மலரத் துடிக்கும் அரும்பொன்று

ரஞ்சிதா, இலங்கை

0
527

“இதுதா டீச்சர் எங்க ஏரியா, நா ஸ்கூலுக்கு எந்த நாளு இந்த ரோட்டாலதா வருவே” கண்ணன் மிகவும் ஆர்வமாக தன்னுடன் வந்த தேஜா ஆசிரியரிடம் கூறிக்கொண்டு புத்தகப்பையை சுமந்துவாறு ஆமை போல அசைந்தான். எங்கு திரும்பினாலும் கழிவு நீரோடையின் துர்நாற்றம் மூக்கை துளைத்தெடுத்தது. ஆங்காங்கு துருப்பிடித்துபோன தகரங்கள் அங்குள்ள வீடுகளுக்கு கூரைகளாகவும், மதில்களாகவும் அரண் செய்தன. விளையாடுவதற்கு முற்றமோ அல்லது மகிழ்ச்சியாக அமர்ந்து தனிமையில் எவரும் பேசிக்கொள்ளவோ இடைவெளியில்லாத இடநெருக்கடி. மக்கள் நடமாடித்திரியும் பாதையிலேயே குளியலுக்கான மறைப்பு, துணிகள் காயப்போடும் கொடி, அமர்வதற்கான முற்றம் எல்லாம். பாதையை ஊடறுத்து செல்லும் பிரதான சந்தியில் ஒரு பிள்ளையார் கோயில். கோயிலின் அருகில் பிரதேச சபையினால் வழங்கப்பட்ட ‘ஜயந்தி மாவத்த’ என்னும் கிராமத்தின் பெயரை தாங்கிய ‘போர்ட்’ ஒன்றும் செங்குத்தாக நின்றது.

அந்த கிராமத்தின் முகப்பில் வந்தாரை வரவேற்று வியாபாரம் நடத்தும் சிறிய செலவு கடையொன்று நான்கு பக்கமும் தகரங்களால் மறைக்கப்பட்டு இயங்கிகொண்டிருந்தது. நாற்சந்தியின் அருகிலிருந்த வீடொன்றில் காதின் செவிப்பறைகளை கிழித்துக்கொண்டு சினிமாப்பாடல்கள் ஒலித்தவண்ணம் அமைதியை நிலைகுழையச் செய்தது. ஒரு சில சிறார்கள் காற்சட்டையுடன் ஊளை மூக்கு வடிய பழைய டயர்களை வாகனங்களாக்கி உருட்டி விளையாடிக்கொண்டிருந்தனர். சில பெண்கள் வெற்றிலையை வாயில் நிறைத்து அதன் எச்சிலை அருகிலிருந்த கழிவுநீரோடைகளில் உமிழ்ந்துவிட்டு சம்பாசணைகளில் ஈடுபட்டனர். இன்னுமொரு பக்கம் காதில் கேட்கமுடியாத ஊத்தை பேச்சுகளை தேள்கொட்டுவதுபோல தன்னுடைய மனைவியுடன் ஏற்பட்ட பூசலில் கொட்டினார் வயதான ஒருவர். அதனை அங்குள்ள பலரும் வேடிக்கை பார்த்தவாறு சிரித்துக்கொண்டிருந்தனர்.

பாடசாலையில் சில ஆசிரியர்கள் இப்பிரதேசத்தை பற்றியும், இங்கு வாழும் மக்கள் குப்பை கூட்டுபவர்கள் என்றும், பிள்ளைகள் ஒழுங்காக பாடசாலைக்கு வந்து கல்வி கற்பதில்லை என்றும் பல முறைபாடுகளை முன்வைத்தமையை தேஜா ஆசிரியர் அறிந்திருக்கிறாள். அதன் உண்மையை இன்று நேரிலே தரிசித்துக்கொண்டிருந்தாள். கண்ணனுடன் அவனது இல்லத்தை நோக்கி நகர்ந்த தேஜா ஆசிரியர் அவனுடைய இருப்பிடத்தின் ஒவ்வொரு பகுதிகளையும் அதன் அசைவியக்கங்களையும் கண்காணித்த வண்ணம் கண்ணன் அழைத்து சென்ற ஒரு இடிந்துபோன தகர வீட்டின் முன் வந்து நின்றாள்.

