அண்ணாதுரையின் திமுக காலம் வரை, தான் சார்ந்துள்ள கட்சியின் கொள்கைகளைப் பேசி, அதில் உறுதியாக நின்று, கொள்கை சார்ந்து கட்சித் தலைவரையும் விமர்சனங்கள் செய்யும் போக்கு இருந்துள்ளது. இதனால், அண்ணாதுரைக்கு அடுத்தபடியாக பல வலுவான இரண்டாம் கட்டத் தலைவர்கள் உருவானார்கள். இதுவே திமுகவின் வளர்ச்சிக்கு காரணம். ஒவ்வொரு இரண்டாம் கட்டத் தலைவர்களும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் செல்வாக்கு பெற்றிருந்தார்கள்.
இந்த வலுவான இரண்டாம் கட்டத் தலைவர்கள் என்கிற கட்டுமானத்தை, சிறுக சிறுக ஒழித்தவர் கருணாநிதி.
எம்ஜிஆர் காலத்திலிருந்து, அவரது உதவியாளர்களும், கார் டிரைவர்களும் அவரது கட்சியில் அரசியல் பலம் பெற்றார்கள்.
இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் எந்த கட்சிகளையும் எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பெரும்பாலும் டம்மிகளாக இருப்பார்கள். இப்படி எழுவதை எண்ணி எவருக்கும் வருத்தம் வரக் கூடாது. இது தான் இன்றைய நிதர்சன அரசியல் நிலை.
தற்போதைய அரசியல் சூழலில், கட்சித்தலைவர்களின் சமையற்காரர், வீட்டை பராமரிக்கிறவர், டிரைவர், உதவியாளர் ஆகியோர் தான், இரண்டாம் கட்ட கட்சித் தலைவர்களை விட, அந்தந்த தலைவர்களின் கட்சிகளில் வலுவாக இருக்கிறார்கள். பல இரண்டாம் கட்டத் தலைவர்கள் தனித்தன்மை இன்றி இருக்கிறார்கள். தனித்தன்மை வாய்த்தவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள்.
ஒவ்வொரு அரசியல் கட்சியின் முழு அதிகார குவிப்பும், அந்த கட்சித்தலைவரிடம் மட்டுமே இருக்கிறது. கொள்கைகள் பொது வெளியில் பேச மட்டுமே, இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கு பெரிய அதிகாரங்கள் எதுவும் இருப்பதில்லை.
இந்தச் சூழல் எல்லா கட்சிகளிலுமே இருக்கின்றது. அரசியல் கட்சிகள் குடும்ப கட்சிகளாக மாறிவிட்டன. அந்த குடும்பங்களுக்கு வேலை செய்கிறவர்களின் கட்சிகளாக மாறிவிட்டன. தமிழக அரசியல் கட்சிகள், உட்கட்சி ஜனநாயக தன்மையிலிருந்து விலகி, அடிமைகளை உருவாக்கும் நிலையில் உள்ளன. இதனால் தமிழக அரசியல் மந்தைத் தனமாக இருக்கின்றது.
இப்படியான மந்தை தனம் அரசியலில் அதிகரிப்பது நல்லதல்ல. இதனால் தமிழக உரிமைகள், தமிழக நலன்கள் பாதிப்பிற்கு உள்ளாகும்.
வலுவான தலைமை எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு வலிமையான இராண்டாம் நிலை அரசியல் தலைவர்களும் மிக முக்கியம்.
மாயன் மெய்யறிவன்
முற்றிலும் உண்மை, ஆதலால்தான் பொதுச்செயலாளர் பதவி எதிர்பார்த்த ‘துரைமுருகன்’ பொருளாளர் ஆக மட்டுமே நீடிக்கின்றார்.
தங்களது மேலான கருத்துக்கு நன்றி. தொடர்ந்து தமிழ்விங்.காம் தளத்தின் ஆக்கங்களைப் படித்து, உங்களது கருத்துக்களைப் பகிருங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்.