சுவாமிநாதன் எப்போது 11 மணி ஆகும் எனக் காத்திருந்தார். அவருடைய மருமகள் பரபரப்பாக வெளியே கிளம்பும் நேரம் அது. அவள் ஏன் பரபரப்பாகிறாள் என்பதை சில நாட்களாகவே கவனித்துவந்தார். யாருடனோ வெகு நேரம் பேசுகிறாள். கிசு கிசு எனப் பேச்சு. அப்புறம் சிரிப்பு. கண்றாவி.
வாட்ஸ் அப்பில் எதாவது மெசெஜ் போட்டபடியே இருக்கிறாள். போனில் ‘டிங்’ எனச் சத்தம் வந்ததுமே அவள் முகத்தில் ஒரு பரவசமும் ஆர்வமும் ஊற்றெடுக்கும். சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் முதல்வேலையாக போனை எடுத்துப் பார்ப்பாள். செய்தியைப் படிக்கும்போதே முகத்தில் ஒரு புன்சிரிப்பு.
யார் அவன்?
சுவாமிநாதன் எரிச்சலாக இதைக் கண்காணித்துக்கொண்டிருந்தார். மனைவி இறந்துபோன பின்புதான் மகன் ரகுநாதனுக்குக் கல்யாணம் செய்துவைத்தார். பார்த்துப் பார்த்து நடந்த திருமணம். ஆன் லைனில் பதிவு செய்து அங்கும் இங்கும் விசாரித்து எத்தனைப் பாடு.
ரகுநாதன் தெளிவாகச் சொன்னான். ‘‘எனக்கு அம்மா இல்லை. அப்பாவை நன்றாகக் கவனித்துக்கொள்கிறவளாக இருந்தா போதும்.’’
எவ்வளவு நல்ல மகன்? இப்படி வந்து வாய்த்திருக்கிறாளே? புருஷன் அலுவலகம் போனதுமே போனும் கையுமாக அலைகிறாள். எவனுடனோ பேசுகிறாள். பழகுகிறாள். செய்தி பரிமாறுகிறாள். ‘பாவம்டா ரகு நீ… உன்னைப் பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டேன்.’
தினமும் 11 மணிக்கு ரக்ஷிதா வெளியே கிளம்புவாள். அப்புறம் இரண்டு மணிக்குத் திரும்பி வருவாள். ‘‘சாப்டீங்களா?’’ என்பாள் ஒரு பேச்சுக்கு. சாப்பாடு போடும் பழக்கமே இல்லை. என் அப்பாவை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை நிறைவேற்ற வந்தவள் இல்லை. தினமும் சொல்லிவைத்தது மாதிரி கிளம்பிவிடுவாள்.
இன்று அவள் எங்கே போகிறாள் எனப் பின் தொடர்ந்து சென்று கண்டுபிடிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஸ்கூட்டியில் பறந்து செல்வதால் அவளைப் பின்தொடர முடிவதில்லை. இன்று அவள் கிளம்புவதற்கு முன்பே கிளம்பிச் சென்று தெரு முக்கில் காத்திருக்க வேண்டும். அங்கே மறைந்திருக்க டீக்கடை ஒன்று உண்டு. ராஜசேகர் வந்து காத்திருப்பதாகச் சொன்னான். அவனுடைய பைக்கில் ஏறி, பின்தொடர்ந்தால் அவள் செல்லும் இடத்தைப் பிடித்துவிடலாம். அப்புறம் ரகுவிடம் ஆதாரத்துடன் சொல்லிக்கொள்ளலாம். இதுதான் திட்டம்.
10.30 மணிக்கே அவசர வேலையாக வெளியே செல்வதாகக் கிளம்பினார் சுவாமிநாதன். பழுப்பேறிய வேட்டியும் சட்டையும்தான் அவருடைய எப்போதைக்குமான உடை. அரசு அலுவலகத்தில் வேலை பார்த்த நாளில் இருந்து… இப்போது வரைக்கும். பிரத்யேகமாகக் கிளம்ப வேண்டிய அவசியம் இல்லை.
‘‘அப்போ சாப்பாடு?’’ என்றாள்.
‘‘வெளியே சாப்பிட்டுக்கிறேன்.’’
