புரியாத பிரியங்கள்

0
291

பிரசாந்தி ஜெயபாலன்

வைகறைப் பொழுதில்
பசும்புல் மஞ்சத்தில்
துயிலும் பனித்துளிகள்.
மெல்லென வந்து
மேனியை வருடும் இளங்காற்று.
நாணத்தால் சிவந்து
கதவிடுக்கினூடே
மெல்ல மெல்லத் தலைகாட்டும்
மழலையாய்
கீழ்வானிலிருந்து
கீற்றாகும் சூரியன்.

அவன் வரவால்
அகம் மகிழ்ந்து
அசைந்தாடும் மலர்க்கூட்டம்.
மாயம் பல புரியும்
மாரீச மான் போல
விந்தை ஒலிகளுடன்
விரையும் பட்சிகள்.
சூரியக் கிரணங்கள்
சுட்டெரிப்பதாய் பயமுறுத்தும்
தங்கவெயில் காயும்
நண்பகல் வேளையில்
வரிவரிக்கோடாய்
நீர்க்கோலம் காட்டும்
கானலின் ஜாலங்கள்.

வெம்மை குறைத்திட
விரும்பிய வர்ணதேவன்
சட்டச்சடவென
பட்டாசு வரவேற்க
பளிச் பளிச் எனவே
ஒளிப்படமும் எடுத்து
தூறலாய் இறங்கி
சாரலாய் வருடி
வேகமெடுக்கையில்
நாசியை நிறைத்திடும்
மங்கல மண்வாசம்.
மேகத்தின் கொடையாய்
தேங்கிய நீரில்
நெளிந்திடும் வாற்பேத்தை
சுழியோடிப் பிடித்து
கடதாசிக் கப்பலில்
கவனமாய் ஏற்றி – அவை
அசைந்தாடும் அழகில்
ஆர்ப்பரிக்கும் குழந்தைகள்.

கதிரவன் கடைமூட
கண்சிமிட்டும் நட்சத்திரங்கள்
அங்கொன்றும் இங்கொன்றும்
வானப்பந்தலில் வாரித்தூவிய
வைரமாய் சிலபோதும்
அரையிருள் நேரத்தில்
அங்கங்கே மின்னிடும்
பூனைக்கண்களாய் சிலபோதும்
சில்மிசம் செய்யும்.
முழுமதி முகம் காட்டும்
முன்னிரவு வருகையின் முன்
மழை ஓய்ந்த தடம் தனிலே
களைகட்டும் ஏழ்வர்ணம்
எழிலாய்க் காட்டி நிற்கும்
வானத்து நண்பன்.

கத்தும் கடலலை
குத்தும் வெண்மணல்
முற்றுப் பெற்றிடாது
முடிவிலியாய் நீண்டு
காலம் காலமாய்க்
கவிபாடிச் சென்றாலும்
கோலம் மாறிடாத
இயற்கையின் இன்பங்கள்
அன்றும் இன்றும் என்றும் – முழுதாய்
புரிந்திடாப் பிரியமாய்.

Leave a Reply