இலட்சியமற்ற வாழ்வு

0
85

ரஞ்சிதா, இலங்கை

மாலை ஐந்து மணி இருக்கும். ஒரு கப் ‘நெஸ்டமோல்ட்’ கலந்த தேனீருடன் வாசற்படியில் அமர்ந்துக்கொண்டேன். தூரத்தில் தெரியும் புளியமரத்தின் கிளைகளில் கிளிகளின் கீச், கீச் சப்தமும் வீட்டின் கூரையில் கூடுகட்டியுள்ள அணிலின் சப்தமும் இனிய கீதங்களாக ஒருபுறம் ஒலிக்க, வீட்டின் உள்ளே பக்திப் பாமாலைகளின் ஒலி உச்சஸ்தாயில் ஒலித்துக்கொண்டிருந்தது. ஊரின் எல்லையிலுள்ள பிள்ளையார் கோயில் மணி பூசைக்கு பக்தர்களை அழைத்த வண்ணம் “டாங் டாங்” என ஓசை எழுப்பிக்கொண்டிருந்தது. இன்று வெள்ளிக்கிழமை, விசேட பூஜை வழிபாடுகளுக்காக பிள்ளையாருக்கு மோதகம் செய்துகொண்டிருந்தார் அம்மா.

“புள்ள அந்த வெத்திலத் தட்ட ஒருக்கா எடுத்துத் தா. வெளக்கு பத்த வச்சிட்டியா? அடுப்ப மூட்டி சாம்பிராணிக்கு நெருப்ப போடு. கோயில்ல மணி அடிச்சுட்டாங்களா?”

கோயில் மணியோசை எல்லோருக்கும் நன்றாக கேட்கும். பாவம் எங்கள் ஆச்சிக்குத்தான் கேட்காது. காதுகேளாத ஆச்சியின் நகைச்சுவை வார்த்தைகளைக்கூட கேட்டகமுடியாமல், எனக்கு மனம் வேறுபக்கம் சென்றுவிட்டது. மாலைப் பொழுது என்றால் எல்லோருக்கும் அலாதியான இன்பமாக இருக்கும். காதலர் மயங்குவதும், பறவைகள் கூடுகளை சென்றடைவதும், உழைப்பாளிகள் வீடு நோக்கி செல்லுவதும் என சூரிய அஸ்த்தமனத்திற்கு கூட ஆயிரம் புகழ் மாலைகள் சூட்டப்படுகின்றன. ஆனால் எனக்கு மட்டும் ஏனோ மாலைப்பொழுது பிராணசங்கடமாக இருந்தது. அருந்தாமல் வைத்திருந்த தேனீரின் சூடு எனது மனதை சுட்டு பொசுக்கியது.

நான் ஒரு பட்டதாரி. பட்டத்தை முடித்துவிட்டு வேலைக்காக காத்து கொண்டிருந்தேன். இதனால் வீடு என்னை சிறை வைத்து விட்டது. சோம்பேறியும் ஆகிவிட்டேன். இதற்காக வருத்தம் ஒன்றும் பெரிதாக இல்லை. எப்படியாவது வேலை கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பு என் உள்ளத்தை தூங்கவிடாது எழுப்பிக்கொண்டே இருந்தது. வீட்டிலும் எனக்கு எவ்வித நெருக்கடியும் இல்லை. அன்பிற்கு பஞ்சமும் இல்லை. அப்படியிருக்க மாலை நேரம் மட்டும் நெஞ்சை இறுக்கி அமைதிகொள்ளவிடாது கோபம் கொள்ள செய்கின்றது.