“பெரியம்மா எங்க டீச்சர் வந்துருக்காங்க” என்று கண்ணன் கூறியதும் ஒரு நடுத்தர வயது பெண் வாயில் வெற்றிலையைக் குதப்பிக்கொண்டு மரியாதையை தெரிவிக்கும் வண்ணம் ஆசிரியரை உள்ளே அழைத்துச் சென்று அமர்வதற்கு கிழிந்துபோன பாய்த் துண்டை விரித்தாள். வீட்டின் உள்ளே ஒரே இருள். புகை மண்டலமாக, உடைபட்ட சுவர்களாக, ‘சிமென்ட்’ தரை குன்றும் குழியுமாக இருந்தது. தேஜா ஆசிரியருக்கு இன்று காலை பாடசாலையில் நடந்த சம்பவங்கள் நினைவிற்கு வந்தன.

“டேய் டீச்சருக்கும் சாப்பாடு குடுப்போ. எடுத்துட்டு வாங்க, ரதி நீ என்னடி கொண்டு வந்த, எங்க அம்மா இண்டைக்கு சமபோஷா செஞ்சு தந்தாங்க, உங்க அம்மா?”

“எங்க அம்மா இட்லி அவிச்சு, சட்டினி செஞ்சிருக்காங்க, குமுதினி நீ என்னடி பாற்சோறு கொண்டு வந்திருக்க” தரம் நான்கில் இருந்த மாணவர்கள் அனைவரும் தாங்கள் இன்று கொண்டு வந்த உணவுகளை தனது நண்பர்களுடன் பரிமாறி சுவைத்துக்கொண்டு சுவாரஷ்யமாக கலந்துரையாடி காலை உணவை உட்கொண்டனர். இதனை வேடிக்கைப்பார்த்துக்கொண்டே அவர்களுடன் ஒருத்தியாக கையில் தானும் ஒரு உணவு பொட்டலத்துடன் அமர்ந்திருந்த தேஜா ஆசிரியர், கண்ணன் தன்னிடம் தயங்கி தயங்கி நீட்டிய குழைந்து போன பச்சயரிசி சோற்றையும் சோயா மீட்டையும் பார்த்துவிட்டு “கண்ணா, யார் சமைச்சது?” என அன்பாக வினவியபோது, “நான்தான் டீச்சர் விடிய அஞ்சு மணிக்கு எழும்பி சமைச்சே” என்று ஒரே பதிலில் கூறிவிட்டு மறுபதிலுக்காக காத்திருக்காமல் உணவை அள்ளி அள்ளி விழுங்கினான். அதிர்ச்சியுடன் கண்கலங்கிய நிலையில் தேஜா ஆசிரியர் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அப்பொழுது பக்கத்திலிருந்த திவ்யா “ஏன் டீச்சர் கண்கலங்குறீங்க, கண்ணே எப்பவும் சோறும் சோயா கறியுந்தான் கொண்டு வருவான், அவேந்தா எந்தநாளு சமைப்பா, அவனுக்கு யாரும் இல்ல” என்று கூறியது அவளுக்கு பேரிடியை இறக்கியது. இச்சிறிய வயதில் கண்ணனுக்கு இப்படியொரு தண்டணையா? அவளால் எள்ளவும் பொறுத்துகொள்ளமுடியவில்லை.

தேஜா ஐந்து வருடங்கள் ஆரம்ப பிரிவில் கல்வி கற்பித்து வருகின்றாள். மாணவர்களுக்கு ஏற்பட்ட பல சிக்கல்களை கண்டிருக்கிறாள். சிலவேளை பாடசாலைக்கு உணவின்றிகூட பிள்ளைகள் வருவதுண்டு. இல்லையெனில் உறவினர் யாராவது உணவை வழங்கி அனுப்புவர். ஆனால் ஒரு ஆண்பிள்ளை – பக்குவமடையாத சிறுவன் தானே உணவு சமைத்து எடுத்து வருவது முதல் அனுபவமாக இருந்தது. கண்ணன் பற்றியோ அல்லது அங்குள்ள இருபத்தைந்து பிள்ளைகளை பற்றியோ தேஜாவிற்கு எதுவும் தெரியாது. அவள் கடந்த வாரமே கெக்கிராவ பெப்டிஸ் மிஷன் தமிழ் பாடசாலைக்கு புதிதாக நியமனம் பெற்று வந்திருந்தாள்.