‘‘காலையிலேயே சொல்லியிருக்கலாம்ல? உங்களுக்காகத்தானே சமைச்சேன்?’’ அலுப்பு தெரிந்தது பேச்சில்.
‘‘இல்லம்மா… திடீர்னுதான்… பென்ஷன் விஷயமா பேங்க்ல வரச் சொன்னாங்க. லைஃப் சர்டிபிகேட் கொடுக்கணுமாம்.’’ எப்படியோ சமாளித்தார்.
‘‘சரி. நான் ரெண்டு மணிக்குத்தான் வருவேன்.’’
‘அதான் தெரியுமே?’ என மனத்திலும் ‘‘சரிம்மா’’ என உதட்டிலும் சொன்னார்.
தெரு வெறிச்சோடிக் கிடந்தது. மெல்ல நடந்து டீக்கடையை அணுகினார். ராஜசேகர் தயாராக அமர்ந்திருந்தான்.
‘‘தினமும் போறாளா?’’ என்றார்.
‘‘பையன் காலையில கிளம்பிப் போயிட்டான்னா அதற்கப்புறம் போனுதான் சிரிப்புதான். ஃபேஸ்புக்ல வேற சாட்டிங்.’’
‘‘ஒருவேளை உன் பையன்கிட்டத்தான் பேசிக்கிட்டு இருப்பாளோ?’’
‘‘நீ ஒருத்தன். அதெல்லாம் செக் பண்ணாமயா சொல்லுவேன்? அந்தப் பையன் பேரு ராகவன். படிக்கிற போதில இருந்தே பழக்கம்னு தெரியுது.’’
‘‘அண்ணன் தம்பியா இருக்கப் போறானுங்க… எதுக்குச் சொல்றேன்னா… ஒரு பொண்ணுமேல சந்தேகப்படுறது ஈஸி.’’
‘‘ராஜசேகர்… அவ என் மருமவ. அதனாலதான் புழுவாட்டம் துடிச்சுக்கிட்டு இருக்கேன். ரெண்டு மாசமா கவனிச்சுட்டுத்தான் முடிவெடுத்தேன். உன்கிட்ட மட்டும்தான் சொல்லியிருக்கேன். சில போட்டோல்லாம் பார்த்தேன்… ஒரு முறை அவ சாட் பன்ணப்ப. அதெல்லாம் பார்த்தா நீ தாங்க மாட்டேடா.’’
‘‘சரி விடு. இப்ப என்ன இன்னைக்கு கன்ஃபார்ம் பண்ணிடுவோம். பையன்கிட்ட நானே நாசூக்கா சொல்றேன். நல்ல எடமா பார்த்து ரகுக்குக் கல்யாணத்தை முடிப்போம்.’’ தேற்றுவிதமாகச் சொன்னார் ராஜசேகர்.
‘‘ரக்ஷிதா மேல உயிரையே வெச்சிருக்கான். என்னத்தைச் சொல்றது. வேலைக்குப் போறது. பொண்டாட்டிக்கு அட்சய திருதைக்குச் செயின் வாங்கித் தர்றதுன்னு இருக்கான்… தேவதையாட்டம் தாங்குறான். அவனால தாங்க முடியுமான்னு தெரியலை.’’
‘‘நான் நாசூக்கா சொல்றேன்டா… நீ கவலைப்படாத.’’
‘‘அதோ வந்துட்டா… ஃபாலோ பண்ணு. கொஞ்ச தூரத்திலயே போ.’’
‘‘சரி சரி. நீயும் ஹெல்மெட் போட்டுக்கோ.’’
இரண்டு ஹெல்மெட் கொண்டு வந்திருந்தான். ராஜசேகர் சாமர்த்தியமானவன். புத்திசாலி. நம்பிக்கையானவன். அவள் வேகமாக சென்றுகொண்டிருந்தாள். ராஜசேகர் 50 மீட்டர் இடைவெளியில் விட்டுக்கொடுக்காமல் பின் தொடர்ந்தான். ஒரு மாலுக்குள் நுழைந்தாள். கீழே பூமிக்கு அடியில் இரண்டு மாடி இறங்கிய பின்னர்தான் பார்க்கிங். மெதுவாக அவளுக்கு அடையாளம் காட்டாமல் செல்ல வேண்டியிருந்தது. ‘‘பாத்துறப் போறா’’ என்றார் சுவாமிநாதன். ‘‘பார்த்துட்டாலும் அவதான் பயப்படணும். பெசாம இரு. நீதான் ஹெல்மெட் போட்டிருக்கியே.’’
