ஒளிப்படம் எடுக்கும் போது, காட்சி அமைப்பு (Composition), படத்தின் வழி செய்தி சொல்லுதல் போன்றவவை முக்கியமானவை. பிரபல சுற்றுலாத் தலங்களின் முன்னின்று ஒளிப்படம் எடுக்கும் போது நாம் பலரும் சில அடிப்படைத் தவறுகளைச் செய்கிறோம்.
படங்களில் கை, கால், சில நேரம் தலையின் பகுதியைக் கூட வெட்டி விடுவது. இடுப்பளவு வைத்து எடுப்பதைச் சொல்லவில்லை, ஆனால் முழு ஆளையும் எடுக்கும் போது, காலின் அடிப்பகுதியை வெட்டிவிட்டால், காட்சியில் ஒருவரை வெட்டி ஒட்டி நிற்க வைத்த உணர்வுதான் வரும்.
தங்களை நடுநாயகமாக வைத்து அவசியமான மற்ற காட்சிகளை அறையும் குறையுமாக வைத்துவிடுவது. கோவில் உச்சி இருக்காது, ஆனால் காலுக்குக் கீழே நிறையத் தரைப்பகுதி இருக்கும். இதே போலக் கோவிலை முதன்மைப்படுத்தி எடுக்க நினைத்து தங்களது தலைகளை வெட்டி சொருகிக்கொண்டது போல் எடுப்பது. இப்படியாக முழுமை பெறாத படங்களை எடுப்பதைத் தவிர்க்கலாம். சிறிது முன்பின் நகர்ந்தோ, கீழே அமர்ந்தோ குனிந்தோ காட்சியைப் பார்த்தாலே இப்படிப்பட்ட தவறுகளில் பாதியைத் தவிர்த்து விடமுடியும். ஆகவே காட்சிகளை எவ்வாறாக அமைப்பது என்பதனை அறிந்துகொள்வது, ஒளிப்படக்கலையில் மிக முக்கியமானதாகும்.
உதாரணமாக இந்த இரு படங்களை எடுத்துக்கொள்வோம். முதல் படத்தில், மேற்பகுதியைத் தவிர்த்து கோணத்தை உதாரணமாக இந்த இரு படங்களை எடுத்துக்கொள்வோம். முதல் படத்தில், மேற்பகுதியைத் தவிர்த்து கோணத் கீழிறக்கி, எடுப்பவர் உட்கார்ந்து அல்லது நிற்பவர்களைச் சற்றே பின் நகரச் செய்து எடுத்திருந்தால் கால்கள் வெட்டுப்பட்டிருக்காது. இரண்டாம் படத்தில், தேவையற்ற கீழ்ப்பகுதியைத் தவிர்த்து, மேலே உச்சியைக் கூட்டியிருக்கலாம். பனிமூட்டமுள்ள இப்படத்தில் இதன் அவசியம் குறைவாகத் தோன்றலாம், ஆனால் இதைப்போன்ற தவறுகள் பலவிடங்களில் படத்தைக் கெடுத்துவிடும்.
காட்சி அமைப்பு என்பதைச் சுருக்கமாக விளக்கவேண்டுமென்றால் “ஒரு படத்தை ஒருவரது விருப்பம், கற்பனை, உணர்வு இன்னபிற சிந்தனைகளுக்கேற்ப வடிவமைத்து உருவாக்குவது” எனலாம், இதனுள் கோணம், காட்சியினுள் உள்ளனவற்றினை – அதன் பல்வேறு கூறுகளை இணைத்தல், முறைப்படுத்துதல் என நிறையச் சொல்லலாம். எளிமையாகப் புரிந்துகொள்ள ஒரு திருமண மேடையை அலங்கரிக்கப் போடும் திட்டம் போன்றது எனலாம். சில அடிப்படை விதிகள் மற்றும் முறைகளைப் பயன்படுத்தப் பல கருவிகளில் உற்பத்தியாளர்களே சில உதவும் வழிவகைகளைச் செய்து வைத்திருக்கிறார்கள். உதாரணத்திற்குப் படமெடுக்கையில் இரு கோடுகள் அல்லது அதனது குறுக்குவெட்டு இடங்களில் குறிகள் தென்படுவதைக் கவனித்திருக்கலாம். அது சில விதிகளை கடைப்பிடிக்கத்தான்.
