மழையும் நானும்

ராஜலட்சுமி சுரேஷ்

0
661

மழை என்ற சொல்லைக் கேட்டவுடன், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உணர்வு ஏற்படும். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போது, மேகம் கருத்து மழைத்தூறல் ஆரம்பித்து விட்டால் போதும், “இன்னைக்கு ஸ்கூல் லீவு விட்டுடுவாங்க. கணக்கு டீச்சரிடம் வாய்ப்பாடு ஒப்பிப்பதிலிருந்து தப்பித்துவிடலாம்” என்று மழையைக் கண்ட மயிலைப் போல மனம் ஆடும்.

“மழை ஒன்னும் பெருசா இல்ல. ஸ்கூல் எல்லாம் இன்னைக்கு லீவு விட மாட்டாங்க. கிளம்புங்க” என்று சொல்லியபடி, அம்மா ஒரு கையில் குடையையும், மறு கையில் என்னையும் தங்கையையும் பிடித்தபடி, பள்ளிக்குக் கூட்டிச் செல்லும்போது, மழை கொஞ்சம் ஜோராக வந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று வானத்தை முறைத்தபடி செல்வோம்.

முறைத்த எங்களை மேலும் வெறுப்பேற்றும்படி, பள்ளி சென்று வகுப்புக்குள் நுழைந்ததும், மழை சடசடவென்று ஆரம்பித்து ‘சோ’வென கொட்டித் தீர்க்கும். வேகமெடுத்துப் பெய்யும் மழையைப் பார்த்ததும், கோபமெல்லாம் பறந்துபோய் குதூகலம் பொங்க ரசிக்க ஆரம்பிப்போம்.

ஆரம்பப் பள்ளி முடிந்து, ஆறாம் வகுப்பு செல்லும்வரை, மதிய உணவை டப்பாவில் கட்டிக் கொடுக்காமல், சுடச்சுடச் செய்து கொண்டு, சாப்பாட்டு மணி அடித்து விடுவார்களே என்ற பரபரப்புடன் அம்மா ஓடோடி வருவார்கள். மழை நேரங்களில் சாப்பாட்டுக் கூடையை வாங்குவதற்காகக் காத்திருக்கிறோம் என்று, டீச்சரிடம் சொல்லிவிட்டு மழையில் ஆட்டம் போட்டது இன்றும் நினைவுக்கு வருகிறது.

பள்ளி முடியும் நேரத்தில் மழை வந்துவிட்டால் போதும், “மழையில் நனையாமல் ஓரமாக நின்று விட்டுச் செல்லுங்கள்” என்று சற்றே கண்டிப்புடன் கூறும் பள்ளி காவலாளிக்கு ‘கல்தா’ கொடுத்துவிட்டு, தோழிகள் அனைவரும் கும்பலாக நனைந்தபடி வீட்டுக்குச் சென்றதும், நோட்டு புத்தகம் எல்லாம் நனைந்ததைப் பார்த்து, கோபத்தில் அம்மாவிடம் வாங்கிய அடிகள், அப்போது வலித்தாலும், இப்போது நினைக்கையிலே சுகமாய் தான் இருக்கிறது.

சொன்ன பேச்சைச் சிறிதும் கேட்காத குறும்புத்தனத்தை நினைத்து கோபமும், பெற்ற பிள்ளைக்குக் காய்ச்சல் வந்து விட்டதே என்ற கவலையும் ஒருசேர, கை காலில் எல்லாம் அமர்தாஞ்சன் தேய்த்துவிட்டு, போர்வை போர்த்திப் படுக்க வைக்கும், அம்மாவின் அன்பை இப்போது நினைக்கையில் விழிகள் ஈரமாகும்.

பள்ளி விடுமுறை நாட்களில் மழை பெய்யும்போது, தெருவில் புரண்டு ஓடும் வெள்ளம் போல, மனதில் மகிழ்ச்சி புரண்டோடும். திறந்தவெளி முற்றத்தோடு கூடிய ஓட்டு வீடு எங்களுடையது. முற்றத்தின் வழியே தாரை தாரையாகப் பெய்யும் மழைநீரில் கையை நீட்டும் போது, கைகளில் பட்டு முகத்தில் அடிக்கும் தண்ணீர் மகிழ்ச்சியின் உச்சம். ஓடும் நீரில் தங்கையோடு சேர்ந்து, கேலண்டர் பேப்பரில் செய்த குட்டி கப்பல்களை மிதக்க விடும்போது, காகிதக் கப்பல்களோடு சேர்ந்து மனமும் தண்ணீரில் சுகமாய் மிதந்து ஓடும்.

வீட்டு ஜன்னலின் வழியே வெளியே பார்க்கும் போது, மழையில் நனைந்த காகங்கள் இறக்கையை உதறி விட்டபடி ஈரத்தைக் காய வைக்கும். மழை நீரில் குளித்த மரத்தின் கிளைகளிலிருந்து, கீழே சொட்டும் நீரைப் பார்க்கும்போது, மரம் மட்டும் தனியாக மழை பெய்கிறது என்று தோன்றும்.

மின்னலும் இடியுமாகப் பெய்த மழை, விட்ட நேரத்தில், கத்திரிக்காயும் உருளைக்கிழங்கும் போட்டு, புளிப்பும் காரமுமாக அம்மா வைக்கும் காரக்குழம்பிடம் எவ்வளவு பெரிய சமையலும் தோற்கும்.

இப்படியாகச் சிறு பிராயத்தில் மழை மிகவும் பிடித்ததாய் இருந்தது. பொறுப்புகள் சுமக்கும் வயது வந்த பிறகு, காலை வேளையில் மழை ஆரம்பித்து விட்டால், ரசிக்கத் தோன்றுவதை விட எப்படியாவது நனையாமல் அலுவலகம் சென்று விட வேண்டும் என்று மட்டுமே தோன்றுகிறது. அலுவலகத்தில் இருக்கும்போது மழை தூற ஆரம்பிக்கையில், துவைத்துக் காய வைத்த துணிகள் நனைந்து விடுமோ? பிள்ளைகள் நனையாமல் வீட்டிற்கு வந்து விடுவார்களா? என்று சிந்தனை மனதுக்குள் ஓடும்.

இப்படியாக வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும், மழையை ஒவ்வொரு உணர்வுடன் பார்த்தபோது, மழை மட்டும் எல்லா காலகட்டத்திலும், பூமியைச் செழிக்கச் செய்யும் ஒரே உணர்வுடன் மட்டுமே பெய்கிறது என்பதை நினைத்துப் பார்த்தபோது, மழையைத் தோழமையோடு வரவேற்ற அந்த மனதை எங்கே தொலைத்தோம்? என்று அடி மனதின் ஆழத்தில் தேடுதல் வேட்டை நடந்தது.

மொட்டை மாடியில் நின்றபடி சிந்தனையில் மூழ்கிய அதேநேரம், சற்றென்று மேகங்கள் கூடி இருள் சூழ்ந்து, சில்லென்று ஒரு தூறல் முகத்தில் விழுந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் ‘சடசட’வென்று மழை பெய்ய ஆரம்பித்தபோது, வீட்டுக்குள் செல்ல மனமில்லாமல் அப்படியே நின்றேன். சிறு பிள்ளை போல் மனம் துள்ளிக் குதிக்க, யாருமில்லாத மொட்டைமாடியில், எனக்குப் பிடித்த மழையும், நானும் மட்டுமே.

ராஜலட்சுமி சுரேஷ்

Leave a Reply