ஒரு பாடசாலையின் வகுப்பறையில் கடமையாற்றும் வகுப்பாசிரியர் அனைத்து மாணவர்களின் தனிப்பட்ட விபரங்கள் குறித்து தெளிவடைந்திருத்தல் வேண்டும். ஆனால் அவற்றை அறிவதற்கு தேஜாவிற்கு சில காலம் தேவைப்பட்டது. அதனாலேயே கண்ணன் பற்றி எதுவும் அறியாதிருந்தாள். ஆனால் தினமும் அழுக்குபடிந்த ஆடையுடன், பிய்ந்த சப்பாத்துக்களுடன், தலையில் எண்ணெய் வடியும் முகத்துடன், வீட்டு பாடங்கள் செய்யாமல் வரும் கண்ணனை கண்டித்து வீட்டில் யாரையாவது அழைத்துவரவேண்டும் என உத்தரவிட்டிருக்கிறாள். அவன் அதை பொருட்படுத்தாமலேயே வகுப்பறையை சுற்றிவருவான்.
காலையில் வகுப்பறையில் நடந்த அந்த நிகழ்வு தேஜாவின் மனதை வெகுவாக பாதித்தமையே அவளை இப்பொழுது கண்ணனுடைய வீட்டிற்குள் அமரவைத்துள்ளது. சிந்தனையில் ஆழ்ந்திருந்த ஆசிரியரை கண்ணனின் பெரியம்மா தேநீரை நீட்டி சுயநினைவிற்கு கொண்டு வந்தாள். அவளும் மரியாதைக்காக தேனீர் கோப்பையை வாங்கிக் கொண்டு, “என்ட பேர் தேஜா. நா கண்ணன்ட வகுப்பு டீச்சர். கண்ணன் நல்ல பொடியன். குழப்படி ஒண்டும் செய்யமாட்டான். ஆனா சரியா வீட்டுப்பாடம் செய்யிறதில்ல. யூனிபோம் எல்லாம் அழுக்கா போட்டுட்டு வாறான். அதுதான் ஒங்ககிட்ட இதபத்தி சொல்லி பாக்கலாம்னு வந்தே” என்று அமைதியாக, நிதானமாக, தளதளத்த குரலில் சொல்லி முடித்தாள். அந்த பெண்மணியும் பதில் பூக்களை மாலையாக கோர்க்க ஆரம்பித்தாள்.

“கண்ணன நாங்கதா பாத்துக்கிறோ டீச்சர். அவேந்தா வீட்டுல கடைசி புள்ள. என்ட தங்கச்சி பேரு சரசம்மா. ஏழு புள்ளைங்க அவளுக்கு. புருசே பேரு சுப்பு. எப்பவு குடிச்சிட்டு வந்து அடிப்பா. சித்திரவத தாங்கமுடியாம ஏழு புள்ளைங்களயு தவிக்கவிட்டுட்டு ஒருத்தனோட ஓடிபோயிருச்சி. கண்ணவுட்டு அப்பா குடிச்சாலு புள்ளைங்களுக்கு ஏது சாப்புட வாங்கி குடுக்கு. அவரு திடீருனு வெசத்த குடிச்சி செத்துபோயிட்டாரு. ரெண்டாவது பொம்பள புள்ள வீடு வீடா வேல செஞ்சி ஒருத்தங்கிட்ட கெட்டுபோயி, வயித்துல ஒரு புள்ளயோட இன்னொருத்தன கல்யாணம் செஞ்சிகிட்டு போயிருச்சி. இவன்ட பெரிய அக்கா வெளிநாட்டுல, காசு எதுவும் அனுப்புறதில்ல. அண்ணேமாருகளு கஞ்சா, களவு, குடினு திரியுறானுக டீச்சர். எனக்கு புள்ளைங்க மூனு இருக்கு. நானு வீட்ட பாக்கனு. கண்ணன பாக்குறதுக்கு நேரோ இல்ல. நானு ரோட்டு கூட்டி, குப்ப அள்ளிதா புள்ளைங்கள கவனிக்கிறே. இங்க இருக்க பாதிபேரு இந்த வேலதா செய்யிறாங்க. நம்ம கண்ணே லீவு நாளுகளில்ல கூலிவேலைக்கி போவா. இதுக்குமுன்ன ஒரு ‘சேர்’ இப்பிடிதா கண்ணன்ட நெலமைய தெரிஞ்சிகிட்டு வீட்டுக்கு வந்தாரு. கொப்பி, புஸ்தவம் வாங்கி குடுத்தாறு. போன கெழம பக்கத்துல இருக்குற வேத பள்ளியில ‘சிஸ்டர்’ ஒராளு இங்க இருக்குற புள்ளைங்களுக்கு படிக்கிறத்துக்கு பேனா, பென்சில், கொப்பி குடுத்தாங்க. கண்ணனு போயி வாங்குனா. ஏங்கிட்டயு காசு இருந்தா ஏது வாங்கி குடுக்குறதுதா. என்ன செய்யிறது டீச்சர் ” ஒழிவு மறைவின்றி தேஜாவிடம் கண்ணனின் பெரியம்மா கூறிய வார்த்தைகள் அவளை தலைசுற்ற வைத்துவிட்டது.

