படைப்புக் கனவு

மாயன் மெய்யறிவன்

0
269

ஒரு எழுத்தாளர்
என்னை சந்திக்க விரும்பினார்.
சந்தித்தார்.
இதுவரை
பத்து புத்தகங்களை வெளியிட்டவர்.

என் நல்ல(அ)கெட்ட நேரம்
அவரைப் பற்றி
எதுவும் அறிந்திருக்கவில்லை.
அவர்
எழுத்தாளர் என்பதும்,
புத்தகங்களின் ஆசிரியர் என்பதும்
அவர் சொல்லித்தான்
தெரிய வந்தேன்,
என்பதைக் காட்டிக்கொள்ளாமல்
சமாளித்துப் பேசினேன்.

பணம் வாழ்க்கை அல்ல என்றார்.
தத்துவங்கள் பல சொன்னார்.
உலக நிகழ்வுகளைப் பகிர்ந்தார்.
அன்பை, காதலை, சகோதரத்தைப் பேசினார்.
நுண்கலை என்றார். நவீன இலக்கியம் என்றார்.
இத்தக் கணத்தில் வாழவேண்டும் என்றார்.
இருப்பதை வைத்து நிம்மதிகொள்வோம் என்றார்.
நிகழ்காலம் என்றார்.
சும்மா இருப்பதே சுகம் என்றார்.

அவர் பேசப்பேச,
ஆச்சரியம் விரிய
நூதன உலகில் சஞ்சாரம் கொண்டேன்.

நீங்களெல்லாம்
அலுவலக சக்கரத்தில் மாட்டி
வாழ்வைத் தொலைத்தவர்கள் என்றார்.
‘ஆம்’ என்றேன்.
நானும் ‘எழுத்தாளன்’ ஆவேன் என்றேன்.

மேலும்,
நினைத்துக்கொண்டேன்.
இவரைப்போல
சுதந்திரமாய் வாழவேண்டும் என்று.
என் பொறியாளன் பணியும் ஒரு வாழ்வோ
என்று மருகி நின்றேன்.

விடைபெறும் நேரத்தில்,
தயக்கத்துடன்,
ஆயிரம் ரூபாய் கடன் கேட்டார்.
இவ்வளவு பெரிய எழுத்தாளரிடம்,
ஒரு ஆயிரம் ரூபாய்கூட இல்லையா?
என்று அதிர்ந்து நின்றேன்.
என் கனவுகள் திசை மாறக் கண்டேன்.
நிகழ்காலத்திற்கும் பணம் முக்கியம் என கண்டேன்.

மாயன் மெய்யறிவன்

Leave a Reply