எனது வீடு நாற்சந்திகள் இணையும் பாதையின் முனையில் அமைந்திருந்தது. மாடமாளிகைகளோ இராஜ வீதிகளோ இல்லாத ஓரளவு அடிப்படை வசதிகளை கொண்ட வீடுகள்தான் இங்கு காணப்படுகின்றன. எங்களுரில் உள்ள அனைவரும் நிரந்தர உறுதிப்பத்திரம் இல்லாத நிலத்திலேயே வாழ்கின்றனர். எங்களுடைய மூதாதையர் காலம் முதல் பரம்பரை பரம்பரையாக இருந்து வந்த இடம். அரச மட்டத்தில் எவ்வித எதிர்ப்பும் இருக்கவில்லை. என்னுடைய அப்பாவிற்கு உரித்துடைய சொந்த காணி ஊரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மரதன்கடவெல என்னும் இடத்தில் அமைதியான சூழலில் இருந்தபோதும் அங்கு செல்ல மனம் இல்லாமல் பிறந்து வளர்ந்த இடம், பழகிய நண்பர்கள், படித்த பாடசாலைகளை விட்டுவிட்டு செல்ல முடியாததால் இங்கேயே இருக்கவேண்டியதாயிற்று. அருகருகே வீடுகள், வீடுகளை இணைக்கும் சிறு பாதை, அப் பாதையின் ஓரத்தில் சந்தியை அண்டி சிறிய செலவு கடையும் இருந்தது. தொட்டதிற்கு எல்லாம் அந்த ஒரு கடையே ஊருக்கு பொருட்கள் வாங்க உதவி செய்தது.

ஜயந்தி மாவத்த என்பது எங்களுடைய கிராமத்தின் பெயர். எங்கள் கிராமத்திற்கு பெருமை சேர்ப்பது நான்கு பாதைகளும் சந்தித்து உறவாடிக்கொள்ளும் நாற்சந்திதான். செம்மண் ‘ரோட்டில்’ பெரிய கணரக வாகனங்கள் முதல் சிறிய வாகனங்களும் அடிக்கடி எங்களின் நாற்சந்தியை ஊடருத்து அருகில் உள்ள சிங்கள கிராமங்களை நோக்கிச் செல்லும். எங்கள் வீட்டிற்கு வெளியில் நின்று பார்த்தால் நாற்சந்தி, அதற்கு பக்கத்தில் போடப்பட்டுள்ள தூண், அதனை அலங்கரிக்கும் பெரிய மின்குமிழ் ஒன்றும் கம்பீரமாக காட்சி தரும்.

எங்கள் ஊர் இளைஞர்கள் சொக்கட்டான் விளையாடவும், குடிபோதையில் பட்டிமன்றம், பாட்டுக்கச்சேரி, ஆட்டம், பாட்டுடன் பொருத்தமற்ற வீண்பேச்சுக்களைப் பேசவும், பாதையில் சென்று வரும் இளம் பெண்களை கேலி செய்வதும் என ஒரு நாடகமேடையை மாலைவேளையில் நாற்சந்தியில்தான் அரங்கேற்றுவார்கள். கொழும்பு நகரிற்கு நிகரான பரப்பரப்பு கொண்டதுதான் எங்கள் கிராமம். நாற்சந்தியை ஊடறுத்துச் செல்லும் நான்கு பாதைகளின் இரு மருங்குகளிலும் வீடுகள் வரிசையாக நேர்க்கோட்டுக் குடியிருப்பில் அமைந்திருந்தது. படிப்பதற்கும் அமைதியாக பாடல் கேட்பதற்கும் அநீதிகளைத் தட்டிக் கேட்க முடியாத உள்ளக் குமுறல்களுடனும் ஒவ்வொரு ஜீவன்களும் தினம் தினம் வீட்டிற்குள் அடைப்பட்டுக் கிடந்தன, மீறி கேட்டால் “இளங்கன்று பயமறியாது.” என்னும் முதுமொழிக்கேற்ப இளைஞர் படை அணி திரண்டு விடும்.

“அடேய் பண்டா எங்கடா போற? வா வா தண்ணி அடிப்போம். இண்டைக்கு மூடு நல்லா இருக்கு. பைலா அடிக்க ரெடி பண்ணுங்கடா. டேய், சிகரட் இருந்தா தா? நெருப்பெட்டி இல்லையா? தா… தா… “வாவ்” என்ன சுகம்? பீடி, சிகரட், தண்ணீ மாதிரி எதுவும் சுகம் இல்ல இந்த உலகத்துல, என்னடா சொல்ற?”