மூன்றில் ஒரு பங்கு விதி (Rule of thirds, 1/3rd rule) இதில் ஒரு காட்சியை மேலும் கீழுமோ, இடமிருந்து வலமோ மூன்றாகப் பிரித்து நமக்குத் தேவையானவற்றை அப்பிரிக்குமிடங்களில் அமைப்பது. இவ்விரு படங்களில் அதைப்போன்ற அமைப்பைக் காணலாம். இவ்விதியைப் பரவலாக இயற்கைக் காட்சி (landscape) படங்களில் அதிகமும் காணலாம். கடல் அல்லது மலையின் எல்லையை (horizon) இதன்படி வைக்கையில், அது ஒரு கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம். இது பரவலாக பின்பற்றப்படுவதுதான், ஐரோப்பிய ஓவியங்கள் பலவற்றிலும் இதனைக் காணமுடியும்.
இதேபோல் நாம் எடுக்கவிருக்கும் ஒன்றை நடுவில் வைத்து அமைப்பது மற்றொரு விதி. சமச்சீராக (symmetry) அமையப்பெற்றிருக்கும் காட்சிகளில் இதை அதிகம் காணலாம், அங்கு இவ்விதி வலிமை சேர்க்கும்.
இப்படி இன்னும் நிறைய விதிகள் உண்டு. மேற்சொன்ன விதிகளை வைத்து ஒரு மனிதரை, விலங்கை எடுக்கையில் அவரது – அதனது பார்வை எப்பக்கம் பார்க்க அமைந்திருக்கிறதோ அப்பக்கம் காட்சிகள் அதிகம் தெரிவதுபோல் வைத்தால், நமது பார்வை தானாக அவைகளைத் தேடிப்பார்க்கும். ஏனெனில் காட்சியில் உள்ளவர் – உள்ளது அப்பக்கம் பார்ப்பதால். வாசலில் நிற்கும் நண்பர் வானத்தைப் பார்த்தால், நாம் என்ன செய்வோம்? எதைப் பார்க்கிறார் என வானத்தை பார்ப்போம் அல்லவா? அதே உளவியல்தான். நம்மையறியாமல் நாம் செய்யும் செயல்.
இப்படி பலவற்றையும் கருத்தில் கொண்டுதான் காட்சியை அமைக்க வேண்டும். அப்போதுதான் காட்சியின் பல்வேறு அம்சங்களை ஒன்றோடொன்று தொடர்புப்படுத்தி பார்வையாளரின் கவனத்தை அவைகளின் மேல் படர, ஈர்க்க வைக்க முடியும்.
இந்த படங்களை வைத்ததில் கூட அந்த முறையைக் கவனிக்கலாம். இடது வலமாக மாற்றி வைத்திருந்தால் இவ்விரு படங்களின் பாத்திரங்கள் எதிரெதிரே பார்ப்பது போல் அமைந்து அந்த நயம் (rhythm) கிடைக்காமல் செய்திருக்கும். மற்றபடி இப்படிப்பட்ட விதிகள் அனைத்து இடங்களுக்கும் பொருந்த வேண்டுமென்ற அவசியமில்லை. வழிகாட்டலுக்கு மட்டுமே. தேவைபடுமிடங்களில் உடைக்கவும் செய்யலாம். ஆனால் விதிகளை உடைக்கக் கூட அதனைப் பற்றிய சில அடிப்படை புரிதல் பெற்றிருப்பது அவசியம். இங்கு நீங்கள் பார்த்த படங்களில் மற்றொன்றையும் கவனித்திருக்கலாம், அது படங்களில் வடிவங்கள் (Shapes) மாறுபட்டிருப்பதை. சில சதுரமாக, சில செவ்வகமாக, அவ்வடிவங்கள் அப்படத்திற்குப் பொருந்துவதாக, மெருகேற்றுவதாகத் தோன்றியதால் Crop செய்து இருப்பார்கள். இது எனது விருப்பு, இரசனைக்கேற்ற முடிவு. நம் ஒவ்வொருவருக்கும் இவை மாறுபடலாம். இதுதான் சரியான படைப்பு என வாதிடக் கூடிய ஒன்றல்ல ஒரு ஆக்கம்.
