின் மொத்த பரப்பில் நிலம் ஒரு பகுதி என்றால் நீர் மூன்று பகுதியாகும். ஆனால் மக்கள் பயன் பாட்டுக்கான நீரின் அளவு ஒரு சதத்திற்கும் குறைவே. நீர் பயன் பாடு மிக மிக அவசியம். முக்கியம். நீரின்றி அமையாது உலகு. முதலில் இரண்டு போர் நடந்து முடிந்து விட்டது. மூன்றாம் உலகப் போர் அமையும் என்றால் அதற்குக் காரணம் நீராகவே இருக்கும். நீர் குறித்த மூன்று கவிதைகளிலும் நீரால் போர் மூளும் அபாயம் உள்ளது என்று எச்சரித்துள்ளார். நீரின் தேவையையும் உணர்த்தியுள்ளார்.

புத்தகங்கள் எழுதப்படுவதே வாசிப்பிற்குத்தான். புத்தகக் கண்காட்சி போல வீட்டில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப் படுவது அர்த்தமற்றது. ‘புத்தகங்கள்’ வாசிக்கப்பட வேண்டியவை என்கிறார்.
அதியமானை விடத்
தொண்டைமானையே
அதிகம் புகழ்கிறார்கள்
நவீன அவ்வையார்கள்
தொன்மத்தைக் கையாண்டு எழுதியுள்ளார். புத்தகத்தைப் பயன்படுத்தாமல் அடுக்கி வைப்பவர்களையே மக்கள் பாராட்டுவதாக வரலாற்று உவமையுடன் தெரிவித்துள்ளார் கவிஞர் ஓர் அதியமான் என்பதையே காட்டுகிறது.

வியாபாரம் செய்ய வந்து ஆட்சியை, அதிகாரத்தைக் கைப்பற்றிய அன்னியர்களை விரட்டியது. இந்தியத் திருநாட்டில் வியாபாரத் தளமாக ‘சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்’ அமைக்கப் படுவது சீரழிக்கவே என்கிறார். ஆபத்தானது என்றும் எச்சரித்துள்ளார். ‘தாரை வார்த்தல்’ தலைப்பே அழிவை உணர்த்துகிறது.

மனிதர்கள் இன வாரியாக, சாதி வாரியாக பிரிந்து கிடக்கிறார்கள். சாதியிலும் உயர்ந்தது, தாழ்ந்தது என இரு வகுப்புகள். வாழும் போது இல்லாத ஒற்றுமை இறக்கும் போதும் இல்லை. சாதிக்கொரு சுடுகாடு. இட நெருக்கடியால் இன்று மின் மயானங்கள். மின் மயானங்களால் சமத்துவம் ஏற்பட்டுள்ளது என்கிறார். ‘நிறைவுக் காதை’ யை இயற்றியுள்ளார். ஆயினும் முஸ்லிம் மதத்தவரும் கிருத்துவ மதத்தினரும் அவரவருக்கு என்று தனித்தனி சுடுகாடு வைத்துள்ளனர். எனினும்
உலகமே மயானமாகும்
ஊழிக் காலத்தின்
முள் நொடி வரையில்
உயிரோடிருக்கலாம்
மனித வேற்றுமைகள்
என்றும் கவலைப் பட்டுள்ளார்.’செவ்வாயில் நீர் நிறைந்தால்’ அங்கே குடியேறி ஒற்றுமையாக வாழ வாய்ப்புள்ளது என்கிறார்.

ஈழப் பிரச்சனை ஒரு முடியாத பிரச்சனை. ஈழத் தமிழர்கள் தனி நாட்டுக்காக போராடிக்கொண்டுள்ளனர். இலங்கை அரசால் பாதிக்கப் பட்டுள்ளனர். கொல்லப் பட்டுள்ளனர். கொடுமைப் படுத்தப் பட்டுள்ளனர். காடுகள் சார்ந்து, அழையா விருந்தினர், எமது தலைநகர் பாலச்சந்திரனுார் ஆகிய கவிதைகளில் ஈழப் பிரச்சனை குறித்துப் பேசியுள்ளார். ஈழத்திற்கு ஒரு முடிவு வேண்டும், ஒரு விடிவு வேண்டும் என்கிறார்.

குழந்தைகள் உலகம் அலாதியானது. குழந்தைகள் உலகத்திலும் நாம் நுழைய முடியாது. குழந்தைகளின் செயல்களிலும். நடவடிக்கைகளிலும் குறுக்கிடுவது அவர்களின் ஆற்றலையும் அறிவையும் வளர்ச்சியையும் தடுப்பதாக இருக்கும். வெளியில் நின்று ரசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். கிறுக்கல்கள், உடைத்துத் தொலைக்காதீர், கோடை விடுமுறையில் ஆகிய கவிதைகள் குழந்தைகளை மையமாகக் கொண்டதாகும். குழந்தைகளைப்போற்ற வேண்டும். கொண்டாட வேண்டும் என்கிறார்.

தொகுப்பின் நிறைவாக ஹைக்கூக்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு மூன்று வரியிலும் ஒரு முக்கிய பிரச்சனையை முன் வைத்துள்ளார். புதுக் கவிதையைப் போலவே ஹைக்கூவிலும் கவிஞரின் ஆற்றல் வெளிப் பட்டுள்ளது.

இயக்குவதற்காகவே
முடக்குவதற்கன்று
விதிகள் வன்முறைகள்.

நேற்றைய போராளிகள்
இன்றைய தலைவர்கள்
வரலாறு காண்.

சான்றுக்காக இரண்டு மட்டும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.சிறியதாயினும் சிந்திக்கச் செய்கின்றன.

கவிஞர் தமிழ் இயலனிடம் சமூகம் சார்ந்த சிந்தனைகள் மிகுந்துள்ளன. அதில் மனிதப் பற்று, மொழிப் பற்று, இனப் பற்று ஆகியவையே காணப்படுகிறது. கடந்த கால பதிவுகள் குறித்து மட்டும் பேசாமல் சமகால நிகழ்வுகள் மீதான எதிர்வினைகளையும் உடனுக்குடன் ஆற்றியுள்ளார். தன் பங்களிப்பை உறுதிப் படுத்தியுள்ளார். பெண்ணியம், தலித்தியம், குழந்தையியம் என்று அனைவருக்கும் பொதுவான ஒரு கவிஞராக, ஒரு பிரதிநிதியாகச் செயல்பட்டுள்ளார். ஒரு வழக்குரைஞராக வாதாடியுள்ளார். வாசிப்பவரையும் தூண்டியுள்ளார். கவிதைகள் நேர்படப் பேசுகின்றன. நெஞ்சைத் தொடுகின்றன. சமூகத்தில் ஒரு மாற்றத்தை விரும்பியுள்ளார். மாற்றத்திற்கான விதையினை விதைத்துள்ளார். அவரின் மூன்று தொகுப்புகளையும் தனித்தனியே வாசித்த அனுபவத்தை விடத் தேர்ந்தெடுத்த கவிதைகளை வாசிப்பது ஒரு தனி அனுபவமாக உள்ளது. அவரின் கவிதை உலகத்தை அறியச் செய்கிறது. தமிழ் மொழி மீது பற்றுடையவர் என்பதால் தமிழ் மொழி அவரின் கவி மொழிக்கு நன்கு உதவியுள்ளது. இலக்கு எட்ட வேண்டிய தூரம் எங்கோ உள்ளது. அதுவரை அவரின் இலக்கிய பயணம் தொடர வேண்டும்.

பொன். குமார்

Leave a Reply