அங்கேயே லிப்ட் இருந்தது. அதில் புகுந்தாள். லிப்ட் கதவு மூடியதும் இரண்டாவது மாடி எண் ஒளிர்ந்தது. ‘‘ரெண்டு’’ என்றார் சுவாமிநாதன்.
‘‘டேய் அது அடோமேடிக்கா நிக்கும். ஒரு மாடிவிட்டு ஒரு மாடி நிற்கும்.’’
காத்திருந்தனர். ஆறாவது மாடிக்குப் பிறகு மீண்டும் கீழே வந்தது. ‘‘ரெண்டு, நாலு, ஆறு… மூணு இடத்தில நிக்குது. சரி நீ இங்கயே இரு. நான் அந்த மூணு மாடியிலயும் ஒரு ரவுன்டு பார்த்துட்டு வர்றேன்.’’
‘‘நா வந்தா பார்த்துடுவான்னு நினைக்கிறீயா?’’
‘‘புரிஞ்சிக்கிட்டா சரி.’’
ராஜசேகர் வேகமாக லிப்ட் பிடித்து இரண்டாவது மாடிக்குப் போனார். சில பல துணிக்கடைகள்… மொபைல் கடைகள்… கம்ப்யூட்டர் கடைகள்… இந்த மாடியில் அவர்களுக்கு வேலையில்லை போல, ராஜசேகர் வேகமாக நான்காவது மாடிக்கு வந்தார். ஹோட்டல்கள், ஐஸ்கிரீம் கடைகள், பல்பொருள் அங்காடிகள் என நிறைந்திருந்தது. ஓர் ஐஸ் கிரீம் கடை அநியாயத்துக்கு இருட்டாக இருந்தது. ஒவ்வொரு டேபிளுக்கு மேலேயும் ஒரு மின்மினிப் பூச்சி அளவுக்கு வெளிச்சம். அந்த மாதிரி இடத்தில்தான் அவர்கள் இருக்க முடியும். துணிச்சலாக அந்த ஐஸ்கிரீம் கடைக்குள் நுழைந்தார். கடையில் இருந்த மெல்லிய பையன் ஒருவன்… ‘‘யார் வேணும் சார்!’’ என்றான் மெல்லிய குரலில்.
‘‘என்னைப் பார்த்த ஐஸ் சாப்பிடறவன் போல தெரியலையா?’’
அவன் ஒரு டேபிளைக் காட்டினான். இருட்டில் ஒரே ஒரு ஜோடி மட்டும் தட்டுப்பட்டது. மெனு கார்டைப் பார்ப்பது போல அவர்களைக் கவனித்தார். அது சுவாமிநாதனின் மருமகள்தான். ஒட்டி உரசி உட்கார்ந்திருந்தாள். அவனுடைய வலது கை விரலும் இவளுடைய இடது கை விரலும் கோத்துக்கொண்டிருந்தன. போனில் மெசெஜ் பார்ப்பது போல அவர்களை ஒரு போட்டோ எடுத்தார். ‘‘அவர்களுக்குச் சந்தேகம் வருவதாவது… அவர்கள் இந்த லோகத்திலேயே இல்லை’’ சுவாமிநாதன், ‘எப்படி எடுத்தே?’ எனக் கேட்டால் சொல்வதற்கான பதிலும் இப்போதே மனசுக்குள் உருவாகிவிட்டது.
‘‘வெனிலா இருக்கா?’’ என்றார் மெல்லிய பையனிடம்.
‘‘ம்’’ என்றான்.
‘‘குடு.’’
வேகமாகச் சாப்பிட்டுவிட்டு வெற்றியோடு வந்தார். தவிப்போடு காத்திருந்தார் சுவாமிநாதன். ‘‘நீ சொன்னது சரிதான். கட்டிப்பிடிச்சுக்காத குறைதான்.’’
சுவாமிநாதன், ‘‘இப்பவாவது தெரியுதா? நான் என்ன பாடுபட்டேன்னு.’’