செய்தி – கதை சொல்லுதல் பற்றி ஊடகத் துறையில் இருப்போருக்கு நன்கு தெரிந்திருக்கும். போர், வறுமை, பஞ்சம், சூழல் கேடு, போராட்டம் போன்றவற்றைச் சொல்வதில், மக்கள் மனதில் தாக்கம் ஏற்படுத்தும் படங்களுக்கு மிக முக்கிய பங்குண்டு. பல உணர்வுகளை நொடியில் பரிமாற்றும் வலிமை அதற்குண்டு. பெரும் ஊடக நிறுவனங்களில் படங்களைத் தேர்ந்தெடுக்கத் தனிக் குழுவே வைத்திருப்பார்கள். அப்படியெனில் ஊடகத் துறை அல்லாதவர்களுக்குப் பயன்பாடு இல்லையா என்றால் கண்டிப்பாக இருக்கிறது என்றே சொல்லவேண்டும். குடும்ப நிகழ்வில், ஊர் கூடும் விழாக்களில், பயணங்களில் என நமது அன்றாட வாழ்வின் பல இடங்களிலும் இதற்கு வாய்ப்புண்டு. நாம் வேண்டுமானால் அவற்றைக் கவனிக்கத் தவறியிருக்கலாம். இன்றைய நவீன செய்தி பரிமாற்ற உலகில் நம் ஒவ்வொருவருக்கும் நம்மைச் சுற்றி நடப்பவற்றைப் பற்றிச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருக்கும்.
மாடு உட்கார்ந்திருக்க மாடுபிடி வீரர்கள் ஏன் பயந்து மேலேறித் தொங்கிக்கொண்டு இருக்கவேண்டும்?
இப்படத்தைப் பார்த்த அனைவருமே அதிசயித்து ஆவலோடு ஏன்? என்ன நடந்தது? மாடு அவர்களைத் துவசம் செய்ததா? எனப் பல கேள்விகள் கேட்டிருக்கிறார்கள். மர்மம், அந்த தருணம்! அதுதான் கதையின் துவக்கம்! பிறகு காரணத்திற்கான மற்ற படங்களைக் காட்டுவேன். இந்த கதை சொல்லுதலுக்கு அந்த சரியான ‘தருணம்’ மிக அவசியம். பலநேரங்களில் அது நொடியில் கூட மாறிவிடும், உதாரணத்திற்கு வனவிலங்கு வேட்டை, போராட்டக்களம் போன்றதைச் சொல்லலாம். அத்தருணங்களைத் தவறவிடாமல் பிடிப்பதில்தான் இருக்கிறது ஒருவது திறமை. அனுபவம் அதற்குதவும். சரியாகப் பிடித்துவிட்டால், படம் தானே கதையைக் கொண்டு சேர்த்துவிடும்.
அன்றாட தெருவோர காட்சிகளில் கூட கதைக்கான கரு நிறைய இருக்கும். இங்கு உள்ள அந்த குளத்துக் காட்சி எனது உணர்வுகளை, சினத்தைத் தூண்டிய ஒன்று, சமூகமாக நாம் வெட்கப்பட வேண்டிய அவலமென்பேன். பாட்டி பேத்தி எல்லோர் வீட்டிலும் நடப்பதுதான் என்றாலும் ஒவ்வொரு முறை அதைக் காண்கையில் வெவ்வேறு கதைகளை, நினைவுகளை அது என்னுள் தோற்றுவிக்கும் ஒன்று. சரி, எனக்குள் அப்படி உணர்வுகள் தோன்றினால் உடன் அது நல்ல படம் என்றாகிவிடுமா என்றால், ஆமென்று சொல்லமுடியாது. நல்ல படமாகவும் இருக்கலாம்! ஆனால் எடுத்தவருக்கே எந்த உணர்வுப்பூர்வமான தொடர்பும் ஏற்படவில்லையென்றால் பார்ப்போருக்கு எழும் வாய்ப்பு அரிதே. சொல்ல விழைவது, உங்களுக்குச் செய்தி சொல்லும் காட்சிகள் தென்பட்டால், சிந்தித்து வடிவமைப்பது உங்கள் கையில் என்பதே.
இரா. கார்ல் மார்க்ஸ்
தொடர்புடைய முதல் பகுதி கட்டுரை: மனதைக் கவரும் ஒளிப்படம் (Photography) எடுப்பது எப்படி?