“நாளைக்கி தனுஷ்ட ‘மாரி 2’ படம் ‘ரிலீஸ் ஆகுதாம் தெரியுமாடா. உங்க அம்மாட்ட ‘டிக்கட்டுக்கு’ காசு வாங்கிட்டு வா. கட்டாயம் வாங்கிட்டு வார, போறோம் ‘படம் பாத்து கொண்டாடுறம்”

“ஆமாடா வீரா, சரியா சொன்ன. ‘யூத்’ னா இப்பிடிதா ‘எஞ்சோய்’ பண்ணனும். ஆனால் எங்கம்மா காசு தறாதுடா, ஏதாவது பொய்ய சொன்னாலும் நம்பாதுடா, எப்பிடி வாங்குறது? கேட்டா வேலைக்குப் போயி ஒழைச்சுட்டு வான்னு தத்துவம் போசும்டா அதுதான் யோசிக்கிறே!”

காசு குடுக்கலன்னா சும்மா விட்டுறுவியா, நீ திருடிட்டு வா, வேலைக்குப் போற வயசா இது. நம்மல யாரும் கேள்விக் கேட்க முடியாது. கேட்டாலும் விட்டுறுவோமா? உண்டு இல்லன்னு ஆக்கிடமாட்டோம். யாருகிட்ட கதைக்கற, நாளைக்குப் போறோம், படம் பார்க்க நீ வாங்கிட்டு வா” அடிதடியில் பிறர் கெட்டுபோவதற்கு அறிவுரைக் கூறும் வீராவின் குரல் கேட்டுக்கொண்டிருந்தது.

இந்த திவ்விய வார்த்தைகள் மாலையில் நான் கேட்கும் பக்தி பாமாலைகளைவிட மேலாக ஒலிக்கும். இவற்றை கேட்க வேண்டும் என்பது எனக்கு மட்டுமல்ல, எங்கள் ஊரில் உள்ள அனைவரின் தலைவிதியும்தான். எங்கள் ஊரிலும் பரம்பரையிலும் முதலாவது பல்கலைக்கழகம் சென்றது நான்தான். இதனால்தானோ என்னவோ இளைஞர்கள் மத்தியில் பிரச்சினையாகப் பார்க்கப்படாத போதைப்பொருள், அடிபிடி சண்டை எனக்குப் பிரச்சினையாக தோன்றுகின்றது.

நான் படித்த பத்திரிகைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் இளையத் தலைமுறையினரால் சமூகத்திற்கு விடிவுத் தேவை. அவர்களே இதற்கு முன்னின்று உழைக்க வேண்டும் என்ற அறிவுரைகளைக் கற்றுத் தந்தது, கற்றதுடன் அவற்றை படித்து புரட்சிகரமாக சிந்திக்கவும், மரபுவழிச் சிந்தனைகளை களைந்தெரியவும் மற்றவர்களையும் இவ்வாறான சிந்தனைக்குள் கொண்டு வரவேண்டும் எனவும் சிந்திக்கின்றேன். இலட்சியம் இல்லாத வாழ்க்கை வாழும் எமது சமூகத்தை சீரிய பாதையில் கொண்டு செல்ல நான் முயற்சித்த போதும் அது எனது மனதிற்குள் மட்டுமே சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தி வெற்றியைத் தேடித்தந்தது. தனி மரம் தோப்பாகாது, ஒரு கைத்தட்டி ஓசை வராது, எனக்கு நன்றாகத் தெரியும்.

“அடே நாயே, யாரடா அடிக்கவார, பல்ல ஒடச்சி கையில் கொடுத்துறுவே. கத்தியால கைய வெட்டாம விடமாட்டேன்! ஓடாதடா நில்லு.” என்ற சப்தம் என்னுடைய சிந்தனையை களைத்து நாற்சந்தியை நோக்கி திரும்ப வைத்தது. இவ்வளவு நேரம் பிறருக்குத் துன்பம் விளைவிப்பதை பெரிய சாதனை செய்யப் போவதாக நினைத்துக் கொண்டு உரையாடிக் கொண்டிருந்த பண்டா – வீரா ஆகியோரின் குரலின் ஓசை அனைவரின் உள்ளங்களையும் அதிர வைத்தது. குடிபோதையில் இருந்த இவ்விரு இளைஞர்கள் கைலப்பில் ஈடுபட்டு பெரிய சண்டையாக மாறி, அது வெட்டுக் குத்தில் சென்றுகொண்டிருந்தது. நாற்சந்தியில் ஒரே அமளிதுமளியாக இருந்தது. தாங்கமுடியாத வார்த்தைப் பிரயோகங்களும் காதுகளை கிழித்துக்கொண்டு கேட்டக முடியாமல் திணறடித்தது. என்னுடைய அம்மாவும் பயந்துக்கொண்டு புதினம் பார்க்க ‘கேட்’ அடியில் சென்று நின்றுக்கொண்டிருக்கிறார். காதுகேளாத ஆச்சி, நாட்டிற்காக சண்டை பிடித்து சுதந்திர தியாகிகளாக வர ஆசைப்படும் அந்த இளைஞர்களை வேடிக்கைப் பார்க்க சந்தியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறார். நான் வீட்டு வாசலில் அமர்ந்துக்கொண்டு கதவு நிலையில் தலை சாய்த்த வண்ணம் நடப்பதை வேடிக்கைப் பார்க்கின்றேன். சண்டையின் நடுவில் ஒரு தாயின் அவலக்குரலும் அழுகையுடன் எதிரொலித்தது.

