படைப்பாளனுக்காகக் காத்திருத்தல்

மாயன் மெய்யறிவன்

0
982

இதைச்சொன்னால்,
நீங்கள் நம்புவீர்களா?
என்று எனக்குத் தெரியாது.

புத்தகங்கள் பலவும்,
விரும்பித்தான் வாங்குகிறேன்.
படிக்க ஆரம்பித்தால் உறங்குகிறேன்.

வயதாகிவிட்டது எனக்கு.
ஆனால்,
இதுவொன்றும் காரணமில்லை உறக்கத்திற்கு.

எந்தப் புத்தகத்தை எடுத்தாலும்,
சில பத்திகள் படித்ததும்,
இவ்வளவுதானா? என்று தோன்றிவிடுகிறது.

எழுத்து நடை என்னைத் துரத்துகிறது
அல்லது
எழுதப்பட்ட பொருள் என்னை துரத்துகிறது.

இத்தனைக்கும்,
நானொன்றும், இந்த வயதில்
புத்தகம் படிக்க ஆரம்பித்தவனல்ல.
சிறு பிராயத்தில்,
விடிய விடிய,
சேவல் கூவிய பிறகும்,
இரவுகள் கடந்து, விடியல்கள் மறந்து,
புத்தகங்களுக்குள் வாழ்ந்தவன் தான்.

இன்றோ,
நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்,
புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தாலே
உறக்கம் வந்துவிடுகிறது.

என் உறக்கங்களை
எனக்குத் தராமல்,
தன் படைப்புகளின் பக்கங்களில்,
நான் விழித்துக்கிடக்க வைக்கின்ற,
அந்த ஓர் எழுத்தாளனுக்காக,
என் வாழ்வின் பொழுதுகள்
காத்துக் கிடக்கின்றன.

மாயன் மெய்யறிவன்

Leave a Reply