‘‘போட்டோ பார்க்கிறீயா?’’
‘‘அந்தக் கண்றாவியெல்லாம் என்கிட்ட காட்டாதே.’’ சுவாமிநாதன் அதன்பிறகு பேசவே இல்லை. பைக்கில் அமைதியாக வந்தார். ராஜசேகர் அதனாலேயே நிறைய ஆறுதல் சொல்ல வேண்டியிருந்தது. வீட்டை நெருங்கிய தருணத்தில், ‘‘என்னை அந்த பார்க்ல இறக்கிவிட்டுட்டுப் போ.’’ என்றார் சோகமான குரலில்.
‘‘ஏண்டா?’’
‘‘அவ ரெண்டு மணிக்குத்தான் வருவேன்னு சொல்லிட்டா.’’
‘‘இப்ப 12 தானே ஆகுது?’’
‘‘பரவால்ல நீ போ.’’
பார்க் இருந்த தெருவின் முனையிலேயே இறங்கி நடந்தார். பார்க்கையும் மூடிவிட்டார்கள்.
உட்காரவும் இடமில்லை. காம்பவுண்டு சுவர் மீது சாய்ந்து நின்றார். அவருக்கு அழுகையாக வந்தது. வேட்டியை மடித்து, தலையைக் குனிந்து கண்களைத் துடைத்தார். மீறி பொங்கியது. ரகு பொறுமையானவன். அதிர்ந்து பேசாதவன். யாரையும் ஒரு வார்த்தை பேசமாட்டான். அவனுக்கு இப்படி ஒரு பொண்டாட்டியா? ராஜசேகர் காட்ட நினைத்த படத்தையெல்லாம் அவர் ஏற்கெனவே பார்த்துவிட்டார். ஒரு முறை லேப்டாப்பை அப்படியே டேபிளின் மீது வைத்துவிட்டு பாத்ரூம் போனாள். அவர்களின் சாட் எல்லாவற்றையும் படித்தார். குமட்டியது. பரிமாறிக்கொண்ட போட்டோக்கள் ஏன் பார்த்தோம் என கூச்சமடைய வைத்தன. பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும், ஒன்றும் தெரியாதது போல சோபாவில் வந்து உட்கார்ந்துவிட்டார்.
சாட் செய்யும் போதுதான் அவள் முகத்தில் எத்தனை சந்தோஷம்… நிலையான ஒரு புன்னகையுடன் ஒரு மணி நேரம் அதிலேயே கிடந்தாள். கல்யாணமாகி ஒரு மாதத்திலேயே இதைச் சுவாமிநாதன் கண்டுபிடித்தார். அப்படியானால் அது கல்யாணத்துக்கு முன்னாடியே நெருக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது. பாவி. ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் இந்த அசிங்கமே இல்லையே? வீட்டில் சொல்ல பயந்திருக்கிறாள். இங்கே கண்டிக்க ஆள் இல்லை எனத் தெரிந்ததும் ஆட்டம் போடுகிறாள். பேப்பரில் தினசரி வரும் இந்த மாதிரி உறவுப் பிரச்னைகளை நினைத்து அஞ்சினார். அப்படி எந்த அசிங்கமும் நேராமல் முள்ளில் சிக்கிய சேலையை எடுப்பதுபோல எடுக்க நினைத்தார். கல்யாணம் ஆன அன்று காலில் விழுந்து வணங்கியபோது ஜென்ம சாபல்யம் நிறைவேறியதுபோல பூரித்து நின்ற தருணத்தை நினைத்துப் பார்த்தார். அவருக்கு அழுகை அதிகமாகியது. அதைத் துடைப்பதையும் நிறுத்திவிட்டார்.
ரகுராமனிடம் பேச வேண்டும். முதலில் ராஜசேகர் பேசட்டும். அவன் சாதுர்யமாகப் பேசத் தெரிந்தவன். பிறகு அவளை அனுப்பிவைக்கிற வேலையைப் பார்க்க வேண்டும். அடுத்த கல்யாணத்தை உடனே நடத்த வேண்டும்… சுவாமிநாதன் வேகவேகமாக மனதில் நடத்தி முடித்தார்.