“அய்யோ கடவுளே யாராவது ஓடிவாங்க, வெட்டிக்கப் போறானுக போல, வேணாடா விடுங்க, அம்மா சொல்றத கேளுங்கடா, வீட்டுக்குப் போவோம் வந்துறு தம்பி! ஏன்டா இப்பிடி பாடாப்படுத்தற, பொலிஸ் கோடு போகமுடியாதுடா, மானம் போவுது, கடவுளே முருகா வந்துறுடா, சண்டை வேணாம்டா?”

இது புதுமையான ஒன்று அல்ல. நித்தமும் சூரியன் உதயமாகி அஸ்தமிப்பது போல, எங்கள் ஊரில் நடைபெறும் இயற்கையும் பரபரப்பான செய்தியும் இதுதான்.

“என்ன தங்கச்சி ரோட்டயே விரைச்சி பாத்துக்கிட்டு இருக்க. இவனுங்க இப்பிடித்தான் திருந்த மாட்டானுக. படிச்சி முன்னேறவுமில்ல. ஒழைச்சி முன்னேறவுமில்ல. குடிச்சும், அடிச்சும் சீரழியத்தான் போறானுக. எங்க பாட்டன், முப்பாட்டன் காலத்துல இப்படியெல்லாம் இருக்கல. நாங்க எல்லாம் பொழுதுபோக்குறதுன்னா ஒன்னா சேந்து இருந்து கதைப்பம். பழைய கதைகளை சொல்லி சிரிப்பம். இல்லாட்டி தோட்ட வேலைகள செய்வோம். இப்ப எங்க தோட்டம் தொரவு? ம், காலம் மாறிபோச்சு. பசங்க ரொம்ப முன்னேறிட்டானுங்க. நீ படிச்ச புள்ள, பெரிய அதிகாரிகள்ட கதைச்சு ஏதாவது செய். இல்லாட்டி ‘நியூஸ் பேப்பர’ருக்கு இத எழுது. அப்போதாவது திருந்துறானுகளான்னு பாப்போம்! நம்ம ஊருட மானத்த வாங்குறதுக்காகவே இப்படி செய்யுறானுக. எங்க உங்க ஆச்சி? புதினம் பாக்கப் போயிருச்சா? அதுக்கு இது ஒரு புதினம். நீ உள்ள போமா நான் ‘டவுன்’ வரைக்கும் போயிட்டு வாறே. வரும்போது புள்ளைக்கி ஏதாவது வாங்கிட்டு வாறே”

தாத்தா ஏக்கமும், நகைச்சுவையும் கலந்த பேச்சுடன் புலம்பி விட்டு சாக்குப் பையுடன், வெற்றிலை, பாக்கு வாங்குவதற்காக கை தடியையும் ஊன்றிக்கொண்டு கடைக்குப் புறப்பட்டு போகின்றார். வாசலில் நின்று கவலைத் தோய்ந்த முகத்துடன் நாற்சந்தியை கோபமாக வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதற்கிடையில் நான் பேச நினைத்த புரட்சி வார்த்தைகளை பெரும் வீச்சுடன் ஒரு குரல் பேசுவது என் காதில் கேட்டது.