இது உண்மை கதையா? அல்லது சினிமாவில் வரும் கதையா? அல்லது இந்த அம்மா கற்பனையாக கதை ஜோடித்து கூறுகின்றாரா? எதுவும் புரியவில்லை. சூதுவாது தெரியாத, படிப்பறிவற்ற சனம் வாழும் இப்பகுதியில் கற்பனை கதைகளை கூற இவருக்கு எண்ண தேவை இருக்கிறது என்ற தேறுதல் சிந்தனையை உள்ளத்தில் நிறுத்திக்கொண்டு கண்ணனின் துன்பகரமான நிலையை எண்ணி தவித்தாள். கண்ணன் இவ்வளவு சிக்கல்களையும் எதிர்கொண்டு பாடசாலைக்கு வருகின்றான் என்றால், அது படிப்பதற்காக அல்ல. இலங்கை அரசு நடைமுறையில் வைத்திருக்கும் ஐந்து வயது தொடக்கம் பதினாறு வயது வரையான கட்டாயக் கல்விச் சட்டமே ஆகும். கண்ணன் போன்ற பல சிறுவர்கள் முறையான கல்விச்சூழல் இன்மையால் தமது எதிர்காலத்தை சூனியமாக்கி கொள்கின்றனர். ஒரு பிள்ளை ஒரு நாளைக்கி பாடசாலையில் ஆறு மணி நேரத்தை ஆசிரியருடன் செலவளிக்கின்றான். அவனது அதிகமான நேரத்தை வீட்டுச்சூழலே கட்டமைக்கின்றது. கற்றலுக்கான அதிக நேரம் அங்கேயே ஒதுக்கப்பட வேண்டும். பாடசாலையில் வழங்கப்படும் பாடங்களை மீட்டல், நாளைய பாடங்களிற்கான தயார்நிலை, பரீட்சைக்கு தயாராகுதல் என பல நடவடிக்கைகளை வீட்டு சூழல் தீர்மானிக்கின்றன. பொதுவாக கல்வி உளவியலாளர்கள் கூறும் பௌதீக சூழல், உளவியல் சூழல் இரண்டும் கண்ணனுக்கு சரியாக அமையவில்லை. அவனுடைய பௌதீக சூழலில் போதிய இடவசதியோ அமைதியோ சுகாதாரமோ கற்றல் உபகரணங்களோ கற்றலை வளப்படுத்துவதற்கு இல்லை. உளவியல் சூழலும் அவனுக்கு எதிராக நின்று சதி செய்து அன்பின்மை, அரவணைப்பின்மை, பெற்றோர் இன்மை, வறுமை – பரிசாக வழங்கியுள்ளது. ஆனால் ஒன்று கண்ணன் போராட்டம் நிறைந்த இவ்வுலகில் மலரத்துடிக்கும் அரும்பாகியுள்ளான். கண்ணன் என்னும் அரும்பு தன்னுடைய குடும்ப சூழலையும் எதிர்கொண்டு மலரத்துடிக்கின்றது. இம் மாணவனை பொறுப்பேற்று ஆரோக்கியமான கல்வியை வழங்குவதற்கான வசதி தேஜா ஆசிரியரிடம் இல்லையாயினும் கண்ணனது வீட்டுச்சூழலிருந்து விடுதலை வாங்கி கல்வி, பாதுகாப்பு ஆகியவற்றை பெற்று கொடுப்பதற்கு அதிபருடன், சமூக நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளும் முயற்சியில் இறங்குவதற்கு எண்ணுகின்றாள். அது வெற்றியளிக்குமா என்பது அவளுக்குத் தெரியாது. இருப்பினும் இன்றே கண்ணனின் வாழ்வில் ஒளியேற்றும் முயற்சியை சிரம்மேற்கொள்ள உறுதி பூண்டாள், தேஜா.

இதோ கண்ணன் பாடசாலை சீருடைகளை களைந்து “டீச்சர் நேரோ ஆகுது வாங்க ஒங்கள கொண்டுபோயி ஊருக்கு வெளியில விடுறே. நா குளத்துல போயி உடுப்பெல்லாம் கழுவிகிட்டு பக்கத்துல இருக்குற மெனிக்கே நோனா வீட்டுல தேங்கா ஆஞ்சி குடுக்கனு. காசு தருவாங்க” என்று கூறி தேஜாவை அழைத்தான். கண்ணன் மலர துடிக்கின்ற அரும்பு. போராட்டங்களின் மத்தியில் நாளைய விடியலை போராடுவதற்காக புறப்படுகின்றான். செய்வதறியாது அவன் பின்னால் மனச்சுமைகளை சுமந்து செல்;கின்றாள் தேஜா.

ரஞ்சிதா, இலங்கை

Leave a Reply