ரகுவின் அலுவலகத்துக்கே போய் பேசினார் ராஜசேகர். கேன்டீனில் வைத்து பொறுமையாக நடந்தவை அனைத்தையும் சொன்னார். குனிந்த தலை நிமிரவே இல்லை. ‘‘கடைசியாகச் சரி அங்கிள்… அப்பா கிட்ட பேசிக்கிறேன்’’ என மட்டும் சொன்னான்.
இரவு வீட்டுக்கு வந்ததும் ஏதாவது பேசுவான் எனக் காத்திருந்தார் சுவாமிநாதன். அவன் எதுவும் பேசவில்லை. சாப்பிடாமலேயே படுத்துவிட்டான். மறுநாள் காலை குளிப்பதும் டிபன் செய்வதும் டிரஸ் மாற்றுவதுமாக அமைதியாகவே இருந்தான். அவளும் அமைதியாகவே இருந்தாள். இது வழக்கத்துக்கு மாறானது. இரவு அவர்களுக்குள் சச்சரவு ஆரம்பித்திருக்க வேண்டும். கிளம்பி வாசல் வரைப் போனவன், ‘‘அப்பா’’ என்றான்.
‘‘கொஞ்சம் வாங்க’’
சுவாமிநாதன் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு காத்திருந்தவர் போல போனார். கார் முன் கதவைத் திறந்து, ‘‘உட்காருங்கப்பா’’ என்றான். காரில் ஏறும்போது, ரக்ஷிதாவைப் பார்த்தார். அவள் காரணம் புரியாமல் தவிப்பது தெரிந்தது.
கார் சத்தம் மட்டும் கேட்டது. ‘‘அந்தப் பையனைப் பத்தி விசாரிச்சேன்.’’ இப்படித்தான் ஆரம்பித்தான் ரகு.
‘‘காலேஜ் படிக்கிறச்சே பழக்கமாம். அடுத்த மாசம் அமெரிக்கா போயிடுவானாம்.’’
‘‘அடுத்த மாசம் போயிடுவாங்கிறதால விட்டுட முடியுமா ரகு?… அசிங்கமில்லையா? அவளை என்ன பண்ணலாம் சொல்லு?’’
‘‘ராஜசேகர் சார்கிட்ட சொல்லி நீங்க அசிங்கப்படுத்தியதைவிட இது ஒண்ணும் அசிங்கமில்லை.’’ காரைச் செலுத்தும் திசையில் இருந்து திரும்பாமல் இறுக்கமாகச் சொன்னான்.
சுவாமிநாதன் எதிர்பார்க்கவில்லை. ‘‘இல்லப்பா… அவன் யார்கிட்டயும் சொல்லமாட்டான். என்னோட வெல்விஷ்ஷர்.’’
‘‘உங்களுக்குச் சரி… எனக்கு? இப்ப என்ன… அவளை டிவோர்ஸ் பண்ணச் சொல்றேளா?’’
‘‘பின்ன எப்படி?’’
‘‘அவனைத்தான் கட்டணும்னு நினைச்சா. அவ வீட்ல சம்மதிக்கல. என்ன பண்ணுவா பாவம்? அவனும் இவ நிலைமைய புரிஞ்சுண்டு ஸ்டேட்ஸுக்கு வேலை தேடி கிளம்பிட்டான். எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருக்கும். இப்பிடிக் கெடுத்துட்டேளே?’’
‘‘நான் என்னப்பா பண்ணேன்?’’
‘‘உங்களை யார் டமாரம் அடுக்கச் சொன்னது? அப்படியே தெரிஞ்சா மொதல்ல என்கிட்ட சொல்லியிருக்கணும். இப்ப ஒரே வீட்ல இருந்துண்டு உங்க முகத்தில அவ எப்படி முழிப்பா?’’
என்ன சொல்ல வருகிறான் என்பதைப் புரிந்துகொள்ளும் முன்பே காரை ஓர் ஓரமாகப் பார்க்கிங் செய்தான். அந்த இடத்தில் ‘தெரஸா முதியோர் இல்லம்’ என்ற போர்டு கண்ணில் பட்டது.
தமிழ்மகன்
என்ன சொல்ல வர்றீங்க ஒன்னும் புரியல.
தலைமுறை இடைவெளி. அதுதான் கதையின் அடிநாதம்.
??