“ஏன்டா இப்பிடி ஊர் சுத்தி திறிஞ்சுக் கொண்டு அடிபிடி படுறீங்க!? நல்லவா இருக்கு! பெத்தவங்கள ஒருக்கால் நினைச்சி பாத்தீங்களா? படிக்க வச்சும் சரியா படிக்கல்ல, வீட்டுக்கும் ஊருக்கும் பிரயோசனம் இல்லாம போச்சு உங்களால. உங்கள போல ஆட்கள் இருக்குறதாலதான் இந்த சமூகமும் நாடும் இப்பிடி இருக்கு. எங்கட ஊர்ட மானமும் போச்சு. யாரும் மதிக்கவும் மாட்டேங்குறாங்க. நீங்கதான் உருப்பிடாம போயிட்டியல் இந்த கிராமத்துல படிக்கிற புள்ளைகளாவது நிம்மதியா படிக்க வேணாமா? உங்க தங்கச்சியாக்களும்தானே பள்ளிக்கூடம் போகுதுகள், குமருகள்தானே? வெளியால அதுகளுக்கும் தலை காட்ட முடியிறதில்ல, கலியாணம் காட்சினாலும் யாரும் வர மாட்டினம், சம்பந்தம் பேச மாட்டினம், அறிவு இல்லியே உங்களுக்கு?”

புஷ்பா மாமி வவுனியா கிடாச்சூரியில் இருந்து எங்கள் ஊர் ராசய்யா மாமாவை கல்யாணம் செய்து கொண்டு பதினைந்து வருட காலமாக இங்குதான் இருக்கிறார். எங்கள் ஊரிலேயே சாதாரணத் தரம் வரை கல்வி கற்றவர் இவர் மட்டுமே. அதனால் தற்போது எங்கள் ஊர் பிள்ளைகளுக்கு இலவசமாக மாலை நேர பிரத்தியேக வகுப்புக்களையும் செய்து வருகிறார். பாவம் புஷ்பா மாமிக்கு பிள்ளைகள் எவரும் இல்லை. அந்த குறைமட்டும்தான். மற்றும் படி ஊரில் உள்ளவர்களுடன் புத்திசாலித்தனமாகவும், கண்ணியமாகவும் பேசக்கூடியவர். வசதிவாய்ப்பிலும் ஒரு குறையும் இல்லாதவர். அந்த மாமியின் உரிமையுடன் கூடிய அதட்டுதல் வார்த்தைகளையும், அறிவுரை மொழிகளையும் கேட்டு நாற்சந்தியில் இருந்த கூட்டம் அமைதி பேணிக்கொண்டிருந்தது.

“இனி இப்படி செய்ய மாட்டோம் மாமி. நீங்க வீட்டுக்குப் போங்க. எல்லாரும் போங்கடா வீட்டுக்கு, பிறகு மீட்டிங் போடுவோம் போங்க.”

அடிபிடியில் முதல் இடத்தில் நிற்கும் எங்களுர் சரண் கூறுவது எனது காதிற்கு எட்டியது. சனக்கூட்டம் களைந்து வீடு நோக்கி புறப்பட்டது. மாமியின் பேச்சுக்கு பதில் பேசாமல் இவர்கள் இருப்பதற்கு ஒரு காரணமும் உண்டு. பிள்ளைகள் இல்லாததால் அவர் ஊரில் உள்ள இளைஞர்களை தன்னுடைய பிள்ளைகளைப் போல பார்ப்பதும், உணவு வழங்குவதும், அறிவுரை கூறுவதுமாக இருப்பார். ஒரு தடவை சிங்களப் பொடியன்களோடு இவர்கள் சண்டையிட்டு பொலிஸ் வரைக்கும் பிரச்சினை சென்றபோது, புஷ்பா மாமிதான் இவர்களை பொலிஸாரிடம் கூறி காப்பாற்றினார். எனது மனதில் புதிய ஒளி பிறந்தது, தீர்வும் எட்டியது. ஆறிய தேனீரை கொட்டிவிட்டு, “அம்மா இருங்க. புஷ்மா மாமி வீட்டுக்கு ஒருக்கா போயிட்டு வாறே!” என்று கூறிவிட்டு வேகமாக நடக்கத்தொடங்கினேன்.

இறுகி போயிருந்த மனதில் ஒரு தெளிவு, பிரகாசமான ஒளி உண்டாக யாருமற்ற நாற்சந்தியை கடந்து எனது கால்கள் மெதுவாக புஷ்பா மாமியின் படலை அடியில் போய் நின்றது.

Leave a Reply